மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 23 - சிறுத்தையைப்போல் சீறிப்பாய்ந்த தாய்!

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

அவ்வளவு உயரத்திலிருந்து பார்த்தால் வெள்ளை வெளேர் என ரிப்பன் மாளிகை தெரிகிறது. பூங்காநகர் ரயில் நிலையத்தில் ரயில்கள் ஓடுகின்றன.

அன்றைய தினம் மாலை, பெண் கைதிகள் அனைவரும் திரைப்படத்தில் மூழ்கியிருந்தனர். இந்தப் பெண்ணின் கவனம் மட்டும் அங்கிருந்து எப்படி வெளியே செல்வது என்பதிலேயே இருந்தது.

பெண்கள் பகுதியில் வெளிக்கதவு பூட்டப்படுவதும் யாராவது வந்தால் திறந்துவிடப்படுவதுமாக இருந்தது. ஒருகட்டத்தில் சலித்துப்போன பெண் காவலர், வெளி கேட்டைப் பூட்டாமல் வெறுமனே சாத்திவைத்துவிட்டு திரைப்படத்தில் மூழ்கி விட்டார்.

அப்போதுதான் இந்தப் பெண் எழுந்து கழிவறைக்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்து சுற்றும்முற்றும் பார்த்து, யாருக்கும் தெரியாமல் சாத்திவைக்கப்பட்டிருந்த வெளிக்கதவைத் திறந்து வெளியேறிவிட்டார். அங்கிருந்து அவர் சிறையின் கிழக்குப் பகுதியைப் பார்த்தார். அவர் சிறைக்கு அழைத்துவரப்பட்ட வழி அது. அந்த வழியாகச் சென்றால் மீண்டும் பிரதான வாயிலுக்குச் சென்றுவிடலாம் எனக் கருதியவர், மேற்குப் பக்கம் பார்க்கிறார்.

அங்கு சுமார் 300 அடி தூரத்தில் காவலர் நிற்கிறார். அந்த வழியாகச் சென்றால் கட்டாயம் மாட்டிக்கொள்வார். அப்போது இரவு 7.30. வடக்கே சென்று பார்க்கலாம் என நகர்கிறார். பெண்கள் சிறைக்கும் `க்ளோஸ்டு ப்ரிசன்’ தொகுதிக்கும் இடையில் 20 அடி அகலத்தில் ஒரு பாதை செல்கிறது. அங்கும் செல்ல முடியாது. காவலர்கள் சத்தம் கேட்கிறது. எந்தப் பக்கம் சென்றாலும் மாட்டிக்கொள்வார். உடனே, க்ளோஸ்டு ப்ரிசன் தொகுதியின் மழைநீர் குழாயைப் பிடித்து சரசரவென ஏறி, அந்தத் தொகுதியின் மேற்கூரைக்கு வந்துவிட்டார்.

 ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி, சிறைத்துறை
ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி, சிறைத்துறை

அவ்வளவு உயரத்திலிருந்து பார்த்தால் வெள்ளை வெளேர் என ரிப்பன் மாளிகை தெரிகிறது. பூங்காநகர் ரயில் நிலையத்தில் ரயில்கள் ஓடுகின்றன. சாலையில் வாகனங்கள் ஊர்கின்றன. தூரத்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் தெரிகிறது. சிறையின் சுற்றுச்சுவருக்கு அருகில் கூவம் ஆறு ஓடுகிறது. மேற்கூரை வழியே தட்டுத்தடுமாறி அங்குமிங்கும் நகர்ந்து சென்று கீழே சிறை வளாகத்தைப் பார்க்கிறார். காவலர் ஒருவர் பாரா பணியில் இருக்கிறார். அவரின் ஒவ்வோர் அசைவையும் அந்தப் பெண் கவனிக்கிறார். நிமிடங்கள் நகர்கின்றன. ரிப்பன் மாளிகையில் கடிகாரம் 8 மணி அடித்து ஓய்ந்த சத்தம் தூரத்தில் கேட்கிறது. கீழே பாராவில் இருந்த குற்றக்காவலர் தனது இடத்தைவிட்டு நகர்ந்து, அடுத்து வரும் குற்றக்காவலரை எதிர்நோக்கி நகர்கிறார்.

