ஜெயில்... மதில்... திகில்! - 32 - பத்தடிக்கு எட்டடி கொட்டடி... மூவருக்கு இரண்டு சட்டி!

அறுசுவை உணவு என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். சுவை அறுந்த கொடுமையான சாப்பாடுதான் சிறைச்சாலையில் தரப்பட்டது. அந்தக் கொடுமையை மண் சட்டிகளில் கொட்டினார்கள்.
ஆங்கிலேயர்கள், இந்தியாவில் விடுதலைப் போராட்ட வீரர்களை வதைக்கும்விதமாகவே சிறைச்சாலை களை வடிவமைத்தார்கள். அவற்றை, `சிறைச்சாலை’ என்று சொல்வதைவிட `கொட்டடி’ என்றே சொல்லலாம். சுதந்திரத்துக்குப் பிறகும் சிறைச்சாலையின் கட்டமைப்பிலும் நடைமுறையிலும் பெரிய மாற்றங்கள் வந்துவிடவில்லை.
மற்ற மாநிலங்கள் எப்படியோ... தமிழகத்தில் சிறைத்துறையில் நான் பணிக்குச் சேர்ந்தபோது இருந்த சிறைச்சாலைகளுக்கும், இப்போது இருக்கும் சிறைச் சாலைகளுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக் கிறது. தமிழக சிறைச்சாலைகள் இவ்வளவு மாற்றங்கள் அடையும் என்று அன்றைக்கு யாரும் கற்பனைகூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். அப்படியான மாற்றங்களுக்கு, சீர்திருத்தங் களுக்கு விதைபோட்டது கலைஞரின் சிறை வாழ்வு. அபூர்வமான ஒற்றுமை யாதெனில், சிறைத்துறையில் நான் பணிக்குச் சேர்ந்த 1967-ம் ஆண்டில்தான் தமிழகத்தில் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. சிறைத்துறை மாற்றங்களுக்கு நானே வாழும் சாட்சி.

அந்தக் காலகட்டத்தில் சிறைச்சாலைக்குள் கைதிகளுக்குக் கிடைக்கும் உணவு காலையில் ஒரு குவளை (சுமார் 600 மி.லி) சோளக்கஞ்சி. தொட்டுக்கொள்ள புளிச்சட்டினி. மதியம் சுமார் 400 கிராம் சோளக்களி அல்லது ராகிக்களி, அதே அளவில் அரிசி உணவு. மாலை 4 மணியளவில் 60 கிராம் அவித்த வேர்க்கடலை. இரவு 400 கிராம் அரிசி உணவு. அவ்வளவுதான். இவற்றைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது. அப்போதெல்லாம் சிறை கேன்டீன் கிடையாது.
மாலையில் 6 மணிக்கு சிறை பூட்டப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு திறக்கப்படும். இடையில் எதுவுமே கிடைக்காது. இப்போதெல்லாம் சோளக்கஞ்சி என்பது பணக்காரர்களுக்கான அன்றாட ‘டயட்’ உணவாகிவிட்டது. ஆனால், அந்தக் காலத்தில் சிறையில் தரப்பட்ட சோளக்கஞ்சி கரடுமுரடானது. கல்லும் மண்ணும் கலந்த மாவினால் தயார் செய்யப்பட்டிருக்கும். அதைக் குடிக்கும்போது கல்லும் மண்ணும் வயிற்றுக்குள் சென்றுவிடும். மெல்லாமலேயே அதை விழுங்கிவிடுவது சாலச்சிறந்தது.
சிறைவாசிகள் பலரும் அதைக் குடிக்க முடியாமல், குவளையின் மேல்பாகத்திலுள்ள தெளிந்த கஞ்சியை மட்டும் குடித்துவிட்டு, மீதியை அப்படியே வைத்துவிடுவார்கள். மதியம் சோளம் அல்லது ராகியில் கிண்டப்பட்ட களி தரப்படும். அதையும் மென்று உண்ண முடியாது. `மோர்’ என்ற பெயரில் தரப்படும் வெள்ளைத் தண்ணீரில் கரைத்துக் குடித்துவிட வேண்டும். பெண்கள் அரிசியை உலையில் போடும் முன் அரிப்பார்களே... அதுபோல ஒரு சிலர் அலசிக் குடித்துவிடுவார்கள். இந்தக் களியுடன் சாம்பார் தரப்படும். சிறைத் தோட்டங்களில் விளைவிக்கப்படும் தண்டுக்கீரை, முள்ளங்கி ஆகிய காய்களால் செய்யப்பட்ட அந்த சாம்பாரில் காய்கறிகள் இருக்கும்; பருப்பைத்தான் தேட வேண்டியிருக்கும்.
