மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 28 - சிறைக்குள் கலங்கிய கலைஞரின் கண்கள்!

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

முன்னாள் தமிழக முதல்வர் என்பதால், அவரை எல்லா அதிகாரிகளும் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்திருக்கிறார்கள். நான் அவரைப் போய்ப் பார்க்கவே இல்லை.

கலைஞர் கருணாநிதியின் அரசியல் வரலாற்றில் அவரது சிறை வாழ்க்கைக்கு முக்கியப் பங்குண்டு. ‘நெஞ்சுக்கு நீதி’யில் பல இடங்களில் தன் சிறை அனுபவங்களை விளக்கியிருக்கிறார் கலைஞர்.

அவரைப் பற்றி ஆயிரம் பேர் ஆயிரமாயிரம் எழுதியிருந்தாலும், எதுவுமே அவரைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தைக் கொண்டு வந்திருக்க முடியாது. ஏனெனில், கலைஞர் எதற்குள்ளும் அடக்க முடியாத சமுத்திரம்.

`யானை எப்படியிருக்கும்?’ என்று பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாகத்தைத் தொட்டு வர்ணிப்பதுபோல நானும் கலைஞரைப் பற்றி எனக்குத் தெரிந்ததை, ‘சிறைக்குள் கலைஞர்’ என்ற டாபிக்கில் எனக்கு உண்டான அனுபவத்தை எழுத விழைகிறேன்...

 ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை
ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை

சென்னைச் சிறை அந்தக் காலத்தில் ‘மெட்ராஸ் பெனிடென்ஷரி’ (Madras Penitentiary) என்று அழைக்கப்பட்டது. அந்தமான் நிக்கோபர் தீவிலுள்ள சிறைக்கு நாடு கடத்தப்பட வேண்டிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் கைதுசெய்யப்பட்டு இந்தச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். கப்பல் வந்ததும், அவர்களை அதில் ஏற்றி அந்தமான் சிறைக்குக் கொண்டு போய்விடுவார்கள்.

தமிழகத்திலேயே குறைந்த பரப்பளவில் (பத்தரை ஏக்கரில்) அமைந்திருக்கும் மத்தியச் சிறை, சென்னை மத்தியச் சிறையாகத்தான் இருந்தது. 1837-ம் ஆண்டில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இதைக் கட்டுவதற்கு ஆன மொத்தச் செலவு 16,496 ரூபாய். அதன் பின்னர் 1855-ம் ஆண்டு வரை மெட்ராஸ் பெனிடென்ஷரியாக இருந்தது. பிறகு, மத்தியச் சிறையாக மாற்றப்பட்டது.

சுபாஷ் சந்திரபோஸ், வீரசாவர்க்கர், சி.என்.அண்ணாதுரை, கலைஞர், ஜெயலலிதா, ஜி.கே.மூப்பனார் எனப் பல தலைவர்கள் இங்கே அடைக்கப்பட்டிருந்திருக்கிறார்கள். சரித்திரப் புகழ்வாய்ந்த இதே சிறையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் இருந்திருக்கிறார். அத்தனை சரித்திர சம்பவங்களைக்கொண்ட சிறையில்தான் கலைஞருடன் என் முதல் சந்திப்பு நிகழ்ந்தது.

அது 1985-ம் ஆண்டு... சட்ட எரிப்புப் போராட்டத்தில் கைதான சுமார் ஐந்தாயிரம் தொண்டர்களுடன் கைதுசெய்யப்பட்டு சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் கலைஞர். அந்தச் சமயத்தில் நான் என் அலுவலகத்தில் மும்முரமாக பணியில் மூழ்கியிருந்தேன். ‘வணக்கம் சார்’ என்ற கரகரத்த குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். பனியன், லுங்கியுடன் அங்கே நின்று கொண்டிருந்தார் கலைஞர்.

அவர் சிறைக்குள் வந்து இரண்டு நாள்கள் ஆகியிருந்தன. முன்னாள் தமிழக முதல்வர் என்பதால், அவரை எல்லா அதிகாரிகளும் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்திருக்கிறார்கள். நான் அவரைப் போய்ப் பார்க்கவே இல்லை.

உண்மையைச் சொல்வதானால், அவரைப் போய்ப் பார்க்க எனக்கு விருப்பமில்லை. காரணம், அப்போது அவரை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. நான் எம்.ஜி.ஆர் ரசிகன். என் பெயரும் ராமச்சந்திரன். அதாவது கலைஞரின் அரசியல் எதிரியின் பெயர்.

