மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 25 - யாரைக் கொல்ல தப்பிச்சென்றார் ஆறுச்சாமி?

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

நீண்ட நாள்கள் கடல் காற்றை உட்கொண்ட அந்த கான்கிரீட், தனது பலத்தை இழந்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகச் சுரண்டி அந்த கான்கிரீட்டைப் பெயர்த்துவிட்டார்.

உலகிலேயே எந்தக் கொம்பனாலும் தப்பிச் செல்ல முடியாத சிறை என்ற பெருமையைக்கொண்டிருந்தது கலிஃபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோ பே என்ற தீவில் உள்ள Alcatraz federal penitentiary என்ற சிறை. சுற்றும் கடலால் சூழப்பட்ட தீவு அது.

அங்கிருந்து தப்புவது அவ்வளவு சுலபமல்ல. ஆனால், அத்தனையையும் தாண்டி வங்கிக்கொள்ளையர்களான ஃபிராங்க் மோரிஸ், ஜான், க்ளாவன்ஸ் ஆகிய மூன்று கைதிகளும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி, சிறைத்துறை
ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி, சிறைத்துறை

இதற்கு மூளையாகச் செயல் பட்டவர் ஃபிராங்க் மோரிஸ். 1960 ஜனவரி 18-ம் தேதி, அவர் சிறை அதிகாரி முன்பாக நிறுத்தப் பட்டார். அப்போது, ‘இங்கிருந்து எந்த ஒரு கைதியும் தப்பிச் சென்றதில்லை. ஒருவேளை நீ தப்பி ஓட முயற்சி செய்தால் சுட்டுக் கொல்லப்படுவாய்’ என எச்சரித்தார். அதுவரை மோரிஸுக்கு தப்பிச் செல்லும் எண்ணமெல்லாம் இல்லை. ஆனால், சிறை அதிகாரி மோரிஸின் ஈகோவை உரசிவிட்டார். அதனால், தப்பிச் செல்லும் எண்ணம் அவர் மனதில் வெறியாகப் பதிந்து போனது. ஒவ்வொரு நாளும் தப்பிச் செல்வது பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார் மோரிஸ்.

ஒருநாள், மோரிஸ் தனது செல்லுக்குள் படுத்திருக்கும்போது கரப்பான் பூச்சி ஒன்று அவரது அறையின் வென்டிலேட்டர் வழியாக வெளியே சென்றது. அது, அவருக்கு ஒரு துப்பு கிடைத்தது போலாயிற்று. ஏற்கெனவே சிறை அதிகாரி தன்னை விசாரித்தபோது அவரது மேஜை மீது இருந்த நக வெட்டியைத் திருடி வைத்திருந்தார் மோரிஸ். இரவு நேரத்தில் நகவெட்டியால் வென்டிலேட்டர் பதிக்கப்பட்ட கான்கிரீட்டைச் சுரண்டினார்.

நீண்ட நாள்கள் கடல் காற்றை உட்கொண்ட அந்த கான்கிரீட், தனது பலத்தை இழந்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகச் சுரண்டி அந்த கான்கிரீட்டைப் பெயர்த்துவிட்டார்.

இரும்பு வலை மட்டுமே பாக்கி. மொத்த பலத்தையும் சேர்த்து அதைப் பெயர்த்தார். வலை தனியாகக் கழன்றுவிட்டது. அதன் வழியாக தன் உடலைச் சுருக்கிக்கொண்டு வெளியே சென்று பார்த்தபோது, மேற்கூரை தெரிந்தது. அதில் இருக்கும் கிரில் கம்பிகளை அறுத்தால் மட்டுமே வெளியே செல்ல முடியும்.

அதை தனி ஆளாகச் செய்ய முடியாது. மீண்டும் தன் செல்லுக்குள் வந்தார் மோரிஸ். மறுநாள் தன் நண்பர்கள் ஜான், க்ளாவன்ஸ் ஆகியோருடன் திட்டம் வகுத்தார். மூவரும் தப்பிச் செல்ல முடிவெடுத்தனர். செல்லில் இருந்து வெளியே சென்றாலும் சிறை வளாகத்தைவிட்டுத் தப்பிக்க சில மணி நேரமாகும். இடைப்பட்ட நேரத்தில் தாங்கள் செல்லில் இல்லை என்பது கண்டுபிடிக்கப் பட்டால் அலாரத்தை ஒலிக்கச் செய்து சிறையைப் பரபரப்பாகிவிடுவார்கள். அதற்கும் ஒரு மாற்று ஏற்பாடு செய்தார் மோரிஸ். அடுத்தடுத்த நாள்களில் தன் தலையைப்போல் டம்மியைத் தயார்செய்து, முடிவெட்டும் இடத்தில் இருந்து முடியை எடுத்துவந்து அதில் ஒட்டவைத்தார். அந்த டம்மியைப் போர்வையால் போர்த்தி கதவுக்கு அருகில் படுத்திருப்பதுபோல வைத்துவிட்டார். வெளியிலிருந்து பார்த்தால் கைதி படுத்திருப்பதுபோல் தோன்றும்.

