மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 18 - கொரோனா... தமிழக சிறைக்குள் நுழைய முடியுமா?

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

‘‘அய்யாவோட காரை நான் மதுரையிலிருந்து துரத்திக்கொண்டு வருகிறேன்’’

கொடைக்கானல் மலைச் சாலையில், எனது கார் வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது. போலீஸ் ஜீப் ஒன்று, வெகுநேரமாக என்னை பின்தொடர்ந்து வந்தது. ஒருகட்டத்தில் அது என்னைத் துரத்திக்கொண்டுவருதாகத் தோன்றி யது. `வேறு யாரையோ தேடுகிறவர்கள், என் வாகனத்தைத் தவறுதலாகத் துரத்துகிறார்களோ!’ என நினைத்து ஓட்டுநரிடம் வண்டியை ஓரம்கட்டச் சொன்னேன். போலீஸ் ஜீப், என் காரின் அருகில் வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் சல்யூட் அடித்துவிட்டு,

‘‘அய்யாவோட காரை நான் மதுரையிலிருந்து துரத்திக்கொண்டு வருகிறேன்’’ என்றார்.

திகைத்துப்போய் நான் காரணத்தைக் கேட்டதற்கு, ‘‘அய்யா உடனே சென்னைக்குப் போகணும். அரசு உத்தரவு. உங்களுக்கு ஃபிளைட் டிக்கெட் போட்டாச்சு. விஷயம் என்னன்னு எங்களுக்குத் தெரியாதுங்க அய்யா’’ என்றார்.

அது, 1987... நான் சென்னை மத்திய சிறையின் டெபுடி ஜெயிலராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். ஜெயிலர், கூடுதல் கண்காணிப்பாளர் ஆகிய பொறுப்புகளையும் நானே கூடுதலாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். இப்போது போல் அலைபேசி இல்லை. அதனால், நான் நேரில் போனால் தான் விஷயத்தைத் தெரிந்து கொள்ள முடியும். உடனடியாக கார் மதுரை விமானநிலையம் நோக்கி கிளம்பியது. அங்கே எனது துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், விமான பயணச்சீட்டுடன் காத்திருந்தார். அவருக்கும் காரணம் தெரிய வில்லை. நான் எஸ்.டி.டி போட்டு, சென்னை சிறைக் கண்காணிப்பாளரிடம் பேசினேன். அவரும் எதையும் சொல்லாமல், ‘‘நீ சென்னை வந்து சேர்... எல்லாம் சொல்கிறேன்’’ என்று வைத்துவிட்டார்.

அன்றைய நாள்களில் நானும் கண்காணிப் பாளரும் மட்டும்தான் சென்னை மத்திய சிறை அலுவல்களை கவனித்துக்கொண்டிருந்தோம். சுமார் 1,500 கைதிகள். இவர்களில் 500-க்கும் அதிகமானோர் குண்டர் சட்டத்தில் (Tamilnadu Prevention of Dangerous Activities Act) கைது செய்யப்பட்டவர்கள்.

அந்தக் காலகட்டத்தில் 11 மாதங்கள் 20 நாள்கள் தொடர்ந்து ஒருநாள்கூட ஓய்வெடுக்காமல் பணியாற்றினேன். ஒரு வருடம் முடிந்துவிட்டால் போஸ்ட் காலாவதியாகிவிடும் எனக் கருதிய அரசு, ஜெயிலர் போஸ்ட்டுக்கு ஒருவரை அவசரமாக நியமித்தது. எனவே, புதிய ஜெயிலர் வந்துவிட்டால் சற்று ஓய்வு கிடைக்கும் என நினைத்திருந்தேன்.

 ஜி.ராமச்சந்திரன் - ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி, சிறைத்துறை
ஜி.ராமச்சந்திரன் - ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி, சிறைத்துறை

எதிர்பார்த்ததுபோலவே புதிய ஜெயிலர் வந்தார். என்னை அழைத்த கண்காணிப்பாளர், ‘‘ஒரு வருடத்துக்கும்மேலாக விடுப்பே எடுக்காமல் வேலைபார்த்திருக்கிறாய். சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாள்கள் விடுப்பு தருகிறேன். கொடைக்கானல் போவதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறேன்’’ என்று சொல்லி, வெள்ளிக் கிழமை இரவு சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கான டிக்கெட்டையும் கொடுத்திருந்தார். ஆனால், அதே கண்காணிப்பாளர் திரும்பவும் சென்னைக்கு வரச்சொல்கிறார். விஷயம் ஏதோ சீரியஸ் என்று மட்டும் புரிந்தது. சென்னை விமானநிலையத்தில் இறங்கி அவசரமாக சிறைக்குச் சென்றேன்.

