மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 36 - ஒரு தலைவன்... ஒரு கோடி கையெழுத்து!

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

வைகோவின் அரை நூற்றாண்டுக்கும் மேலான அரசியல் வாழ்வில் பொடா கைதியாக அவர் சிறையிலிருந்த ஒன்றரை ஆண்டுகள் முக்கியமானவை.

ஆணைக்காக நாங்கள் காத்திருந்தோம். எங்களைவிட அதீத ஆர்வத்தில் காத்திருந்தார் வைகோ. ஆனால், ஆணை வரவேயில்லை. அதற்கு பதிலாக ‘அவரை உடனே டெல்லிக்கு அனுப்ப வேண்டாம்; மறு ஆணை பெறும்வரை பொறுத்திருங்கள்’ என்ற உத்தரவு தலைமையிடத்திலிருந்து வந்தது.
 ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை
ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, அன்றிரவே நீதிபதியின் வீட்டுக்கே சென்று அவசரமாக மேல்முறையீடு செய்தது அரசு. விசாரணை முடிவில், நீதிபதி குலசேகரனின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. உடைந்துபோனார் வைகோ. ‘‘சார், நான் இந்தத் தீர்ப்பைச் சற்றும் எதிர்பார்க்க வில்லை. நான் கட்டாயம் டெல்லி செல்வேன் என்று நினைத்தேன். பொடா சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரே நாடாளுமன்றம் சென்று பொடா சட்டத்தை எதிர்த்து வாதிட்டார் என்பது வரலாறாகப் பதிந்திருக்கும். எனது வாதத்தால் நாடெங்கிலுமுள்ள பொடா கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்; அதற்கு நான் காரணமாக இருப்பேன் என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தேன். அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது’’ என்று சொல்லிவிட்டு செல்லுக்குள் சென்றுவிட்டார்.

வைகோவை வெளியில் கொண்டுவர வேண்டும் என்பதில் கலைஞர் உறுதியாக இருந்தார். அவரது விடுதலைக்காகக் கலைஞரின் முதல் கையெழுத்துடன் தமிழக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்துகள் வாங்கப்பட்டு, குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் வைகோ வேண்டுகோள் வைத்திருந்தால், கட்டாயம் பொடா வழக்கை வாபஸ் வாங்கியிருப்பார். ஆனால், கலைஞருக்கு சிரமம் தராமல் தானே அந்த வழக்கை வாதாடி வெற்றியும் பெற்றார் வைகோ.

ஜெயில்... மதில்... திகில்! - 36 - ஒரு தலைவன்... ஒரு கோடி கையெழுத்து!
வைகோவின் அரை நூற்றாண்டுக்கும் மேலான அரசியல் வாழ்வில் பொடா கைதியாக அவர் சிறையிலிருந்த ஒன்றரை ஆண்டுகள் முக்கியமானவை.

தவறு செய்பவர்கள் அந்தத் தவற்றை மீண்டும் செய்யாமலிருக்க அவர்களை பயமூட்டும்விதமாக வடிவமைக்கப்பட்டது சிறைச்சாலை. சிறைக்குப் போக யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால், கட்டுரைகள் மற்றும் மேடைகளில் அண்ணா அடிக்கடி மேற்கோள் காட்டும் ‘மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை...’ என்ற பாரதிதாசனின் வரிகளைப் போல, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையாகவே வைகோவுக்கு சிறைச்சாலை இருந்தது.

சிறைச்சாலையில் தரும் உணவையே உண்பார். எந்தச் சலுகையையும் எதிர்பார்க்க மாட்டார். காலை 6 மணிக்கெல்லாம் நடைப்பயிற்சியைத் தொடங்கிவிடுவார். அதற்குப் பிறகு வாழும் கலைப்பயிற்சி. யோகாவோ, விளையாட்டோ எதைச் செய்தாலும் அதில் உச்சம் தொடுவார். ராமாயணமோ, மகாபாரதமோ, பொன்னியின் செல்வனோ, விவிலியமோ, உலக வரலாறோ... எதை அவர் பேசினாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். தமிழகத்தில் அவருக்கு இணையான ஒரு பேச்சாளரை நான் கண்டதில்லை.

சிறைவாசிகள் மத்தியிலும் பேச்சரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், இலக்கியச் சொற்பொழிவு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, மற்றவர்களுக்கும் பேச்சுப்பயிற்சி கொடுப்பார். காலையில் செய்தித்தாள்களைப் படித்துவிட்டு, மாலையில் வழக்கறிஞர் வருவதற்குள் ‘சங்கொலி’யில் பிரசுரிப்பதற்கான அறிக்கையைத் தயார் செய்துவிடுவார். மாலை 4 மணியாகிவிட்டால் அவர் விளையாட்டுப்பிள்ளை. வாலிபால் விளையாட்டில் அதீத ஈடுபாடு கொண்டவர்; அருமையாக விளையாடுவார்.

இரவு முழுவதும் எதையாவது படித்துக் கொண்டோ, எழுதிக்கொண்டோ இருப்பார். அவரது அறையின் பக்கத்தில் வந்து அவரை கவனிப்பேன். நான் வந்து நிற்பது அவருக்குத் தெரியாது. வெப்பத்தின் காரணமாக வெற்றுடம்பில் தான் அமர்ந்திருப்பார். கொசுக்கள் கடிப்பதைக்கூட அறிய மாட்டார். எப்போது தூங்குவார் என்று தெரியாது. அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுவார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுவதற்கு வைகோ முக்கியக் காரணமாக இருந்தார். அவர்கள்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். சிறைக்குள் அவர்களை அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பார். அவர்களின் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் வாதாட இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மற்றும் மும்பையைச் சேர்ந்த பிரபல வழக்குரைஞர் சௌத்ரி ஆகியோரை ஏற்பாடு செய்திருந்தார்.

