
இப்படியொரு கலவரம் நடக்குமென்று நான் துளியும் யூகித்ததில்லை. ஆனால், இதுதொடர்பாக ஒரு வரி எச்சரித்து எனக்கு ஓர் அருள்வாக்கு கூறியிருந்தார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்.
கார்த்திகேயன் என்ன சொல்லப்போகிறார் என்று அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம்.
‘‘பாக்ஸர் வடிவேலுவுக்கு உடல்நிலை மோசமாகிறது எனத் தெரிந்ததுமே நீங்கள் அவரை வெளி மருத்துவமனைக்கு அனுப்பியிருக்க வேண்டும். அப்படி அனுப்பியிருந்தால் இப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காது. சிறைத்துறைத் தலைவரின் சுற்றறிக்கையை நீங்கள் மதிக்கவில்லை என்பதற்காக, அதிகபட்சமாக உங்களை தற்காலிகப் பணிநீக்கம் செய்திருப்பார்கள். இவ்வளவு பெரிய கலவரம் நடந்திருக்காது. ஜெயிலர் ஜெயக்குமாரும் காவலர் நடராஜனும் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். 13 கைதிகள், தோட்டாக்களுக்கு பலியாகியிருக்க மாட்டார்கள்!’’ என்றார்.
அந்தக் கணத்தில் என் பார்வையில் அனுபவம்மிக்க, பக்குவப்பட்ட அதிகாரியாக மிளிர்ந்தார் கார்த்திகேயன். சுரீரென உண்மை உறைத்தது. சிலப்பதிகாரத்தில் மாடலன் மறையோன் கூற்றாக வரும் பாடல் நினைவுக்கு வந்தது...

‘கானலம் தண்டுறை...’ எனத் தொடங்கும் அந்தப் பாடலில், சேரன் செங்குட்டுவன் வடதிசை சென்று கனக விஜயனை வென்று அவர்களின் படையினரை தலை மேல் கல் சுமந்து வரச்செய்து கண்ணகிக்கு கோயில் கட்டுகிறான். கண்ணகியின் சிலையை பிரதிஷ்டை செய்தபோது சேரன் செங்குட்டுவனைப் பார்த்து ‘மாதவியின் பாடலில் ஒரு வரி பாடப்படாமல் இருந்திருந்தால் இப்போது இந்தக் கோயில் கட்டியிருக்க மாட்டீர்கள்’ என்று கூறுகிறான் மாடலன் மறையோன்.
`கடல் அலைகளைப் பார்த்து மாதவி பாடும் பாடல் வரிகள் கோவலனால் தவறாகப் புரிந்துகொண்டிருக்கப்படாவிட்டால், அவன் மாதவியைப் பிரிந்து கண்ணகியிடம் சென்றிருக்க மாட்டான். சிலம்பை விற்க மதுரைக்குப் போயிருக்க மாட்டான். கள்வன் என்று பழி சுமத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்க மாட்டான். கண்ணகி, மதுரையை எரித்திருக்க மாட்டாள். மதுரை எரிக்கப்படாமல் இருந்திருந்தால், கண்ணகி தெய்வமாகி இருக்க மாட்டாள். தெய்வமாகி இருக்காவிட்டால் நீங்கள் அவளுக்கு கோயில் கட்டியிருக்க மாட்டீர்கள்’ என்று விவரிப்பான் மாடலன் மறையோன்.
பாக்ஸர் வடிவேலு வெளி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், ஜெயிலர் ஜெயக்குமார்மீது கொலை பழி விழுந்திருக்காது. கலவரம் வெடித்திருக்காது. அவரும் நடராஜனும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். 13 கைதிகளின் உயிர் போயிருக்காது.
இன்றுவரை இப்படியொரு யோசனை அவ்வப்போது எழுந்து சில நிமிடங்களில் கரைந்துபோவதுண்டு. ஆனால், ஒரு சம்பவம் எதற்காக நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது நடந்து முடிந்துவிட்டது. ஆனால், எதுவும் திட்டமிட்டதில்லை. சூழ்நிலையால் நிகழ்ந்தது. நான் செய்தது சரியென்றால், இயற்கை என்னை மன்னிக்கட்டும். இல்லையென்றால் எந்தத் தண்டனையையும் நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். என் ஆழ்மனதில் புதைந்திருக்கும் குமுறல் இது.
இப்படியொரு கலவரம் நடக்குமென்று நான் துளியும் யூகித்ததில்லை. ஆனால், இதுதொடர்பாக ஒரு வரி எச்சரித்து எனக்கு ஓர் அருள்வாக்கு கூறியிருந்தார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்.

