
யார் ஏற்றுக்கொண்டாலும், இல்லா விட்டாலும் சசிகலா தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத நபராக இருந்தார் என்பதுதான் உண்மை.
சசிகலா எப்போது விடுதலையாவார் என்ற கணக்கு ஒருபுறமிருக்க, சிறை விதிகளை அவர் மீறியதாக எழுந்த புகார் நிரூபிக்கப்படும்பட்சத்தில், அவருடைய விடுதலை தள்ளிப்போகுமோ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. சட்டபூர்வமாக இது நிரூபிக்கப்பட வாய்ப்பிருக்கிறதா?
`பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அவருக்கு வி.ஐ.பி ட்ரீட்மென்ட் நடக்கிறது; அதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டிருக் கிறது’ என்று சிறைத்துறைத் தலைவரின் மீதே சிறைத்துறை துணைத்தலைவர் புகார் கொடுத்தார். வெறும் 15 நாள்களே சிறைத்துறையில் பணிபுரிந்த அந்த அதிகாரி சொன்ன அந்தப் புகார் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது; விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்தப் புகார்கள் உண்மையானவையா?
`சசிகலா தங்கியுள்ள அறைக்கு அருகில் மூன்று, நான்கு காலி அறைகளை அவர் பயன்படுத்துகிறார்’ என்பது குற்றச்சாட்டு. ஒரு நபரால் ஒரே நேரத்தில் நான்கு அறைகளிலும் தூங்க முடியாது. உணவு உண்பதற்கு, பொருள்களை வைத்துக்கொள்வதற்கு, துணிகளைக் காயப்போடுவதற்கு அந்த அறைகளை அவர் பயன்படுத்தி யிருக்கலாம்.

யார் ஏற்றுக்கொண்டாலும், இல்லா விட்டாலும் சசிகலா தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத நபராக இருந்தார் என்பதுதான் உண்மை.
இந்திய நாட்டின் பிரதமரே நேரடியாகத் தோளைத் தட்டி ஆறுதல் கூறும் இடத்தில் அவர் இருந்தார். தமிழகத்தில் 30 ஆண்டுக்கால அரசியல் மாற்றங்களில் முக்கியப் பங்காற்றியவர். `அவர் உயிருடன் இருந்தால் தங்கள் பதவிக்கும், அரசியல் செல்வாக்குக்கும் பங்கம் வரும்’ என்று நினைப்பவர்கள் அவரைச் சிறைக்குள் தீர்த்துக்கட்ட நினைக்கலாம்.
கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய இரண்டாயிரம் குற்றவாளிகளுக்கு மத்தியில் இருக்கும் அவருக்கு எந்த நேரத்திலும், எந்த ரூபத்திலும் ஆபத்து வரலாம். எனவேதான் அவருடைய பாதுகாப்பைக் கருதி, ஒதுக்குப்புறமான ஒரு தொகுதியில் ஓர் அறை ஒதுக்கப்பட்டது. அருகிலிருந்த நான்கு அறைகள் யாரும் அடைக்கப்படாமல் காலியாகவிடப்பட்டன. அதனால் காலியாக இருந்த அறைகளை அவர் பயன்படுத்தியிருக்கலாம். இந்த வசதி, தமிழகச் சிறையில் அவர் இருந்தபோது தி.மு.க அரசாலேயே செய்துதரப்பட்டிருந்தது. அதற்காக அவருக்குப் பட்டுக்கம்பளம் விரித்ததாக அர்த்தமாகிவிடாது.
அடுத்ததாக உணவு. சசிகலா சுத்த சைவம். சர்க்கரை நோயாளியும்கூட. அவரால் என்ன ஆடம்பரமான உணவை உண்டுவிட முடியும்? ராகிக் களிக்கு பதிலாக அரிசி உணவு கொடுக்கப்பட்டிருக்கலாம். மாற்று உணவு கொடுக்க சிறை நடைமுறை விதிகளில் இடமுள்ளது. அந்தந்த வட்டாரப் பழக்கத்துக்கு ஏற்ப அரிசி, கோதுமை, ராகி, சோளம் போன்ற தானியங்களில் அவர் எதில் உணவு வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. சிறிது காய்கறிகள், சாம்பார், மோர் என்பது ஆடம்பர உணவா?
