
ராமதாஸின் எளிமையும் மென்மையாகப் பேசும் தன்மையும் அவரைத் தனித்துக் காண்பித்தது. அப்போதெல்லாம் அவர் பெரிய தலைவர் இல்லை.
இன்றைக்கு தமிழக அரசியலில் பா.ம.க முக்கியமான கட்சி. வட மாவட்டங்களில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்து நிற்கிறது அந்தக் கட்சி. இந்த வெற்றிக்குக் காரணம், மருத்துவர் ராமதாஸ். அவருடனும் எனக்குச் சில சிறை அனுபவங்கள் உண்டு.
1980-களில் தமிழகத்தில் 108 சாதிச் சங்கங்கள் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தின. தங்கள் சாதியினருக்கு கல்வி, அரசுப் பதவிகள் வேண்டும் என்று நடந்த போராட்டங்கள் அவை. குறிப்பாக, வட மாவட்டங்களில் 1987, செப்டம்பர் 17-லிருந்து 23-ம் தேதி வரை வன்னியர் சங்கத்தால் நடத்தப்பட்ட தொடர் சாலை மறியல் போராட்டங்கள் தமிழக அரசியலை புரட்டிப்போட்டன.

கலவரங்களை அடக்க, துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டது. துணை ராணுவப் படையினர் மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகளால் 21 வன்னிய சமுதாய மக்கள் உயிரிழந்தனர். 20,000-க்கும் அதிகமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ராமதாஸ், வன்னிய அடிகளார், சுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ் ஆகியோர் கைதாகி, சிறைக்கு வந்தனர். `வெறும் சங்கங்களாகப் போராடுவதால் இனிப் பயனில்லை’ என்று ராமதாஸ் நினைத்தது அப்போதுதான்.
அன்று விழுந்த விதைதான் பல்வேறு சாதிச் சங்கங்களை ஒருங்கிணைத்து, 1989, ஜூலை 16-ம் தேதியன்று பாட்டாளி மக்கள் கட்சியாக முளைத்தது. 1987-ம் ஆண்டு போராட்டத்தில் கைதாகி, சென்னை மத்தியச் சிறையில் ராமதாஸ் அடைக்கப்பட்டார். அதுதான் அவரது முதல் சிறை அனுபவம்.
கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ‘நான் ஒரு டாக்டர்’ என்று ராமதாஸ் கூறியிருந்தால், அவருக்குச் சிறையில் உயர் வகுப்பு தரப்பட்டிருக்கும். அதேபோல ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்பிரமணியம், முதன்மைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர் என்பதால், அவருக்கும் முதல் வகுப்பு கொடுக்கப் பட்டிருக்கும். ஆனால், இருவரும் தொண்டர்களுடன் தொண்டர் களாகவே இருக்க விரும்பினார்கள்.
அவர்களிடம் நான், ‘‘நீங்கள் விரும்பினால் உங்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் அந்தஸ்து வழங்கப்படும். அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்’’ என்றேன். ‘‘எதுவும் தேவையில்லை... சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தொண்டர்களுக்கு என்ன உணவோ அதையே எங்களுக்கும் கொடுங்கள்’’ என்று இருவரும் ஒருமித்த குரலில் சொல்லிவிட்டார்கள்.
ராமதாஸின் எளிமையும் மென்மையாகப் பேசும் தன்மையும் அவரைத் தனித்துக் காண்பித்தது. அப்போதெல்லாம் அவர் பெரிய தலைவர் இல்லை. தினமும் வந்து என்னைச் சந்திக்கும் ராமதாஸ், தங்களுடைய தொண்டர்களுக்குத் தேவையானவற்றை மட்டும் என்னிடம் கேட்பார்.

