மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 26 - சசிகலா விடுதலைநாள் எப்போது?

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா

சசிகலா ஒருமுறை அவசர கால விடுப்பில் மூன்று நாள்கள் வெளியில் வந்துள்ளார். அந்த மூன்று நாள்களையும் விடுதலை தேதியிலிருந்து கூட்டிக்கொள்ள வேண்டும்.

தமிழக அரசியலில் மட்டுமல்ல... டெல்லி அரசியலிலும் இப்போது பரபரக்கும் ஒரு பெயர் சசிகலா. ஜெயலலிதாவுடன் கடைசிவரை விசுவாசமாக இருந்து அ.தி.மு.க-வைக் கட்டுக்கோப்புடன் கட்டிக்காத்ததில் அவரது பங்கை மறுக்க முடியாது.
ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி, சிறைத்துறை
ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி, சிறைத்துறை

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் தமிழக அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்களை எதிர்பார்க்கலாம். சரி, நான் அந்த அரசியலுக்குள் எல்லாம் செல்ல விரும்பவில்லை. ‘சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி இப்போது வெளியே வருவார்; அப்போது வெளியே வருவார்’ என்றெல்லாம் பல மாதங்களாக பலரும் ஆருடம் சொல்லிவருகிறார்கள். ஆனால், அவர் எப்போது வெளியே வருவார் என்று நான் சொல்கிறேன்... இது ஆருடம் அல்ல. மிகத் தெளிவான சட்டக் கணக்கு.

தண்டனை கொடுப்பதற்கு முன்பே 21 நாள்கள் கர்நாடகச் சிறையில் இருந்துள்ளார் சசிகலா. அந்த 21 நாள்களை ‘செட்ஆஃப்’ என்போம். ‘செட்ஆஃப்’ என்பது குற்றவாளி கைது செய்யப்பட்டுச் சிறைக்கு வந்த நாள் முதல் தண்டனை அறிவிக்கப்பட்ட நாள் வரை உள்ள காலம். அந்தக் காலம் தண்டனையிலிருந்து கழிக்கப்படும். ஒரு மாதத்துக்கு இரண்டு நாள்கள் வீதம் ‘செட்ஆஃப்’ காலத்துக்கு தண்டனைக் குறைப்பு உண்டு. முதலில் சசிகலாவின் விடுதலை தேதியிலிருந்து 21 நாள்கள் கழிக்கப்பட வேண்டும். பிறகு ‘செட் ஆஃப்’ காலத்துக்கு ஒரு நாள் தண்டனைக் குறைப்பு உண்டு.

ஜெயில்... மதில்... திகில்
ஜெயில்... மதில்... திகில்

சசிகலா ஒருமுறை அவசர கால விடுப்பில் மூன்று நாள்கள் வெளியில் வந்துள்ளார். அந்த மூன்று நாள்களையும் விடுதலை தேதியிலிருந்து கூட்டிக்கொள்ள வேண்டும். அவசர கால விடுப்பு என்பது முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள, ரத்த உறவுகளின் திருமணம், இறப்பு, அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தாய், தந்தையரைப் பார்ப்பது போன்ற காரணங்களுக்காக வருடத்துக்கு 15 நாள்கள் அரசால் வழங்கப்படுகிறது. இதைக் கைதிகள் மூன்று நாள்கள் வீதம் மூன்று முறையும், ஆறு நாள்கள் ஒரு முறையும் எடுத்துக்கொள்ளலாம். இது பரோல் அல்ல. நீண்ட கால தண்டனை பெற்ற கைதிகள் வாரிசுகளின் திருமணம், வீடு கட்டுதல் போன்ற காரணங்களுக்காக அரசிடம் விண்ணப்பித்து 30 நாள்கள் அல்லது 60 நாள்கள் வெளியேவருவதுதான் பரோல். அபராதத்தைக் கட்டத் தவறியதற்கு விதிக்கப்படும் தண்டனைக்கு, தண்டனைக் குறைப்பு எதுவும் கிடையாது.

சரி, சசிகலா எப்போது வெளியே வருவார்? பார்ப்போம். சசிகலா தண்டிக்கப்பட்ட நாள்: 14.2.2017; தண்டனை நான்கு வருடம். அதன்படி விடுதலையாகும் நாள்: 13.2.2021. இந்த வழக்குக்காக முன்பே சிறையில் இருந்த 21 ‘செட்ஆஃப்’ நாள்களைக் கழித்தால், விடுதலை 23.1.2021. சசிகலாவுக்குப் பத்துக் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு தண்டனை. இன்று வரை அபராதம் கட்டவில்லை. எனவே, ஓராண்டைக் கூட்டிக்கொள்ளவும். அப்போது விடுதலை நாள் 23.1.2022.

