அரசியல்
அலசல்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 33 - எரிந்தது மூர் மார்க்கெட்... எழுந்தது அண்ணா நூலகம்!

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

கைதிகளுக்கு எழுத, படிக்கக் கற்றுக்கொடுக்கவும், பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் மேற்படிப்பைத் தொடரவும் வேலூர் மத்தியச் சிறையில் முதன்முதலாக இரவுப் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது.

கலைஞர் முதல்வரான பிறகு சிறையில் நடந்த சீர்திருத்தங்களைச் சொல்லியிருந்தேன். அந்த வகையில் சிறைவாசிகளுக்குக் கிடைத்த சலுகைகளும் ஏராளம்.

‘ஏ’, ‘பி’ வகுப்பு கைதிகளைப்போல ‘சி’ வகுப்பு கைதிகளும் கடிதத் தொடர்புகொள்ளவும், வெளியி லிருந்து வருபவர்களை நேரில் பார்க்கவும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் சொந்தச் செலவில் சோப்பு, எண்ணெய், பேஸ்ட், பிரஷ், பவுடர் ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். இதனால் கைதிகளிடையே இருந்த ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்பட்டன. பெண் கைதிகளின் குழந்தைகளைப் பராமரிப்பதற்காக வேலூரில் குழந்தைகள் காப்பகம் கட்டப்பட்டது.

கோடையில் வெம்மையைத் தணித்துக்கொள்வதற்காகப் பனைமட்டை விசிறிகள் வழங்கப் பட்டன. ஓய்வு நேரங்களில் கேரம், செஸ் விளையாட அனுமதிக்கப் பட்டனர். அது கைதிகளுக்கு மன வடிகாலாக அமைந்தது; மன உளைச்சலைக் குறைத்தது. அரசு செலவில் 100 கைதிகளுக்கு ஒரு பத்திரிகை வீதம் தினமணி, சுதேசமித்திரன், நவமணி ஆகிய பத்திரிகைகள் வழங்கப்பட்டன. தவிர, சிறைக் கண்காணிப்பாளரால் அனுமதிக்கப்பட்ட செய்திப் பத்திரிகைகள் மற்றும் வார, மாத, இதழ்கள் ‘ஏ’, ‘பி’ வகுப்பு கைதிகளுக்கு வழங்கப்பட்டன.

கைதிகள் அரசு செலவிலேயே அரசுத் தேர்வுகளுக்குச் சென்றார்கள். குற்ற வழக்குகளில் கைதாகும் சிறார்கள் தங்கவைக்கப்படும் ‘பார்ஸ்டல்’ பள்ளிக்கூடத்தில் பள்ளி இறுதி வகுப்பு தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது. `சிறைச்சாலைகளில் குற்றம் செய்யும் கைதிகளுக்கு விலங்கிடுவது மனிதத்தன்மையற்றது’ என்று கருதப்பட்டு அது ரத்து செய்யப்பட்டது.

இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, கைதிகளின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது. 2,784 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். பல்வேறு வகைகளிலும் 11,488 கைதிகள் பலனடைந்தனர். காந்தி நூற்றாண்டு விழாவையொட்டியும் கைதிகளின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது. 2,682 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 9,561 கைதிகள் பலனடைந்தனர்.

1968, நவம்பர் 12-க்கு முன்னர் மரண தண்டனை பெற்றவர்களுக்கு, மத்திய அரசின் ஒப்புதலுடன் அந்தத் தண்டனை நீக்கப்பட்டு, வாழ்நாள் தண்டனை அளிக்கப்பட்டது. இதனால் 111 கைதிகள் தூக்கு மரத்தில் ஏற்றப்படுவதிலிருந்து தப்பினர். `111 தூக்கு தண்டனைக் கைதிகளா...’ என்று பலருக்கும் கேள்வி எழலாம். ஆனால், உண்மை அதுதான். கோவை மத்தியச் சிறையில் நான் பணியில் சேர்ந்தபோது அங்கிருந்த தூக்கு தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கை மட்டும் 16. அந்தக் காலத்தில் மரண தண்டனை விதிப்பது சாதாரணமாக இருந்தது. மனித உரிமைக்காகப் போராடுவோர் அப்போது அதிகம் இல்லை.