க்ளோஸ்டு ப்ரிசன் தொகுதிக்குப் பின்புறம், பழைய அச்சகக் கட்டடம் ஒன்று உள்ளது. அந்தக் கட்டடத்தைச் சுற்றிலும் 20 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர். இரண்டு கட்டடத்துக்குமான இடைவெளி சுமார் 12 அடி. பெரிய ஆலமரத்தின் கிளை ஒன்று அச்சகக் கட்டடத்தின் சுற்றுச்சுவரைத் தாண்டி இந்தப் பெண் இருக்கும் மேற்கூரையை நோக்கி சற்றே நீண்டிருந்தது. சுமார் 12 அடி இடைவெளி. ஒரே தாண்டாகத் தாண்டினால் அந்தக் கிளையைப் பிடித்துவிட வாய்ப்பு இருக்கிறது. அதைப் பிடித்துவிட்டால் க்ளோஸ்டு ப்ரிசன் கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து அச்சகக் கட்டடத்துக்குச் சென்றுவிடலாம்.

ஜெயில்... மதில்... திகில்! - 23 - சிறுத்தையைப்போல் சீறிப்பாய்ந்த தாய்!

வேறு வழியே இல்லை. சுமார் 20 அடி உயரத்திலிருந்து மூச்சைப் பிடித்துக்கொண்டு பின்னோக்கி சில அடிகள் நகர்ந்து ஓடிவந்து சிறுத்தையைப்போல் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தார் அந்தப் பெண். கையில் கிளை நுனி சிக்கியது. அதை இறுகப் பற்றியபடி கைகளை சரசரவென மேலே நகர்த்தினார். ஆனால், சடாரென உடைந்தது கிளை. கீழே விழப்போன சமயம், சர்க்கஸில் தாவுவதைப்போல் கிளையைவிட்டு மற்றொரு கிளையை லாகவமாகப் பற்றின அந்தப் பெண்ணின் கரங்கள். வெறும் கிளை மட்டும் கீழே விழுந்தது. அப்போதுதான் இரவு பாரா பணிக்குள் நுழைந்த காவலர் `என்ன சத்தம்..?’ என சுற்றும் முற்றும் பார்க்கிறார். கிளை உடைந்து கிடக்கிறது. பிறகு மேலே பார்க்கிறார். இந்த இடைவெளி நொடிகளுக்குள் மரத்தில் பற்றிப் படர்ந்து மறைந்துகொண்டார் அந்தப் பெண்! `ஒன்றும் இல்லை’ என நகர்ந்துவிட்டார் பாரா காவலர்.

மெதுவாக மரத்திலிருந்து நகர்ந்து, பழைய அச்சகக் கட்டட வளாகத்துக்குள் குதிக்கிறார் அவர். அந்தக் கட்டடம், முன்பு அரசு அச்சகமாகச் செயல்பட்டுவந்தது. அரசின் ரகசிய ஆவணங்கள் அங்குதான் அச்சடிக்கப்பட்டன. பிறகு, நிர்வாகக் காரணங்களால் அந்த அச்சகம் மூடப்பட்டது. அந்தக் கட்டட வளாகம் பூட்டியே கிடக்கும். உள்ளே யாரும் இருக்க மாட்டார்கள். ஆங்காங்கே பழைய இயந்திரங்கள் இருந்தன. பழைய பொருள்கள், மூங்கில்கள், இரும்பு பைப்புகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த வளாகம், பூங்காநகர் ரயில் நிலையம் அருகே முடிகிறது. சுவர் ஏறிக் குதித்தால் ரயில் நிலையம் சென்றுவிடலாம்.

நாங்கள் எல்லோரும் சிறைக்குள் சல்லடை போட்டு தேடிக் கொண்டிருந்தபோது, இந்தப் பெண் அச்சகக் கட்டடத்துக்குள் சாவகாசமாக நோட்டம்விட்டிருக்கிறார். அங்கிருந்து சுவர் ஏறிக் குதித்தால்தான் வெளியே செல்ல முடியும். அவர் கண்ணில் பட்டது நீண்ட மூங்கில் ஒன்று. அதை எடுத்து சோதித்துப் பார்க்கிறார். உறுதியாகவும் உயரமாகவும் இருந்தது. அதை சுற்றுச்சுவரின் மூலையில் சாய்த்து வைத்து மேலே ஏறுகிறார். சுற்றுச்சுவரை அடைந்து மறுபக்கம் பார்க்கிறார். அங்கே ரயில் தண்டவாளம். அவர் கண்களில் பிரகாசம் மின்னுகிறது. ரயில் ஒன்று வெளிச்சத்தை உமிழ்ந்து சீறியபடி கடக்கிறது. சுவருடன் ஒட்டிக்கொண்ட அந்தப் பெண், ரயில் கடந்ததும் அங்கிருந்து கீழே குதிக்கிறார். உடலெங்கும் சீராய்ப்புக் காயங்கள்.

ரயில் தண்டவாளத்தையொட்டி நடந்தே சேத்துப்பட்டு ரயில் நிலையத்தை அடைந்துவிட்டார் அவர்.