அவர் சிறையில் இருந்தபோதுதான் கலைஞரும் வேறொரு போராட்டத்தில் கைதாகி அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஒரே சிறையில்தான் இருவரும் இருந்தனர். ஆனாலும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட தில்லை. அப்போது ராமதாஸ் சாதிச் சங்கத்தின் தலைவராக மட்டுமே அடையாளம் கொண்டிருந்ததும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
ஓர் அரசியல் கட்சி சார்பில் போராட்டம் நடத்துவதென்றால், அதற்குச் சில நாள்களுக்கு முன்னரே காவல்துறையிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும். பங்கேற்கும் தலைவர்கள், தோராயமாகக் கலந்துகொள்ளும் தொண்டர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும். அதற்கேற்ப பல முன்னேற்பாடுகளை காவல்துறை மேற்கொள்ளும். போராட்டங்களில் வெளியாட்கள் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவாத வகையில் காவல்துறையும் பார்த்துக்கொள்ளும்; சம்பந்தப்பட்ட கட்சியினரும் பார்த்துக் கொள்வார்கள். போராட்டங்களில் ஈடுபடும் குறுந்தலைவர்களால் புதிய முகங்களைச் சட்டென்று அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
அடிக்கடி போராட்டம் நடத்தும் அரசியல் கட்சியினர், இதில் தெளிவாக இருப்பார்கள். போராட்டங்களும் கட்டுக்கோப்பாக நடக்கும். போராட்டத்தில் கைதாகி, சிறைக்குள் பெரும் திரளாகத் தொண்டர்கள் அடைக்கப்பட்டாலும், அங்கேயும் அவர்கள் கட்டுக்கோப்பாக இருப்பார்கள். ஆனால், இது போன்ற முன் அனுபவம் ஏதுமின்றி, பெரும் போராட்டத்தை நடத்தியதன் விளைவுகளை வன்னியர் சங்கம் அனுபவித்தது.
1987-ம் ஆண்டில் முதன்முதலில் வன்னியர் சங்கங்களின் தலைவராக சிறைகண்ட ராமதாஸ் உள்ளிட்டவர்களுக்கு இந்த அமைப்புரீதியான கட்டமைப்பு, கட்டுப்பாடு ஏதுமில்லை. 1980-களில் வடக்கு மாவட்டங்களில் பஸ்களிலும், சைக்கிள்களிலும் கிராமம் கிராமமாகச் சென்று வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுத்தவர் ராமதாஸ். ஆனாலும், போராட்டத்தில் கைதாகி சிறைக்குள் வந்திருந்த வன்னிய இளைஞர்களில் பலருக்கு அப்போது ராமதாஸை அடையாளமே தெரியவில்லை.
ஒருநாள் சிறைக்குள் நடந்த ஒரு பிரச்னைக்காக, சிறைக்குள் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட முயற்சித்தனர். அவர்களிடம் பேசி நிலைமையைச் சுமுகமாக்கும்படி ராமதாஸிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் போராட்டக் காரர்கள் மத்தியில் பேசினார். ஆனால், அந்தக் கூட்டம் அவரது பேச்சுக்குச் செவிசாய்க்கவில்லை. அவர் பல முறை கூறியும் போராட்டக்காரர்களின் கூச்சல் ஓயவேயில்லை. சமூக விரோதிகள் பலரும் அந்தக் கூட்டத்தில் கலந்திருந்ததுதான் அதற்குக் காரணம்.
தன் பேச்சை யாரும் கேட்காததால் வெறுத்துப் போய், ‘‘நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். தொண்டர்கள் யார், சமூக விரோதிகள் யார் என்பதை அனுபவத்தின் மூலம் எங்களால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். அதன்படி நாங்கள் சமூக விரோதிகளைப் பிடித்து தனித்தொகுதியில் அடைத்துவிட்டோம்.
அன்று சிறையில் நடந்த பிரச்னைக்குக் காரணம், ஒரு குடிநோயாளி. வன்னியர் சங்கப் போராட்டத்தில் கைதுசெய்யப்பட்ட சமூக விரோதிகளில் ஒருவர். மதுவுக்கு அடிமையான அவருக்குச் சிறையில் மது கிடைக்கவில்லை என்பதால், எல்லோரிடமும் மிகவும் மோசமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். அந்தக் கட்சியின் தொண்டர்களே அவரை எங்களிடம் ஒப்படைத்து, அவரைப் பற்றிப் புகார்களை அடுக்கினர். அவருடைய மோசமான நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு அவரைத் தனியாகப் பிரித்துவைக்குமாறு எங்களிடம் கேட்டுக்கொண்டனர்.

அவரை தனி செல்லில் அடைத்தோம். மறுநாள் காலையில் செல்லைத் திறந்தபோது அவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. உடனடியாக அவரை நானே தூக்கிச் சென்று அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தேன். மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டார். `அவருடைய இறப்புக்குக் காரணம் சிறை அதிகாரிகள்தான்’ என்று சிலர் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்தனர். இது பற்றி சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்குப் புகார் அனுப்பப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் தகவல் அனுப்பப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் மேல் விசாரணைக்காகச் சிறைக்கு வந்தார். சிறைவாசிகளை விசாரித்தார். அப்போது ராமதாஸிடமும் விசாரணை நடத்தினார். அந்த அதிகாரியிடம் பேசிய ராமதாஸ், ‘‘என்னுடைய தொண்டர்களிடம் விசாரித்தேன். சிறையில் யாரும் அவரை அடிக்கவில்லை. அவர் மதுவுக்கு அடிமையானவர். மது கிடைக்காமல் மூர்க்கமாக நடந்துகொண்டார். தொண்டர்களின் வேண்டுகோளின்படி தான் அவர் தனி செல்லில் பிரித்து வைக்கப்பட்டார். இருந்தபோதிலும், அவரின் இறப்புக்குக் காரணம் எனக்குத் தெரிய வேண்டும்’’ என்றார்.
`அவருக்கு ஏற்கெனவே இதயக் கோளாறு இருந்தது’ என்பதை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் தெரிவித்தது. மாரடைப்பே இறப்புக்குக் காரணம் என்பதையும் உறுதிப்படுத்தியது. இறந்த நபர், தான் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்கு வந்தவர் என்றாலும், தான் அறிந்த உண்மையை விசாரணை அலுவலரிடம் சொன்ன ராமதாஸின் நேர்மை எல்லோரையும் வியக்கவைத்தது.
அன்றைக்கு வன்னிய இளைஞர் களுக்கே அடையாளம் தெரியாமல் இருந்த ராமதாஸ், இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அறிந்த தலைவராக உயர்ந்திருக்கிறார். இன்றைக்கு அவர் அடைந்திருக்கிற அசாத்தியமான உயரத்துக்கான அடித்தளம், அவருடைய ஓயாத உழைப்பு. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு பெற்று தந்ததற்கும், இன்று அந்த சமூகத்தினர் ஏராளமானோர் அரசின் உயர் பொறுப்புகளில் நிரம்பி இருப்பதற்கும் ராமதாஸ்தான் மிக முக்கியக் காரணம் என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. மது ஒழிப்பை பா.ம.க-வின் மிக முக்கியமான கொள்கையாக ராமதாஸ் வைத்திருப் பதற்கு அன்று சிறையில் நடந்த அந்த இறப்பும் ஒரு காரணமாய் இருந் திருக்கலாம்.
இப்படிச் சிறைக்கூடம் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் பலவிதமான அனுபவங்களைத் தந்திருக்கிறது. அப்படித்தான் ஒருநாள் நான் சிறைக்குள் நுழைந்தபோது ஒரு தலைவர் என்னை சிறைவாசிகள் புடைசூழ மாலை, மரியாதையுடன் வரவேற்றார்!
(கதவுகள் திறக்கும்)