மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 30 - ‘‘வேலூர் சிறை வேண்டாம்!’’ சென்னைச் சிறைக்கு வந்த கலைஞர்

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

‘‘ஐயோ... என்னைக் கொல்றாங்க!’’ என்ற கலைஞரின் அலறல் சத்தம், பல கோடி மக்களையும் கொந்தளிக்கவைத்தது.

2001 ஜூன் 29... தமிழக அரசியல் வரலாற்றில் மறக்கவியலாத நாள். ஆம், அன்றைய தினம் நள்ளிரவில்தான் சர்ச்சைக்குரிய வகையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார் தி.மு.க தலைவரான கலைஞர். மேம்பால ஊழல் வழக்கில் அவரைக் கைது செய்ததாகக் கூறியது சி.பி.சி.ஐ.டி போலீஸ். நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவரை கட்டியிருந்த லுங்கியுடன் குண்டுக்கட்டாகத் தூக்கி மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்த காட்சிகள் மறுநாள் அதிகாலையில் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக, தேசமே பரபரப்பானது!

‘‘ஐயோ... என்னைக் கொல்றாங்க!’’ என்ற கலைஞரின் அலறல் சத்தம், பல கோடி மக்களையும் கொந்தளிக்கவைத்தது. அவரைக் கைது செய்த போலீஸார், காலை வரையிலும் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஓட்டை நாற்காலி ஒன்றில் தன்னந்தனியாக உட்காரவைத்திருந்தனர்.

பிறகு கீழ்ப்பாக்கம் பகுதியிலிருந்த முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக்குமாரின் இல்லத்துக்கு அவரை அழைத்துச் சென்றார்கள். அவரை ஜூலை 10-ம் தேதி வரை காவலில்வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கலைஞரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே சிறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நீதிபதி கூறினார்.

 ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை
ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை

ஆனால், காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் நேராக சென்னை மத்தியச் சிறைக்கு அழைத்து வந்துவிட்டார்கள். கலைஞரை போலீஸார் அங்கு அழைத்து வந்துவிட்டாலும், அவரை வேலூர் சிறைக்குக் கொண்டு செல்வதற்குத்தான் உத்தரவு தரப்பட்டிருந்தது. ஆனால் கலைஞர், ‘எனக்கு உடல்நிலை சரியில்லை; வேலூர் வரை பிரயாணம் செய்ய முடியாது’ என்று மத்தியச் சிறை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் டாக்டர் கோபாலும், கலைஞரின் மகள் கனிமொழியும் அமர்ந்திருந்தனர். தேசமே உற்றுநோக்கிய காட்சிகள் அவை. சிறை வாயில் முன்பாக லுங்கியுடன் அவர் அமர்ந்து தொடங்கிய போராட்டம், தொலைக்காட்சி ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட, சிறிது நேரத்தில் மக்கள் அலை அலையாக அங்கே திரண்டனர்.

தொண்டர்களும் பொதுமக்களுமாக அங்கே திரண்டதில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. சென்னையில் பல இடங்களில் சாலைமறியல் நடந்தது. பெருகிவரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத போலீஸார், அவரைச் சிறிது நேரமாவது சென்னை மத்தியச் சிறைக்குள் கொண்டுசென்றுவிட வேண்டும் என்று முயற்சி செய்தனர்.

அப்போது சென்னை மத்தியச் சிறையின் கண்காணிப்பாளர் நான். சென்னை மத்தியச் சிறையில்தான் தன்னை அடைக்க வேண்டுமென்று ஏற்கெனவே போராடிக்கொண்டிருக்கும் கலைஞர், சிறைக்குள்ளே வந்துவிட்டால் அதன் பிறகு வெளியே போக மறுத்துவிடுவார். அரசின் உத்தரவுக்கு மாறாக, சிறைக்குள் அவரை அனுமதித்தால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நானே பொறுப்பேற்க நேரிடும். எனவே, அவரைச் சிறைக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டேன். போலீஸார் அரசின் மேல்மட்டத்துடன் தொடர்புகொண்டு, வெளியிலிருக்கும் நிலைமையை விவரித்தனர். கலைஞருடைய உடல்நிலை பற்றியும் எடுத்துக் கூறினர்.

