மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 20 - வலையால் போர்த்தப்பட்ட பூந்தமல்லி கிளைச் சிறை!

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

துப்பாக்கி முனையில் கதவுகளைத் திறக்கச் செய்து, வெளியே சென்று அங்கு இருந்த காரைத் திருடிக் கொண்டு தப்பினான் ஜான்.

`கள்வன் பெரியவனா... காப்பான் பெரியவனா!’ என்றொரு சொலவடை இருக்கிறது. அதற்கு விடையாக, கள்வனே பெரியவன் என்பார்கள்.

இது சிறைத் துறைக்கும் பொருந்தும். கைதிகள் தப்பிச் செல்லாத சிறைச்சாலைகளே உலகில் இல்லை எனலாம். சிறிய வழி கிடைத்தாலும் கைதிகள் தப்பிவிடுவார்கள்.

நேரம், சூழல் மற்றும் சிறைக் கட்டமைப்பு போன்றவை, தப்பித்தலுக்கு மிக முக்கியக் காரணிகள். கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல்போய்விடுவார்கள். கண்கொத்திப் பாம்பாக விழித்திருந்தாலும் சிலர் கண்ணுக்கு எதிரேயே எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

உலகிலேயே மிகவும் பாதுகாப்பான சிறைகளில் ஒன்றாக அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தில் இருக்கும் எஸ்கேப் புரூஃப் லேக் கவுன்டி (Escape proof lake county Jail) சிறையைச் சொல்வார்கள். அந்தச் சிறையின் பாதுகாப்பு, அமெரிக்க ராணுவத்திடமும் தேசிய காவல்படையிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 ஜி.ராமச்சந்திரன் - ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி, சிறைத்துறை
ஜி.ராமச்சந்திரன் - ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி, சிறைத்துறை

இங்கிருந்து ஒரு கைதி தப்பிக்க முயற்சி செய்வதாகத் தெரிந்தால், துரத்தியெல்லாம் செல்ல மாட்டார்கள். ஆங்காங்கே கண்காணிப்புப் பணியிலிருக்கும் ராணுவ வீரர்கள் துப்பாக்கியின் லென்ஸால் துல்லியமாகக் குறிவைப்பார்கள். ‘டுஷ்யூம்... டுஷ்யூம்’தான். தப்பிச் சென்றால் மரணம் நிச்சயம். 1934-ம் ஆண்டு அப்படிப்பட்ட சிறையிலிருந்தே துப்பாக்கியைக் காட்டி தப்பிச் சென்றான் ஜான் டில்லிங்செர் என்கிற கைதி. எங்கிருந்து அவனுக்கு துப்பாக்கி கிடைத்த தென்று யாருக்கும் தெரியவில்லை.

துப்பாக்கி முனையில் கதவுகளைத் திறக்கச் செய்து, வெளியே சென்று அங்கு இருந்த காரைத் திருடிக் கொண்டு தப்பினான் ஜான். சற்று தூரம் சென்றவுடன் காரிலிருந்து துப்பாக்கியை எறிந்துவிட்டான். அதை எடுத்துப் பார்த்த ராணுவ வீரர்கள் முகத்தில் ஈயாடவில்லை. சோப் கட்டி அது. சோப் கட்டியை வெட்டி சாயம் பூசி அச்சு அசலாக நிஜத் துப்பாக்கிபோலவே தயாரித்திருக்கிறான் அந்த அதிபுத்திசாலிக் கைதி!