எத்தனை நாள்கள் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட வேண்டும்? 2017 பிப்ரவரி மாதத்துக்கு இரண்டு நாள்கள். மார்ச் 2017 முதல் டிசம்பர் 2017 வரையிலான பத்து மாதங்களுக்கு மாதத்துக்கு நான்கு நாள்கள் வீதம் 40 நாள்கள். 2018-ம் வருடம்... மாதத்துக்கு நான்கு நாள்கள் வீதம் 12 மாதங்களுக்கு 48 நாள்கள். அதேபோல் 2019-ம் ஆண்டுக்கும் 48 நாள்கள். 2020-ல் செப்டம்பர் மாதம் அவர் விடுதலையை எதிர்நோக்கி இருப்பதால், மாதத்துக்கு நான்கு நாள்கள் வீதம் எட்டு மாதத்துக்கு 32 நாள்கள்.

ஜெயில்... மதில்... திகில்! - 26 - சசிகலா விடுதலைநாள் எப்போது?

இவை தவிர நன்னடத்தைக்காக ஒவ்வொரு வருடமும் 15 நாள்கள் வீதம் மூன்று வருடத்துக்கு 45 நாள்கள். வருடம் 30 நாள்கள் வீதம் மூன்று வருடத்துக்கு 90 நாள்கள் சிறைக் கண்காணிப்பாளரால் சிறப்பு தண்டனைக் குறைப்பு வழங்கப்படும். சிறைத்துறைத் தலைவரால் வருடத்துக்கு 60 நாள்கள் வீதம் மூன்று வருடத்துக்கு 180 நாள்கள் வழங்கப்படும். ஜனவரி 2021 முதல் ஆகஸ்ட் 2021 வரை சிறப்பு தண்டனைக் குறைப்பு 12 நாள்கள் வழங்கலாம். எனவே, மொத்தம் 497 நாள்கள் சசிகலாவுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கலாம். அதாவது, ஒரு வருடம் நான்கு மாதம் 12 நாள்கள். இதை 23.1.2022-லிருந்து கழித்தால், 11.9.2020 வருகிறது.

21 நாள்கள் செட்ஆஃபில் இருந்ததற்கு ஒருநாள் தண்டனைக் குறைப்பு வழங்கப்படும். இப்போது அவரின் விடுதலை தேதி 10.9.2020. மூன்று நாள்கள் அவசர விடுப்பில் வெளியே வந்து சென்றுள்ளார். அதைக் கூட்டினால், சசிகலாவின் விடுதலை தேதி: 13.9.2020.

என் கணக்கு முழுவதும் தமிழ்நாடு சிறை நடைமுறை நூலின் விதிகளை அடிப்படையாகக் கொண்டது. ஒருவேளை சசிகலா சிறைக் குற்றங்கள் ஏதேனும் செய்திருந்தால், தண்டனைக் குறைப்பு ரத்து செய்யப்படலாம். சிறைத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சிறப்பு தண்டனைக் குறைப்பு மற்றும் கண்காணிப் பாளரால் வழங்கப்படும் சிறப்பு தண்டனைக் குறைப்பு ஆகியவை வழங்கப்படுமா என்றும் தெரியாது. அதேசமயம், பிற கைதிகளுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் அனைத்தும் சசிகலாவுக்கும் வழங்கப்பட்டால், என் கணக்குப்படிதான் அவரது விடுதலைநாள் அமையும்!

(கதவுகள் திறக்கும்)

மூன்று வகை தண்டனைக் குறைப்புகள்

கைதிகள் சிறைக்குள் ஒழுக்கத்தைப் பேணவும் ஆணைக்குக் கட்டுப்படவும் சிறை அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட அங்குசம்தான் தண்டனைக் குறைப்பு.

மூன்று மாதங்கள் மற்றும் அதற்கு மேல் கடுங்காவல் தண்டனை பெற்றவர்கள் அனைவரும் தண்டனைக் குறைப்பு பெறுவதற்குத் தகுதியானவர்கள். ‘Simple imprisonment’ எனும் வெறும் காவல் தண்டனை பெற்றவர்கள், சிறைக்குள் வேலைசெய்ய விருப்பம் தெரிவித்தால், அவர்களும் தண்டனைக் குறைப்பு பெறுவதற்குத் தகுதியானவர்களே. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மூன்று வகையான தண்டனைக் குறைப்புகள் கைதிகளுக்கு வழங்கப்படுகின்றன.

1. சாதாரண தண்டனைக் குறைப்பு

மூன்று மாதங்கள் மற்றும் அதற்கு மேல் தண்டனை பெற்ற அனைவருக்கும் இந்தத் தண்டனைக் குறைப்பு வழங்கப்படும். சிறைக்குள் குற்றங்கள் செய்யாமல் நல்ல நடத்தையுடன் இருந்தால் மாதத்துக்கு இரண்டு நாள் உண்டு. சிறைச்சாலையில் அளிக்கப்படும் வேலையில் பங்குக்கொண்டால் அதற்காக இரண்டு நாள்கள் உண்டு. ஆக, மாதத்துக்கு மொத்தம் நான்கு நாள்கள் சாதாரண தண்டனைக் குறைப்பு வழங்கப்படும்.

