
பிரேமானந்தாமீது கோபம்கொண்ட ரவி, அவரிடம் சென்று நியாயம் கேட்டிருக்கிறார். அவரின் வக்கிரங்களை வெளியே சொல்லி விடுவதாக மிரட்டியிருக்கிறார்.
சிறையும் ஒரு வகையில் சமத்துவபுரம்தான் அல்லது சமரசம் உலாவும் இடம்தான்! நாட்டை ஆண்டவர்களும் இங்கே வந்திருக்கிறார்கள். ‘நானே ஆண்டவன்’ என்றவர்களும் இங்கே அடைபட்டிருக்கிறார்கள். சட்டத்துக்கும் நீதிக்கும் முன்னால் யாராலும் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது. அப்படி ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் கடலூர் மத்தியச் சிறைக்கு வந்தவர்தான் போலிச் சாமியார் பிரேமானந்தா. அவர் எப்படி, ஏன் சிறைக்கு வந்தார் என்பது பற்றி முதலில் பார்ப்போம்...
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய பிரேமானந்தா, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை என்ற இடத்தில் சீடர்களுடன் குடிபெயர்ந்தார். சீடர்களில் பெரும்பாலானோர் பெண்கள்தான். அங்கே ஆசிரமம் அமைத்து பிரசங்கம் செய்தார் பிரேமானந்தா. அதைக் கேட்பதற்கு ஜெர்மன், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான பெண் சீடர்கள் அங்கு வந்து தங்கினர்.

ஆதரவற்ற பெண்கள் பலருக்கு மட்டுமன்றி, ஆண்களுக்கும் ஆசிரமத்தில் அடைக்கலம் கொடுத்தார். அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழை மக்களின் குழந்தைகளுக்கு இலவசப் படிப்பு, இலவச உணவு கொடுத்து அவர்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றார். அவர்களுடைய வறுமையையும் இயலாமையையும் பயன்படுத்திக்கொண்டவர் பல்வேறு பாலியல் அத்துமீறல்களை அரங்கேற்றத் தொடங்கினார். சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் இதில் பாதிக்கப்பட்டார்கள். ஆசிரமத்தில் இளம்பெண்கள் சிலர் கர்ப்பம் தரித்தனர். பிரேமானந்தாவுக்கு, பெண் மருத்துவர் ஒருவரும் சீடராக இருந்தார். அவரை வைத்து ஆசிரமத்திலேயே மருத்துவமனையை உருவாக்கி, அந்த இளம்பெண்களின் கர்ப்பத்தைக் கலைத்தார்.
பிரேமானந்தாவின் ஆசிரமத்தில் ரவி என்ற இளைஞர் பணியாற்றினார். அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவர் காதலித்தார். அந்தப் பெண் ஒருநாள் சாமியாரின் பணிப்பெண்ணாக அனுப்பிவைக்கப்பட்டார். அவரையும் தனது இச்சைக்குப் பயன்படுத்திக்கொண்டார் பிரேமானந்தா. இதைத் தன் காதலனான ரவியிடம் கூறி, கதறியழுதார் அந்தப் பெண்.
பிரேமானந்தாமீது கோபம்கொண்ட ரவி, அவரிடம் சென்று நியாயம் கேட்டிருக்கிறார். அவரின் வக்கிரங்களை வெளியே சொல்லி விடுவதாக மிரட்டியிருக்கிறார். தெய்வப் பிறவியாக தன்னை நம்பிக்கொண்டிருக்கும் மக்களுக்குத் தனது சித்து விளையாட்டு தெரிந்தால் கொதிப்படைவார்கள் என்று எண்ணிய பிரேமானந்தா, தன் நம்பிக்கைக்குரிய சீடர்கள் உதவியுடன் ரவியைக் கொலை செய்து ஆசிரமத்திலேயே புதைத்துவிட்டார்.
இதன் பிறகு, 1994-ம் ஆண்டில் ஆசிரமத்திலிருந்து தப்பித்து வெளியே வந்த அருள்ஜோதி என்ற பெண், ‘என்னை சாமியார் பிரேமானந்தா பலாத்காரம் செய்துவிட்டார். இப்போது கர்ப்பமாக இருக்கிறேன்’ என்று போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பின்னர்தான் பதினாறு வயதுக்குக் கீழுள்ள பெண் குழந்தைகள் பிரேமானந்தாவால் பலாத்காரம் செய்யப்பட்ட விஷயமும், அதைத் தட்டிக்கேட்ட ரவி கொல்லப்பட்டு ஆசிரமத்திலேயே புதைக்கப்பட்ட விஷயமும் வெளியே வந்து, அதிர்ந்தது தமிழகம்.
கைது செய்யப்பட்ட பிரேமானந்தா, திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியாக அப்போது இருந்தவர் பானுமதி. அவர் முன் வழக்கு விசாரணை நடந்தது. இந்தியாவின் பிரபல வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி பிரேமானந்தா வின் சார்பாக வாதாடினார். சாட்சிகள் வலுவாக இருந்ததால், பிரேமானந்தாவின்மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டது.

