மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 34 - ஸ்டாலினின் மிசா நினைவுகள்!

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

‘‘தொண்டர்கள் எல்லோரும் மட்டன் சாப்பிட ஆசைப்படுகிறார்கள். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’'

1993-ம் ஆண்டில் சென்னை மத்தியச் சிறையில் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்தபோதுதான் மு.க.ஸ்டாலினை முதலில் சந்தித்தேன்.

ஸ்டாலின்... அந்தப் பெயரின் மீது எனக்கு பெரும் ஈர்ப்புண்டு. லெனினுக்குப் பின்பு கம்யூனிசக் கொள்கைகளை உலகெங்கும் கொண்டுசென்ற உழைப்பாளி. ரஷ்யாவை வல்லரசு நாடாகப் பிரகடனப்படுத் தியவர். இரண்டாம் உலகப்போரின் இணையற்ற ஹீரோ. ஜெர்மனியையும் ஜப்பானையும் ஓட ஓட விரட்டியவர். 1953-ம் ஆண்டில் ரஷ்ய ஸ்டாலின் மறைந்தார். அந்த ஆண்டில் பிறந்த தன் மகனுக்கு, ரஷ்ய ஸ்டாலினின் நினைவாகவே அப்பெயரைச் சூட்டினார் கலைஞர்.

தி.மு.க நடத்திய போராட்டத்தில் கைதான ஏராளமான பேர் சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். அவர்களில் ஒருவரான ‘துறைமுகம் தொகுதி’ பலராமன், ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி அளவில், என் அலுவலகத்துக்கு வந்தார். ‘போராட்டத்தில் கைதாகி உள்ளே இருக்கும் தோழர்கள், உண்ணாவிரதம் நடத்தப்போவதாக சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். இதுதொடர்பாக தளபதி உங்களைப் பார்க்க விருப்பப்படுகிறார்’ என்றார். உடனே வரச்சொன்னேன்.

அப்போது நான் கூடுதல் கண்காணிப்பாளர்தான். சிறைக் கண்காணிப்பாளர் இல்லாததால், தண்டனைக் குறைப்பு, விடுதலை, பரோல் ஜாமீன் உள்ளிட்ட எல்லா விஷயங் களையும் பார்க்க வேண்டிய பொறுப்பிலிருந்தேன். உணவு விஷயங்களுக்கும் நானே பொறுப்பு. அதற்காகத்தான் அன்று என்னைப் பார்க்க வந்தார் ஸ்டாலின். கனிவுள்ள அவருடைய கண்களும், கலைஞரின் குரலை இரவல் வாங்கியது போன்றிருந்த கணீர்க் குரலும் அவரை கவனிக்க வைத்தன.

அவரிடம் சிறையின் நடைமுறைகளை விளக்கிவிட்டு, ‘‘நீங்கள் தனியாக இருக்க விரும்பினால் வேறு தனி இடம் ஒதுக்கித் தருகிறேன்’’ என்றேன். அதற்கு அவர், ‘‘வேண்டாம்... தொண்டர்களுடன் இருக்கவே விரும்புகிறேன். ஜெயிலில்தானே எந்த ஏற்றத்தாழ்வுகளும் இல்லை. இந்த மாதிரி நேரங்களில்தான் அவர்களிடம் பேசி, மகிழ முடியும்’’ என்று மறுத்துவிட்டார்.

அரசியல் கைதிகளுக்கு வழங்கப்படும் ‘ஏ’ கிளாஸ் சலுகைகள் என்னென்ன என்று விளக்கம் கேட்டார். நான் விளக்கினேன்...

ஜெயில்... மதில்... திகில்! - 34 - ஸ்டாலினின் மிசா நினைவுகள்!

‘‘உங்களை மற்ற கைதிகளிடமிருந்து பிரித்து, தனியாக வைக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறை ஒதுக்கப்பட வேண்டும். ஒவ்வோர் அறைக்கும் கட்டில், மெத்தை, மேஜை, நாற்காலி ஆகியவை கொடுக்கப்படும். இயற்கை உபாதைகளைக் கழிக்க வழக்கமாக கைதிகளுக்கு வழங்கப்படும் மண்சட்டிக்குப் பதிலாக, தற்காலிகமாக பயன்படுத்தக்கூடிய கழிப்பறை சாதனங்கள் (commode with pan and chamber pot) கொடுக்கப்படும். நீங்கள் விரும்பினால், உங்கள் அறையில் இடமிருந்தால் உங்களுக்குத் தேவையான ஃபர்னிச்சர், கொசுவலைகள், துணிமணிகள், சமையல் பாத்திரங்கள், சமையல் சாமான்கள், பிஸ்கட், பழங்கள், சோப்பு, எண்ணெய், டூத்பேஸ்ட், பிரஷ், துவைக்கும் சோப்பு, உங்களுக்குப் பிடித்த அரசால் அனுமதிக்கப்பட்ட பத்திரிகைகளை உங்கள் செலவில் வாங்கிக்கொள்ளலாம். உணவைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கான ஒதுக்கீடு 230 கிராம் அரிசியும், 170 கிராம் கோதுமையும். அசைவம் சாப்பிடுவோருக்கு வாரத்தில் மூன்று நாள்களுக்கு 115 கிராம் மட்டனும், சைவம் சாப்பிடுவோருக்குப் பாலும், நெய்யும், தயிரும் வழங்கப்படும். ஒரு நாளைக்கு 230 கிராம் காய்கறிகள் கட்டாயம் தரப்படும். காலையில் டீ அல்லது காபி தருவோம்’’ என்றேன்.