விடுமுறை நாள்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணிபுரியும் கைதிகளுக்கும், நைட் வாட்ச்மேன்களாகப் பணிபுரியும் கைதிகளுக்கும், மாதத்துக்கு ஐந்து நாள்கள் தண்டனைக் குறைப்பு வழங்கப்படும். தொகுதிகள் மற்றும் தொழிற்கூடங்களில் பணிபுரியும் கைதிகளை மேற்பார்வையிடும் ஓவர்சியர் என்பவர்களுக்கு மாதத்தில் ஆறு நாள்களும், குற்றக்காவலர்கள் எனப்படும் கன்விக்ட் வார்டர்களுக்கு மாதத்தில் எட்டு நாள்களும் தண்டனைக் குறைப்பு வழங்கப்படும்.

2. சிறப்பு தண்டனைக் குறைப்பு

சிறப்பு தண்டனைக் குறைப்பை எந்தவொரு சிறைவாசிக்கும் வழங்கலாம். அது வழங்குவதற்கான காரணம் சிறைவாசியின் வரலாற்றுக் குறிப்பேட்டில் எழுதப்பட வேண்டும். சிறைவாசிகளிடையே ஒழுக்கத்தைப் பேணுவதில் அதிகாரிகளுக்குத் துணையாக இருத்தல்; சிறைவாசிகளுக்குத் தொழில் கற்பித்தல்; கொடுக்கப்படும் வேலையில் அதிகப்படியான ஈடுபாடு, உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தரத்தை மேம்படுத்திக் காட்டுதல்; சிறைக் கலவரத்தின்போது அதிகாரிகளைக் காப்பாற்றுதல்; கலவரம், தப்பித்தல், தீப்பிடித்தல் போன்ற சமயங்களில் தடுப்புப்பணிகளில் அதிகாரிகளுக்குத் துணையாக இருத்தல்; அரசால் நடத்தப்படும் தேர்வுகளில் முதன்மைத் தேர்ச்சி பெறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காகச் சிறப்பு தண்டனைக் குறைப்பு வழங்கப்படுகிறது.

மேலும், 21 வயதுக்கு மேற்பட்ட பெண் சிறைவாசிகளும், 55 வயதுக்கு உட்பட்ட ஆண் சிறைவாசிகளும் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டால், அவர்களுக்கு 15 நாள்கள் முதல் ஒரு வருடம் வரை சிறப்பு தண்டனைக் குறைப்பு வழங்கப்படும்.

ரத்ததானம் செய்யும் கைதிகளுக்கு 15 நாள்கள் தண்டனைக் குறைப்பு வழங்கப்படும். ஒரு வருடம் முழுவதும் ஒரு சிறைவாசி எந்தச் சிறைக் குற்றமும் செய்யாமல் இருந்தால், அவருக்கு வருடத்துக்கு 15 நாள்கள் நன்னடத்தை தண்டனைக் குறைப்பு வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் சிறைக் கண்காணிப்பாளர் வருடத்துக்கு 30 நாள்களும், சிறைத்துறைத் தலைவர் வருடத்துக்கு 60 நாள்களும் சிறப்பு தண்டனைக் குறைப்பு வழங்கலாம்.

இப்படி சிறுகச் சிறுகச் சேர்த்துவைத்த தண்டனைக் குறைப்பு மொத்தமாக ஒரே நொடியில் ரத்தாகிவிடும் அபாயமும் இருக்கிறது. சிறைக்குள் அடிதடி, வெட்டுக்குத்து, கொலை, தப்பித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டால், அத்தனை காலம் சேர்த்து வைத்த அத்தனை தண்டனைக் குறைப்பு நாள்களும் ரத்துசெய்யப்படும்.

3. அரசால் வழங்கப்படும் சிறப்பு தண்டனைக் குறைப்பு

தலைவர்களின் பிறந்த நாள், காந்தி நூற்றாண்டு விழா, சுதந்திர தினப் பொன்விழா ஆண்டு ஆகிய நாள்களில் ஆறு மாதமோ ஒரு வருடமோ நல்லெண்ண நடவடிக்கையாகச் சிறப்பு தண்டனைக் குறைப்பு வழங்க அரசுக்கு அதிகாரம் உண்டு. அரசு நினைத்தால் எந்தவொரு கைதியின் தண்டனையையும் நிறுத்திவைக்க முடியும். நீதிமன்றங்களால் அளிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றாமல் கிடப்பில் போடவும் முடியும். ஜனாதிபதி நினைத்தால் எந்தவொரு குற்றவாளியின் தண்டனையையும் நிறுத்திவைக்க முடியும்; ரத்துசெய்ய முடியும். மாநில ஆளுநரும் தண்டனையை நிறுத்தி வைக்க முடியும்; ரத்துசெய்யவும் முடியும்.