ஒரு மணி நேரம் வாதிட பல லட்சங்கள் ஊதியம் பெறும் பிரபல வழக்குரைஞர்கள், அந்த மூன்று பேரின் தூக்குக்கு எதிராக வாதிட்டனர். 30 வாய்தாக்களுக்கும் மேலாக தன் சொந்தச் செலவில் டெல்லி சென்று, வழக்குக்கு உண்டான அனைத்துச் செலவுகளையும் தானே ஏற்றுக் கொண்டு முடிவில் வெற்றியும் பெற்றார்.

வீரப்பனின் கூட்டாளிகள் மீசை மாதையன், சைமன் உள்ளிட்ட நான்கு பேரின் தூக்குத் தண்டனையிலிருந்தும் உச்ச நீதிமன்றத்தில் பிரபல வழக்குரைஞர் ராம் ஜெத்மலானியை வைத்து வாதாடி அவர்களையும் விடுவித்தார். தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்காக எதையும் செய்வார். அதேநேரத்தில் நியாயத்தை நிலைநாட்ட நண்பரையும்கூட பகைத்துக்கொள்ளத் தயங்க மாட்டார்.

ஜெயில்... மதில்... திகில்! - 36 - ஒரு தலைவன்... ஒரு கோடி கையெழுத்து!

ஒருநாள் மாலை என் அலுவலகம் வந்தார் வைகோ. விண்ணப்பம் ஒன்றைக் கொடுத்தார். காவிரிப் பிரச்னைக்காக, தானும் தன்னுடன் பொடா வழக்கில் கைதாகியுள்ள எட்டுப் பேரும் அடுத்த நாள் காலையிலிருந்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், தங்களுக்கு உணவு ஏதும் தேவையில்லை என்றும் கூறி அதற்கு அனுமதி கோரியிருந்தார்.

சிறையில் உண்ணாவிரதம் இருப்பது சிறை விதிகளின்படி குற்றம். எனவே, அதற்கு அனுமதிக்க முடியாது என்றேன். ‘‘மீறி உண்ணாவிரதம் இருந்தால் என்ன செய்வீர்கள்?’’ என்றார். ‘‘சிறைக் குற்றமாகக் கருதி (Prosecution under section 52 of Prison Act 1894 Central Act lX of 1894) தண்டனை வழங்கப்படும்’’ என்றேன்.

‘‘என்ன தண்டனை கொடுப்பீர்கள்?’’ என்று கேட்டார். ‘‘உங்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் அனைத்தும் பறிக்கப்படும். நேர்காணல் நிறுத்தப்படும். நீங்கள் யாரையும் சந்திக்க முடியாது. உங்கள் கடிதப் போக்குவரத்து தடை செய்யப்படும். உங்களுக்கு வழங்கப்படும் செய்தித்தாள்கள் நிறுத்தப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் தனிமைப்படுத்தப் படுவீர்கள். உண்ணாவிரதம் இருப்பதால் உங்கள் உடலுக்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் வலுக் கட்டாயமாக உணவு செலுத்தப்படும்’’ என்றேன்.

அனைத்தையும் கேட்டுக்கொண்ட வைகோ, ‘‘என்ன தண்டனை கொடுத்தாலும் காவிரிப் பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருப்பதென்று நான் முடிவு செய்துவிட்டேன்!’’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். சொன்னபடியே அடுத்த நாள் காலையில் உண்ணாவிரதத்தையும் தொடங்கிவிட்டார்.

வைகோ உண்ணாவிரதம் இருப்பதை அறிந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறைவாசிகள், தாங்களும் காவிரி பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறி அன்றைய தினம் உணவு உட்கொள்ள மறுத்தார்கள். அவ்வளவு பேரும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தால் சிறைக்குள் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கருதி, வைகோவிடம் சென்று உண்ணா விரதத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டேன்.

எனது வேண்டுகோளின் நியாயத்தை உணர்ந்த அவர் ஒரு நாள் மட்டும் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டு காலவரையற்ற உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிடுவதாகக் கூறினார். அதன்படி அனைத்துச் சிறைவாசிகளும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். இதைக் கேள்விப்பட்ட தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சிறைக் கைதிகளும் காவிரிப் பிரச்னைக்காக ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.

நான் சொன்னதற்காக மட்டுமல்ல... சிறைவாசிகள்மீது வைகோ கொண்டிருந்த அன்பும், அவர் அந்த முடிவை எடுப்பதற்கு முக்கியக் காரணம். மிகவும் ஏழ்மையான சிறைவாசிகளின் குடும்பத்தாருக்குப் பொருளுதவி செய்தார். படிப்புக்கு, மேற்படிப்புக்கு, மருத்துவச் செலவுக்கு உதவுவது, பரிந்துரைகள் செய்வது, அரசால் வழங்கப்படும் சில சலுகைகளைப் பெற்றுத்தருவது எனச் சிறைக்குள் இருந்தபடியே பல பணிகளைச் செய்துகொண்டேயிருந்தார்.

என்னைப் பலவிதங்களிலும் ஈர்த்த வைகோ, விடுதலையாகும் நாள் வந்தது. அன்று காலையில் எனக்கும் அவருக்கும் ஒரு சண்டை.

(கதவுகள் திறக்கும்)