அத்தனையையும் விளக்கிவிட்டு, ‘‘இதெல்லாம் நீங்கள் 10 அல்லது 20 பேராக வந்தால் கொடுப்போம். இப்படி ஆயிரக்கணக்கில் வந்தால் முடியாது. சிறையில் இருப்பதைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் (Subject to the availability) சிறை விதி’’ என்பதையும் சொல்லிவிட்டேன். அப்போது ஸ்டாலினுடன் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 2,000 பேர் அந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

சிறை வழக்கப்படி, அரசியல் கைதிகளுக்கு வாரத்துக்கு மூன்று நாள்கள் இரவில் சப்பாத்தியுடன் மட்டனும் தரப்படும். என்னிடம் பேசிய ஸ்டாலின், ‘‘தொண்டர்கள் எல்லோரும் மட்டன் சாப்பிட ஆசைப்படுகிறார்கள். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’’ என்று கேட்டார். நான் அதிர்ச்சியாகி, ‘‘இரண்டாயிரம் பேருக்கு சப்பாத்தி, மட்டன் என்றால் பெரிய வேலை, அதற்குரிய உபகரணங்கள் பாத்திரங்கள் ஆகிய வசதிகள் ஏதும் இங்கு இல்லையே’’ என்றேன். மட்டனுக்கு பதிலாக ஆளுக்கு இரண்டு முட்டை கொடுக்க ஏற்பாடு செய்வதாகச் சொன்னேன்.

அவர் விடாப்பிடியாக, ‘‘இன்றிரவு சப்பாத்திக்கும் மட்டனுக்கும் ஏற்பாடு செய்வதாகத் தொண்டர்களிடம் சொல்லிவிட்டேன். இப்போது இல்லையென்றால் ஏமாந்துவிடுவார்கள். எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள்’’ என்றார். அந்தச் சூழலில் அவருடைய கோரிக்கையை நிராகரிக்க முடியவில்லை.

இரண்டு மூன்று இடங்களில் தற்காலிகச் சமையற்கூடங்கள் அமைக்கப்பட்டன. வேக வேகமாக 6,000 சப்பாத்திகளும், மட்டனும் தயார் செய்யப்பட்டன. ஆளுக்கு 115 கிராம் மட்டன் என எடை போடப்பட்டு வழங்கப்பட்டது. எடை போடும் இடத்தில் ஸ்டாலினே நின்றுகொண்டு எல்லோருக்கும் விநியோகம் செய்தார்.

தொண்டர்கள் சாப்பிட ஆரம்பித்த போது அவரைச் சாப்பிடச் சொன்னேன். அதற்கு அவர் ‘கடைசியில் சாப்பிட்டுக் கொள்கிறேன்’ என்று கூறிவிட்டார். கடைசி தொண்டனுக்குச் சப்பாத்தியும் மட்டனும் தரப்பட்டபோது நள்ளிரவு 1:30 மணி. அதற்குப் பிறகுதான் சாப்பிட்டார் ஸ்டாலின். அவருடைய பொறுமை, தொண்டர்கள் மேல் அவர் காண்பித்த அன்பைப் பற்றியே சிறையில் பேச்சாக இருந்தது.

ஜெயில்... மதில்... திகில்! - 34 - ஸ்டாலினின் மிசா நினைவுகள்!

மற்றொரு நாள் சமையற்கூடத்தில் உணவு தயாராவதை மேற்பார்வை செய்துகொண்டிருந்தேன். ஸ்டாலினும் உடனிருந்து, உணவு தயாராகத் தயாராக ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார். திடீரென என்னைப் பார்த்து, ‘‘Convict Warder-களுக்கு மற்ற கைதிகளை அடிக்கும் உரிமை இருக்கிறதா?’’ என்று ஒரு கேள்வியைக் கேட்டார். நான், ‘‘Convict Warder-களுக்கு மட்டுமல்ல. சிறையிலுள்ள எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் கைதிகளை அடிக்க யாருக்கும் உரிமை இல்லை’’ என்றேன்.