சிறிது நேரத்தில் பொது மருத்துவமனையிருந்து மருத்துவக்குழு ஒன்று, அரசு ஏற்பாட்டின்பேரில் சென்னை மத்தியச் சிறைக்கு வந்தது. கலைஞரைப் பரிசோதனை செய்த அந்தக் குழு, ‘பயணம் செய்ய அவருக்கு உடல் தகுதி உள்ளது’ என்று சான்று கொடுத்தது. ஆனால், ஆங்காங்கே நடக்கும் போராட்டங்களாலும், சாலை மறியல்களாலும் அவரை வேலூர் வரை கொண்டு செல்வது மிகவும் ஆபத்தாக முடியும் என்பதை போலீஸார் உணர்ந்திருந்தனர். அதனால், சென்னை மத்தியச் சிறையிலேயே கலைஞரை அடைக்க வேண்டும் என்று மேலிடத்திடம் வலியுறுத்தினர்.

இதற்கிடையில் சிறை வாசலில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடிவிட்டது. சட்டம்-ஒழுங்கு பராமரிப்பைக் கருதி, அவரைச் சிறைக்குள் அனுமதித்தேன். ஆனாலும், அரசின் அனுமதியின்றி சிறைக்குள் செல்ல அனுமதித்து விட்டால், பின்பு அவரை வெளியே அனுப்புவது சிரமம் என்பதால் சிறை அலுவலர் அலுவலகத்தில் அமரவைத்தேன். கைது செய்யும்போது, அவரை போலீஸார் கையாண்டவிதத்தில் அவருடைய கைகளில் கடும் வலி ஏற்பட்டிருந்தது. வலி தாங்காமல், மருந்து வாங்கிக்கொடுக்கச் சொன்னார் கலைஞர். அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.

கலைஞருக்கு அடிப்படையான மருத்துவப் பரிசோதனைகள் செய்த மருத்துவர்கள், அவருக்கு ரத்த அழுத்தமும் இதயத்துடிப்பும் அதிகமாக இருப்பதாக என்னிடம் கூறினர். இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டுமென்று கலைஞர் சொன்னார். ஆனால், சிறைக்குள் அனுப்ப முடியாது என்பதால் சிறை மருத்துவர் கதிர்வேல் என்பவரை அனுப்பி, உடனடியாக புதிய Commode Stand ஒன்றை வாங்கிவரச் சொன்னேன். நிலைமையின் அவசரத்தைக் கருதி புயல் வேகத்தில் கிளம்பிய அவர் பத்தே நிமிடங்களில் அதை வாங்கி வந்தார். இரவு முழுவதும் தூங்கவிடாமல் அலைக்கழிக்கப்பட்டதில் கலைஞரின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்தது.

ஜெயில்... மதில்... திகில்! - 30 - ‘‘வேலூர் சிறை வேண்டாம்!’’ சென்னைச் சிறைக்கு வந்த கலைஞர்

நான் அரசு மேலிடத்தைத் தொடர்புகொண்டு, ‘கலைஞரை இப்போதுள்ள நிலையில் வேலூர் சிறைக்கு அனுப்புவது உகந்ததல்ல; அரசு அனுமதித்தால் சென்னைச் சிறையிலேயே வைத்துக் கொள்ளலாம்’ என்று கூறினேன். ஒருவேளை அவரைக் கொண்டு செல்லும் வழியில் ஏதாவது விபரீதம் நடந்தால் அதற்கு அரசே நேரடி பொறுப்பேற்க நேரிடும் என்பதையும் விளக்கினேன். அதன் பின்னரே சென்னை மத்தியச் சிறையில் வைத்துக்கொள்ள அரசு அனுமதித்தது. போலீஸாரும் ஆசுவாசப் பெருமூச்சுவிட்டனர்.

கலைஞரை எங்கே கொண்டு போய் அடைப்பது என்று யோசித்து, அங்கு புதிதாகத் தயாராகியிருந்த ஓர் அறைக்கு அவரை அழைத்துச் சென்றோம். அதைப் பார்த்த கலைஞர், ‘‘என்னப்பா இது... ஃபைவ் ஸ்டார் ஓட்டல்போல இவ்ளோ சுத்தமா, புத்தம் புதுசா இருக்கு!’’ என்று கேட்டார்.

