மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 19 - அன்பே வா அருகிலே..!

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

சிறைக்குள் கொரோனா தொற்று நுழைய முடியாது. சரி, அமானுஷ்யங்கள் நுழைய முடியுமா? இந்தக் கேள்வியை என்னிடம் பலரும் கேட்டிருக்கிறார்கள்.

சிறைக்குள் கொரோனா தொற்று நுழைய முடியாது. சரி, அமானுஷ்யங்கள் நுழைய முடியுமா? இந்தக் கேள்வியை என்னிடம் பலரும் கேட்டிருக்கிறார்கள்.

உண்மையைச் சொல்வதானால் எனக்கு அந்த அனுபவமோ, நம்பிக்கையோ, அச்சமோ இல்லை. இருப்பினும் நான் பணியாற்றிய பல சிறைகளில் அமானுஷ்ய அனுபவங்களைச் சொல்லும் சிறைவாசி கள் பலரைச் சந்தித்திருக்கிறேன்.

பழநி பாபாவைப் பற்றி இன்றைய தலைமுறைக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு காலத்தில் தமிழகத்தைக் கலக்கிய சமூகப்போராளி அவர். அஹமது அலி என்ற இயற்பெயரைக் கொண்ட அவரின் சொந்த ஊர், பழநி அருகே உள்ள புது ஆயக்குடி. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் அபாரமாகப் பேசுவார். குர்ஆன், பைபிள், இதிகாசங்கள் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவர்.

எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்த அவர், அதே எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனதும் கடுமையாக விமர்சித்துப் பேசி அவருக்குப் பகைவரானார். அதனால் தலைமைச்செயலகத்துக்குள் அவர் நுழையவே தடைவிதித்தார் எம்.ஜி.ஆர். அந்தத் தடைக்கே தடை வாங்கினார் பழநி பாபா.

அந்தக் காலகட்டத்தில் அவர் பேசிய மேடை களின் எண்ணிக்கை 13,201. தடா சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் உட்பட 136 வழக்குகள் அவர்மீது இருந்தன. 126 முறை சிறைகளைக் கண்டவர். அவர் சிறைக்கு வரும்போதெல்லாம் அபூர்வமான பல விஷயங்களைப் பேசுவார்; சித்துவேலைகளைச் செய்தும் காட்டுவார்.

 ஜி.ராமச்சந்திரன்
ஜி.ராமச்சந்திரன்
நான் கோவை மத்திய சிறையில் பணியாற்றிய போது பழநி பாபா, அங்கே அடைக்கப் பட்டிருந்தார். அப்போது வெறும் கையில் விபூதி எடுத்து என்னிடம் தருவார்.
ஜி.ராமச்சந்திரன் - ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி, சிறைத்துறை

திடீரென கைகளை மூடித் திறந்து ரோஜாப்பூவைக் கொடுப்பார். ‘எல்லா சித்து விளையாட்டுகளும் எனக்குத் தெரியும். நான் நினைத்தால், உங்கள் முன்னாலேயே இந்தச் சிறையைவிட்டு வெளியே செல்ல முடியும்’ என்பார். பதிலுக்கு நானும் அவரிடம் சிரித்துக்கொண்டே, `உங்கள் சித்து விளையாட்டுகள் எல்லாம் சிறைக்கம்பிகளிடம் செல்லாது. அவற்றுக்கு அப்படி ஒரு சக்தி உள்ளது’ என்பேன். பழநி பாபா மட்டுமல்ல, அவரைவிட தந்திரமாக சித்துவேலைகளைச் செய்யும் பலே சாமியார்கள் பலரும் சிறையில் இருந்துள்ளனர். அவர்கள் எவராலும் தங்களுடைய சித்து வேலைகளைப் பயன்படுத்தி சிறையிலிருந்து தப்பிச் செல்ல முடிந்ததில்லை.

சிறைக்குள் அமானுஷ்யங்கள் உலவுவதை பலமுறை நேரில் பார்த்ததாகவும் பழநி பாபா சொல்வார்.

ஒரு முறை என்னை அழைத்து, ‘‘அங்கே போகும் சிறைக்காவலர் யார்? அவருக்குப் பின்னால் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தலை நிறைய பூ வைத்துக்கொண்டு, அழுதுகொண்டே போகிறார். உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா?’’ என்று கேட்டார். நான் வழக்கம்போல் அதைப் பொருட்படுத்தவில்லை.

