மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 37 - ஒரே சிறை முதல் ஒரே அறை வரை!

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

சிறைக்கு வெளியே ஆர்ப்பரிக்கும் தொண்டர் கூட்டம், வைகோவைப் பிரிவதில் கவலையிலுள்ள சிறைவாசிகள்... என உணர்வுபூர்வமான சூழல் அங்கு நிலவியது.

‘சிறையிலிருந்து விடுதலையாகும் நாளில் என்னை வரவேற்க யாரும் வர வேண்டாம்’ என்று அறிக்கை விடுத்திருந்தார் வைகோ. ஆனாலும், தமிழகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக் கணக்கான தொண்டர்கள் அவரை வரவேற்க வேலூரில் குவிந்துவிட்டனர்.

அன்று காலையில் எனக்கும் அவருக்கும் ஒரு சிறு சண்டை. முதல் நாள் இரவிலிருந்தே தொண்டர்கள் சிறை முன் குவியத் தொடங்கிவிட்டனர். காலை 7:00 மணிக்கு அவரைச் சந்தித்த நான், ‘‘இன்று காலை 9:00–10:30 ராகு காலம். ஒன்றரை ஆண்டுகள் பல்வேறு துயரங்களை அனுபவித்து விடுதலையாகிறீர்கள். உங்களை வரவேற்க, பல லட்சம் தொண்டர்கள் காத்திருப்பார்கள். அதனால், ராகு காலம் தொடங்கும் முன் நல்ல நேரத்தில் வெளியே சென்று சிறப்பான எதிர்காலத்தைத் தமிழக மக்களுக்குக் கொடுங்கள்’’ என்றேன். அதற்கு அவர், ‘‘நான் பெரியார் பாசறையில் பயின்றவன். ராகு காலம் என்பதெல்லாம் மூட நம்பிக்கை. ராகு காலத்தில்தான் வெளியில் செல்லப்போகிறேன்’’ என்று ஆவேசப்பட்டார்.

 ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை
ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை

சிறைக்கு வெளியே ஆர்ப்பரிக்கும் தொண்டர் கூட்டம், வைகோவைப் பிரிவதில் கவலையிலுள்ள சிறைவாசிகள்... என உணர்வுபூர்வமான சூழல் அங்கு நிலவியது. ‘அவருடைய விடுதலையை விரும்பாத சிலரால் அவருடைய உயிருக்கு எந்த ஆபத்தும் நேரக் கூடாது’ என்ற பதைபதைப்பும் எனக்குள் இருந்தது. அதனால், பாதுகாப்பை பலப்படுத்தினேன். மற்ற சிறைவாசிகள் வைகோவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக நான் எடுத்த நடவடிக்கையைப் பற்றி அவரிடம் சிலர் ஏதோ சொல்லிவிட, கட்டியிருந்த லுங்கியுடன் என் அலுவலகத்துக்கு வந்த வைகோ, கடுமையாகப் பேசத் தொடங்கினார்.

நான் பொறுமையாக, ‘‘நான் எந்தச் சிறைவாசியையும் தடுக்கவில்லை. உங்கள் பாதுகாப்பை முன்னிட்டு சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, என்னிடம் கோபித்துக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை’’ என்று கூறினேன். ஆனால், என் பதிலை ஏற்காமல் கோபமாகச் சென்றுவிட்டார் வைகோ.

ஜெயில்... மதில்... திகில்! - 37 - ஒரே சிறை முதல் ஒரே அறை வரை!

மனம் கனத்துப்போனது. ஒன்றரை ஆண்டுக்காலம் நீடித்த நெஞ்சார்ந்த நட்பு, ஒரு சில வார்த்தைகளில் முடிந்துபோனது என்று நொந்துபோனேன். அவருடைய நலனுக்காகச் செய்ததை இப்படித் தவறாக எடுத்துக்கொண்டாரே என்றும் வருத்தம்.