தனியொரு சிறைவாசிக்காக மட்டும் சமைத்த உணவை எடுத்துவர சிறை சமையற்கூடத்தில் சிறிய பாத்திரங்கள் இல்லாதபட்சத்தில், சொந்தப் பாத்திரங்களை உபயோகப்படுத்திக் கொள்ள சிறைக் கண்காணிப்பாளர் அனுமதி அளிக்கலாம். சிறைக்குள் கேன்டீன் இருக்கிறது. பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். ‘சிறைச்சாலைக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் சமையல் செய்து தினமும் சசிகலாவுக்கு கொண்டுவரப்படும்’ என்ற செய்தி அபத்தமானது. அதற்கு வாய்ப்புமில்லை; அவசியமும் இல்லை என்பதே என் கருத்து.
அதையும்விட அபத்தம், `சிறைக்கு வெளியே அவர் சுதந்திரமாகச் சென்றுவருகிறார்’ என்ற குற்றச்சாட்டு. நான் 40 ஆண்டுகளில் தமிழகத்தின் அனைத்துச் சிறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன். ஒரு சிறைவாசி சுதந்திரமாக வெளியே சென்றுவந்ததாக நான் கேள்விப்பட்டதுகூட இல்லை. ஒரு கைதி சுதந்திரமாக வெளியே செல்ல வேண்டுமானால் 10 கட்டுக்காவல்களை, குறைந்தபட்சம் 50 அதிகாரிகளையாவது தாண்டிச் செல்ல வேண்டும்.

அவர் வெளியே செல்வதைச் சொல்லாமலிருக்க இரண்டாயிரம் பேருக்கும் மேலாகக் கையூட்டு தர வேண்டியிருக்கும். இப்படியொரு வி.ஐ.பி-யை வெளியில் யாராவது அடையாளம் கண்டுவிட்டால், சிறையிலிருந்து அவர் தப்பியதாகக் கருதி அவரைக் காவல்துறை கைதுசெய்ய முடியும். சிறைத்துறை அதிகாரிகளும் கூண்டோடு கைதாக வேண்டிய சூழல் ஏற்படும். அதனால், எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் இதற்கு எந்தவொரு சிறைப் பணியாளரும் உடன்பட வாய்ப்பேயில்லை.
`சிறைத்துறை அதிகாரிகள் பணத்துக்காக எதையும் செய்வார்கள்’ என்ற கண்ணோட்டம், சில அதிகாரிகளிடம் இருக்கிறது. அது முற்றிலும் தவறானது. சசிகலாவுக்கு சாதாரண தண்டனை (Simple Imprisonment) மட்டுமே தரப்பட்டிருப்பதால், அவர் எப்போதுமே தன் சொந்த உடையிலேயே இருக்கலாம். அது வீடியோவில் தெரிந்திருக்கும். சிறையின் பிரதான வாயிலிலிருந்து அவர் வெளியே வரும் பதிவுகள் ஏதாவது வீடியோவில் இருக்கின்றனவா என ஆராய்ந்து பார்க்காமல், பத்திரிகைகள் யூகத்தில் எழுதுவது ஊடக அறமில்லை.
இந்த நேரத்தில் சசிகலா தமிழகச் சிறையில் இருந்தபோது எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களையும் பகிர விரும்புகிறேன்...
1997-ம் ஆண்டில் வருமான வரித்துறை வழக்கில் சசிகலா கைதுசெய்யப்பட்டு விசாரணை சிறைவாசியாக சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அதுதான் அவரின் முதல் சிறை அனுபவம். சகல அதிகாரங்களுடன், தமிழக முதல்வரின் பூரண நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்து, தமிழக அரசையும் அரசியலையும் ஒருசேர தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு அதிகாரத்தின் உச்சாணிக்கொம்பில் இருந்த சசிகலா, திடீரென அத்தனை அதிகாரங்களும் பறிக்கப்பட்டு மலைமுகட்டிலிருந்து அதல பாதாளத்துக்குத் தள்ளப்பட்டதைப் போன்ற அரசியல் சதுரங்கத்தில் சிக்கினார்.
அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள், துறைத் தலைவர்கள், அரசியல் ஆளுமைகள் என பல தரப்பினரும் இவரைச் சந்திப்பதற்காக போயஸ் கார்டன் வாயிலில் காத்துக்கிடந்ததை நாடே அறியும். அப்படிப்பட்ட சசிகலா, சிறைக்குள்ளே திடீரென அடைக்கப்பட்டபோது எத்தகைய மனச்சிதைவுக்கு உள்ளாகியிருப்பார் என்பது எல்லோருக்கும் புரியும்.