ஜெயில்... மதில்... திகில்! - 33 - எரிந்தது மூர் மார்க்கெட்... 
எழுந்தது அண்ணா நூலகம்!

அண்ணாவின் 61-வது பிறந்தாளை முன்னிட்டு 1969, செப்டம்பர் 15 அன்று கலைஞர் ஆட்சியில் ஓர் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ஆயுள் தண்டனைக் கைதிகளில் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். அதேசமயம், ‘பரோலில் சென்று குறிப்பிட்ட நாளில் சிறைக்குத் திரும்பாத ஆயுள் தண்டனைக் கைதிகள் இந்தச் சலுகை பெறத் தகுதியற்றவர்கள்’ என்றும் அந்த அரசாணையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விதிமுறையால் 15 ஆண்டுகளாகச் சிறையில் அடைபட்டிருந்த பலரும் விடுதலையாக முடியவில்லை. இதை நான் கலைஞரின் கவனத்துக்குக் கொண்டுசென்றேன். உடனடியாக மற்றோர் அரசாணையைப் பிறப்பித்து, அவர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

தஞ்சாவூரில், 114 ஏக்கரில் திறந்தவெளிச் சிறைச்சாலை அமைக்கப்பட்டது. அங்கு கைதிகள் கிணறு வெட்டுதல், நிலம் திருத்துதல், உழுதல், பயிரிடுதல் ஆகிய பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மத்தியச் சிறையில் தொழுநோய்க் கைதிகளுக்கு சி.எம்.சி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சிகிச்சையளித்தார்கள். அதனால், அனைத்துச் சிறைச்சாலைகளிலும் உள்ள தொழுநோய்க் கைதிகளை வேலூர் மத்தியச் சிறைச்சாலைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டு, அவர்களுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜெயில்... மதில்... திகில்! - 33 - எரிந்தது மூர் மார்க்கெட்... 
எழுந்தது அண்ணா நூலகம்!
கைதிகளுக்கு எழுத, படிக்கக் கற்றுக்கொடுக்கவும், பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் மேற்படிப்பைத் தொடரவும் வேலூர் மத்தியச் சிறையில் முதன்முதலாக இரவுப் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது.

படித்த கைதிகளை சிறையில் ஆசிரியர்களாக்கப்பட்டார்கள். மாலை வகுப்புகள் நடத்தப்பட்டன. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தேர்வுகள் நடத்தப்பட்டன.

முன்னாள் சிறைவாசிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்பதற்காக, ‘சிறைத்தண்டனை அனுபவித்து, விடுதலையடைந்த முன்னாள் குற்றவாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடாது’ என்றிருந்த தடை அகற்றப் பட்டது. ‘எந்தச் சூழ்நிலையில் குற்றம் செய்தார்கள் என்ற உண்மையை ஆராய்ந்து, அதன்படி தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கலாம்’ என்று உத்தரவிடப் பட்டது.

அக்பர் - பீர்பால் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது...

பீர்பாலின் அறிவுக்கூர்மையை மந்திரிகளுக்கு உணர்த்தும் பொருட்டு, மன்னர் அக்பர் தன் மந்திரிகளைப் பார்த்து, ‘‘நேற்று இரவு எனது கனவில் ஒருவன் காலால் என்னை எட்டி உதைத்தான்; கையால் தாக்கினான்; என் முகத்தில் காரி உமிழ்ந்தான். அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?’’ என்று கேட்டார். அதற்கு மந்திரிகள் பலரும், ‘‘பேரரசரான உங்களைத் தாக்கியவனின் கைகளையும் கால்களையும் வெட்டி அவனைக் கொல்ல வேண்டும்’’ என்றார்கள்.

