
டார்மெட்ரி தொகுதிகளில் 50 முதல் 100 கைதிகள் இருப்பார்கள். அவர்களை இரவில் பாதுகாக்க நைட் வாட்ச்மேன் மற்றும் ஓவர்சியர் நியமிக்கப்படுவார்கள்.
அந்தக் கடைசிக் கைதியின் தலை, சுரங்கப்பாதை யிலிருந்து வெளிப்பட்டது. அதற்குள் காட்டுக்குள் சலசலப்பு சத்தம் கேட்டு ரோந்துப் பணியிலிருந்த காவலர் ஒருவர் அங்கு வந்துவிட்டார்.
76-வது கைதியை துப்பாக்கிமுனை வரவேற்றது. உடனே அபாய ஒலி எழுப்பப்பட்டது. சிறை வளாகம் பரபரப்பானது.
ஒட்டுமொத்த காவல்துறையும் முடுக்கி விடப்பட, அந்தக் காடு சுற்றிவளைக்கப்பட்டது. தப்பி ஓடிய கைதிகளில் 50 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மூன்று கைதிகள் தவிர மற்றவர்கள் பிடிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, பிரிட்டிஷார் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளில் சிறைகளின் பாதுகாப்பை அதிகப்படுத்தினர். இந்தியாவில் கட்டப்பட்ட சிறைகளும் சுரங்கங்கள் தோண்ட முடியாத அளவுக்கு மிகுந்த பாதுகாப்புக் கட்டமைப்பு களுடன் வடிவமைக்கப்பட்டன.
அப்படியும் வேலூர் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஈழப்போராளிகள் சுரங்கப் பாதை அமைத்து, அகழி வழியாகத் தப்பிச் சென்றனர். அவர்கள் விரைவில் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதேசமயம், அவர்கள் தப்பிச் சென்றது பிரிட்டிஷார் கட்டிய சிறைச்சாலையிலிருந்து அல்ல; அப்போது வேலூர் கோட்டையில் தற்காலிக சிறை அமைக்கப்பட்டு அவர்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்கள். இந்தியச் சிறை நடைமுறை நூலில் சிறைக்குள் சுரங்கப்பாதை தோண்டி தப்பிவிடக் கூடாது என்பதற்காகவே பல்வேறு எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, தினமும் ஒவ்வோர் அறையையும் துல்லியமாக சோதனை செய்ய வேண்டும். சினிமாவில் காவலர்கள் சிறைக்கம்பிகளைத் தட்டிக்கொண்டே செல்வது போன்ற காட்சி களைப் பார்த்திருப்பீர்கள். அது ஓர் எச்சரிக்கை நடைமுறை. காவலர்கள் அசந்த நேரத்தில் தப்பிக்கலாம் என நினைத்து, கம்பிகளை 90 சதவிகிதம் அளவுக்கு அறுத்து, அதன் நுனியை கைதிகள் அப்படியே விட்டுவைத்திருக்கவும் வாய்ப்பு உண்டு. அதற்காகவே கம்பிகள் தட்டப்படுகின்றன.
சிறைப் பாதுகாப்புக்கு காவலர்கள் மட்டும் போதாது; தண்டனைக் காலத்தை பாதிக்கும்மேல் கழித்திருக்கும் நன்னடத்தைகொண்ட கைதிகள் தேர்வுசெய்யப்பட்டு, அவர்களுக்கு முதலில் நைட் வாட்ச்மேன், பிறகு ஓவர்சியர் (மேற்பார்வையாளர்), அதன் பிறகு கன்விக்ட் வார்டர் (குற்றக் காவலர்) என பதவி உயர்வுகள் வழங்கப்படும். நைட் வாட்ச்மேன் மற்றும் ஓவர்சியர்கள் வெளியே இரவு காவல் பணிக்கு அமர்த்தப்பட மாட்டார்கள்.
டார்மெட்ரி தொகுதிகளில் 50 முதல் 100 கைதிகள் இருப்பார்கள். அவர்களை இரவில் பாதுகாக்க நைட் வாட்ச்மேன் மற்றும் ஓவர்சியர் நியமிக்கப்படுவார்கள்.
கைதிகள் தப்பிச் செல்லாமல் இருக்க, அடித்துக்கொள்ளாமல் இருக்க, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் உபயோகப் படுத்தாமல் தடுக்க, அதிகாரிகளுக்கும் நிர்வாகத் துக்கும் எதிராக சதி ஆலோசனையில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ள, தொகுதியில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க, கைதிகளுக்கு திடீரென உடல்நலம் சரியில்லையென்றால் அதை அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரிவித்து சிகிச்சை அளிக்க, அவசர காலங் களில் சிறை அதிகாரிகளுக்கு உதவ... என இவர்களின் பணி பலவாறு வகுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கைகளில் கட்டிக்கொள்ள ‘நைட் வாட்ச்மேன்’ என எழுதப்பட்ட பித்தளை வில்லை ஒன்று வழங்கப்படும். இவர்களுக்கு தண்டனைக் குறைப்பு மட்டுமல்லாது, பணிக்கேற்ப ஊதியமும் வழங்கப்படும். ஆறு மாதம் எந்தப் புகாரும் இல்லாமல் பணியாற்றி யிருந்தால், இவர்களுக்கு அடுத்த பணி உயர்வான ஓவர்சியர் வழங்கப்படும். ஓவர்சியர்கள் எந்தப் புகாருக்கும் உள்ளாகாமல் பணியை ஆறு மாத காலம் சிறப்புடன் செய்திருந்தால், அவர்களுக்கு கன்விக்ட் வார்டர் பதவி உயர்வு வழங்கப்படும்.

