மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 35 - வைகோவின் பொடா நாள்கள்!

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

அவருடைய பிடிவாதத்தையும் தன்மானத்தையும் பறைசாற்றிக்கொண்டிருந்தது அந்த மின்விசிறி.

வேலூர் மத்தியச் சிறை, சரித்திரப் புகழ் வாய்ந்தது. 153 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்து கிடக்கும் இந்தச் சிறை 1867-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. அங்கே 2,130 கைதிகளைப் பூட்டிவைக்கலாம்.

இங்குதான் தமிழக அரசியல் தலைவர்கள் காமராஜர், அண்ணாதுரை, ராஜாஜி, வி.வி.கிரி, ஆர்.வெங்கட்ராமன் மற்றும் திரிபுரா முன்னாள் முதல்வர் நிருபன் சக்கரவர்த்தி உள்ளிட்டவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.

1973-ம் ஆண்டில் முதல் தலைமைக் காவலராக வேலூர் சிறையில் நுழைந்த நான், மீண்டும் 30 வருடங்கள் கழித்து 2003-ம் ஆண்டில் அதே சிறையில் தலைமை அதிகாரியாக அதாவது, கண்காணிப் பாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டேன். அங்கேதான் வைகோவைச் சந்தித்தேன்.

2002, ஜூன் 29 அன்று மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக 2003-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதியன்று சென்னை விமான நிலையத்தில் வைத்து POTA-வில் (Prevention of Terrorist Act) கைதுசெய்யப்பட்ட வைகோ வேலூர் மத்தியச் சிறைக்குக் கொண்டு வரப்பட்டார். அவருடன் அவர் கட்சியினர் கணேசமூர்த்தி, இளவரசன், அழகு சுந்தரம், சிவந்தியப்பன், பூமிநாதன், கணேசன், பி.எஸ்.மணியம், நாகராஜன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு அதே மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

 ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை
ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள், கோவை தொழிலதிபர் விவேக் கொலை வழக்கில் தண்டனை பெற்றிருந்த ஜான் பாண்டியன், தூக்குத் தண்டனைக் கைதிகள், குண்டர் சட்டத்தில் கைதாகியிருந்த 300-க்கும் மேற்பட்டவர்கள்... எனப் பலருக்கும் மத்தியில் இவர்களும் அந்தச் சிறையில் இருந்தனர்.

சிறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றவுடன் சிறை முழுவதையும் சுற்றிப் பார்த்தேன். ‘ஏ’ கிளாஸ் தொகுதியைப் பார்வையிடும்போது, வைகோவையும் அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற எட்டுப் பேரையும் சந்தித்து நலம் விசாரித்தேன். வைகோவின் அறைக்கு வெளியே மின்விசிறி ஒன்று கிடந்தது. அருகிலிருந்த ஜெயிலரிடம், ‘இதை ஏன் அவருடைய அறையில் பொருத்தவில்லை’ என்று கேட்டேன். வைகோவே எனக்கு பதில் சொன்னார்...

‘‘நான் ‘ஏ’ கிளாஸ் சிறைவாசி. எனது அறையை நீங்கள் ஃபர்னிஷ் (Furnish) செய்துதர வேண்டும். நான் ‘மின்விசிறியை உடனே பொருத்துங்கள்’ என்று கேட்டேன். ஆனால், நீண்டநாள்களாக மின்விசிறி கொடுக்கப்படவே இல்லை. சில நாள்கள் கழித்து இந்த மின்விசிறியை இங்கு கொண்டு வந்தார்கள். அதற்குள் மின்விசிறி இல்லாமலேயே இருக்கப் பழகிக்கொண்டேன். கேட்டவுடன் கிடைக்காததால், இனிமேல் நான் இந்தச் சிறையைவிட்டுப் போகும்வரை மின்விசிறி உபயோகப்படுத்தப்போவதில்லை அதனாலேயே அந்த மின்விசிறி அங்கு கிடக்கிறது’’ என்றார்.

