மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 24 - கொலைசெய்யப்பட்டாரா கைதி?

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

‘யாரோ ஒருவரைக் கொண்டுவந்து நிறுத்தி, இவர்தான் தப்பி ஓடியவர் என்று சொல்கிறார்கள்’’

‘சுகதேவ் என்கிற சிறைவாசியை சிறைக்காவலர்களும் அதிகாரிகளும் அடித்துக் கொன்று கூவத்தில் எரித்துவிட்டு, அவன் தப்பி ஓடிவிட்டான் என நாடகம் ஆடுகின்றனர்’ - சிறைவாசிகளால் எழுதப்பட்டதாக இப்படியொரு புகார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டதையடுத்து, சிறைத்துறையின் தூக்கம் கெட்டது.

சாதாரண வழக்கு ஒன்றில் கைதுசெய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தான் சுகதேவ். அடைக்கப்பட்ட மறுநாளே தப்பியோடிவிட்டான். இந்த நிலையில்தான் இப்படியொரு புகார்.

உயர் நீதிமன்ற நீதிபதி, அந்தப் புகாரை இலவசச் சட்ட உதவிக் கழகத் தலைவருக்கு அனுப்பி, புகாரின் உண்மைத் தன்மையை அறிய ஆணை யிட்டார். அதன்படி, வழக்கறி ஞர் ஒருவர் விசாரணை நடத்த சிறைக்கு வந்தார். சிறைவாசி கள் பலரையும் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தார். ‘கைதிகளை விசாரித்ததில், புகாரில் கூறியிருப்பது உண்மை எனத் தெரியவருகிறது’ என நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துவிட்டார்.

அதையடுத்து, ‘தப்பி ஓடிய தாகக் கூறப்பட்ட கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்று காலக்கெடு விதித்து சிறைக் கண்காணிப் பாளருக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். ‘சிறையில் கைதி அடித்து கொலை’ என்று பரபரப்பு பற்றிக்கொண்டது.

சுகதேவ் என்கிற அந்த 23 வயது இளைஞர், மீனம்பாக்கம் விமானநிலையத்தின் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர். ஒல்லியான தேகம். படிப்பு சரியாக ஏறவில்லை. லேசாக மனநிலை பாதிக்கப்பட்டவர். மீனம்பாக்கம் விமானநிலையத்தின் சுற்றுச்சுவரைத் தாண்டிக் குதித்து, விமான ஓடுபாதைக்கு வந்ததுதான் அவர் செய்த குற்றம்.

அந்த இளைஞரின் பேச்சும் நடத்தையும் வித்தியாசமாக இருந்ததால், காவலர்கள் அவரை சிறை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ‘நான் வீட்டுக்குப் போக வேண்டும். அம்மா தேடுவார்’ என்று அழுதுகொண்டே இருந்தார் அந்த இளைஞர். மறுநாளே சுகதேவ் காணவில்லை.

ஜெயில்... மதில்... திகில்! - 24 - கொலைசெய்யப்பட்டாரா கைதி?

சிறையின் அனைத்து இடங்களிலும் தேடினோம். கட்டடங்களின் மேல்தளங்களும் அனைத்து மரங்களும் சோதனை செய்யப்பட்டன. சுற்றுச்சுவரில் தடயங்கள் ஏதும் இல்லாததால், ‘சிறைக்கு தண்ணீர் கொண்டுவரும் லாரியில் ஏறி தப்பிச் சென்றிருப்பான்’ எனத் தீர்மானிக்கப்பட்டு, கடமையில் அலட்சியமாக இருந்த காரணத்துக்காக வாயில் காப்பாளர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான், சுகதேவ் கொலை செய்யப்பட்டதாக புகார் கிளம்பி, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தச் சொல்லி உத்தரவு.

நான் அப்போது சென்னை மத்திய சிறையில் துணை சிறை அலுவலராக இருந்தேன். சிறைத் துறை டி.ஐ.ஜி என்னை அவரது அலுவலகத்துக்கு அழைத்தார். ‘‘இரண்டு நாள்களில் கைதியைப் பிடிக்க வேண்டும். இது சிறைத் துறைக்கு கெளரவப் பிரச்னை. கைதியைப் பிடிக்கவில்லை என்றால் கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டு நீங்கள் கைது செய்யப்படலாம்” என எச்சரித்தார்.

