மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 22 - தாய் அழுதாளே நீ வர... நீ அழுதாயே தாய் வர!

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

நான் சிறைக்குள்தான் இருந்தேன். அங்கிருந்து சில மணி நேரம் முன்பாகத்தான் சுவர் ஏறிக் குதித்து என் குழந்தையை எடுத்து வரப் போனேன். இதோ எடுத்து வந்துவிட்டேன். என்னை உள்ளே விடுங்கள்

அடுத்த நாள் வேலூர் பெண்கள் சிறைக்கு அனுப்பப்பட வேண்டிய அந்தப் பெண்ணைக் காணவில்லை என்றதும், அனைவரும் உஷார் ஆனோம்.

பெண்கள் பகுதியில் மட்டுமே வெளிக்கதவு சற்று திறந்து வைக்கப் பட்டிருந்தது. அவர் அங்கிருந்து மட்டும்தான் சென்றிருக்க முடியும். சிறையில் அங்குலம் விடாமல் சல்லடைப்போட்டுத் தேடினோம். ஆனால் அவர் இல்லை. பதற்றம் தொற்றிக் கொண்டது. அலாரம் அலறியது. விசில் சத்தம் காதைப் பிளந்தது. சுற்றுச்சுவர் மேல் ஏறி தப்பிச் சென்றதற்கான தடம் இருக்கிறதா எனப் பார்த்தோம். இல்லை. இருபது அடி உயரமுள்ள சுற்றுச்சுவரை ஒரு பெண் தாண்டிச் செல்ல வாய்ப்பே இல்லை. பிரதான வாயிலில் காவலர்களைத் தாண்டியும் போயிருக்க முடியாது. இரவு மணி 8.30 ஆகிவிட்டது.

ஜி.ராமச்சந்திரன்ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி, சிறைத்துறை
ஜி.ராமச்சந்திரன்ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி, சிறைத்துறை

கழிவுநீர் பாதைகள், சாக்கடைகள், மேல்நிலை தண்ணீர்த் தொட்டிகள், நிலத்தடி தண்ணீர்த் தொட்டிகள் என எதையும் விடாமல் சோதனை செய்தோம். ம்ஹும்... எங்கும் அவர் இல்லை. பதற்றம் கூடியது. பெண்கள் பகுதியைவிட்டு வெளியே சென்றால் சிறையின் சுற்றுச்சுவரைத்தான் அந்தப் பெண் அடைய முடியும். அது குற்றக் காவலர்களால் பாதுகாக்கப்படுகிறது. வெளியே கொடும் குற்றங்கள் செய்துவிட்டு வந்துள்ள அவர்கள், தற்போது நல்ல மனநிலையில் இருக்கலாம்தான். ஆனால், நேரங்கெட்ட நேரத்தில் ஒரு பெண்ணை அவர்கள் தனியாக எதிர்கொள்ள நேர்ந்தால் எப்படி நடந்துகொள்வார்கள் என யூகிக்க முடியாதல்லவா! எனவே, அனைத்து குற்றக்காவலர்களும் வரவழைக்கப்பட்டு, அவர்கள் தொகுதிகளிலும் சோதனை செய்தோம்.

அந்த இரவிலும் மரங்களிலெல்லாம் ஏறி சோதனை செய்தோம். அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பாரோ... தற்கொலை செய்துகொண்டிருப்பாரோ என்றெல்லாம் பல்வேறு சந்தேகங்கள் தோன்றின. ஒவ்வொரு கட்டடத்தின் மேலே ஏறியும் சோதனை செய்தோம். எங்கும் அவர் இல்லை. சிறையில் இனி தேட வேண்டிய இடம் எதுவும் இல்லை.

பாரா காவலர்கள் அனைவரும் வரவழைக்கப் பட்டு, அவர்களிடமும் விசாரித்தோம். மேற்கு மூலையில் நின்றிருந்த குற்றக்காவலர் ஒருவர் தனது பாரா ஏரியாவில் அச்சகக் கட்டடச் சுவரின் மேல் உள்ள மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்தது என்றார். அங்கு சென்று பார்த்தோம். எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. சிறைக்குள் இருக்கும் ‘க்ளோஸ்டு ப்ரிசன்’ கட்டடத்தின் மேலிருந்து அச்சகக் கட்டடத்துக்குத் தாண்டுவது அவ்வளவு சுலபமல்ல... சாத்தியமுமல்ல. எனவே, காற்றில் கிளை முறிந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.

உள்ளே நாங்கள் எல்லோரும் அந்தப் பெண்ணைத் தேடிக்கொண்டிருக்க... வெளியே நடந்த காட்சிகளோ வேறு...