காலை உணவே சாப்பிடாமல் என் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். ஒன்றரை ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள் மனக்கண்ணில் காட்சிகளாக ஓடின. இந்த நினைவுகளுடன் இருந்த நான், வைகோவை வழியனுப்பச் செல்லவில்லை. திடீரென என் அறைக்குள் நுழைந்தார் வைகோ. ‘‘எனக்குத் தவறான தகவல் கொடுத்துவிட்டார்கள். அதனால்தான் அப்படிப் பேசிவிட்டேன். தவறாக எடுத்துக்கொள்ளா தீர்கள்’’ என்று என் கையைப் பிடித்துக்கொண்டு அவர் பேசும்போதே இருவருக்கும் கண்கள் கலங்கிவிட்டன.

சிறையில் தொடங்கிய அந்த நட்பு, சிறைக்கு வெளியிலும், நான் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் தொடர்கிறது.

ஒரு நாள் திடீரென வைகோவிடமிருந்து தொலைபேசி அழைப்பு. ‘‘சார்! நாளைக் காலை கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியையும், எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தனையும் சந்திக்க திருவனந்தபுரம் செல்கிறேன். நியூட்ரினோ திட்டம் குறித்து அவர்களிடம் பேசப்போகிறேன். நீங்கள் வந்தால் மலையாளத்தில் மொழிபெயர்க்க வசதியாக இருக்கும். எனக்காக ஒரு நாள் ஒதுக்கி உடன் வர முடியுமா?’’ என்றார். நான் உடன் செல்ல சம்மதித்தேன்.

அடுத்த நாள் காலைப் பயணத்தில் ஒரு மாற்றம். கேரள முதல்வர் கோழிக்கோடுக்கு அவசர வேலையாகச் செல்வதால், கொச்சி விமான நிலையத்தில் வைகோவைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இடைப்பட்ட நேரத்தில் தங்குவதற்கு விமான நிலையம் அருகே ஒரு ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தனர். மதியம் இரண்டரை மணிக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா ஆகியோருடன் வி.ஐ.பி லாஞ்ச்சில் சந்திப்பு. பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு, நியூட்ரினோ பற்றி விளக்க ஆரம்பித்தார் வைகோ.

நியூட்ரினோ துகள்கள் பற்றியும், அது தொடர்பான ஆய்வுகள் பற்றியும் எளிமையாகவும் அதே நேரத்தில் ஆழமாகவும் விளக்கிய வைகோ, இதேபோன்ற ஆய்வகத்தை கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைக்க இருப்பது பற்றி தகவல் தெரிவித்தார்.

‘தேனி மாவட்டம், பொட்டிபுரம் அருகில், ஒரு கிலோமீட்டர் உயரம், ஒரு கிலோமீட்டர் அகலம், ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு மேற்குத் தொடர்ச்சி மலையைத் தேர்ந்தெடுத்து, அதைக் குடைந்து, உச்சியிலிருந்து 1,500 அடி ஆழத்தில் ஆய்வகம் அமைக்கப்போகிறார்கள்’ என்று கூறிய வைகோ, அங்குள்ள வனத்தின் தன்மையையும் அந்த வனம் 10 சிற்றாறுகளுக்குத் தாய்மடியாக இருப்பது பற்றிய சிறப்பையும் எடுத்துரைத்தார்.

‘‘அங்கிருந்து இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் கேரளாவின் எல்லை தொடங்குகிறது. இந்த ஆய்வகத்துக்காக பொட்டிபுரத்தின் மலை உச்சியிலிருந்து 1,500 அடி ஆழத்தில், 132 மீட்டர் நீளம், 26 மீட்டர் அகலம் 20 மீட்டர் உயரத்தில் குகை தோண்டி, 50,000 டன் எடையுள்ள ‘மேக்னடைஸ்டு கலோரிமீட்டர் டிடெக்டர்’ (Magnetised calorimeter Detector) ஒன்றை நிறுவ உள்ளார்கள். இந்த ஆய்வகத்தை அமைக்க தினம் 1,200 டன் ஜெலட்டின் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி, தொடர்ந்து 800 நாள்கள் வெடிக்கச் செய்வார்கள்.