அவருடைய பிடிவாதத்தையும் தன்மானத்தையும் பறைசாற்றிக்கொண்டிருந்தது அந்த மின்விசிறி. எனக்கு சேரமான் கணைக்கால் இரும்பொறை என்ற அரசனைப் பற்றிய கதை நினைவுக்கு வந்தது. சேரமான் கணைக்கால் இரும்பொறை என்ற மன்னன், சோழன் செங்கணான் என்பவருடன் போரிட்டுத் தோற்றுப்போனார். சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் வாடிய அவருக்கு தாகம் ஏற்பட்டது. காவலுக்கு இருந்த வீரரிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டார். அவன் தண்ணீர் தருவதற்கு மிகவும் தாமதமானது. தான் ஒரு மன்னனாக இருந்தும் தண்ணீர் உடனே கொடுக்காத அந்த சிறைக்காவலனின் அலட்சியம் கண்டு மனம் நொந்தார். தன்மானத்தைவிட்டு அப்படி அந்தத் தண்ணீரைக் குடித்து உயிர் வாழ விருப்பமில்லாமல் உயிர் நீத்தார். இது வரலாறு. சிறையிலிருந்த 18 மாதங்களும் வைகோ அந்த மின்விசிறியைப் பயன்படுத்த மறுத்துவிட்டார். வைராக்கியமும் கோபமும்தான் வைகோ.

ஜெயில்... மதில்... திகில்
ஜெயில்... மதில்... திகில்

இவ்வளவு கோபமும் வைராக்கியமும் கொண்ட வைகோவுக்கு இன்னொரு முகமும் உண்டு. விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர் அவர். ஓய்வு நேரங்களில் சகாக்களுடன் உற்சாகமாக வாலிபால் விளையாடுவார். அதுபற்றியெல்லாம் பின்னர் சற்று விரிவாகச் சொல்கிறேன்.

பொடா வழக்குக்காக பூவிருந்தவல்லி நீதிமன்றத்துக்கும், பொதுச்சொத்துக்குச் சேதம் விளைவித்ததாக அரசால் தொடரப்பட்ட வழக்குக்காக மயிலாடுதுறை நீதிமன்றத்துக்கும் மாறி மாறிச் சென்றுகொண்டிருந்தார் வைகோ. வாரம் ஒரு முறை - சில வேளைகளில் தினமும்கூட - நீதிமன்றம் சென்றுவருவார். ஆனால், ‘உடல் அசதியாக உள்ளது’ என்று சொல்லி ஒரு வாய்தாகூட அவர் வாங்கியதில்லை.

வைகோவைப் பார்ப்பதற்காக வேலூர் சிறைக்கு இரு முறை வந்தார் கலைஞர். `தொல்காப்பிய நூல் வெளியீட்டு விழாவுக்கு ஒரு வாழ்த்துச் செய்தியை கலைஞருக்கு அனுப்ப வேண்டும்’ என வைகோ என்னிடம் கேட்டுக்கொண்டார். அதைப் படித்துப் பார்த்தேன். அதன் இலக்கியச் சுவைக்காக அதில் ஒரு நகல் எடுத்து வைத்திருந்தேன்.

‘‘நீங்கள் படைத்துள்ள இப்பூங்காவில் மலரும் பூக்கள் என்றுமே வாடாது; வண்ணமும் மாறாது. இப்பூக்களின் தேனலை மொண்டிடும் வண்டுகள் களிக்குமே தவிர மயங்கிச் சாய்ந்திடா. தமிழ் உணர்வு மங்கிவரும் வேளையில், தமிழ்ப் பகைவர் ஓங்காரக் கூச்சலிடும் இன்றைய காலகட்டத்தில், இத்தொல்காப்பியப் பூங்கா காலத்தின் இன்றியமையாத தேவையாக, தன்மானத் தமிழரின் படைக்கலனாக வாய்த்துள்ளது. காலத்தை வெல்லும் உயிர் காவியங்களைப் படைத்து, தமிழ் அன்னைக்கு நீங்கள் சூட்டிய மணியாரத்தில் இனியும் ஒரு ஒப்பிலா மணியே வைத்துள்ளீர்கள்!’’ என்று அதில் எழுதியிருந்தார்.

கலைஞர் அடுத்த முறை வைகோவைச் சிறையில் சந்தித்து, ‘தொல்காப்பியப் பூங்கா’ புத்தகத்தை அவருக்கு அளித்தார். கண்ணீரோடு பேசிய கலைஞர், ‘‘நீ எழுதிய வாழ்த்து மடலைப் படித்தேன்; சுவைத்தேன். இந்த வெஞ்சிறையில் இருப்பது கண்டு மிகவும் துயரம் அடைந்தேன். ஏன் சிறைக்குள் இருந்து கஷ்டப்படுகிறாய். பிணையில் வரலாம் இல்லையா?’’ என்றார்.