இவையெல்லாம் வெள்ளைக்காரர்களின் மெனு. சிறைக்கு வருபவர்கள், மனதாலும் உடலாலும் தெம்பாகி விடக்கூடாது என்பதற்கான சூழ்ச்சி. இதனால், சிறையில் வழங்கப்படும் 70 சதவிகித உணவு, சிறைவாசிகளால் குப்பையில்தான் கொட்டப்படும். இந்தக் கொடுமையைக் கலைஞரும் அனுபவித்திருக்கிறார்.

கல்லக்குடி போராட்டத்தில் கைதாகி, அரியலூர் கிளைச் சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார். அங்கே அவருக்கு வழங்கப்பட்ட உணவைப் பற்றி ‘நெஞ்சுக்கு நீதி’ முதல் பாகத்தில் கலைஞர் இப்படி எழுதியுள்ளார்...
‘‘அறுசுவை உணவு என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். சுவை அறுந்த கொடுமையான சாப்பாடுதான் சிறைச்சாலையில் தரப்பட்டது. அந்தக் கொடுமையை மண் சட்டிகளில் கொட்டினார்கள். மஞ்சள் வண்ணச்சோறு, பஞ்ச வண்ணக் குழம்பு... உப்பிலும் புளியிலும் காரத்திலும் சேராமல் சுயேச்சையாய் வந்து விழுந்த பரங்கிக்காய் துண்டை எடுத்து வாயில் வைத்தேன். எப்படியோ எதிர்நீச்சல் போட்டு அது வயிற்றுக்குள் போய்விட்டது. சோற்றைக் கிள்ளி வாயில் போட்டுக்கொண்டேன். ‘அண்ட சராசரம் சுழலுதண்ணே... அடிவயிற்றிலிருந்து குமட்டுதண்ணே’ என்று மற்ற தோழர்கள் கூச்சலிட, சோற்று உருண்டைகளைக் கீழே கொட்டிவிட்டு சட்டிகளைக் கழுவிவைத்து, இருண்ட கூட்டில் அடைக்கப்பட்டோம்!
மதிய உணவு சோளக்களி. சோளத்தின் மாவினாலே செய்யப்பட்ட சுவையான உணவு. அதன் தலையிலே குழம்பு என்று சொல்லப்பட்ட ஏற்பாட்டையும் ஊற்றித் தொலைத்தார்கள். எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்ட லிங்கப்பெருமான்போல சோளக்களி நின்றுகொண்டிருந்த சட்டியிலே சோளக்களியை யார் தொட முடியும்... அதுதான் தொட்டாலும் அசைவதேயில்லையே!’’
கலைஞர் தனது சிறை அனுபவத்தை அவலச்சுவையுடன் இப்படி எழுதிவிட்டாலும், அது அவர் நெஞ்சுக்குள்ளே அக்னிகுஞ்சாய் எரிந்துகொண்டே இருந்திருக்கிறதுபோல. அதனால் தான், ஆட்சிக்கட்டிலில் அவர் அமர்ந்ததும், சிறைச்சாலையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.

அந்தக் காலத்தில் சிறைச்சாலையில் வழங்கப் பட்ட உணவை உள்ளே தள்ளுவதே இவ்வளவு கஷ்டமென்றால், அதைக் கழிவாக வெளியேற்றுவது அதைவிடக் கொடுமை. அதுதான் அந்த இரண்டு சட்டிகள் ரகசியம்...
அரியலூர் கிளைச்சிறையில் 20 பேரை அடைக்கவே வசதி இருந்தது. அங்கே கலைஞருடன் சேர்த்து 60 பேரை அடைத்திருந்தார்கள். பத்தடிக்கு எட்டடி அறையில் எட்டுப் பேர் இருந்ததால் பெரும் கஷ்டம். ஆறு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்ட பின், அவர்களை திருச்சி சிறைக்கு மாற்றினர். அரியலூர் சிறையில் அனுபவித்த துன்பங்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ள கலைஞர், ‘எவ்வளவு தொல்லைகள் இருந்தால் என்ன... அந்த அரியலூர் காராக்கிரஹத்தையும் கக்கூஸையும் விட்டு வந்தோமே என்று ஆறுதல் ஏற்பட்டது!’ என்று குறிப்பிட்டிருப்பார். உண்மையில், சிறையில் அப்போது இருந்ததற்குப் பெயர் கக்கூஸ் கிடையாது. ஏனென்றால், அந்தக் காலத்தில் சிறையில் கழிப்பிட வசதியே கிடையாது.