அப்போது இரவு சுமார் 9 மணி. அந்தப் பெண்ணின் குழந்தை வேறொரு பிச்சைக்காரரின் பாதுகாப்பில் விளையாடிக் கொண்டிருந்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்க, ஓடிச்சென்று குழந்தையை வாரி அணைத்து உச்சிமோந்தார். குழந்தையின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டார். குழந்தையும் தாயின் ஸ்பரிசம் உணர்ந்து பொக்கை வாயைத் திறந்து சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

அங்கிருந்து நகர்ந்தவர் ரயில் நிலையத்தின் எதிரே இருக்கும் டீக்கடைக்குச் சென்றார். அவர்கள் ஏற்கெனவே இந்தப் பெண்ணுக்கு அறிமுகமானவர்கள். டீ வாங்கிக் குடித்தவர், குழந்தைக்கும் பாலும் பன்னும் வாங்கி ஊட்டிவிட்டார். சில நிமிடங்களில் தாயின் தோளில் நிம்மதியாகக் கண்ணுறங்கியது குழந்தை. அப்படியே மெல்ல நடந்தவர் நேராக சிறை வாயிலை வந்தடைந்துவிட்டார். அதன் பிறகு நடந்தவைதான் உங்களுக்குத் தெரியுமே!

நடந்ததை ஒன்றுவிடாமல் அப்பாவியாக எங்களிடம் ஒப்புவித்தார் அந்தப் பெண். எங்களில் பலருக்கு கண்கள் குளமாகிவிட்டன. எனினும், சிறை விதிகள் இருக்கின்றன அல்லவா... அவர் சொல்வதெல்லாம் உண்மைதானா என அவரை அழைத்துக்கொண்டு அவர் தப்பிய இடங்களை நோட்டமிட்டோம்.

அவர் சொன்னபடி தப்பிச் சென்றதற்கான அடையாளங்கள் அப்படியே இருந்தன. அச்சகக் கட்டடத்துக்குள் சென்று பார்த்த போது அதன் சுற்றுச்சுவரில் அவர் சாய்த்து வைத்திருந்த மூங்கில் இருந்தது. அந்தத் தாய் பொய் ஏதும் சொல்லவில்லை!

ஜெயில்... மதில்... திகில்! - 23 - சிறுத்தையைப்போல் சீறிப்பாய்ந்த தாய்!

ஆனால், 20 அடி உயரத்திலிருந்து 12 அடி இடைவெளியை அவர் தாவியதுதான் யாராலும் நம்ப முடியவில்லை. விசாரணையில் மேலதிகாரிகள் பலரும் இதை நம்பவில்லை. சிலர் ஆச்சர்யப் பட்டனர். பலரும் அந்தக் குழந்தை மீதான தாய்ப்பாசமே அவரை இந்தளவுக்கு சாகசங்கள் புரிந்து சிறையைவிட்டுத் தப்பவைத்துள்ளது என்று சிலாகித்தனர். சிலர், ‘குற்றம் குற்றமே’ என வாதிட்டார்கள். அதற்கு பதில் கொடுத்தவர்கள், ‘அந்தப் பெண் என்ன ஓடியா போய்விட்டார், குழந்தையை எடுத்துக்கொண்டு சில மணி நேரத்தில் நேராக சிறைக்கு வந்துவிட வில்லையா?’ என வாதிட்டனர். இப்படியாக அன்றைய நாள்களில் பெரும்விவாதமாக மாறியது இந்தச் சம்பவம். சிறைத்துறைத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் சிறைத்துறை அமைச்சருக்கு முறைப்படி விவரம் சொல்லப்பட்டது.

அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்., இந்தச் சம்பவத்தைக் கேட்டு ஆச்சர்யப்பட்டார். அந்தத் தாயின் பாசத்தையும் மீண்டும் சிறைக்கு வந்து சேர்ந்த நேர்மையையும் பாராட்டினார். அவரை விடுதலை செய்ய வழி உள்ளதா என விசாரித்தார்.

‘கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளது’ என அவருக்குக் கூறப்பட்டது.

ஏற்கெனவே நீதிமன்றத்தால் ஆறு மாதங்கள் தண்டனை பெற்றவர். சிறையிலிருந்து தப்பிச் சென்றதால் ஐ.பி.சி 224-ன் பிரிவின்படி குற்றம் பதிவுசெய்யப்பட்டு கூடுதலாக தண்டிக்கப்பட வேண்டியவர். ஆனால், உடனடியாக அந்தப் பெண்ணை விடுதலை செய்ய உத்தரவிட்டார் எம்.ஜி.ஆர். அதற்கான அரசாணை பிறப்பிக்கப் பட்டது. சிறையைவிட்டு நல்லபடியாக வெளியேறினார் அந்தத் தாய்!

(கதவுகள் திறக்கும்)