இத்தனைக்கும் கலைஞர் இருந்த அறை என் அலுவலகத்துக்கு எதிரேதான் இருந்தது. அறைக்கு வெளியே வந்து உலவிக்கொண்டிருந்தவர், அப்படியே என் அறைக்கு வந்துவிட்டார். என்னைப் பார்த்துப் புன்னகைத்தவர், ‘‘மற்ற அதிகாரிகள் அனைவரையும் பார்த்தேன்... உங்களைப் பார்க்கவில்லை!’’ என்றார்.

ஜெயில்... மதில்... திகில்! - 28 - சிறைக்குள் கலங்கிய கலைஞரின் கண்கள்!

நான் அவரிடம் பேசிய முதல் வார்த்தையே, ‘‘என் பெயரே உங்களுக்குப் பிடிக்காது; அது மட்டுமில்லை. நான் ஒரு மலையாளி. அப்படி இருக்கும்போது என்னை உங்களுக்கு எப்படிப் பிடிக்கும்?’’ என்றேன். இன்னும் பலமாகப் புன்னகைத்தவர், ‘‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; மலையாளி என்கிறீர்கள்... அழகாகத் தமிழ் பேசுகிறீர்களே... நீங்கள் எந்த ஊர்?’’ என்று கேட்டார்.

நான் என்னைப் பற்றிச் சற்று விரிவாக விளக்கினேன்... ‘‘எம்.ஜி.ஆரின் ஊர்தான் நானும். எம்.ஜி.ஆரின் தாய் பெயர் சத்தியபாமா. என் அம்மாவின் பெயரும் அதுதான். எம்.ஜி.ஆரின் தந்தை பெயர் கோபாலன் மேனன். என் தந்தையின் பெயர் கோபாலன் நாயர்’’ என்றேன்.

ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டவர் தொடர்ந்து பேசினார்... ‘‘எம்.ஜி.ஆரை எனக்குப் பிடிக்காது என்று உங்களுக்கு யார் சொன்னது? அவர் என் நெருங்கிய நண்பர். நண்பர்களிலேயே அவர் அளவுக்கு எனக்குப் பிடித்தமானவர் வேறு யாரும் கிடையாது. ஒரே தட்டில் சாப்பிட்டு... ஒரே பாயில் படுத்து... ஒன்றாகப் பட்டினி கிடந்து பல நூறு நாள்களை அவருடன் கழித்திருக்கிறேன். ஏதோ சில காரணங்களால் நாங்கள் இருவரும் பாதை மாறிப் பயணிக்க வேண்டியிருக்கிறது’’ என்றவர், சில காரணங்களையும் விளக்கினார். அவற்றைக் கூற நான் விரும்பவில்லை. ஆனால், எம்.ஜி.ஆரின் பெயரை அவர் உச்சரிக்கும்போதெல்லாம் அவர் கண்கள் பனித்ததை என்னால் உணர முடிந்தது. கண்கள் கலங்க, கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டே பேசினார்.

எம்.ஜி.ஆர் மீது அவர்கொண்டிருந்த ஆத்மார்த்தமான அன்பையும் நட்பையும் விளக்கியவர், பிரிவால் உண்டான வேதனைகளையும் தனக்குரிய அழகிய தமிழில் கதைபோலச் சொன்னார். துயரமான ஒரு சம்பவத்தையும் என்னிடம் சொல்லி முடித்துக் கிளம்பும்போது, ‘‘நீங்களும் எம்.ஜி.ஆர்-தான். அதனால், உங்களையும் எனக்குப் பிடித்திருக்கிறது!’’ என்றார். புதிய நட்பு ஒன்று அங்கே துளிர்விட்டது.

சிறையின் பாதுகாப்புத் தொகுதியின் முதல் தளத்தில், ஒன்றாம் எண் அறையில் இருந்தார் கலைஞர். பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்த அறைகளில் இருந்தனர். காலை 6 மணிக்கு சிறை திறக்கும்போது, கலைஞர் அடைத்து வைக்கப்பட்ட தொகுதியும் திறக்கப்படும்.

நான் காலை 5:30 மணிக்கு சிறைக்கு வந்து காலைக் கணக்கைச் சரிபார்த்துவிட்டு, கலைஞர் அடைக்கப்பட்ட தொகுதிக்கு வருவேன். தயாராகக் காத்திருப்பார் அவர். நாங்கள் இருவரும் சிறையை ஒரு சுற்று சுற்றி வருவோம். நடக்கும்போது ஒரு சிறு குழந்தையைப்போல ‘அது என்ன... இது என்ன...’ என்று கேட்டுக் கேட்டுத் தெரிந்துகொள்வார். சிறையின் அனைத்துப் பகுதிகளும் அவருக்கு அத்துப்படியாகிவிட்டன.