பத்து பேர் அடங்கிய தேடுதல் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. தப்பியோடியவன் கொள்ளைக்காரனோ கொலைகாரனோ அல்ல... சாதாரண வழக்கில் கைதுசெய்யப்பட்டவன். அவன் சென்னையை விட்டு தப்பிச் செல்ல வாய்ப்பில்லை. அவனின் தந்தையிடம் விசாரித்தபோது, ‘அவன் வீட்டுக்கு வரவில்லை. வந்தால், பிடித்துக் கொடுக்கிறோம்’ என்றார். அந்த இளைஞரின் உறவினர்களின் வீடுகளிலும் சோதனை செய்தோம். எங்கும் அவர் இல்லை.

மீனம்பாக்கத்தில் அந்தக் கைதியின் வீட்டுக்கு அருகில் விசாரித்தபோது, அந்த இளைஞரின் வீட்டுக்கு யாரோ ஒருவர் இரவு நேரத்தில் வந்து போவதாக தகவல் கிடைத்தது. ஓஹோ... ஏதோ நடக்கிறது என யூகித்தோம். அன்றிரவு சத்தமில்லாமல் நாங்கள் அங்கு பதுங்கியிருந்து, அந்த வீட்டை நோட்டமிட்டோம். நள்ளிரவு 12 மணி. தூரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம். யாரோ நடமாடுவது தெரிந்தது. சற்று நேரத்தில் அந்த வீட்டில் விளக்கு எரிந்தது. தாழ் திறந்து சாத்தப்பட்டது.

உடனடியாக வீட்டைச் சுற்றிவளைத்தோம். நான் முன்பக்கம் சென்று கதவைத் தட்டினேன். நீண்ட நேரம் திறக்கவில்லை. பலமாகத் தட்டியதும் அந்தப் பையனின் அப்பா கதவைத் திறந்தார். நள்ளிரவில் தொல்லை கொடுப்பதாக எங்களை ஆங்கிலத்தில் சரமாரியாகத் திட்டினார். அதற்குள் அந்த இளைஞர் பின்வழியாகத் தப்பிச் செல்ல முயன்றார். அங்கு காத்திருந்த காவலர்கள், அவரைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

சிறைக் கண்காணிப்பாளருக்கும் சிறைத் துறை துணைத் தலைவருக்கும் அந்த நடுநிசியிலேயே தகவல் தெரிவிக்கப்பட்டது. ‘கைதியை இந்த நேரத்தில் கொண்டுவர வேண்டாம். அருகே உள்ள லாட்ஜில் தங்கவைத்து பத்திர மாகப் பார்த்துக் கொள்ளுங்கள். காலை 10 மணிக்கு உயர் நீதிமன்றம் வந்துவிடுங்கள்’ என்று கட்டளை யிட்டனர். சைதாப்பேட்டையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் கைதியுடன் நானும் தங்கினேன். இரவு முழுவதும் தூங்காமல் காவல் காத்தேன். “எப்படி சிறையிலிருந்து தப்பினாய்?” எனக் கேட்டேன்.

‘‘சிறை மருத்துவமனையில் என்னைப் பரிசோதித்த டாக்டர், மாத்திரை சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொள்ளச் சொன்னார். டாக்டர் கொடுத்த மாத்திரையை நான் சாப்பிடவில்லை. ராத்திரி முழுக்க தூக்கம் வரவில்லை. மருத்துவமனையில் அங்குமிங்கும் நடந்துகொண்டே இருந்தேன். அம்மாவும் அப்பாவும் என்னைத் தேடுவார்கள் என்பதால், எப்படியாவது வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும் என நினைத்தேன். விடிந்ததும் மருத்துவமனைக் கதவு திறக்கப்பட்டது. வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். மருத்துவமனைக்குப் பின்னால் ஒரு கட்டடம் இருந்தது. மதியத்துக்குமேல் மருத்துவமனைக்கு வெளியே யாரும் இல்லை. கட்டடத்தின் மழைநீர் பைப்பைப் பிடித்து மேலே ஏறிவிட்டேன்.