கலவரக்காரர்களை தடியடி நடத்தி நாங்கள் விரட்டிச் சென்றுகொண்டிருக்கிறோம். இரண்டாவது வாயில் வரை துணிவுடன் விரட்டி வந்தது எங்கள் படை. ஆனால், இரண்டாவது வாயிலைத் தாண்டியதும் அங்கு கண்ட காட்சி, எங்களை குலைநடுங்கவைத்தது. கத்தி, கம்புகளுடன் ஆயிரக்கணக்கான கைதிகள் எங்களை நோக்கிப் பாய்ந்து வந்தார்கள். அவர்களிடம் சிக்கியிருந்தால் நாங்கள் ஒருவரும் உயிரோடு இருந்திருக்க மாட்டோம்.
ஒரு பக்கம் தண்டனைக் குறைப்பு அலுவலகம் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. அடுத்தடுத்து கண்ணில் பட்டவற்றையெல்லாம் தீவைத்து கைதிகள் கொளுத்திக்கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கம் வெறிகொண்ட கூட்டம் எங்களை நோக்கிப் பாய்ந்து வருகிறது. துப்பாக்கியை அவர்கள் முன் நீட்டிப் பிடித்து, `‘உடனே கலைந்து செல்லுங்கள். இல்லையென்றால் சுட்டுவிடுவேன்’’ என எச்சரித்தேன். எதிரே ஓடி வந்த கைதிகளில் பலர், `‘தைரியமிருந்தா சுடுடா!’’ என்று கூச்சலிட்டார்கள்.
நான் சுடுவதற்கு யோசித்துக்கொண்டிருக்கும் போது அருகில் இருந்த அதிகாரிகள், ‘‘ஐயா உடனே சுடுங்கள். இல்லையென்றால் நிலைமை மோசமாகிவிடும்’’ என்று பதைபதைத்தார்கள். நான் சுட தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் கலவரக்காரர்கள் எங்களை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். என் பாதுகாப்பில் விடப்பட்ட கைதிகளை நானே சுட வேண்டுமா... ஒரு கண்காணிப்பாளரின் முதல் கடமை கைதிகளைப் பாதுகாப்பதுதானே என்றெல்லாம் கேள்விகள் என் மனதில் எழுந்தன.
அதேசமயம், என்னையும் என்னுடன் இருக்கும் அதிகாரிகளையும் காவலர்களையும் காப்பாற்றும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது. தவிர, எதிரே வருபவர்கள் சட்டவிரோதமாகச் செயல்படுகிறார்கள். எல்லோரையும் காப்பாற்ற வேண்டுமெனில் துப்பாக்கியால் சுட்டுத்தான் ஆக வேண்டும். அப்போதும்கூட முதல் நான்கு ரவுண்டுகள் வானத்தை நோக்கித்தான் சுட்டேன். ஆனாலும், கூட்டம் துளியும் அச்சமின்றி வெறியுடன் எங்கள்மீது பாய வந்தது.
அதற்குப் பிறகே கைதிகளைப் பார்த்து சுட்டேன். மூன்று, நான்கு பேர் அங்கேயே சுருண்டு விழுந்தனர். சிலர் கால்களிலும் கைகளிலும் குண்டுக்காயங்களை வாங்கிக்கொண்டு ஓடி ஒளிந்தனர். அப்போதும் கூட்டம் அடங்காமல் எங்களை மிக அருகே நெருங்கிவிட்டது. திரும்பவும் சுடுகிறேன். துப்பாக்கியிலிருந்து ‘க்ளிக்’ என வெறும் சத்தம்தான் வந்தது. தோட்டாக்கள் காலியாகிவிட்டன. திகைத்து நின்றேன். அப்போதுதான் பங்காரு அடிகளார் கூறிய அருள்வாக்கு மின்னலாய் என் மூளையில் வெட்டியது.

1980-லிருந்து மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி கோயிலுக்கு நான் அடிக்கடி சென்று வழிபடுவது வழக்கம். அவர் அவ்வப்போது அருள்வாக்கு சொல்வார். நானும் அருள்வாக்கு கேட்க, என் பெயரைப் பதிவுசெய்து காத்திருந்தேன். ஒரு நாள் அழைப்பு வந்தது. பயபக்தியுடன் அருள்வாக்கு சொல்லும் அறைக்குள் சென்றேன். அப்போது அவர் சொன்ன அருள்வாக்கு... ‘‘இரண்டு துப்பாக்கிகள் வைத்துக்கொள்!’’ என்பது மட்டும்தான்.
அப்போது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார் என்றே தோன்றியது. இருக்கும் ஒரு துப்பாக்கியை உபயோகப்படுத்துவதற்கே சந்தர்ப்பம் இல்லாத சூழ்நிலையில், எதற்காக இரண்டு துப்பாக்கிகள் வைத்துக்கொள்ள சொல்கிறார் என எனக்கு குழப்பமாக இருந்தது.
அத்துடன் அதை நான் மறந்துவிட்டேன். குண்டுகள் அனைத்தும் தீர்ந்த அந்த நொடியில்தான் அவர் சொன்ன அந்த வார்த்தைகள் உறைத்தன. என் உடல் ஒரு கணம் சிலிர்த்தது. அப்போது என்னிடம் மட்டுமே துப்பாக்கி இருந்தது. என்னுடன் இருந்த யாரிடமும் துப்பாக்கி இல்லை. அவ்வளவுதான் என நினைத்தோம். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக எனக்கு அடுத்த நிலையில் இருந்த அதிகாரிகள், துப்பாக்கிகள் ஏந்திய காவலர்களுடன் வந்து சேர்ந்தனர். தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டார்கள். ஒருவழியாக கலவரக்காரர்கள் பின்வாங்கினார்கள்.
பங்காரு அடிகளாரின் அருள்வாக்கை நான் மறந்துவிட்டாலும், அந்த இக்கட்டான சூழ்நிலையில் அவரே வந்து எங்களைக் காப்பாற்றியதாகத்தான் உணர்ந்தேன். சிறைக்குள் கலவரம் வந்தால் துப்பாக்கியைக்கொண்டு அடக்கிவிடலாம். கொரோனா போல வேறு ஏதேனும் தொற்று வந்தால்..?
(கதவுகள் திறக்கும்)