ஜெயில்... மதில்... திகில்! - 35 - வைகோவின் பொடா நாள்கள்!

வைகோவிடமிருந்து உறுதியான எந்த பதிலும் வரவில்லை. இருவருடைய உள்ளத்திலும் ஓடும் பாச உணர்ச்சியை அவர்கள் இருவரின் கண்களிலுமே காண முடிந்தது. வேறு எந்த அரசியலும் அவர்கள் பேசவில்லை. அந்த நேர்காணல் என்னுடைய முன்னிலையில்தான் நடந்தது. எனக்கும் `தொல்காப்பியப் பூங்கா’ புத்தகம் ஒன்றைக் கையெழுத்திட்டுக் கொடுத்தார் கலைஞர்.

அங்கிருந்து கலைஞர் புறப்பட்டுச் சென்ற பிறகு, நீண்ட நேரமாகியும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார் வைகோ. அதே உணர்வுடன் கலைஞருடனான தன்னுடைய நினைவுகளை என்னிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார். அவர்களுக்கிடையிலான அந்த நெகிழ்ச்சியான சந்திப்பைப் பார்த்தபோது எனக்கும் இதயம் கனத்துப்போனது.

மீண்டும் ஒரு முறை பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் வைகோவின் வரவுக்காகக் காத்திருந்தார் கலைஞர். அப்போதும், ‘நீ கட்டாயம் பிணையில் வெளியில் வர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். பூந்தமல்லி நீதிமன்றத்திலிருந்து திரும்பிய வைகோ, கலைஞர் தனக்கு அன்புக் கட்டளையிட்டதைப் பற்றியும் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

இந்த முறை சந்திப்பில் வைகோவின் மனதை ஓரளவு நன்றாகவே கரைத்துவிட்டார் கலைஞர் என்பது புரிந்தது. ஏனெனில், அந்தச் சந்திப்புக்குப் பிறகு பிணையில் செல்லும் மனநிலைக்கு வந்துவிட்டார் வைகோ. ஆனால், அதற்கும் முன்பே அவர் வெளியில் செல்வதற்கு வேறொரு வாய்ப்பு உருவானது. 2003, டிசம்பர் 15 அன்று வைகோ மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டார். மறுநாள் நாடாளுமன்றத்தில் பொடா சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் நடக்கவிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அதில் கலந்துகொள்ள பொடா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் வைகோ. அந்த மனு பொடா நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதை விசாரித்த நீதிபதி ஏ.குலசேகரன், நாடாளுமன்ற விவாதத்தில் வைகோ கலந்துகொள்ள அனுமதியளித்து, 2003, டிசம்பர் 15 அன்று தீர்ப்பு கொடுத்திருந்தார். ‘எப்படியும் தனக்கு அனுமதி கிடைத்துவிடும்’ என்ற நம்பிக்கையில் இருந்த வைகோ, நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக நீண்டதொரு உரையைத் தயார் செய்திருந்தார். அதற்காக ரொம்பவே மெனக்கெட்டிருந்தார். அதற்கேற்ப தீர்ப்பும் வந்துவிட்டதால் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார் வைகோ. தனக்கு நாடாளுமன்றம் செல்ல அனுமதி கிடைத்திருப்பதை சக சிறைவாசிகள் அனைவரிடமும் சொல்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அவரை உடனடியாக சென்னைக்கு அழைத்துவந்து, டிசம்பர் 16-ம் தேதி காலை டெல்லி செல்லும் விமானத்தில் நாடாளு மன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது உயர் நீதிமன்ற உத்தரவு. அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல வழிக்காவலும் பெறப்பட்டு விட்டது. டெல்லி செல்வதற்காக உடைகள் கொண்ட பெட்டியுடன், வைகோவை செல்லிலிருந்து வெளியே அழைத்து வந்து, அலுவலகத்தில் அமரவைத்திருந்தோம். அவரை வெளியில் அனுப்புவதற்கான ஆணைக்காகக் காத்திருந்தோம்.

(கதவுகள் திறக்கும்)