கைதிகளுக்கு ஃபுட் பாய்சன்!

நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் அரசு பொது மருத்துவமனைக்கும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டிருந்தார்கள். தவிர, நூற்றுக்கணக்கான கைதிகள் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிறைவாயிலின் முன் உள்ள திறந்தவெளியில் ஆம்புலன்ஸுக்காகக் காத்துக் கிடந்தார்கள். அவர்கள் அனைவரும் குண்டர் சட்டத்தில் கைதானவர்கள்.

நான் அந்தக் கைதிகளை நோட்டமிட்டேன். `ஃபுட் பாய்சன் என்றால் அனைவருக்கும் அல்லவா வயிற்றுவலி வந்திருக்க வேண்டும். குண்டர் சட்டத்தில் கைதானவர்களுக்கு மட்டும் எப்படி வந்தது... ஏதோ தவறு நடக்கிறது!’ என்றது என் உள்ளுணர்வு.

அத்தனை கைதிகளும் தங்களை உடனடியாக வெளி மருத்துவமனைக்கு அனுப்பவேண்டும் என்று கோஷம் போட்டார்கள். தொற்று காலங் களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. உடனே ‘வயிற்றுவலி’ என்றவர்களிடம் தேங்காய்த் தொட்டியைக் கொடுத்தேன். அதில் அவர்களது கழிவுகளைக்கொண்டு வர வேண்டும். அப்போது தான் வெளி மருத்துவமனைக்கு அனுப்புவேன் என்றேன். இதை நான் சொன்ன பிறகு, அங்கு இருந்தவர்களில் 90 சதவிகிதம் கைதிகள் காணாமல்போயினர்.

ஓரிருவர் உண்மையான வயிற்றுவலியுடன் இருந்தனர். அவர்களுக்கும் சிறை மருத்துவமனை யிலேயே சிகிச்சை தரப்பட்டது. வெளியில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்ட கைதிகள் அனைவரையும் உடனே சிறைக்குத் திருப்பிக் கொண்டு வர ஏற்பாடு செய்தேன். அவர்கள் 100 பேருக்கும் குறைவாகவே இருந்தனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அரசு மருத்துவமனையிலும் சிறை மருத்துவமனையிலும் வழங்கப்பட்டது.

நோய்க்கான காரணத்தை விசாரித்தேன். அன்று மாலை வழங்கப்பட்ட வேர்க்கடலை சரியாக வேகவைக்கப்படவில்லை. அந்த வேர்க்கடலை தரம் குறைந்ததாகவும் நிறைய சொத்தைகளுடனும் இருந்திருக்கிறது. இதையே சாதகமாக்கிக்கொண்டு வெளி மருத்துவமனைக்குச் செல்ல பலரும் முயன்றனர்.

இதுபோன்று தொற்றுநோய் காலங்களில் கைதிகளிடம் இருந்து கழிவுகள் சேகரிக்கப்பட்டு (excretion) சோதனைக்கு அனுப்ப வேண்டும் என்பது ஆங்கிலேயர் எழுதிய சிறை நடைமுறை. அதைத்தான் நான் பின்பற்றினேன். சிறையில் தப்பித்தல், அடிதடி, கலவரம், கத்திக்குத்து, தற்கொலை, உண்ணாவிரதம், தீ விபத்து, தொற்றுநோய் பரவுதல், வேலைநிறுத்தம், ஃபுட் பாய்சன், ஓவர் கிரெளடிங் ஆகியற்றுக்கு எமர்ஜென்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறது சிறை நடைமுறை நூல்.

ஜெயில்... மதில்... திகில்
ஜெயில்... மதில்... திகில்

உலகமே `கொரோனா’ என்ற ஒற்றை வைரஸால் உறைந்துப்போயிருக்கிறது. இந்தச் சூழலில் சிறைக்குள் கொரோனா போன்ற தொற்று பரவினால் என்னவாகும்? கொரோனாவால் இத்தாலிய சிறைகளில் கலவரம் ஏற்பட்டு 11 கைதிகள் மற்றும் நான்கு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளனர். கைதிகளின் உறவினர்கள், சிறைச்சாலையைத் தாக்கி கைதிகள் பலரை விடுவித்துள்ளனர். ஆனால், கொரோனா தாக்கி எந்தக் கைதியும் இறந்ததாக தகவல் இல்லை. தமிழக சிறைச்சாலைகளிலும் கொரோனா நுழையவே முடியாது. நம் சிறைகளின் கட்டமைப்பும் நடைமுறைகளும் அப்படி!