‘‘இது அந்த அம்மாவுக்காக உங்கள் ஆட்சியில், நீங்கள் தயார் செய்த அறைதான். கடந்த முறை அந்த அம்மா இந்தச் சிறையில் அடைக்கப்பட்டபோது, ‘சிறையில் பெருச்சாளி, எலித்தொல்லை இருக்கிறது. கரப்பான் பூச்சிகளாலும் கொசுக்களாலும் நான் சித்ரவதை அனுபவித்தேன்’ என்று பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்திருந்தார். எனவே, ‘ஆட்சிக்கு கெட்டபெயர் வந்துவிடக் கூடாது’ என்று உங்கள் ஆட்சியில் செய்த முன்னேற்பாடுதான் இது. ஆனால், நீங்களே இங்கு வந்துவிட்டீர்கள். அதுவும் இவ்வளவு விரைவில் வருவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை’’ என்றேன்.

ஜெயில்... மதில்... திகில்! - 30 - ‘‘வேலூர் சிறை வேண்டாம்!’’ சென்னைச் சிறைக்கு வந்த கலைஞர்

அதற்கு அவர், ‘‘எதிர்பார்க்காதது நடப்பதுதான் அரசியல்’’ என்று சிரித்துக்கொண்டே அவருக்கே உரிய கிண்டல் தோரணையில், ‘‘எல்லா வசதிகளும் இருக்கின்றன. வருங்காலத்தில் சிறையில் முதலமைச்சர் அறையாக இதை ஒதுக்கிவிடுங்கள். ஒன்று நான் வருவேன் அல்லது அவர் வருவார்!’’ என்று கூறி எங்களையும் சிரிக்கவைத்தார்.

1996 முதல் 2001-ம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சியைத் தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது. சென்னை மேயராக இருந்தார் ஸ்டாலின். சென்னையை `சிங்காரச் சென்னை’யாக மாற்றுவதே தனது லட்சியம் என்று பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்தார். சென்னையிலுள்ள பல முக்கியப் பாலங்கள் அப்போதுதான் கட்டப்பட்டன.

அதே ஐந்தாண்டு காலகட்டத்தில் ஜெயலலிதா, பல்வேறு வழக்குகளையும் சந்தித்துவந்தார். ஒரு சில வழக்குகளில் அவருக்கு தண்டனையும் கொடுக்கப்பட்டது. அந்தத் தண்டனைகளை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். `சிறப்பான ஆட்சி கொடுத்திருப்பதால், நாங்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்’ என்று தி.மு.க-வினர் பெரும் நம்பிக்கையில் இருந்தனர்.

`மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்படுவார்’ என்ற செய்தி பரவலாக இருந்தது. ஏற்கெனவே சென்னை மத்தியச் சிறையைப் பற்றி ஜெயலலிதா புகார்களை அடுக்கியிருந்ததால், அவர் மீண்டும் சிறைக்கு வரும்பட்சத்தில் அவரை அடைப்பதற்காகவே பிரத்யேகமாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. பெண்கள் பகுதி முழுவதும் காலி செய்யப்பட்டு அந்த வளாகம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு, அவருக்கான சிறப்பு அறை தயாராகியிருந்தது. அதில்தான் கலைஞர் அடைக்கப்பட்டார்.

சிறையிலுள்ள மற்ற செல்கள்போல் அல்லாமல், அந்த அறை வெஸ்டர்ன் டாய்லெட் மற்றும் குளியலறை சகிதமாகச் சற்றுப் பெரியதாக இருந்தது. ஆனால், அந்த அறையில் மின்விசிறி பொருத்த வசதியில்லை. எனவே, கலைஞருக்கு ஒரு டேபிள் ஃபேன் கொடுக்கப்பட்டது. அது அரதப்பழசானது.

தி.மு.க அப்போதும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்ததால், கலைஞரைப் பார்க்க மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், மல்ஹோத்ரா ஆகியோர் வந்திருந்தார்கள். கலைஞரின் அறையிலேயே சந்திக்க அனுமதிக்கப்பட்டது. அவர்கள் பேசும்போது, அந்த டேபிள் ஃபேன் மிகுந்த சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. அதிலிருந்து வெப்பமான காற்றுதான் வந்தது. வந்திருந்த மத்திய அமைச்சர்கள், ‘‘இது டேபிள் ஃபேனா... ஃபிரையிங் ஃபேனா?’’ என்று கேட்டுச் சென்றார்கள்.

டெல்லியிலிருந்து மிக மிக முக்கியமான ஒருவர், கலைஞரிடம் தொலைபேசியில் பேச வேண்டும் என்று கேட்டார். `அதற்குச் சிறை விதிகளில் இடமில்லை’ என்று நான் மறுத்துவிட்டேன்.

கலைஞரிடம் பேச விரும்பியவர்... அன்றைய பிரதமர் வாஜ்பாய்!

(கதவுகள் திறக்கும்)