அங்கிருந்து பார்த்தபோது வெளியே ரயில்வே தண்டவாளம் தெரிந்தது. மறுபக்கம் கூவம் நதி தெரிந்தது. பக்கத்தில் இருக்கும் பாழடைந்த கட்டடத்தின் பின்புறம் ஒரு மதில் சுவர் இருந்தது. அதைத் தாண்டினால் சிறைக்கு வெளியே சென்றுவிடலாம். மருத்துவமனைக் கட்டடத்தின் மேலிருந்து பழைய கட்டடத்துக்குத் தாவினேன். அந்தக் கட்டடத்தில் இருந்த ஒரு மூங்கில் கழியை எடுத்துக்கொண்டு போய் மூலையில் சாய்த்து, அதன்மேல் ஏறி சுவரின் மறுபக்கம் குதித்துவிட்டேன்.

ஜெயில்... மதில்... திகில்! - 24 - கொலைசெய்யப்பட்டாரா கைதி?

அந்தப் பக்கம் ரயில்வே தண்டவாளம் இருந்தது. அப்படியே நடந்து எக்மோர் ரயில் நிலையம் வந்துவிட்டேன். மின்சார ரயிலில் ஏறி சைதாப்பேட்டையில் இறங்கினேன். அங்கு பாட்டி வீட்டில் தங்கியிருந்துவிட்டு, மறுநாள் இரவு எங்கள் வீட்டுக்குச் சென்றேன். ‘போலீஸ் தேடுகிறது. நீ போய் பாட்டி வீட்டிலேயே இரு’ என்று அம்மா சொன்னார். ஒரு வாரமாக பாட்டி வீட்டில்தான் இருந்தேன். அம்மா ஞாபகம் வந்தால், இரவு வந்து தங்கிவிட்டு காலையில் போய்விடுவேன்’’ என்று அனைத்தையும் ஒப்புவித்தார். அவர் சொன்னதை டேப் மூலமாகப் பதிவுசெய்துகொண்டேன்.

வெள்ளிக்கிழமை காலை 10 மணி. வழக்கறி ஞர்கள், சிறைத்துறை ஊழியர்கள், பத்திரிகை யாளர்கள் நீதிமன்றத்தில் கூடியிருந்தார்கள். முதல் வழக்கு எங்களுடையதுதான். ‘‘தப்பிச் சென்ற கைதி பிடிபட்டாரா?’’ என்று நீதிபதி கேட்டார்.

அரசு வழக்கறிஞர் கம்பீரமாக எழுந்து சொன்னார்... ‘‘மை லார்ட், தப்பி ஓடிய கைதி பிடிபட்டுவிட்டான். தாங்கள் அனுமதித்தால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறோம்’’ என்றார். ‘இறந்தவர் எப்படி வந்தார்?’ என்று பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர். நீதிபதி அனுமதி கொடுத்ததையடுத்து, சுகதேவ் ஆஜர்படுத்தப் பட்டார்.

புகாரை விசாரித்து அறிக்கை அளித்த வக்கீல், ‘‘யாரோ ஒருவரைக் கொண்டுவந்து நிறுத்தி, இவர்தான் தப்பி ஓடியவர் என்று சொல்கிறார்கள்’’ என்றார். ‘‘இவர்தான் தப்பி ஓடிய கைதி என எப்படி நிரூபிக்கப்போகிறீர்கள்?’’ என்று அரசு வழக்கறிஞரிடம் கேட்டார் நீதிபதி. ‘‘வாரன்ட்டில் கைதியின் அங்க அடையாளங்கள் எழுதப்பட்டுள்ளன’’ என்று வாரன்ட்டை நீட்டினார். அங்க அடையாளங்கள் பரிசோதிக் கப்பட்டன. அவை சரியாக இருந்தன. சுகதேவை கைதுசெய்த மீனம்பாக்கம் போலீஸாரும் ``தங்கள் முன் நிற்கும் கைதியைத்தான் நாங்கள் சிறையில் ஒப்படைத்தோம்’’ என்றனர். கைதி தப்பிச் சென்றது குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கைதி சிறையிலிருந்து தப்பியோடியது நிரூபிக்கப்பட்டது.

தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்ட மொட்டைக் கடிதம், சிறைத்துறை நிர்வாகத்துக்கு எதிராக சில விஷமிகளால் தயாரிக்கப்பட்ட போலியான புகார் என்பது வெட்டவெளிச்ச மானது. எதற்கும் இருக்கட்டுமே என நான் டேப்பில் பதிவுசெய்த கைதியின் வாக்குமூலமும் சிறைத் துறையின் மானம் காக்கப்பட துணையாக இருந்தது!

(கதவுகள் திறக்கும்)