மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 39 - கைதிகளின் பாராட்டு... குழந்தை பாடிய தாலாட்டு!

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

கல்வி கட்டாயமாக்கப் பட்டது. கண்டிப்பாகச் செய்தித்தாள்கள் வாசிக்க வேண்டும்; கடிதம் எழுதிப் பழக வேண்டும்.

2002-ம் ஆண்டு. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத சென்னை மத்தியச் சிறையிலிருந்து அமைதி தவழும் கடலூர் மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டேன். கேப்பர் மலை என்ற இடத்தில் அழகான, அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது கடலூர் மத்தியச் சிறை. மலைச்சாரலோடு மெல்லிய காற்று தழுவி வரும் சிறைச்சோலை அது. பரந்து விரிந்த பங்களா வீடு. அதற்குப் பின்னால் எழில் மிகுந்த ஏரி. அதிலிருந்து வரும் குளிர்க்காற்று என பரம சந்தோஷமாகப் பணியாற்றினேன். கடலூர் மத்தியச் சிறை, 1865-ம் ஆண்டு பிரிட்டிஷ் கமாண்டர் ஃபிரான்சிஸ் கேப்பர் என்பவரால் 177 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. ஆங்கிலேயே அரசால் கைது செய்யப்பட்ட மகாகவி பாரதியார், 1918, நவம்பர் 20-லிருந்து டிசம்பர் 14 வரை 25 நாள்கள் இந்தச் சிறையில் கைதியாக இருந்துள்ளார். அவர் அடைத்துவைக்கப்பட்ட அறை, அவரின் நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் அனைத்துச் சிறைகளிலுமுள்ள சிறைவாசிகளில் மனநலம் குன்றியவர்களை இங்குதான் அனுப்புவார்கள். தூய்மையான காற்றும், இதமான சீதோஷ்ண நிலையும் அவர்களின் சிகிச்சைக்கு உதவியாக இருப்பதே அதற்குக் காரணம். அதனால், அத்தகைய சிறைவாசிகள் தான் ஆரம்பகாலங்களில் இங்கு அடைக்கப்பட்டனர். பிற்பாடு... திருட்டுக் குற்றத்துக்காக அடிக்கடிச் சிறைப்படுவோர், சிறைக்குள் தொடர்ந்து தாதாயிசம் செய்வோரை அடைக்கும் சிறையாக அடுத்தடுத்து இது மாற்றப்பட்டது.

 ஜி.ராமச்சந்திரன் - ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை
ஜி.ராமச்சந்திரன் - ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை

கடலூர் மத்தியச் சிறை கண்காணிப் பாளராக நான் பொறுப்பேற்றபோது அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் இருந் தார்கள். தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் அடங்காமல் ஆட்டம் போடும் தாதா கைதிகளும் கடலூர் சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தார்கள். அவர்கள் யாருக்கும் அடங்க மாட்டார்கள்; மூர்க்கமாக இருப்பார்கள். அடக்கு முறையைப் பிரயோகித்து அவர்களைத் திருத்த முடியாது.

அதனால், `அன்பால் அவர்களின் உள்ளங்களை வெல்லலாம்’ என்ற முடிவுக்கு வந்தேன். சோதனை முறையில் சிறையின் சில நடைமுறைகளை மாற்றியமைத்தேன். சிறைக்குள் எக்காரணம் கொண்டும் கைதிகளிடம் அடக்கு முறையைப் பிரயோகிக்கக் கூடாது. கைதிகளுக்குள் நடக்கும் பிரச்னைகளை, அதிகாரிகள் முன்னிலையில் அவர்களுக்குள்ளாகவே பேசித் தீர்த்துக்கொள்ளும் வகையில் ‘சிறை பஞ்சாயத்து’ நடை முறையை ஏற்படுத்தினேன்.

கல்வி கட்டாயமாக்கப் பட்டது. கண்டிப்பாகச் செய்தித்தாள்கள் வாசிக்க வேண்டும்; கடிதம் எழுதிப் பழக வேண்டும். இப்படி எழுதப் படிக்கக் கற்றுக் கொண்ட கைதிகள் பலரும் முதன்முதலாக அவர்களாகவே தங்கள் குடும்பத்தினருக்கு கடிதங்கள் எழுதினார்கள். அந்தக் கடிதங்களை என்னிடம் காட்டியபோது முரட்டு முகங்களில் குழந்தையின் குதூகலம்.