அதே கேள்வியை பீர்பாலிடம் கேட்டார் அக்பர். ‘‘அரசே! உங்களை உதைத்த கால்களுக்கு தங்கக்கொலுசைப் பூட்டுங்கள்; அடித்த கைகளுக்கு வைர வளையல்களை அணிவியுங்கள்; காரி உமிழ்ந்த அந்த வாய்க்கு அன்பு முத்தங்களைக் கொடுங்கள்!’’ என்றார் பீர்பால்.

சபையே ஸ்தம்பித்து நின்றது. பிறகு பீர்பாலே புன்முறுவலுடன், ‘‘அரசே, உங்கள் குழந்தையைத் தவிர வேறு யாரால் இதையெல்லாம் செய்ய முடியும்?’’ என்று கேட்க... மன்னரின் முகம் மலர்ந்தது. பீர்பாலின் அறிவுக்கூர்மையை வியந்த அக்பர், அவரைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கினார்.

அப்படித்தான், கலைஞர் தன்னைத் துன்புறுத்திய சிறைக்காவலர்களுக்கும் நல்லது செய்தார். காவல்துறையில் காவலர்களின் ஊதியத்துக்கு இணையாக சிறைக் காவலர்களுக்கும் ஊதியம் உயர்த்தப்பட்டது. போலீஸாருக்கு வழங்கப்பட்ட சலுகை விலை உணவுப் பொருள்களை சிறைக் காவலர்களுக்கும் வழங்க 1990-ம் ஆண்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. போலீஸாருக்கு வழங்கப்படும் கிரேடு 1 பதவி உயர்வு, காக்கி டெரிகாட்டன் உடை, கூடுதல் நேரப் பணிக்கான ஊதியம், இரவு உணவுப்படி ஆகியவற்றையும் வழங்க உத்தரவிடப்பட்டது.

சிறைக்காவலர்களுக்கு புதிய குடியிருப்புக் கட்டிக் கொடுக்கப்பட்டது. இஸ்மாயில் கமிஷன் பரிந்துரைகளின்படி அனைத்துச் சிறைகளும் 212 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்டன. சிறைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்பட்டது. 177 கோடி ருபாய் செலவில் அதிநவீன புழல் சிறை கட்டப்பட்டது.

இவற்றையும் தாண்டி கலைஞர் சிறையில் இருந்ததால் தமிழகத்துக்குக் கிடைத்த மற்றொரு நன்மை ஆசியாவின் அதிநவீன அண்ணா நூலகம்.

ஒருமுறை கலைஞர் சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவருக்கு மாடியில் அறை கொடுக்கப்பட்டிருந்தது. அப்போது ஒரு நாள் மூர் மார்க்கெட் தீப்பிடித்து எரிந்தது. மாடியிலிருந்து அதைப் பார்த்தவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார்.

அப்போது வேறெங்கும் கிடைக்காத அரிய வகைப் பொருள்கள் மூர் மார்க்கெட்டில் கிடைக்கும். பழைமையான அரிய நூல்களும் அவற்றில் அடக்கம். பழைமையான புத்தகங்களின் கருவூலமாகவே அன்று திகழ்ந்தது மூர் மார்க்கெட். அவையும் எரிந்து சாம்பலாகின. இதை கவனித்தவர், அப்போதே என்னிடம் `மிகப்பெரிய நூலகம் ஒன்றை உருவாக்க வேண்டும்’ என்று கூறினார். அன்று அவருக்குள் விழுந்த விதைதான் `அண்ணா நூலகம்’ என்னும் ஆலமரம். அறிவைத் தேடும் பலருக்கும் அண்ணா நூலகமே அட்சய பாத்திரம்.

கலைஞரைப் பற்றிப் பேசும்போது அவரின் மகன் ஸ்டாலினும் நினைவுக்கு வருகிறார்.

ஸ்டாலினுக்கு முழுக்கைச் சட்டை போடும் வழக்கம் இல்லை. ஆனால், இதே சென்னை மத்தியச் சிறையில் ஒரு நாள் முழுக்கைச் சட்டை போட்டுக்கொண்டு தன் தாயையும் தந்தையையும் சந்திக்கச் சென்றார் ஸ்டாலின்.

(கதவுகள் திறக்கும்)