அந்தச் சிறைக்காவலர் கேரளாவைச் சேர்ந்த வர். திடீரென விடுமுறையில் சென்றிருந்தார். மீண்டும் அவர் வந்தபோது எதற்காக விடுமுறை எடுத்துச் சென்றீர்கள் என்று கேட்டேன். தன் 18 வயது மகள் ஒரு விபத்தில் இறந்துபோய்விட்டார் என்று கூறி அழுதார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த விஷயம் பழநி பாபாவுக்குத் தெரியவே தெரியாது. எப்படி அவர் சொன்னார்? அதை என்னால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை, மறக்கவும் முடியவில்லை. இப்படி அவருடன் பல அனுபவங்கள் மறக்க முடியாதவை. கடந்த 1997-ம் ஆண்டு ஜனவரி 28 அன்று, பொள்ளாச்சியில் ஆறு பேர்கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார் பழநி பாபா.

கேரளாவில் அமானுஷ்யங்களைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. தமிழகத்திலும் அமானுஷ்யங்கள் குறித்து நாட்டார் கதைகள் இருக்கின்றன. ‘அனங்கு’ என்றால் ‘ஆணைத் தீண்டி வருத்திக் கொல்லும் பெண் தெய்வம்’ என்பார்கள். கடந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற சோ.தர்மன் எழுதிய ‘சூல்’ நாவலில்கூட, இதைப் பற்றி ஒரு கிளைக்கதை வரும்.

அவன் ஒரு விவசாயி; ஒரு நாள்கூட இரவில் வீட்டில் தங்காமல் காவலுக்கு தோட்டத்துக்குப் போய்விடுவான். காலையில் அவன் வீட்டுக்கு வரும்போது, அவனுடைய மனைவி தோட்ட வேலைக்குக் கிளம்பிவிடுவாள். கூடலுக்கான சூழலே இருக்காது. அந்தக் கோபத்தை அவள் வெளிப்படுத்துவாள். அவன் புரிந்துகொள்ள மாட்டான். ஒருநாள் இரவு சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் காவலுக்குப் போய்விடுவான்.

ஜெயில்... மதில்... திகில்
ஜெயில்... மதில்... திகில்

நள்ளிரவில் தேத்தண்ணி (தேநீர்) எடுத்துக்கொண்டு அவன் மனைவி வருவாள். அவளைப் பார்த்து கோபப்படும் அவன், ‘இந்த மையிருட்டில் ஏன் தனியாக வந்தாய்... காத்து கருப்பு அடித்து விடாதா?’ என்று கேட்பான். அதற்கு அவள், ‘பகலில் நான் தோட்டத்துக்கு வந்துவிடுகிறேன். நீ இரவில் இங்கு வந்துவிடுகிறாய்... என் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவே மாட்டாயா?’ என்று ஏக்கமாகக் கேட்பாள்.

அங்கே ஊடல் தொலைந்து காமம் தொடங்கும். வாழ்க்கையில் அதுவரை அனுபவித்திராத இன்பத்தை அவன் அனுபவிப்பான். அதிகாலை யில் எழுந்து பார்க்கும்போது மனைவி அருகில் இருக்க மாட்டாள். வீடு திரும்பியவன், மனைவி யிடம் பேசும்போதுதான் வந்தது அவள் அல்ல என்கிற விஷயமே அவனுக்குத் தெரியும். கண்கள் சிவக்க மயக்கமாகிவிடுவான். தன்னை மணந்து கொள்ள தாய்மாமன் மறுத்ததால் தற்கொலை செய்துகொண்ட ஒரு கன்னிப்பெண்தான் அவனோடு இணைந்தாள் என்று ஊரே பேசும். அவனுக்கு வைத்தியம் தந்து பிழைக்க வைப்பார்கள்.

1983-ம் ஆண்டு நான் வேலூர் சிறையில் பணியாற்றியபோது, ஒரு சம்பவம் நிகழ்ந்தது. வேலூர் மருத்துவக் கல்லூரி மாணவன் ஒருவன் தற்கொலை முயற்சி வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டான். வடமாநிலத்தைச் சேர்ந்த அவன் லட்சணமாக இருந்தான். புத்திக்கூர்மையும் அதிகம். அவனுடன் படித்த மருத்துவ மாணவி ஒருத்தி, அவனை தீவிரமாய்க் காதலித்தாள். ஆனால், அவளுடைய காதலை இவன் ஏற்றுக் கொள்ளவில்லை.