1982-ம் ஆண்டில் கோவை மத்தியச் சிறையில் உதவி சிறை அலுவலராக பணியாற்றியபோது, மகரிஷி அவர்களின் ஆழ்நிலை தியானப் பயிற்சியைக் (Transcendental Meditation) கற்றுக்கொண்டேன். சென்னை, வேலூர் சிறைகளில் பணியாற்றியபோது அதைச் சிறைவாசிகளுக்குக் கற்றுத்தர வேண்டும் என்ற வேட்கையோடு இருந்தேன். வாய்ப்பே வரவில்லை. சென்னை மத்தியச் சிறையில் `விபாசனா’ தியானப் பயிற்சியும், வேலூர் மத்தியச் சிறையில் ரவிசங்கர் அவர்களின் `வாழும்கலை’ பயிற்சியும் கற்றுக்கொடுக்கப்பட்டுவந்தன.

ஜெயில்... மதில்... திகில்! - 39 - கைதிகளின் பாராட்டு... குழந்தை பாடிய தாலாட்டு!

கடலூர் சிறையில் கைதிகள் எண்ணிக்கை குறைவு. அவர்களுக்கு மகரிஷியின் ஆழ்நிலை தியானப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தேன். நமச்சிவாயம் என்பவரின் தலைமையில் ஒரு குழு கடலூர் சிறைக்கு வந்தது. அனைத்துக் கைதிகளுக்கும் அவரவர் மனநிலைக்கேற்ப மந்திரச்சொல் ஒன்று கொடுக்கப்பட்டு, தியானப் பயிற்சி வழங்கப்பட்டது.

காலை 6 மணிக்கு சிறையின் நடுவேயுள்ள டவரைச் சுற்றி அமர்ந்து, ஆயிரம் கைதிகளும் 20 நிமிடங்கள் தியானம் செய்வார்கள். நானும் அவர்களுடன் கலந்துகொள்வேன். அதன் பிறகு 10 நிமிடங்கள் யாராவது ஒரு கைதி நீதி போதனைகள் கூறும் சம்பவங்களையும், கதைகளையும் சொல்வார்கள். அடுத்த 10 நிமிடங்கள் கைதிகளின் குறைகள் கேட்கப்பட்டு அந்த இடத்திலேயே முடிந்தவரை தீர்வு காணப்படும். கடைசியில் 10 நிமிடங்கள் நான் பேசுவேன். அத்தனையும் நல்வழிப்படுத்தும் முயற்சிகள்தான். ஓராண்டு இப்படியே இனிதாகக் கழிந்தது.

சிறைக்குள் கூட்டுத் தியானப் பயிற்சி வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது. சிறைவாசிகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவது குறைந்தது. சண்டை சச்சரவுகள் அறவே இல்லை. சிறைச்சாலைக் குள்ளிருக்கும் இறுக்கம் குறைந்துவிட்டது. கைதிகள் ஒருவருடன் ஒருவர் அன்புடனும் நட்புடனும் பழகினார்கள். மன அழுத்தத்தில் இருந்த கைதிகள் அதிலிருந்து விடுதலை பெற்றதாக உணர்ந்தனர். ரத்த அழுத்தம், சர்க்கரை, ஆஸ்துமா போன்றவற்றால் அவதிப்படும் சிறைவாசிகளின் எண்ணிக்கையும் குறைந்தது. எனது பணி வாழ்க்கையில் மன நிறைவும் மகிழ்ச்சியும் தந்தது இந்த நாள்களே!

இந்தச் சிறைச்சாலையில்தான் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறனை முதன்முதலாகச் சந்தித்தேன். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு, அங்கு அவர் அடைக்கப்பட்டிருந்தார். பொதுவாக அவர் யாரிடமும் பேச மாட்டார். அமைதியாகவே இருப்பார். அதிகாரவர்க்கத்தைக் கண்டாலே அவருக்கு ஆகாது. அதுவும் காக்கி என்றால் ஆகவே ஆகாது.

ஜெயில்... மதில்... திகில்! - 39 - கைதிகளின் பாராட்டு... குழந்தை பாடிய தாலாட்டு!