இரவு சுமார் 10 மணி. ஒரு பெண், கையில் குழந்தையுடன் சிறை வாயிலுக்கு வருகிறாள். அங்கே துப்பாக்கி ஏந்திய காவலர் ‘இரவு நேரத்தில் இங்கெல்லாம் வரக் கூடாது’ என்று அந்தப் பெண்ணை விரட்டுகிறார். மீண்டும் மீண்டும் விரட்டியும் அந்தப் பெண் அங்கிருந்து நகரவில்லை. சற்று நகர்வதும் மீண்டும் வருவதுமாக இருக்கிறார்.

ஜெயில்... மதில்... திகில்! - 22 - தாய் அழுதாளே நீ வர... நீ அழுதாயே தாய் வர!

இரவு 9 மணிக்குமேல் சிறை வாயிலுக்கு வர வெளியாட்களுக்கு அதிகாரமில்லை. யாரேனும் அத்துமீறினால் துப்பாக்கிச்சூடு நடத்தவும் காவலருக்கு அதிகாரம் உண்டு. அப்போது அங்கு வந்த கார்டு ஆபீஸர் அந்தப் பெண்ணை நெருங்கி, ‘`எங்கு போக வேண்டும்?’’ என்று விசாரித்தார்.

“சிறைக்குள் போக வேண்டும். நான் சிறைக்குள்தான் இருந்தேன். அங்கிருந்து சில மணி நேரம் முன்பாகத்தான் சுவர் ஏறிக் குதித்து என் குழந்தையை எடுத்து வரப் போனேன். இதோ எடுத்து வந்துவிட்டேன். என்னை உள்ளே விடுங்கள்”

என்றார். ஆடிப்போனார் கார்டு ஆபீஸர்.

‘மூன்று மணி நேரம் சிறை வளாகத்தையே உண்டு, இல்லை என்றாக்கியவர் இந்தப் பெண்தானா!’ எனப் பதறிப்போனவர், அந்தப் பெண்ணை உள்ளே வரச்சொல்லிவிட்டு, எங்களுக்கும் தகவல் அனுப்பினார். நாங்கள் ஓட்டமும் நடையுமாக வாயிலுக்கு வந்தோம். கையில் குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தார் அந்தப் பெண். அவர் முகத்தில் சிறையிலிருந்து தப்பியதற்கான பதற்றமோ பயமோ இல்லை. சாந்தம் குடிகொண்டிருந்தது!

*******

அந்தப் பெண்ணுக்கு 25-லிருந்து 30 வயதுக்குள் இருக்கும். சற்றே மாநிறம். ஒல்லியான தேகம். மாலை சிறைக்குள் அனுமதிக்கப்பட்டவர் இந்தப் பெண்தான் என்று, பெண் காவலர்கள் அடையாளம் காட்டினார்கள். அவர் தன் மார்புடன் அணைத்திருந்த அந்தக் குழந்தைக்கு ஒரு வயது இருக்கும். அவரது கைகளில் சிராய்ப்புக் காயங்கள். ஆங்காங்கே ரத்தக்கசிவு. சேலையும் ஜாக்கெட்டும் லேசாகக் கிழிந்திருந்தன. எண்ணெயைப் பார்த்துப் பல நாள்கள் ஆன தலைமுடி. அவ்வளவு நேரம் அவரைத் தேடிய ஆத்திரமோ கோபமோ எங்களுக்கு ஏற்படவில்லை. குழந்தையுடன் அவரைப் பார்த்ததும் ஒருவித கனிவு எங்கள் மனதுக்குள்ளும் புகுந்திருந்தது. அவரை ஆசுவாசப்படுத்தி ‘என்ன நடந்தது?’ என்று கேட்டோம்.

“கிருஷ்ணகிரி பக்கம் மலைக்கிராமம்தான் என் சொந்த ஊருங்க. காட்டுல சுள்ளி பொறுக்கிப் பொழச்சிவந்தோம். பக்கத்து ஊர்க்காரன் ஒருத்தன், என்னைக் காதலிச்சான். நானும் அவனைக் காதலிச்சேன். கல்யாணம் செஞ்சுக்கிட்டு, பிழைப்புத் தேடி சென்னை வந்தோம். சரியான வேலை கிடைக்கலை. பசி... பட்டினி. ஒருநாள், என் புருஷன் என்னை காசுக்காக இன்னொருத்தன்கூட படுக்கச் சொன்னான். `போடா பொறுக்கி’ன்னு மறுத்துட்டேன். அன்னையிலிருந்து ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை. இதுக்கு நடுவுல நான் ஒரு குழந்தைக்குத் தாயானேன்.