அவர் அடைக்கப்பட்டிருந்த சிறை அறைக்கும், கூவம் ஆற்றுக்கும் இருபது அடிதான் இடைவெளி. நடுவில் ஒரு நெடிதுயர்ந்த சிறைச்சாலைச் சுற்றுச்சுவர். கூவத்தின் நாற்றத்தை அதனால் தடுக்கவே முடியாது. பெண்கள் பகுதியில் ஒரு தனி செல்லில் சசிகலா அடைக்கப்பட்டிருந்தார். நான் காலை 9 மணி முதல் 11 மணி வரை சிறையில் ரவுண்ட்ஸ் வரும்போது பார்த்தால், சசிகலா தனது அறையில் ஏதோ ஒரு கடவுள் படத்தை வைத்து, அதன் முன் அமர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருப்பார். `அவர் யாருடனும் பேசுவதில்லை, எப்போது பார்த்தாலும் சாமி படத்தின் முன் அமர்ந்து ஸ்லோகம் சொல்லிக்கொண்டிருப்பார், இல்லாவிடில் ஆழமான யோசனையில் இருப்பார் ’என்று சொல்வார் பெண் காவலர்.

காலையில் ஒரு ரொட்டித்துண்டு; மதியம் சிறிது தயிர் சாதம்; மாலை ஏதாவது பழம்... இவற்றைத் தவிர எதையும் அவர் சாப்பிட்டதில்லை. சிறை விதிகளுக்குப் புறம்பாக வேறு உணவும் அவர் கேட்டதில்லை. அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர், சிறைக்குள் மனவிரக்தியால் வேறு எந்த முடிவும் எடுத்துவிடக் கூடாது என்று இரவு, பகலாக அவரைத் தீவிரமாகக் கண்காணித்தோம்.
வருமான வரித்துறை விசாரணை ஆரம்பமானது. எனது அலுவலகத்தில்தான் விசாரணை. ஐந்தாறு அதிகாரிகள் சுற்றி நின்று அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்தனர். தொடர் கேள்விகளால் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்த சசிகலா, தண்ணீர் கேட்டார். அதைக் கொண்டுவருவதற்குள் அங்கேயே மயங்கிச் சரிந்தார். தண்ணீர் குடிக்கக் கொடுத்தும் அவர் தெளிந்த நிலைக்கு வரவில்லை.
மீண்டும் `விசாரணை’ என்ற பெயரில் அவர் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டால், அவரின் உயிருக்கேகூட ஆபத்து ஏற்படலாம் என்று எனக்குள் அச்சம் ஏற்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகளிடம், ‘அவர் தெளிந்த மனநிலையில் இல்லை. படபடப்பாக இருக்கிறார். மீண்டும் அவருக்கு மன அழுத்தத்தைக் கொடுக்க வேண்டாம். அவர் எங்கேயும் ஓடிப்போய் விடப்போவதில்லை; விசாரணையை நாளை தொடருங்கள்’ என்றேன். அந்த நேரத்தில் அவருடைய உயிருக்கும் உடல்நலத்துக்கும் நானே பொறுப்பு என்பதால் அப்படிச்சொன்னேன்.
ஆனால், சசிகலாவுக்கு நான் உதவுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் நினைத்துக்கொண்டார்கள். `அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை’ என்பது அவர்களின் குற்றச்சாட்டு. அதைப் பற்றி நான் அறிந்துகொள்ள அவசியமில்லை. எனக்கு, சிறைவாசியின் பாதுகாப்பு முக்கியம். அத்துடன் மாலை 6 மணிக்கு மேல் ஒரு பெண் சிறைவாசியை என் அறைக்குள் வைக்க சிறை விதிகள் என்னை அனுமதிக்கவில்லை. எனவே, அவரை அழைத்துச் சென்று லாக்கப் செய்ய உத்தரவிட்டேன்.
கோபத்தோடு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், உண்மைக்கு மாறான செய்திகளை பத்திரிகைகளில் தெரிவித்தார்கள். என்னைப் பற்றி என் மேலதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. என்மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. எனக்கு பாளையங்கோட்டை சிறைக்கு மாறுதல் உத்தரவு வந்தது.
பாளையங்கோட்டை சிறை என்றதும் நாகூர் ஹனீபாவின் பாட்டு நினைவுக்கு வரும்.
‘பாளையங்கோட்டை சிறையினிலே... பாம்புகள் பல்லிகள் நடுவினிலே!’
(கதவுகள் திறக்கும்)