விரக்தியில் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டாள். இதை எதிர்கொள்ள முடியாத இவன், குற்ற உணர்ச்சியில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுவிட்டான். அவனுக்கு தமிழ் சரியாகத் தெரியாது. இந்தியில்தான் பேசுவான். அவனை மற்ற சிறைவாசிகள் இருக்கும் பகுதியில்தான் அடைத்திருந்தோம். இரவாகிவிட்டால் அவன் தனியாகப் பேசத் தொடங்கிவிடுவான். இது நாளுக்குநாள் முற்றி, ஒரு பெண்ணுடன் சண்டைபோடுவதைப் போலவே கூச்சலிட்டுக் கத்த ஆரம்பித்தான். அவனிடம் கேட்டதற்கு, அந்தப் பெண் தினமும் தன்னைப் பார்க்க வருவதாகக் கூறி, எங்களை அதிரவைத்தான். இதனால் மற்ற கைதிகளும் அச்சப்படத் தொடங்கினார்கள்.

ஜெயில்... மதில்... திகில்
ஜெயில்... மதில்... திகில்

வேறு வழியின்றி அவனை தனிச்சிறைக்குள் அடைத்தோம். அங்கு அவனது பிரச்னை பெரிதானது. வழக்கத்தைவிட உக்கிரமாகக் கூச்சலிட்டான். தனி அறைக்கு வெளியே உள்ள காவலரிடம் ‘‘சார் சார்... அவ வர்றா சார்...அவளை உள்ளே விடாதீங்க... போகச் சொல்லுங்க சார்’’ என்று இந்தியில் கத்துவான். ஒரு கட்டத்தில் கண்ணீர்விட்டு அழுது, ‘‘சார்... அவளோட செக்ஸ் வெச்சுக்கணும்னு சொல்றா சார்... ப்ளீஸ் அவளைத் துரத்திவிடுங்க’’ என்று கதறுவான். அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும்.

அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பகல் நேரத்தில் அவனால் எந்தத் தொந்தரவும் இருக்காது. இருக்கும் இடம் தெரியாமல், சிறை விதிகளை சரியாக மதித்து நடந்துகொள்வான். மருத்துவமனைக்குச் செல்லும்போதும் மிகவும் இயல்பாக இருந்தான். அதனால், அவனுக்கு என்ன சிகிச்சை தருவதென்றும் தெரியவில்லை. தூங்கவைப்பதற் கான மருந்து மாத்திரைகளை மட்டும் கொடுத்து அனுப்பிவைத்தார்கள்.

சிறைக்கு வந்தால் இரவு நேரங்களில் அவன் கத்துவதும் கதறுவதும் தொடர்ந்தன. ஒருநாள் எங்களை உறையவைக்கும் அந்தச் சம்பவம் நடந்தது...

நள்ளிரவில் வழக்கம்போல் ‘‘இங்க வராத... வராத... வந்தா நான் செத்துருவேன். என்னால உன்கூட செக்ஸ் வெச்சுக்க முடியாது. ப்ளீஸ் திரும்பிப் போயிரு!’’ என்று கத்திக்கொண்டே இருந்தவன், திடீரென, ‘‘உனக்கு என்னடி வேணும்... இதுதானே வேண்டும்’’ என்று கூறி, தன்னுடைய விதைப்பையை அறுத்துத் தூக்கி எறிந்து மயங்கிவிட்டான்.

அவனுடைய அலறல் மொத்த சிறையிலும் எதிரொலித்தது. சிறைக்குள் ரத்தம் வழிந்தோட விழுந்து கிடந்தவனையும் அவன் எறிந்த விதைப்பையையும் எடுத்துக்கொண்டு, அரசு மருத்துவமனைக்கு ஓடினோம். அங்கே அவனுக்கு உடனடியாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, விதைப்பை மீண்டும் தைக்கப்பட்டது. உயிர் பிழைத்தான் அவன். சிறை மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்லும்போது அங்கிருந்து கத்தியை எடுத்து வந்திருக்கிறான்.

ஆச்சர்யம் என்னவென்றால்... அவன் நலமாகி மீண்டும் சிறைக்கு வந்த பிறகு, அமைதியாகி விட்டான். அவனிடம் கேட்டதற்கு, ‘‘இப்பல்லாம் அவ என்னைத் தேடி வர்றதில்லை சார்!’’ என்றான். அவனைத் தேடி வந்தது அமானுஷ்யமா... அழிக்கவே முடியாத அன்பா... இதற்கு யார் பதில் சொல்வது?

ஆனால் உயர்ந்த மதில்கள், பல வாயில் கதவுகள், கடுமையான பாதுகாப்பு இவற்றை எல்லாம் தாண்டி ஒரு கைதியால் சிறையிலிருந்து தப்பிவிட முடியுமா? உலகம் முழுவதும் சிறையி லிருந்து கைதிகள் தப்பிய சாகசங்களைப் பற்றி நிறைய கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. சிலவற்றை உங்களுடன் பகிர்கிறேன்.

(கதவுகள் திறக்கும்)