மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 40 - சென்னை மத்தியச் சிறையில் நடிகர் விஜய்!

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

எம்.ஜிஆரைப்போல புகழின் உச்சிக்கு அவர் வருவார் என்று நான் சொன்னது 2002, ஜனவரி 15-ம் தேதி அன்று.

அரசியலுக்கும் சிறைச்சாலைக்கும் மட்டுமல்ல; திரைத்துறைக்கும் சிறைத்துறைக்கும்கூட நிறையவே தொடர்புகள் இருக்கின்றன. அரசியல் வாதிகளைப்போல நடிகர்கள் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்கு வர மாட்டார்கள். அரசிடம் முறையாக அனுமதி பெற்று, சினிமா ஷூட்டிங்குக்காகவே பெரும்பாலும் வருவார்கள்.

‘ஜெயிலுக்குள்ள நாங்களெல்லாம் குத்தம் செஞ்சு வந்தோம்...

அட ஜெயிலரய்யா என்ன குத்தம் செஞ்சு உள்ள வந்தாரு...’

- ‘ராஜாதிராஜா’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கைதிகளுக்கிடையே காமெடியாகப் பாடும் பாடல் இது. கமல் நடித்த ‘விருமாண்டி’ படத்தில் சென்னை மத்தியச் சிறையில் நடந்த கலவரத்தை அடிப்படையாக வைத்து சில காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கும். அவர் நடித்த ‘மகாநதி’ படத்திலும் சிறைக்குள் நடக்கும் பல விஷயங்கள் தத்ரூபமாகக் காட்சியாக்கப்பட்டிருக்கும். துலுக்கானம் என்ற கேரக்டரை வைத்து ‘கன்விக்ட் வார்டர்’களின் ஆதிக்கங்களையும், அவர்களுக்கும் நேர்மையற்ற சிறைக்காவலர் களுக்குமான தொடர்புகளையும் உணர்ச்சி பூர்வமான காட்சிகளாக வடித்திருப்பார் படத்தின் இயக்குநர் சந்தான பாரதி.

 ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை
ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை

தமிழ் சினிமாக்களில் கதாநாயகனோ வில்லனோ... சிறையிலிருந்து வெளியே வருவதாகவோ அல்லது உள்ளே போவதாகவோ காட்சியிருந்தால், சென்னை மத்தியச் சிறை வாயில்தான் காண்பிக்கப்படும். சென்னை மத்தியச் சிறையின் உள்ளேயும் வெளியேயும் ரஜினி, கமல், சரத்குமார் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் நடித்த பல படங்களின் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. நான் அங்கே கூடுதல் கண்காணிப்பாளராக இருந்தபோதுதான் சரத்குமாரின் ‘ஐ லவ் இந்தியா’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

படப்பிடிப்புக்காக மட்டுமன்றி, சிறைவாசிகளை மகிழ்விப்பதற்காகச் சிறைக்குள் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பல நடிகர்கள் சிறைக்குள் வருவார்கள். சென்னை மத்தியச் சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கைதிகளும் மற்றும் பல்வேறு சென்சேஷனல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட சிறைவாசிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் மன அழுத்தத்துடன் இருப்பார்கள். அவர்களுக்காகப் பேச்சரங்கம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சிகள், நாடகம், சினிமா ஆகியவை சிறைக்குள் நடத்தப்படும். அவற்றில் யாராவது நடிகர்கள் பங்கேற்க வந்தால் சிறைவாசிகள் பெரிதும் மகிழ்ச்சி யடைவார்கள். அவர்களின் மன அழுத்தம் குறையவும் இந்த நட்சத்திரங்கள் உதவுவார்கள்.

ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களி லிருந்துதான் இத்தகைய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வார்கள். அதேபோல பண்டிகைக் காலங்களில் அந்தந்த மதத்தைச் சேர்ந்த வி.ஐ.பி-க்கள் அல்லது தன்னார்வ நிறுவனங்கள் சார்பிலும் சிறைவாசிகளுக்குச் சிறப்பு உணவு வழங்கப்படும். தீபாவளி, பக்ரீத், ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகை நாள்களில் எப்படியும் சிறைவாசிகளுக்குச் சிறப்பு உணவு கிடைத்துவிடும்.

ஜெயில்... மதில்... திகில்! - 40 - சென்னை மத்தியச் சிறையில் நடிகர் விஜய்!

இப்படித்தான் 2002-ம் ஆண்டில், `கிரீன் இண்டியா ஃபவுண்டேஷன்’ என்ற கிறிஸ்தவ தன்னார்வத் தொண்டு நிறுவனம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை மத்தியச் சிறைக் கைதிகளுக்கு பிரியாணி வழங்க முயற்சியெடுத்தது. அனைத்துச் சிறைவாசிகளுக்கும் மட்டன் பிரியாணி வழங்குவது என்பது மிகுந்த பொருட்செலவை ஏற்படுத்தும் விஷயம் என்பதால், இதற்காக நடிகர் விஜய்யை அவர்கள் அணுகி யிருக்கிறார்கள். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஆனால், புத்தாண்டு முடிந்து பல நாள்கள் கழித்து பொங்கல் அன்றுதான் பிரியாணி வழங்க அனுமதிக்கப்பட்டது. அற்புதமான சுவையுடன் கூடிய பிரியாணியை அனைத்துக் கைதிகளுக்கும் போதும் போதுமென்ற அளவுக்குப் பரிமாறி மகிழ்ந்தார் விஜய். சிறைவாசிகள் அவரைப் பார்க்க வேண்டும்; பேச்சைக் கேட்க வேண்டும்; அவர் கையாலேயே தங்களுக்கு பிரியாணி பரிமாறப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர். அதை ஏற்று அவரே பரிமாறினார்.

அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு சிறு கூட்டத்துக்குச் சிறைவாசிகள் ஏற்பாடு செய்தனர். சிறைவாசிகள் சார்பில் சிலர் நன்றி தெரிவித்துப் பேசினார்கள். விஜய் ஓரிரு வார்த்தைகள் அடக்கமாகப் பேசிவிட்டு அமர்ந்து விட்டார். அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விரிவாகப் பேசினார். கைதிகளுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கினார்.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஏற்கெனவே எனக்குப் பழக்கமானவர். கலைஞர் கதை வசனம் எழுதிய ‘நீதிக்கு தண்டனை’ படத்தை இயக்கியது அவர்தான். அந்த நேரத்தில் சென்னை மத்தியச் சிறையில் இருந்த கலைஞருடன் கதை டிஸ்கஷன் செய்வதற்காக அடிக்கடி அவர் சிறைக்கு வருவார். எனது அலுவலகத்தில்தான் இருவரும் கதை மற்றும் காட்சி அமைப்புகளைப் பற்றி மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள்.

விஜய்க்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் இதைக் குறிப்பிட்டுப் பேசிய நான், கைதிகளுக்கு விருந்து கொடுத்ததற்கான நன்றியைத் தெரிவித்தேன். அவர் இதுபோல பல காரியங்களை அப்போதே செய்துவருவது பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். அதையும் மனதில்கொண்டு, ‘‘விஜய் இது மாதிரி நிறைய நல்ல காரியங்களை விளம்பரமில்லாமல் செய்து வருகிறார். திரைத்துறையில் வேகமாக வளர்ந்து வரும் விஜய், எம்.ஜி.ஆரைப்போல புகழின் உச்சிக்குச் செல்வார்’’ என்று என் மனதில் பட்டதை அப்படியே பேசிவிட்டேன்.

அதோடாவது விட்டிருக்கலாம்... அதற்கும் ஒருபடி மேலே போய், ‘‘கலைஞருடன் நடத்தப்பட்ட திரைக்கதை டிஸ்கஷன் என் அலுவலகத்தில் நடந்ததால், அதற்கான வாடகையை சந்திரசேகர் சிறைக்குச் செலுத்தவில்லை. கைதிகளுக்கு பிரியாணி போட்டு அந்தக் கடனை மகன் செலுத்திவிட்டார்’’ என்று நகைச்சுவைக்காகக் குறிப்பிட்டேன்.

ஜெயில்... மதில்... திகில்! - 40 - சென்னை மத்தியச் சிறையில் நடிகர் விஜய்!

அடுத்த நாள் வெளிவந்த காலை நாளிதழ் ஒன்றின் முதல் பக்கத்தில் சிறைக் கைதிகளுக்கு விஜய் பிரியாணி வழங்குவதையும், அவர் அருகில் நான் இருப்பதையும் போட்டோவாகப் பிரசுரித்திருந்தனர். நான் பேசியதையும் சற்று விரிவாகவே வெளியிட்டிருந்தனர்.

எம்.ஜி.ஆருடன் விஜய்யை ஒப்பிட்டுப் பேசியதைத்தான் அவர்கள் தலைப்பில் குறிப்பிட்டிருந்தனர். அந்தப் பேச்சு, கோட்டையில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தியது. சிறைக்குள் பிரியாணி வழங்க அரசின் அனுமதி தரப்பட்டுள்ளதா என்று பார்க்கவும், அப்படி இல்லாவிடில் என்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் கோட்டையி லிருந்து என்னுடைய மேலதிகாரிகளுக்கு உத்தரவு பறந்தது.

‘கிரீன் இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பு, முறைப்படி அரசிடம் அனுமதி பெற்றே பிரியாணியை வழங்கியிருக்கிறது என்பது தெரிந்ததும், என்மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது. அதனால், என்னை கடலூர் சிறைக்கு உடனே மாற்றி ஆணை வந்தது. நான் கடலூர் மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டதற்கு இப்படித்தான் விஜய் காரணமாக இருந்தார்.

எம்.ஜிஆரைப்போல புகழின் உச்சிக்கு அவர் வருவார் என்று நான் சொன்னது 2002, ஜனவரி 15-ம் தேதி அன்று. மாற்றல் உத்தரவு வந்தது, ஜனவரி 17 அன்று.

இதை நான் பேசி இப்போது 18 ஆண்டுகள் கடந்துவிட்டன. இடைப்பட்ட காலத்தில் நடிகர் விஜய் அடைந்துள்ள உயரம் பிரமிக்கத்தக்கது. தான தர்மம் செய்வதில் மட்டுமன்றி, மாஸ் காட்டுவதிலும் எம்.ஜி.ஆரின் பாணியை அவர் கடைப்பிடிப்பதை உன்னிப்பாகக் கவனித்திருக்கிறேன்.

ரஜினியை எல்லோரும் அரசியலுக்கு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தபோது, கமல் அரசியலுக்கு வந்துவிட்டார். `எம்.ஜி.ஆர் பாணியில் விஜய்யும் அரசியலுக்கு வருவார்’ என்பது என் கணிப்பு. அதைத்தான் பட்டவர்த்தனமாகப் பேசி அன்றைக்கு மாட்டிக்கொண்டேன்.

விஜய் அரசியலுக்கு வருவாரா... காலம் பதில் சொல்லட்டும்!

(கதவுகள் திறக்கும்)