நியூட்ரினோ ஆய்வில் வெளிப்படும் வெப்பத்தைத் தவிர்க்க பொட்டிபுரத்திலிருந்து 35 கிலோமீட்டர் குழாய் பதித்து சுருளி ஆற்றிலிருந்து நாள்தோறும் 16 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்போகிறார்கள். கேரளாவிலுள்ள இடுக்கி அணை 30 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது. 1,200 டன் வெடிமருந்து பயன்படுத்தி பாறைகளை உடைக்கும்போது நிச்சயமாக இடுக்கி அணைக்கும் சேதம் ஏற்படும்!’’ - இப்படி, அந்த ஆய்வகத்தால் ஏற்படப்போகும் சூழலியல் மற்றும் பொது பாதிப்புகளை அவர் விளக்கிய விதத்தை எப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கும்.

ஜெயில்... மதில்... திகில்! - 37 - ஒரே சிறை முதல் ஒரே அறை வரை!

இத்தனையையும் விளக்கிய வைகோ, ‘‘கேரள அரசு இந்தத் திட்டத்துக்கு இசைவு தெரிவிக்கக் கூடாது என்று உங்களைக் கேட்பதற்காகவே தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறேன்’’ என்றார். முதலமைச்சர் உம்மன் சாண்டி, ‘‘மக்களுக்குக் கேடு விளைவிக்கும் எந்தவொரு திட்டத்தையும் கேரள அரசு அனுமதிக்காது. இந்தத் திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தனும் எதிர்க்கிறார்” என்றார். திருவனந்தபுரம் சென்று அவரையும் சந்தித்து இதுபற்றிப் பேசப்போவதாகச் சொல்லி வைகோ விடைபெற்றார்.

விமான நிலையத்துக்கு வெளியே பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வைகோவைச் சூழ்ந்துகொண்டார்கள். நியூட்ரினோ திட்டத்தால் கேரளாவுக்கு வரவிருக்கும் அபாயத்தை விரிவாக விளக்கி, பேட்டியளித்தார் வைகோ. திருவனந்தபுரத்துக்கு உடனே செல்ல விமான வசதி இல்லாததால், கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தனது காரைக் கொடுத்து ‘‘காரிலேயே நீங்கள் திருவனந்தபுரம் சென்றுவிடுங்கள்’’ என்றார்.

அரச விருந்தாளியாக போலீஸ் பாதுகாப்புடன் நாங்கள் திருவனந்தபுரத்துக்குச் சென்றோம். அச்சுதானந்தனை இரவு 9 மணிக்குச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் தரப்பட்டிருந்தது. அதற்குள் ஒரு டி.வி சேனலைச் சேர்ந்த நிருபர்கள், ‘‘தமிழ்நாட்டிலிருந்து வருகிறோம். கால் மணி நேரத்தில் வந்துவிடுவோம்’’ என்று காத்திருக்கச் சொன்னார்கள். ஆனால், ஒரு மணி நேரம் தாமதமாக வந்தார்கள்.

பேட்டி முடித்து, திருவனந்தபுரத்திலுள்ள அச்சுதானந்தன் வீட்டுக்கு நாங்கள் போவதற்குள் பத்து மணிக்கு மேலாகிவிட்டது. அவர் தூங்கப்போய்விட்டார். எனவே, அவரைச் சந்திக்க முடியவில்லை. இரவு ஒரு ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு இரவு உணவை 12 மணிக்குச் சாப்பிட்டோம். அதிகாலை 5 மணிக்கு விமான நிலையம் செல்ல வேண்டும்.

‘‘மூன்று மணி நேரம்தான் தூங்கப்போகிறோம். அதற்கு இரண்டு தனி அறைகள் வேண்டுமா... உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் ஒரே அறையில் தங்கிக்கொள்ளலாம்’’ என்றார். நாங்கள் ஒரே அறையில் தங்கிக்கொண்டோம். பாட்டு கேட்டுக்கொண்டே தூங்குவது அவரது வழக்கம். அதிலும் எம்.ஜி.ஆர் பாடல்கள் என்றால் அவருக்கு வெகு இஷ்டம். அன்றும் அறையில் எம்.ஜி.ஆர் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது...

வைகோ இரண்டே நிமிடங்களில் தூங்கிவிட்டார். நான் அந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டே வைகோவைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அந்தப் பாடல்...

உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்...

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்...

மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்...

ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்.

(கதவுகள் திறக்கும்)