மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 31 - வாஞ்சையுடன் அழைத்த வாஜ்பாய்... கம்பீரமாய் மறுத்த கலைஞர்!

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

வாஜ்பாய் இந்தியாவின் பிரதமர்தான். மிக உயர்ந்த பதவியில் இருப்பவர். ஆனால், அவர் சிறைக்குள் இருக்கும் கைதி ஒருவரிடம் போனில் பேசச் சட்டத்தில் இடமில்லை.

கலைஞர் கைது செய்யப்பட்டதுபோல தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும், அன்றைய மத்திய அமைச்சர்கள் மற்றும் சில எம்.பி-க்களும் கைது செய்யப்பட்டு மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

அவர்களில் அன்றைய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் ஒருவர். அவரை சென்னை மத்தியச் சிறைக்குக் கொண்டுவந்தனர். ஆனால், அவரை சென்னைச் சிறையில் அடைக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதனால், அவரை வேலூர் மத்தியச் சிறைக்கு மாற்ற முற்பட்டோம்.

ஆனால், பாலு சிறை முன் நின்று மறியல் செய்தார். ‘என் தலைவர் சிறையில் தனியாக இருக்கிறார். என் கட்சிக்காரன் ஒருவன்கூட அவருடன் இல்லை. அவரால் தனியாக எந்த வேலையும் செய்ய முடியாது. நான் வேலூர் சிறைக்குச் செல்ல முடியாது. அவருடன் இருக்க என்னை அனுமதிக்க வேண்டும்’ என்று வாதாடினார். அரசுத் தரப்பில் அசைந்துகொடுக்கவே இல்லை. ‘என் ஒருவனுக்கு இடமில்லையா?’ என்று உக்கிரமாகச் சண்டை போட்டார். ஆனால், அனுமதி தரப்படவே இல்லை. பாலு வேலூர் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

 ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை
ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை

கலைஞர் 30.6.2001 காலை தொடங்கி 4.7.2001 இரவு வரை ஐந்து நாள்கள் அப்போது சிறையில் இருந்தார். அவருக்கு அடுத்த அறையில் சென்னையில் பல்வேறு மேம்பாலங்களை வடிவமைத்த பொறியாளர் சீனிவாசன் கைது செய்யப்பட்டு அடைக்கப் பட்டிருந்தார். அந்தச் சூழ்நிலையிலும் அவரைச் சந்தித்துப் பேசிய கலைஞர், ‘தமிழ்நாட்டில் மொத்த போக்குவரத்தையும் கட்டுப்படுத்த எந்த மாதிரியான வடிவமைப்புகள் தேவைப்படும்’ என்பதை அவரிடம் விரிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

வாஜ்பாய் விஷயத்துக்கு வருகிறேன்... கலைஞர் கைது சம்பவத்தையும் அதையொட்டி தமிழகத்தில் நடந்த அரசியல் போராட்டங்களையும் அன்றைய பிரதமர் வாஜ்பாய் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். கலைஞர் கைது செய்யப்பட்ட விதத்தையும் அவர் கண்டித்தார். அவரை உடனடியாக விடுதலை செய்ய ஏற்பாடு செய்யும்படியும் கேட்டுக் கொண்டார். கலைஞரிடம் தொலைபேசியில் பேச வேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்கான தகவல் என்னிடம் வந்து சேர்ந்தது.

வாஜ்பாய் இந்தியாவின் பிரதமர்தான். மிக உயர்ந்த பதவியில் இருப்பவர். ஆனால், அவர் சிறைக்குள் இருக்கும் கைதி ஒருவரிடம் போனில் பேசச் சட்டத்தில் இடமில்லை.

அதனால், அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டேன். கலைஞரும் அவ்வாறு பேச விரும்ப வில்லை. சிறையிலிருக்கும் தன்னிடம் பிரதமர் பேசுவதற்கு சிறை விதிகளில் இடமில்லை என்பதை உணர்ந்து, அவரிடம் பேசுவதற்கு கம்பீரமாக மறுத்து விட்டார். அதனால்தான் கலைஞரை நேரில் பார்த்து நலம் விசாரித்து வரும்படி மத்திய அமைச்சர் ஜார்ஜ் மற்றும் மல்ஹோத்ரா ஆகியோரை அனுப்பி கைதுக்குத் தன் சார்பில் வருத்தத்தையும் தெரிவிக்கச் சொன்னார் வாஜ்பாய்.

கருணாநிதி - வாஜ்பாய்
கருணாநிதி - வாஜ்பாய்

மத்திய அமைச்சர்கள் வந்து சென்ற பிறகு உடனடியாக கலைஞரை ஜாமீனில் விடுதலை செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கலைஞர் ஜாமீனில் வெளியே செல்ல மறுத்துவிட்டார். “நான் எந்த ஊழலும் செய்யவில்லை. என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அப்படியே இருக்கும் நிலையில் அரசின் கருணையால் நான் வெளியே செல்ல விரும்பவில்லை. ஜாமீன் பத்திரத்தில் நான் கையொப்பமிட மாட்டேன்’’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டார்.

மேலும், “இந்த ஊழல் வழக்கிலிருந்து என்னை சட்டரீதியாக விடுவிக்கும்வரை, சிறையைவிட்டு வெளியேச் செல்லப் போவதில்லை” என்று தீர்மானமாகக் கூறிவிட்டார். அதற்குப் பிறகே, ‘இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தேவையில்லை’ (No longer required in the above case) என நீதிமன்றம் ஜாமீன் ஆணையைத் திருத்தி அனுப்பியது. அந்த வரிகளை கலைஞருக்கு படித்துக் காண்பித்து விளக்கிச் சொன்ன பிறகே கலைஞர் வெளியே செல்ல ஒப்புக்கொண்டார்.