சிறைக்குள் கைதிகள் பெரும்பாலும் தனியாகவே இருக்கிறார்கள். சிறை என்றால் தடுப்பு என்றும் அர்த்தம். வெளியிலிருந்து எது வந்தாலும் தடுக்கப்படும். தொற்றும் அதில் அடக்கம். ஆங்கிலேயர் காலத்திலேயே ஒவ்வொரு சிறைச்சாலையின் வெளியிலும் quarentain என்கிற வெளிச்சிறை ஒன்று இருக்கும். அதில் தனித்தனியாக சுமார் 40 அறைகள் இருக்கும். புதிதாக அனுமதிக்கப்படும் கைதிகள் முதலில் வெளிச்சிறையில்தான் அடைக்கப்படுவார்கள். முதல் 15 நாள்கள் அங்குதான் அவர்கள் இருக்க வேண்டும். இது கட்டாயம். இந்த 15 நாள்களும் அவர்களின் உடல்நிலை சிறை மருத்துவர்களால் பரிசோதிக்கப்படும். ஒவ்வொரு சிறையிலும் மருத்துவமனை உள்ளது. அதில் 80-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. மருத்துவ அதிகாரி, செவிலியர், மருந்தாளுநர்கள், மருத்துவ உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள். தொற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான அத்தியாவசிய மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டிருக்கும்.

சிறைவாசிகளின் சுகாதாரம் அடிக்கடி உறுதிப்படுத்தப்படுகிறது. அவர்கள் அணியும் உடைகளை சலவைசெய்வது, உணவுக் கழிவுகளை அவ்வப்போது அகற்றுவது, குடிநீர் தரத்தைச் சோதனையிடுவது, தண்ணீர் வசதியை ஏற்படுத்து வது, தடுப்பூசி போடுவது என அனைத்துப் பணிகளும் உரிய மேற்பார்வையில் நடைபெறும்.

ஜெயில்... மதில்... திகில்! - 18 -  கொரோனா... தமிழக சிறைக்குள் நுழைய முடியுமா?

ஒரு கைதிக்கு நோய்த்தொற்று இருந்தால் அவர் உடனடியாகப் பிரித்துவைக்கப்படுவார். நோய்த் தொற்றுக்கான காரணம், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை அனைத்தும் அறிக்கையாக தயார் செய்யப்பட்டு அரசுக்கும் நல்வாழ்வுத் துறை இயக்குநருக்கும் அனுப்பப்படும். நோய்த்தொற்று மூன்றுக்கும் மேற்பட்ட கைதிகளுக்குப் பரவியிருந்தால் சிறைத்துறைத் தலைவரால் விசாரணை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறையின் இயக்குநரும் இதுதொடர்பாக விசாரித்து புதுடெல்லியில் உள்ள மத்திய சுகாதாரத் துறை இயக்குநருக்கு அறிக்கை அனுப்புவார்.

ஏற்கெனவே நான் கூறிய வெளிச்சிறை அல்லாமல் `isolation shed’ எனப்படும் நான்கு, ஐந்து அறைகள்கொண்ட கட்டட அமைப்பு ஒன்றும் சிறைக்கு வெளியே இருக்கும். காலரா, அம்மை போன்ற தொற்றுநோய்கள் ஒரு கைதிக்கு இருப்பதாகத் தெரிந்தால் அவரை சிறைக்கு வெளியே உள்ள isolation shed-க்கு மாற்றி விடுவார்கள். காவலர்கள் அடுத்தடுத்த அறைகளில் தங்கவைக்கப்படுவர். தொற்று முடியும் வரை அங்கு பணி செய்த யாரும் எங்கும் அனுப்பப்பட மாட்டார்கள். தொற்று பாதித்த கைதிகளின் கழிவு, உடைகள், படுக்கைவிரிப்புகள் அனைத்தும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்படும்.

சிறையிலேயே தயாரிக்கப்பட்ட சோப் வழங்கப்படும். குடிப்பதற்கு வெந்நீர் தரப்படும். பால், தயிர் உள்ளிட்ட சத்தான உணவுகள் நோயுற்ற சிறைவாசிகளுக்கும் அவர்களுக்கு பணி செய்யும் ஊழியர்களுக்கும் வழங்கப்படும். மற்ற கைதிகளுக்கும் ஊழியர்களுக்கும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தடுப்பூசி போடப்படும்.

இப்படி இருக்கும்போது தமிழக சிறைக்குள் கொரோனா நுழையவே முடியாது!

சரி, அமானுஷ்யங்கள் நுழையுமா?

(கதவுகள் திறக்கும்)