‘இந்த வழக்கில் மிக முக்கியமான சாட்சியும், முதல் புகார்தாரருமான அருள்ஜோதியின் வயிற்றிலுள்ள கருவுக்கு பிரேமானந்தா தகப்பன் அல்ல’ என்று இங்கிலாந்து டி.என்.ஏ நிபுணர் வில்சன் வால் என்பவர் கொடுத்த டி.என்.ஏ ஆய்வறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நீதிமன்றம் அதை நிராகரித்தது. ஏற்கெனவே ஹைதராபாத் ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்ததில் அருள்ஜோதி வயிற்றிலுள்ள கருவுக்கு தகப்பன் பிரேமானந்தாதான் என்று ஊர்ஜிதப் படுத்தப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
ரவியைக் கொலை செய்த குற்றத்துக்காகவும், சிறுமிகள் உட்பட 13 இளம்பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காகவும் இரண்டு ஜென்ம தண்டனைகள் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் (Run consecutively) என்றும், 66 லட்சம் ரூபாய் அபராதத் தொகை செலுத்த வேண்டும் என்றும் புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதுகாக்கச் செலவிட வேண்டுமென்றும் சொல்லப்பட்டது.
இவற்றை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பிரேமானந்தா மேல்முறையீடு செய்தார். அந்த நீதிமன்றங்களும் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பையே உறுதி செய்தன. பல ஏழைப் பெண்களின் கண்ணீருக்கும் ரவியின் ஆன்மாவுக்கும் வெற்றி கிடைத்தது.
நீதி அரசர் பானுமதியின் தீர்ப்புக்கு மக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்தன. அதிகாரத்துக்கும் பணபலத்துக்கும் வளைந்து கொடுக்காத அந்தப் பெண் நீதிபதியின் துணிச்சலும் நேர்மையும் நீதிமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டன. அவர் ஒவ்வொரு சிறுமியிடமும் தனித்தனியாக அமர்ந்து உண்மையின் வேர்கள் வரை வழக்கை அலசினார். அவர் எழுதிய 500-க்கும் மேற்பட்ட பக்கங்களைக்கொண்ட அந்தத் தீர்ப்பு காலமெல்லாம் கல்வெட்டில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய நீதியின் பொக்கிஷம்.
1997, ஆகஸ்ட் 20-ம் தேதி பிரேமானந்தாவுக்கு இரண்டு ஜென்ம தண்டனையும், 66 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. `அபராதம் கட்டத் தவறினால் மேலும் 32 ஆண்டுகள், ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்’ என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டது. வேறு ஒரு வழக்குக்காக மேலும் ஒன்றரை வருட தண்டனையும் தரப்பட்டது. குற்றத்தின் கொடுமையைக் கருதி, `சிறையில் அளிக்கப்படும் எந்தத் தண்டனைக் குறைப்பும் அவருக்கு அளிக்கப்படக் கூடாது’ எனவும் உத்தரவிடப்பட்டது.

1994-ல் கைது செய்யப்பட்ட அவர் இரண்டு ஜென்ம தண்டனையை அனுபவித்தால், 2034-ல்தான் விடுதலை பெற முடியும். மற்ற தண்டனைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் ஆண்டுகள் இன்னும் கூடும். அவருக்கு பல்வேறு நோய்கள் இருந்ததால் தன்
59-வது வயதிலேயே 2011, பிப்ரவரி 21 அன்று சிறையிலேயே இறந்துபோனார்.
சிறையிலிருந்த காலங்களில் அவர் மகிழ்ச்சியாகவே இருந்தார். தியானம் செய்வார். சிறைவாசிகள் குடும்பங்களுக்கு பல உதவிகளைச் செய்தார். ‘‘நான் கடவுளின் அவதாரம். எனக்கு துக்கம், மகிழ்ச்சி, கோபம், குரோதம், ஏமாற்றம் என்று எந்த உணர்ச்சியும் இல்லை’’ என்பார். ‘‘என் உடலைத்தான் சிறையில் போட்டிருக்கிறார்கள். ஆன்மாவை அல்ல’’ என்று தத்துவம் பேசுவார். வெளிநாட்டிலிருந்து பல சீடர்கள் இவரைச் சிறைக்கும் தேடி வந்து வழிபடுவதும் போற்றுவதும் பார்க்க விநோதமாக இருக்கும்.
ஒருநாள் திடீரென அவரின் அறையைச் சோதனையிடச் சென்றேன். ‘‘நீ வயிற்றுக் குள்ளிருந்து லிங்கம் எடுப்பாயாமே... வெறும் கைகளிலிருந்து விபூதி கொடுப்பாயாமே?’’ என்று கேட்டேன். ‘‘அதெல்லாம் சித்து வேலை’’ என்பதை ஒப்புக்கொண்ட பிரேமானந்தா, ‘‘எனக்கு அமானுஷ்ய சக்தி எதுவும் கிடையாது. பக்தர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே, அந்தச் சித்துகளைக் கற்றுக்கொண்டேன்’’ என்றார்.
சிறையிலிருந்து பிரேமானந்தா சிதைக்குப் போனபோது அவருடைய சொத்தின் மதிப்பு சுமார் 300 கோடி ரூபாய்!
(கதவுகள் திறக்கும்)