‘‘பிறகு ஏன் சார் நான் மிசா கைதியாக இருக்கும்போது ஒரு காரணமும் இல்லாமல் என்னை அடித்தார்கள்? நான் என்ன குற்றம் செய்தேன் என்று என்னை அப்படிப் போட்டு அடித்து நொறுக்கினார்கள். 1967 முதல் தி.மு.க நடத்திய அத்தனை போராட்டங்களிலும் கலந்துகொண்டேன். மக்கள் பிரச்னைகளுக்காகத்தானே நாங்கள் போராடினோம். போராட்டக்களத்தில் அடிபடுவதும் மிதிபடுவதும் சகஜமான ஒன்றுதான். ஆனால், சும்மா அறையில் படுத்திருந்த என்னை எதற்காக அடித் தார்கள்? அப்போது அடிபட்ட காயங்கள் உடலில் தழும்புகளாக நிலைத்துவிட்டாலும், அந்தக் காயங்களின் வலி மறைந்துவிட்டது. ஆனால், அந்த அடிபட்ட சம்பவத்தை நினைக்கும்போதெல்லாம் மனம் வலிக்கிறது. காவலர்களின் பூட்ஸ் சத்தம் கேட்டாலே இன்று யாரை அடிக்கப் போகிறார்களோ என்று குலையெல்லாம் நடுங்கும். அரசியலைவிட்டே என்னைத் துரத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர, என்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வேறென்ன காரணம் இருந்திருக்கக்கூடும்?’’ என்று அவர் என்னைப் பார்த்துக் கேட்டபோது, அவருடைய கண்கள் கலங்கியிருந்தன.

அதை அவர் அங்கேவைத்துச் சொன்னதற்கும் ஒரு காரணம் இருந்தது. அந்த சமையற்கூடத்தின் பின்புறமுள்ள தொகுதியில்தான் மிசா கைதியாக அவர் அடைக்கப் பட்டிருந்தார். அவர் கேட்ட கேள்விகள், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய தாயார் தயாளு அம்மாள் கேட்ட கேள்விகளை நினைவுபடுத்தின.

1976-ம் ஆண்டில் நடந்த மிசா கொடுமைகளுக்குப் பிறகு 13 ஆண்டுகள் அஞ்ஞாத வாசமிருந்த தி.மு.க, 1989-ம் ஆண்டில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அப்போது முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞரிடம், கடந்த 13 ஆண்டுகளில் பட்ட அவமானங்கள், சித்ரவதைகள், வழக்குகள், சிறைக் கொடுமைகளை நினைவூட்டிய பத்திரிகையாளர்கள், ‘‘இதற்குக் காரணமானவர்கள் பழிவாங்கப்படுவார்களா?’’ என்ற கேள்வியை விதவிதமாகக் கேட்டார்கள். அதற்கு கலைஞர், ‘‘ `மறப்போம், மன்னிப்போம்’ என்பதுதான் அண்ணாவின் கொள்கை. அதுவே இந்த அரசின் கொள்கையும்!’’ என்று பதிலளித்தார்.

ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்த சில நாள்களில் சிறைத்துறை டி.ஐ.ஜி தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர்தான் மிசா காலத்து சென்னை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர். என்னவாக இருந்தாலும் அவர் என் மேலதிகாரி என்பதால், அவருக்காகப் பரிந்துபேச கோபாலபுரம் சென்றேன். அவர் தரப்பு நியாயங்களை அன்றைய முதல்வர் கலைஞரிடம் விளக்கினேன். அனைத்தையும் அமைதியாகக் கேட்ட கலைஞர், என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்...

 ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை
ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை
‘‘மற்றவற்றை விட்டுவிடு... மிசா காலத்தில் கைதாகியிருந்த கழகத்தின் முன்னணி நிர்வாகிகளிடம் ‘தி.மு.க-வை விட்டு விலகுகிறேன்’ என்று கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியது இவர்தானே... அதற்கு என்ன பதில் சொல்கிறாய்?’’ என்று கேட்டார். நான் அமைதியாக இருந்தேன்.

அப்போது கலைஞருக்கு அருகிலிருந்த தயாளு அம்மாள், ‘‘நானும் இவரும் சென்னை மத்தியச் சிறைக்கு ஸ்டாலினைப் பார்க்கப் போனோம். கண்காணிப்பாளர் முன்னிலையில் தான் நேர்காணல் நடந்தது. அன்றைக்கு வழக்கத்துக்கு மாறாக என் மகன் முழுக்கைச் சட்டை அணிந்து எங்களைக் காண வந்தான். சிறைக்குள் பட்ட காயங்கள் வெளியே தெரியக் கூடாது என்பதற்காகவே முழுக்கைச் சட்டை அணிவித்துக் கூட்டி வந்திருந்தார்கள். ஆனால், தான் அடிபட்டதை எங்களிடம் சொல்லக்கூட முடியாத சூழ்நிலையில் எங்கள் மகன் இருந்தான்’’ என்று சொல்லும்போதே கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டார் தயாளு அம்மாள். நான் மேற்கொண்டு பேசாமல் வெளியேறினேன்.

அந்தத் தாயின் கண்ணீருக்கு இன்றுவரை யாரிடமும் பதில் இல்லை.

(கதவுகள் திறக்கும்)