பிரான்ஸ் நாட்டில் லூயின் (luynes) என்ற சிறைச்சாலை இருக்கிறது. பாதுகாப்பு அதிகமுள்ள சிறைகளில் இதுவும் ஒன்று. கடந்த 2001-ம் ஆண்டு பேயட் என்கிற கைதி கொலைக் குற்றத்துக்காக இங்கு அடைக்கப்பட்டான். அவனுக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப் பட்டிருந்தது. இந்தச் சிறையின் மொட்டைமாடியில் உடற்பயிற்சி செய்வதற்காக கைதிகள் அனுமதிக் கப்படுவார்கள். அங்கும் கடும் கண்காணிப்பு இருக்கும். ஒருநாள், கைதிகள் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது ஹெலிகாப்டர் ஒன்று மொட்டைமாடிக்கு மேல் தாழ்வாகப் பறந்தது. அதில் வந்தவர்கள் மின்னல் வேகத்தில் கயிற்றைத் தூக்கிப்போட்டு நொடிகளில் பேயட்டைத் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். இரண்டு ஆண்டுகள் அவன் எங்கே போனான் என்றே தெரியவில்லை.

அவனுடைய நண்பர்கள் சிலர் அதே சிறையில் இருந்தார்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து திடீரென ஒருநாள் மீண்டும் ஒரு ஹெலிகாப்டர் வந்தது. அதேபோல் கயிறு வீசப்பட்டது. பேயட் டின் நண்பர்கள் மூவர் எஸ்கேப். இந்தமுறை ஹெலிகாப்டரில் வந்தது பேயட் என்பது பின்னாளில் தெரிந்தது.

கடுப்பான பிரான்ஸ் காவல்படை, சில நாள்களிலேயே பேயட்டைப் பிடித்துவிட்டது. தப்பிச் சென்றதற்காக அவனுக்கு கூடுதலாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இந்தமுறை பிரான்ஸின் தென்கிழக்கில் உள்ள கெகாஸ் சிறையில் (Grasse) அடைக்கப்பட்டான் அவன். ஆனாலும் பேயட்டின் ‘சுதந்திர தாகம்’ தணியவில்லை. இந்தமுறை அவனின் நண்பர்கள் சிறைக்கு அருகில் விமானதளத்தில் இருந்த ஹெலிகாப்டரை ஹைஜாக் செய்தனர். மீண்டும் பேயட்டைத் தூக்கிச் சென்றுவிட்டார்கள். தங்கள் திட்டப்படி பேயட்டை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுசென்றுவிட்டதால் பைலட்டை உயிருடன் விட்டார்கள். பிறகு, பேயட் தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு உருவத்தை மாற்றிக்கொண்டான். அவனது குற்றச்செயல்கள் தொடர்ந்தன.

2007-ம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று ஸ்பானிஷ் போலீஸாரால் மீண்டும் கைதுசெய்யப் பட்டான் பேயட். அதன் பிறகு பாதுகாப்பு நடைமுறைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டன. இப்போதுவரை அவனால் சிறையிலிருந்து தப்ப முடியவில்லை. ஆனால், எப்போதும் எதுவும் நடக்கலாம். ஏனெனில், ஒருமுறை ஒரு கைதி சிறையிலிருந்து தப்பிவிட்டால், அவனுக்கு எப்போதும் தப்பிக்கும் எண்ணமே மேலோங்கி யிருக்கும். அதனால் அத்தகைய கைதியை தனியாகக் கண்காணிப்பது மிகவும் முக்கியம்.

பேயட் ஹெலிகாப்டரில் தப்பித்த கதைகள் உலகளாவிய செய்திகளாயின. தமிழகம் வரை அது எதிரொலித்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த விசாரணைக் கைதிகளை விடுதலைப்புலிகள் ஹெலிகாப்டர் மூலம் தப்பிக்கவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சில பத்திரிகைகள் எழுதின. அப்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்தச் சிறையைச் சுற்றிலும் நெருக்கமாக வீடுகளும் கடைகளும் இருந்தன. பரபரப்பான ஏரியாவாக இருந்தது அது.