நடைப்பயிற்சி முடிந்தவுடன் நான் அவரை அவரது அறையில் விட்டுவிட்டு என் அலுவலகத்துக்கு வந்துவிடுவேன்.

ஜெயில்... மதில்... திகில்! - 28 - சிறைக்குள் கலங்கிய கலைஞரின் கண்கள்!

ஆயிரம் விளக்கு உசேனும், துறைமுகம் பலராமனும் சிறைக்குள் கலைஞருக்கு உதவியாளர்களாக இருந்தார்கள். உசேன் காலையில் விடியும் முன்னரே சிறைக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு கலைஞருக்காகக் காத்துக்கொண்டிருப்பார். சிறைக்கு வெளியே அதிகாலையிலேயே பத்திரிகைகள் அனைத்தையும் வாங்கிக்கொண்டு வந்து காத்திருப்பார் குங்குமப்பொட்டு துரை.

நான் அலுவலகம் வந்து நாளேடுகளை ஒரு புரட்டுப் புரட்டிவிட்டு சென்சார் செய்து கலைஞரிடம் கொடுத்துவிடுவேன். ஐஸ்க்ரீமுக்காகக் காத்திருக்கும் ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் அந்தப் பத்திரிகைகளைப் படிப்பதற்காகக் காத்திருப்பார் கலைஞர். அவற்றைப் படித்து முடித்ததும் குளிக்கப் போய்விடுவார். அவர் குளித்து முடித்து வருவதற்குள், சமையற்கூடத்துக்குச் சென்று கலைஞருக்கான காலை உணவைத் தானே சமைத்து, தயார் செய்து கொண்டுவந்துவிடுவார் உசேன்.

அவரது உணவு மிகவும் எளிமையாகவும் சாதாரணமாகவும் இருக்கும். அதைப் பிறகு சொல்கிறேன். காபி மட்டும் அடிக்கடி விரும்பிக் குடிப்பார். காலை உணவு முடிந்ததும், என் அலுவலகத்துக்கு வந்துவிடுவார். காலை 10 மணி முதல் அவரின் குடும்பத்தினர், கட்சிக்காரர்கள் எனப் பார்வையாளர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். 1:00 மணிக்கு மதிய உணவுக்காகச் சென்றுவிடுவார். மாலை 4 மணிக்கு மீண்டும் பார்வையாளர்கள் சந்திப்பு. மாலை ஐந்தரை மணிக்கு மேல் ஏதாவது ஒரு சுண்டலுடன் காபி அல்லது ‘Threptin’ பிஸ்கட்டுடன் ஒரு காபி.

அப்போது மாலைப் பத்திரிகைகள் அனைத்தும் வந்துவிடும். அவை அனைத்தையும் படித்துவிடுவார் கலைஞர். பிறகு பத்திரிகைச் செய்திகளுக்கு பதிலளிப்பது, கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பது என பிஸியாகிவிடுவார். சிறிது நேரம் கிடைத்தாலும் ஏதாவது எழுதிக்கொண்டேயிருப்பார். இரவு எவ்வளவு தாமதமாகத் தூங்கினாலும், காலை 5:00 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். சில நேரங்களில் அதற்கும் முன்னரே விழித்து, அவசரமாக எழுதிக்கொண்டிருப்பார். எழுத்துதான் அவரது மூச்சாக இருந்தது.

அன்றாடம் நடக்கும் சிறிய சம்பவங்களையும் சுவைபட எழுத்தில் வடித்துவைப்பார் கலைஞர். நான் ஒருமுறை திரிபுரா முதலமைச்சர் நிருபன் சக்கரவர்த்தியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய கைக்கடிகாரம் திருட்டுப்போன சம்பவத்தைப் பற்றிக் கூறினேன். அதை உள்வாங்கிய கலைஞர், ‘காணாமல்போன கைக்கடிகாரம்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதிவிட்டார். வாசிப்புதான் அவருக்கு உயிர். அவருடைய பிரதான உணவே புத்தகங்களும் பத்திரிகைகளும்தான்.

இதே சிறையில், கைதி உடையில் கருணாநிதி இருந்திருக்கிறார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?

(கதவுகள் திறக்கும்)