கைதிகளின் எண்ணிக்கையில் 10 சதவிகிதம் வரை கன்விக்ட் வார்டர்களை நியமித்துக் கொள்ளலாம். எத்தனை பேர் என்பதை சிறைத்துறைத் தலைவர் தீர்மானம் செய்வார். எல்லா மத்திய சிறைகளிலும் நூற்றுக்கும் அதிகமான கன்விக்ட் வார்டர்கள் நியமிக்கப் பட்டிருப்பார்கள். இவர்களுக்கு வெள்ளை சீருடை வழங்கப்பட்டிருக்கும். இவர்கள் மற்ற கைதிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு தனித் தொகுதியில் இருப்பார்கள். இவர்களின் தொகுதி பூட்டப்படாது. ஆபத்துக் காலங்களில் விசிலை ஊதி அபாய ஒலி எழுப்பி காவலர்களைத் திரட்டவும், கலவரத்தின்போது தடியடி நடத்தவும் இவர்களுக்கு அதிகாரம் உண்டு.
வெளி சுற்றுச்சுவர்கள் பாதுகாப்பில் இவர்கள் காவலர்களுக்குத் துணையாக இருப்பார்கள். ஷிஃப்ட் முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வாரம் ஒரு நாள் சுழற்சி முறையில் இவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படும். மற்ற கைதிகள் இவர்களைக் கண்டாலே பயப்படுவார்கள். கைதிகளிலேயே சிலரைத் தேர்வுசெய்து, கைதிகளைக் கண்காணிக் கும் இந்த முறை பிரிட்டிஷார் கையாண்ட பிரித்தாளும் தந்திரம்.
இவ்வளவு கெடுபிடிகள், காவல்களைத் தாண்டி, பெண் கைதி ஒருவர் சென்னை மத்திய சிறையிலிருந்து தப்பித்துச் சென்றார். அது, 1986-ம் ஆண்டு. அப்போது நான் சென்னை மத்திய சிறையில் துணை சிறை அலுவலராக இருந்தேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 4 மணி இருக்கும். திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட பெண் ஒருவர், ஆறு மாதம் தண்டனை பெற்று கொண்டுவரப்பட்டார். மறுநாள் அவரை நாங்கள் வேலூர் பெண்கள் சிறைக்கு அனுப்ப வேண்டும். ஏனெனில், சென்னை மத்திய சிறையில், பெண் விசாரணைக் கைதிகள் மற்றும் தடுப்புக்காவலில் கைதுசெய்யப்படும் பெண்கள் மட்டுமே அடைக்கப்படுவார்கள். ஒரு மாதத்துக்குமேல் தண்டனை பெற்ற பெண் குற்றவாளிகள் வேலூரில் உள்ள பெண்கள் சிறைக்கு அனுப்பப் படுவார்கள்.
வேலூர் பெண்கள் சிறை, 1830-ம் ஆண்டு கட்டப்பட்டது. இதுதான் தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் சிறை. அந்தக் காலத்தில் அந்தச் சிறைக்கு `பிரசிடென்சி ஜெயில் ஃபார் வுமன்’ (Presidency Jail for Women) என்று பெயர். இந்தச் சிறையில் 412 கைதிகளை அடைக்கலாம். இங்கு உள்ள பணியாளர்களும் பெண்களே. பிறகுதான் 1837-ம் ஆண்டு சென்னை மத்திய சிறை கட்டப்பட்டது. அப்போது அந்தச் சிறைக்கு பெயர் `மெட்ராஸ் பெனெடென்ஷரி’ (Madras Penitentiary). இது 1867-ல் மத்திய சிறையாக மாற்றப்பட்டது.
சரி... திருட்டு வழக்கில் தண்டனை பெற்று சென்னை மத்திய சிறைக்குக் கொண்டுவரப்பட்ட பெண் விஷயத்துக்கு வருவோம். அவர் அன்றைய இரவு மட்டும் சென்னை சிறையில் தங்கிச் செல்ல வேண்டும். அவரை சென்னை மத்திய சிறையில் உள்ள பெண்கள் பகுதிக்கு அனுப்பினோம். மாலை, அனைத்து பெண் கைதிகளுக்கும் உணவு வழங்கப்பட்டது. அந்தப் பெண் உணவு எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை.
அன்றைய நாள்களில் தொலைக்காட்சியில் வாரம் ஒரு முறை தூர்தர்ஷனில் சினிமா ஒளிபரப்பாகும். பெண்கள் சிறை வளாகத்தில் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று இருந்தது. அனைத்து பெண் சிறைவாசிகளும் திரைப்படம் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். திரைப்படம் முடிந்த பிறகு அனைவரும் அவரவர் அறைகளில் பூட்டப்படுவர். புதிதாக வந்த அந்தப் பெண்ணும் திரைப்படம் பார்க்க அனுமதிக்கப்பட்டார்.
சினிமா முடிந்துவிட்டது. சற்று நேரத்தில் பெண்கள் பகுதிகளிலிருந்து சலசலப்பு... பரபரப்பு. கணக்கெடுக்கும்போது ஒரு தலை குறைந்தது. சில மணி நேரத்துக்கு முன்பு புதிதாக வந்த பெண்ணைத் தான் காணவில்லை!
(கதவுகள் திறக்கும்)