நான் அவரைப் பார்க்கச் சென்றபோது என்னைத் தடுத்த சக அதிகாரிகள், ‘‘அவருக்கு காக்கி என்றாலே ஆகாது. அவரை நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டுமா?’’ என்று கேட்டார்கள். நான், “கட்டாயம் அவரைப் பார்த்தே ஆக வேண்டும்” என்றேன். காரணம், அவரைப் பற்றி நான் கேள்விப்பட்ட விஷயங்கள்.

அவர் அப்பழுக்கற்ற ஓர் அரசியல்வாதி. கருத்துகளை ஆணித்தரமாக எடுத்துரைப்பவர். எந்த அதிகாரத்துக்கும் கட்டுப்பட மாட்டார். ஈழத்தமிழர் நலனுக்காக எதிர்பார்ப்புகள் இல்லாமல் போராடுபவர். காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். 1977-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தார். அப்போது தி.மு.க கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அந்தச் சந்தர்ப்பத்தில் இந்திரா காந்தியைத் தாக்கும் முயற்சி நடந்தது. அப்போது, தான் தாக்குதலுக்கு ஆளாகி, இந்திரா காந்தியைக் காப்பாற்றினார் நெடுமாறன். அதனாலேயே நெடுமாறனை தன் அன்பு மகன் என்று அழைத்தார் இந்திரா. இவரது வீரத்தைப் பாராட்டி ‘மாவீரன் நெடுமாறன்’ என்று பெயர் சூட்டினார் காமராஜர். பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸைவிட்டு விலகி தமிழர் தேசிய இயக்கத்தைத் தொடங்கினார். (பின்னர், தமிழர் தேசிய முன்னணி என்று பெயர் மாற்றப்பட்டது.)

அவரைச் சந்தித்து, “சிறையில் உங்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளனவா?” என்று கேட்டேன். தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், புத்தகங்கள் படித்துக்கொண்டிருப்பதாகவும், புத்தகம் ஒன்றைத் தற்போது எழுதிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

அவர் சிறையில் இருந்தபோதுதான், 2000-ம் ஆண்டுக்கான ஜனாதிபதி பதக்கம் எனக்கு வழங்கப்பட்டது. சிறைத்துறைக்கு வழங்கப்பட்ட முதல் பதக்கம் அது. அதற்கு நான் தேர்வாகியிருந்தேன். சென்னையில், 2001-ம் ஆண்டு, அன்றைய முதல்வர் ஜெயலலிதா கைகளால் இந்த ஜனாதிபதி பதக்கத்தை வாங்கிக்கொண்டு, கடலூர் சிறைக்குத் திரும்பினேன். உள்ளே நுழைந்தால் ஆச்சர்யம்... வாயிலின் உட்புறம் ஆயிரம் கைதிகளுக்கும் அதிகமானோர் கூடியிருந்தார்கள். வாழ்த்துகளை முழங்கினார்கள்.

பழ.நெடுமாறன் தலைமையில் எனக்கு பாராட்டுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சிறைத்துறையில் ஜனாதிபதியின் முதல் பதக்கம் வாங்கியதற்காக சக அதிகாரிகள்கூட எனக்கு மனமார வாழ்த்துச் சொல்லாத நிலையில், நெடுமாறன் தலைமையில் எனக்குக் கைதிகளால் அன்போடு அளிக்கப்பட்ட பாராட்டு விழா மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஏற்புரையில் நான் பேசும்போது, ‘‘ `ஒரு தாய்க்கு தன் குழந்தைகள் கையால் அளாவப்பட்ட கூழ், அமிர்தத்தைக் காட்டிலும் இனியது’ என்று திருவள்ளுவர் கூறுவார். அதுபோல் இது சிறு கை அளாவிய கூழின் இன்பத்தைத் தருகிறது. சிறைவாசிகள் அளித்த பாராட்டும் மாலை மரியாதைகளும் விருது கிடைக்கும்போது இருந்த மகிழ்ச்சியைவிட பல மடங்கு மகிழ்ச்சியைத் தருகிறது’’ என்றேன்.

கடலூர் சிறை... என் பணி வாழ்வின் பொற்காலம். அந்தச் சிறைக்கு நான் மாற்றப்பட்டதற்குக் காரணம், ‘இளைய தளபதி’ விஜய். அவர் சிறையில் போட்ட பிரியாணிதான் எனக்குப் பெரிய ‘ஆணி’யாக மாறி என்னையும் கடலூர் சிறையையும் இணைத்தது!

(கதவுகள் திறக்கும்)