ஒண்டியிருந்த குடிசைக்குக்கூட வாடகை கொடுக்க முடியலை. அங்கிருந்து விரட்டிட்டாங்க. மெதுவா நடந்து சேத்துப்பட்டு ரயில்வே ஸ்டேஷன் வந்தோம். கையில சுத்தமா காசு இல்லை. விபசாரத்துக்கு போகச் சொல்லி திரும்பவும் என்னை கட்டாயப்படுத்தினான் என் புருஷன். ஆத்திரம் ஆத்திரமா வந்துச்சு. கடுமையா சண்டைபோட்டேன். அப்ப கிளம்பிப் போனவன்தான்... இப்ப வரைக்கும் என் புருஷன் வரலை.

ஜெயில்... மதில்... திகில்! - 22 - தாய் அழுதாளே நீ வர... நீ அழுதாயே தாய் வர!

அந்தாளு விட்டுட்டுப்போன இடத்திலேயே உட்கார்ந்து பிச்சையெடுக்க ஆரம்பிச்சேன். அப்பதான் போலீஸ்காரங்க என்னைப் பிடிச்சிட்டுப் போயிட்டாங்க. என்மேல பொய்யா திருட்டு கேஸ் போட்டாங்க. நான் திருடி இல்லை. திருடுறதுக்குத் துணிச்சல் இருந்தா நான் விபசாரத்துக்கே போயிருப்பேன். என்னை கோர்ட்டுல ஆஜர்படுத்தி, ஆறு மாசம் தண்டனை வாங்கிக் கொடுத்துட்டாங்க. போலீஸ்காரங்க என்னைப் பிடிச்சப்ப, எப்படியும் விசாரிச்சுட்டு விட்டுடுவாங்கன்னு நினைச்சுதான் பக்கத்துல இருந்த பிச்சைக்காரங்ககிட்ட என் குழந்தையைக் கொடுத்துட்டு வந்திருந்தேன். ஆனா, ரொம்ப நேரமா ஸ்டேஷன்ல வெச்சிருந்தாங்க. எனக்கு நம்பிக்கையேபோயிடுச்சு. ஸ்டேஷன்ல இருந்தவங்ககிட்ட ‘என் குழந்தையை எடுத்துட்டு வந்துடுறேன்னே’னு கெஞ்சினேன். அதுக்கு, ‘நாளைக்கு நாங்களே கொண்டாந்து கொடுக்குறோம்’னு சொன்னாங்க.

ஆனா, கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்து ஆறு மாசம் ஜெயில் தண்டனை வாங்கிக் கொடுத்துட்டாங்க. எனக்கு பகீர்னு ஆகிருச்சு. நான் ஜெயிலுக்குள்ள வந்தப்ப எல்லாருக்கும் சோறு போட்டுட்டிருந்தாங்க. எனக்கு, என் குழந்தை என்ன செய்யுதோ... பசிக்கு அழுவுமேன்னு மனசெல்லாம் அதோட நினைப்பாவே இருந்துச்சு. அப்பதான் ‘நாளைக்கு இவளை வேலூருக்கு அனுப்பிடணும்’னு இங்க இருந்த பொம்பளை போலீஸுங்க பேசிக்கிட்டதைக் கேட்டதும் எனக்கு உசுரே போன மாதிரி இருந்துச்சு. அப்படீன்னா என் குழந்தை என்னவாகும்? குழந்தையை யாராச்சும் ரயில்வே ஸ்டேஷன்லயே போட்டுட்டுப் போயிட்டா என்னவாகிறது? ஒருவேளை குழந்தையை யாரும் கவனிக்காம தண்டவாளத்துக்கு அது போயிருச்சுன்னா... வேற யாராச்சும் குழந்தையைத் திருடி கண்ணைக் குருடாக்கி பிச்சையெடுக்க வெச்சா என்ன செய்யறது... இப்படி என்னென்னமோ என் மனசுல ஓடுச்சு.

இங்க எல்லாரும் சினிமா பார்த்துட்டு இருந்தாங்க. என் மனசு முழுசும் குழந்தையைச் சுத்தியே இருந்துச்சு. வேற வழியில்லை... என் குழந்தையை நான் விட முடியாது. எப்படியாவது என் குழந்தை எனக்கு வேணும். அப்பதான் சுத்தும்முத்தும் பார்த்து அந்த முடிவையெடுத்தேன்” என்று நிறுத்தினார்.

பலத்த காவலை மீறி அந்தப் பெண் தப்பியது எப்படி?

(கதவுகள் திறக்கும்)