ஜெயில்... மதில்... திகில்! - 25 - யாரைக் கொல்ல தப்பிச்சென்றார் ஆறுச்சாமி?

அவரின் நண்பர்கள் இருவரும் இதேபோல் வென்டிலேட்டர் வலைகளை அறுத்துக்கொண்டு வெளியேறி கூரையின்மீது ஏறினார்கள். பொறுமையாக அவரவருக்குக் கிடைத்த சிறு கருவிகளைக்கொண்டு கிரில் கம்பிகளை அறுத்தார்கள். 1962, ஜூன் மாதம் மூவரும் சிறையிலிருந்து தப்பிச் சென்றனர். இன்று வரை அவர்கள் பிடிபடவே இல்லை. அந்தக் கைதிகள் தப்பிச் சென்ற சில மாதங்களில் Alcatraz சிறை மூடப்பட்டது.

*******

கிரில் கம்பிகளை அறுத்து தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று, வேலூர் மத்திய சிறையிலும் நடந்தது. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. ஓய்வு நாள் என்பதால், கைதிகள் தொழிற்கூடங்களுக்குச் செல்லவில்லை. சிறை வளாகத்தில் தண்ணீர்த் தொட்டி ஒன்று கட்ட வேண்டியிருந்ததால், ஒன்றாம் தொகுதியில் இருந்த இருபது கைதிகள் மட்டும் வேலைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

வேலூர் மத்திய சிறையிலேயே செங்கல்சூளை உள்ளது. அங்கு தயாரிக்கப்பட்ட செங்கற்கள் வெளி மார்க்கெட்டில் விற்கப்பட்டன. செங்கற்கள் அனைத்தும் தொழுநோயாளிகளின் தொகுதி வளாகத்தில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அன்றைய தினம் அந்த இருபது கைதிகளும் அங்கிருந்துதான் செங்கற்களை எடுத்துவந்து கட்டுமானப் பணிகளைச் செய்தார்கள். அன்றைய தினம் மாலை மீண்டும் கைதிகளை செல்லுக்குள் அனுப்பியபோதுதான் ஒரு கைதியைக் காணவில்லை என்பது தெரிந்தது.

அவர் பெயர் ஆறுச்சாமி. இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவர். கொலைக் குற்றத்துக்காக ஆயுள்தண்டனையும், பாலியல் வன்கொடுமைக் குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தனித்தனியாக அனுபவிக்க வேண்டியவர். முப்பது வயதிருக்கும். கட்டுமஸ்தான உடல்.

எப்படித் தப்பிச் சென்றிருப்பார்? சிறை முழுவதும் தேடுதல் வேட்டை தொடங்கியது. செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தொழுநோயாளிகள் வளாகத்தில் தேடியபோது, அங்கு இருந்த கழிவுநீர் வாய்க்காலின் கம்பிகள் வளைக்கப்பட்டிருந்தன. அதன் ஊடாக இருந்த பள்ளத்தில் காலடித் தடங்கள் பதிந்து இருந்தன. ஆக, இந்தக் கால்வாய் வழியாகத்தான் ஆறுச்சாமி தப்பியிருக்க வேண்டும். பின்னாளில் அவரைப் பிடித்த பிறகுதான் எப்படித் தப்பித்தேன் என்பதை ஒப்பித்தார் ஆறுச்சாமி. அதை அப்படியே இங்கே காட்சியாக்குகிறேன்.

தொழுநோயாளிகள் வளாகத்திலிருந்து மற்ற கைதிகளுக்கு ஆறுச்சாமிதான் செங்கற்களை தலையில் ஏற்றி அனுப்பியிருக்கிறார். அனைவரும் சென்ற பிறகு கழிவறைக்குப் பின்புறம் இருந்த கால்வாய் பக்கமாகச் சென்று வேவு பார்த்துள்ளார். அப்போது அங்கு இருந்த பாரா காவலர் பீடி பற்றவைப்பதற்காக முன்பக்கம் சென்றுவிட்டார். அது, ஆறுச்சாமிக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

ஜெயில்... மதில்... திகில்! - 25 - யாரைக் கொல்ல தப்பிச்சென்றார் ஆறுச்சாமி?