மூன்று பேர் அடைக்கப்படும் ஒரு கொட்டடிக்கு இரண்டு சட்டிகள் கொடுக்கப்படும். ஒன்று மலம் கழிக்க; மற்றொன்று சிறுநீர் கழிக்க. மாலையில் அறை பூட்டப்பட்டுவிடும். கைதிகள் அதிகமாகிவிட்டால், இரவில் சட்டி நிரம்பி கொட்டடி முழுவதும் சிறுநீர் பரவிவிடும். காலையில் சிறை திறந்ததும் சட்டிகளை எடுத்து வந்து, மலத்தை ஓர் இரும்பு அண்டாவிலும் சிறுநீரை சாக்கடையிலும் கொட்ட வேண்டும். சட்டிகளைச் சுத்தம் செய்து பினாயில் தடவி வெயிலில் காயவைக்க வேண்டும்.
இந்தக் கஷ்டத்தை அனுபவித்த கலைஞர், தான் ஆட்சிக்கு வந்ததும், அனைத்து மத்தியச் சிறைச்சாலைகளிலும் ஒவ்வோர் அறையிலும் நீரால் தூய்மைப்படுத்தும் கழிப்பிடங்களைக் கட்ட நிதி ஒதுக்கினார். பின்பு படிப்படியாக அனைத்துச் சிறைச்சாலைகளிலும் எல்லா அறைகளிலும் கழிப்பிடங்கள் கட்டப்பட்டன.
உணவிலும் பல்வேறு சீர்திருத்தங்கள்... காலையில் சோளக்கஞ்சிக்கு பதில் வாரம் மூன்று நாள்கள் அரிசிக் கஞ்சி; இரண்டு நாள்கள் பொங்கலும் தேங்காய் சட்னியும்; இரண்டு நாள்கள் உப்புமாவும் தேங்காய் சட்னியும். மதியம் சோளம் மற்றும் ராகிக்களிக்கு பதிலாக 800 கிராம் அரிசி சாதம் வழங்கப்பட்டது. மீண்டும் அதுவும் மாற்றப்பட்டு, வாரத்தில் இரண்டு நாள்கள் 400 கிராம் புளிசாதம், உருளைக்கிழங்கு பொரியல், 400 கிராம் தயிர் சாதம்; அடுத்த இரண்டு நாள்கள் புளிசாதத்துக்கு பதிலாக, தேங்காய் சாதமும் கூட்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இரவு 600 கிராம் அரிசி சாதமும் சாம்பாரும் என்று மாற்றப்பட்டது. ஆனால், முன்பு வழங்கப்பட்ட வெறும் கீரைத்தண்டுகளும் முள்ளங்கியும் போட்ட சாம்பார் அல்ல; சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய விதவிதமான காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருள்கள் சேர்க்கப்பட்டு சமைக்கப்பட்ட ருசியான சாம்பார் வழங்கப்பட்டது. சமையல் தெரிந்த கைதிகள், சமையலர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். அவர்களின் மேற்பார்வையில் தரமான உணவு தயாரிக்கப்பட்டது. 1983-ம் ஆண்டு, ஒரு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, கலைஞர் சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருடன் மூவாயிரம் தி.மு.க தொண்டர்களும் ஓபன் லாக்அப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., சிறைச்சாலைக் கண்காணிப்பாளரை அழைத்து, ‘கலைஞருக்கு வீட்டுச் சாப்பாடு கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்’ என்று உத்தரவிட்டார். இதைக் கேள்விப்பட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்த கலைஞர், ‘‘மூவாயிரம் தொண்டர்களுக்கும் வீட்டிலிருந்து உணவு வந்தால் எப்படிக் கொடுக்கப் போகிறீர்கள்?’’ என்று கேட்டார். அவரிடம், ‘‘இந்தச் சலுகை உங்களுக்கு மட்டும்தான்’’ என்று சொன்னதும், ‘‘அப்படியென்றால் எனக்கும் வீட்டுச் சாப்பாடு வேண்டாம்; சிறை உணவே போதும்’’ என்று கூறிவிட்டார்.
அதன் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், ‘அனைத்து அரசியல் கைதிகளுக்கும் ‘ஏ கிளாஸ்’ உணவு வழங்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி வாரத்தில் இரண்டு நாள்கள் அவர்களுக்கு மதிய உணவில் 100 கிராம் மட்டன் அல்லது இரண்டு முட்டைகள் கொடுக்கப்பட்டன.
இவை தவிர, கைதிகளுக்கு கலைஞர் ஆட்சியால் கிடைத்த நன்மைகள் ஏராளம். 111 தூக்கு தண்டனை கைதிகள் தண்டனை குறைப்பு தகுதிபெற்றது அவருடைய உத்தரவால்தான்!
(கதவுகள் திறக்கும்)