அவர் சிறையைவிட்டுப் போகும்போது ‘‘இனிமேல் இந்த சிறைக்கு வரும் நேர்வு எனக்கு எழப் போவதில்லை. இந்தச் சிறை இங்கு இருக்குமா, நான் இருப்பேனா அல்லது நீங்கள்தான் இங்கு இருக்கப் போகிறீர்களா... யாருக்குத் தெரியும்?’’ என்று கூறி என்மீதிருந்த அன்பை வெளிப்படுத்தினார். வழக்கமாக கலைஞர் சிறைக்கு வரும்போதெல்லாம் அவருடன் போராட்டத்தில் பங்கேற்று, கென்னடி என்பவரும் சிறைக்கு வந்துவிடுவார். அவர்தான் அவருக்கு எல்லா உதவிகளையும் செய்வார். ஆனால், இந்த முறை கலைஞர் தள்ளாத வயதில் தன்னந்தனியாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உதவியாளர் யாரும் உடனில்லை.

ஜெயில்... மதில்... திகில்! - 31 - வாஞ்சையுடன் அழைத்த வாஜ்பாய்... கம்பீரமாய் மறுத்த கலைஞர்!

ஒருநாள் மாலைப்பொழுது என்னிடம் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் லேசாகத் தடுமாற்றம். முகம் சுண்டியது. அவர் சிரமமாக உணர்கிறார் என்பது மட்டும் புரிந்தது. “ஆட்கள் யாரும் இல்லையா?” என்று கேட்டார். “என்ன விஷயம் சொல்லுங்கள்... ஆட்கள் யாரும் இல்லை” என்றேன். ஆனால், ஓரிரு நிமிடங்களில் திரும்பவும் அதையே கேட்டார். அதற்கு நான், “நான்தான் இருக்கிறேனே... என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். தயக்கத்துடன் “கழிவறைக்குச் செல்ல வேண்டும்” என்றார். தள்ளாத வயதில் அவரது பிரச்னை எனக்குப் புரிந்தது. உடனே நானே அவரைத் தூக்கிக்கொண்டு கழிவறைக்குக் கொண்டுவிட்டேன்.

அவர் திரும்பி வரும்வரை காத்திருந்து கவனித்துக்கொண்டேன். திரும்பவும் அவரை அழைத்துவரத் தூக்கியபோது எனது ‘நேம் பேட்ஜ்’ கழன்று கீழே விழுந்தது. அதற்கு அவர், “என்ன ராமச்சந்திரனை கீழே போட்டுவீட்டீர்கள்?” என்று கிண்டலாகக் கேட்டார். “அதான் உங்களை ஏந்திக்கொண்டேனே!” என்று பதிலுரைத்தேன். அந்த கணத்தில் நன்றி உணர்வு ததும்ப, கலங்கிய கண்களுடன் கலைஞர் என்னைப் பார்த்ததை என்றைக்குமே என்னால் மறக்க முடியாது.

ஜெயில்... மதில்... திகில்! - 31 - வாஞ்சையுடன் அழைத்த வாஜ்பாய்... கம்பீரமாய் மறுத்த கலைஞர்!

அவரிடம் நான் காட்டிய அன்புக்கும் மனிதாபிமானத்துக்கும் சாட்சியாக அவர் எழுதிய குறிப்பு இப்போதும் என்னிடம் இருக்கிறது. அந்தக் குறிப்பில் அவர் எழுதியிருந்தது இதுதான்...

‘‘இத்தனை ஆண்டுகாலப் பொதுவாழ்வில் எத்தனையோ அதிகாரிகளை, மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் என் நெஞ்சைவிட்டு என்றுமே அகலாத நன்றிக்குரிய ஒருவர் சென்னைச் சிறை தலைமை அதிகாரி திரு.இராமச்சந்திரன் என்பதைக் கல்லில் செதுக்கப்படும் வாக்கியமாகச் சொல்வேன். சிலர் இருப்பார்கள். அவர்கள் நட்பு நீர்மேல் எழுத்தாகும். இந்த நட்பு கல் மேல் எழுத்தாகும். வாழ்க இவர் வளமுடன்! - என்றும் அன்பு மறவாத மு.கருணாநிதி’’ என்று எழுதி, கையெழுத்திட்டிருந்தார்.

குறிப்பு எழுதப்பட்ட நாள்: 4.7.2001

தன் முதுமைக் காலத்தில் ஐந்து நாள்கள்தான் கலைஞர் சிறையில் இருந்தார். உடல்ரீதியாக அவர் மிகவும் தளர்ந்து போயிருந்தாலும் அந்த வயதிலும் எதையும் தாங்கும் இதயத்துடன் அவர் இருந்தார்.

அதற்கு முன்பு வெவ்வேறு காலகட்டங்களில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவர் அனுபவித்த துன்பங்களும் அதற்குப் பிறகு தமிழக முதல்வராகி சிறைத்துறையில் அவர் செய்த சீர்திருத்தங்களும் சாதாரணமானவை அல்ல. அதையெல்லாம் இன்றைக்குச் சொன்னால் பலரும் நம்பக்கூட மாட்டார்கள். அதில் முக்கியமானது அந்த இரண்டு சட்டிகள் கொடுமை!

(கதவுகள் திறக்கும்)