கால்வாய் நீர், சிறையின் சுற்றுச் சுவரையொட்டி ஓடி சுற்றுச்சுவரின் ஓரிடத்தில் ஓட்டை வழியாக வெளியேறியது. அந்த ஓட்டை, கிரில் கம்பிகளால் அடைக்கப்பட்டிருந்தது. அதன் வழியாக வெளியேறும் கழிவுநீர், பூமிக்கு அடியில் பதிக்கப்பட்ட பெரிய குழாய் வழியாக வெளியேறி சற்று தொலைவில் இருந்த கழிவுநீர்த் தொட்டியில் கொட்டியது.

இதை நோட்டம்விட்ட ஆறுச்சாமி, ஓட்டையை அடைத்திருந்த கிரில் கம்பிகளை எட்டி உதைக்கத் தொடங்கினார். அது சுவரில் பதிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் அடிப்பாகம் துருப்பிடித்திருந்தது. கம்பிகளை கொஞ்சம் கொஞ்சமாக வளைத்துப் பெயர்த்தார் ஆறுச்சாமி. வளைத்த இடைவெளியில் தலையை நீட்டிப் பார்த்தார். பூமிக்கு அடியில் இருண்ட குழாய் நீண்டது. அது சென்று முடிந்த இடத்தில் சூரிய வெளிச்சக் கீற்றுகள்.

மெதுவாக உடலைக் குறுக்கி, ஓட்டை வழியாகப் படுத்து ஊர்ந்தே சென்றார் ஆறுச்சாமி. அந்தக் குழாய், கழிவுநீர் தொட்டியில் வந்து முடிந்தது. அதில் இறங்கினார். தொட்டியை அடைக்கும் மூடி இல்லை. அது உடைந்துவிட்டதால் நான்கைந்து கடப்பா பலகைக் கற்களை வைத்து மூடியிருந்தனர். அவற்றை அகற்றிவிட்டு மேலே ஏறினார் ஆறுச்சாமி.

சற்றே தொலைவில் சிறு மண்சுவர். புதர் மண்டிக் கிடந்தது. கைவிடப்பட்ட சிறையின் வெளி வளாகம் அது. ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மண்சுவரைத் தாண்டிக் குதித்தார் ஆறுச்சாமி. தூரத்தில் சோளக்காடு. அதைத் தாண்டி அருகில் இருந்த ரயில் தண்டவாளம் வழியாக காட்பாடி ரயில் நிலையத்தை அடைந்துவிட்டார். அங்கிருந்து ரயிலில் ஏறி ஆந்திர மாநிலம் சித்தூர் சென்றுவிட்டார். அங்குதான் அவரின் அப்பா இருக்கிறார்.

தப்பிச் சென்ற பிறகு ஆறுச்சாமியின் செல்லில் சோதனை செய்தபோது, அவரின் தந்தை சித்தூரிலிருந்து எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், ‘உன் மனைவியின் நடவடிக்கைகள் சரியில்லை. அவள் நம் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டாள்’ என்று எழுதியிருந்தது. இதற்கிடையே சில நாள்களுக்கு முன் அவனை சிறை நேர்காணலில் சந்தித்த அவனின் மனைவி, ‘உங்கள் தந்தை மிகவும் தொந்தரவு செய்கிறார். எனக்கு அங்கு இருக்கப் பிடிக்க வில்லை. என் வீட்டுக்குப் போகிறேன்’ என்று கூறியிருக்கிறார். இதை, சிறையில் ஆறுச்சாமி தன் நண்பரிடம் கூறியிருக்கிறார். இதுவும் எங்கள் விசாரணையில் அறிந்துகொண்டோம். இதையடுத்துதான் தப்பிக்கும் திட்டம் தீட்டியிருக்கிறார் ஆறுச்சாமி.

தொடர்ந்து எங்கள் தேடுதல் குழு சித்தூருக்குச் சென்றது. கடித முகவரியில் இருந்த வீட்டுக்குச் சென்றபோது, தன் மகன் கரும்புக்காட்டுக்குள் பதுங்கியிருப்பதாக ஆறுச்சாமியின் தந்தை காட்டிக்கொடுத்தார். கரும்புக்காட்டைச் சுற்றிவளைத்து ஆறுச்சாமியைப் பிடித்துவிட்டோம். நான்கைந்து பேர் சேர்ந்து அவரை இறுக்கிப் பிடித்தபோது அவர் சொன்ன விஷயம் இது... “என்னை விடுங்கள். ஒரு கொலையைச் செய்ய வேண்டியிருக்கிறது. கொஞ்சம் தாமதமாக வந்திருக்கக் கூடாதா, கொலையைச் செய்து முடித்திருப்பேன்!” - ஆத்திரத்துடன் அரற்றினார் ஆறுச்சாமி.

அவர் தப்பி ஓடி வந்தது, தன் தந்தையைக் கொலை செய்யவா அல்லது தன் மனைவியைக் கொலை செய்யவா என்பது ஆறுச்சாமிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!

(கதவுகள் திறக்கும்)