உடனடியாக ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணைக் கைதிகள் அனைவரும் பூந்தமல்லி கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டனர். பூந்தமல்லி கிளைச் சிறை, உயர் பாதுகாப்பு மிக்க சிறையாக மாற்றப்பட்டது. அந்த வளாகம் முழுவதும் சி.ஆர்.பி.எஃப் காவலர்களும் அதிகாரிகளும் குவிக்கப் பட்டனர். அவர்கள் அங்கேயே தங்குவதற்கு தற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டன. சிறையைச் சுற்றியும் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஏகே 47 மற்றும் எஸ்.எல்.ஆர் ரக துப்பாக்கிகள் ஏந்திய காவலர்கள் காவல் காத்தார்கள்.

ஜெயில்... மதில்... திகில்
ஜெயில்... மதில்... திகில்

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றமும் அந்த வளாகத்திலேயே அமைக்கப்பட்டது. அனைத்து வாகனங்களும் சிறைப் பகுதிக்குள் வராமல் வெளியிலேயே தடுக்கப்பட்டன. சிறைவாசிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் கடும் சோதனை களுக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் எந்த ஒரு பொருளையும் சிறைக்குள் கொண்டுவர அனுமதி யில்லை. போலீஸார், சி.ஆர்.பி.எஃப் மற்றும் சிறைக் காவலர்கள் என மூன்று அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

டெல்லியிலிருந்து வந்த மத்திய பாதுகாப்பு உயர்மட்டக் குழு பூந்தமல்லி சிறையைப் பார்வை யிட்டு, மேலும் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியது. அதற்குப் பிறகு இந்திய சிறை வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகாயத்தில் இருந்தும் எதுவும் நுழைய முடியாத வகையில் சிறை முழுவதும் இரும்புக் கம்பிகளால் (Aerial Fencing) மூடப்பட்டது. அதாவது, சிறைக்கே சிறை. ஆகாயத்திலிருந்தும் யாரும் வந்து கைதிகளை தூக்கிச் செல்ல முடியாது!

சரி, பூமியைத் தோண்டித் தப்பிக்க முடியுமா? இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியப் படையினரால் கைதுசெய்யப்பட்ட நேசப்படை வீரர்கள் பலரும் போலந்தின் யுத்தச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்தச் சிறையிலிருந்து தப்புவதற்கு ரோகர் புஷெல் என்பவரின் தலைமையில் ஒரு பிரமாண்டமான திட்டம் தயாரானது.

ஜெயில்... மதில்... திகில்
ஜெயில்... மதில்... திகில்

முப்பது அடி ஆழம், இரண்டி அடி அகலத்தில் மூன்று சுரங்கங்கள் தோண்டப் பட்டன. உள்ளே தண்டவாளம் அமைக்கப் பட்டது. அதில் டிராலியை வைத்து மண்ணை வெளியே கொண்டுவந்தனர். அந்த மண்ணை கைதிகள் தங்கள் உடைகளுக்குள் மறைத்துவைத்து நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள சிறை வளாகத்தின் வெவ்வேறு பகுதிகளில் போட்டனர். ஒரே நேரத்தில் மூன்று சுரங்கங்கள் தோண்டப்பட்டன. சுரங்கப்பாதைக்குள் ஆக்ஸிஜன் பம்ப் செய்யப்பட்டது.

1943 ஜனவரியில் தொடங்கப்பட்ட இந்தப் பணி, 1944 மார்ச் மாதம் முடிக்கப்பட்டது. சிறைக்குள் தொடங்கிய சுரங்கம் 102 மீட்டர் தொலைவுக்குத் தோண்டப்பட்டு ஒரு காட்டுப்பகுதியில் முடிவடைந்தது. 1944, மார்ச் 24 அன்று இரவு கும்மிருட்டு. திட்டமிட்டபடி 76 கைதிகள் புறப்பட்டு 25-ம் தேதி காலை 5 மணிக்கு சுரங்கப்பாதையின் அடுத்த முனையை அடைந்து, காட்டுக்குள் மறைந்தனர். கடைசி கைதி தப்பிச் செல்லும்போதுதான் அது நிகழ்ந்தது!

(கதவுகள் திறக்கும்)