மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 42 - சென்னைச் சிறையில் பிரபாகரனின் தளபதி!

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக, தளபதியாக எனது சுமைகளைத் தாங்கும் இலட்சியத் தோழனாக அவனை நேசித்தேன்.

‘‘நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக, தளபதியாக எனது சுமைகளைத் தாங்கும் இலட்சியத் தோழனாக அவனை நேசித்தேன். போர்க் களத்தில் வீரனாகவும், பொதுமக்களின் தோழனாகவும் எங்கும், எல்லோரிடமும் அவனது ஆளுமையான வீச்சு நிறைந்திருந்தது. கிட்டு ஒரு தனிமனித சரித்திரம். நீண்ட, ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு!’’

- விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் தன் தளபதியாக வலம்வந்த கிட்டுவைப் பற்றிச் சொன்ன வார்த்தைகள் இவை.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களில் முக்கியமானவர் கிட்டு. சிங்களர்களால் துரத்தப்பட்ட இலங்கைவாழ் தமிழர்களுக்கு யாழ்ப்பாணம் பகுதியில் அடைக்கலம் கொடுத்தவர். 1978-ம் ஆண்டு எல்.டி.டி.இ இயக்கத்தில் சேர்ந்து, யாழ்ப்பாணம் பகுதியின் பிராந்திய கமாண்டராகப் பொறுப்பேற்றார். கிட்டு பார்ப்பதற்கு எளிமையானவராகக் காணப்பட்டாலும், எல்லோரிடமும் மிகவும் கண்டிப்பாக இருப்பார். தனது படையில் சிறு ஒழுங்கீனத்தைக் கண்டாலும் கடுமையாக தண்டிப்பார்.

ஜெயில்... மதில்... திகில்! - 42 - சென்னைச் சிறையில் பிரபாகரனின் தளபதி!

போட்டி இயக்கமான டெலோ தலைவர் சிறீ சபாரத்தினத்தை 1986-ம் ஆண்டில் சுட்டுக்கொன்றது கிட்டுதான். அதற்கு அடுத்த ஆண்டிலேயே கிட்டு தாக்குதலுக்கு ஆளானார். அதில் தனது கால் ஒன்றை இழந்தார். அவருடன் பயணம் செய்த இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். அதன் பிறகு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு எல்.டி.டி.இ செய்தித் தொடர்பாளர் ஆனார் கிட்டு. இந்திய - இலங்கை ஒப்பந்தங்கள் சம்பந்தமாக உளவு அமைப்பான ‘ரா’வுடன் தொடர்பு வைத்திருந்தார். இவரால் பிரபாகரனைச் சந்திப் பதற்கு வவுனியாவுக்கு அனுப்பப் பட்ட ஜானி என்பவரை இந்திய அமைதிப்படை கொன்றது. அதனால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தை முறிந்துபோனது.

1988-ல் தமிழ்நாட்டிலுள்ள எல்.டி.டி.இ அலுவலகங்கள் மூடப் பட்டன. கிட்டுவுடன் அவருடைய காதலி சிந்தியா மற்றும் 154 வீரர்களும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப் பட்டனர். தங்களை பத்திரமான இடத்தில் தங்கவைப்பதாக அழைத்து வந்த போலீஸார், சிறையில் தள்ளிவிட்டதை எண்ணி அவர்கள் கோபமடைந்தனர். சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்தனர். சிந்தியா, பெண்கள் பகுதியில் அடைக்கப்பட்டார்.

‘கிட்டுவைவிட்டு எங்கும் பிரிய மாட்டேன்’ என்று சொல்லி, சிந்தியாவும் உண்ணாவிரதம் இருந்தார். தண்ணீர்கூடக் குடிக்கவில்லை. ‘ஆண்களுடன் பெண்களைப் பூட்டிவைக்க சட்டத்தில் இடமில்லை’ என்று எடுத்துச் சொல்லியும் புரிந்துகொள்ளவே இல்லை. தினமும் கிட்டுவைச் சந்திக்க அரை மணி நேரம் அனுமதிப்பதாக உறுதி அளித்த பிறகு அந்தப் பெண் சற்று சமாதானமானார்.

`சிறைக்குள் உண்ணாவிரதம் இருப்பது சிறைக்குற்றம்’ என்பதைக் கிட்டுவிடம் விளக்கினேன். ‘அனைத்துச் சலுகைகளும் ரத்தாகும். நேர்காணல்கூட அனுமதிக்கப் படாது. செய்தித்தாள்கள் தரப்படாது’ என்று சொன்னதும், தற்காலிகமாக உண்ணாவிரதத்தைக் கைவிட கிட்டு தரப்பினர் சம்மதித்தனர். மேலும், ‘எங்கள் மேல் போடப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், கடுமையான முடிவுகளை எடுப்போம்’ என்று அரசு மேலதிகாரிகளுக்கு எழுத்து மூலம் தெரிவித்தனர்.

ஜெயில்... மதில்... திகில்
ஜெயில்... மதில்... திகில்

நிலைமையின் விபரீதத்தைப் புரிந்து கொண்ட அரசு அவர்களை விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்தது. ஆனால், கிட்டுவும் அவர் சகாக்களும் இலங்கைக்குச் செல்ல மறுத்துவிட்டனர். மறுபக்கம் அவர்களை உடனே வெளியே அனுப்ப போலீஸ் அதிகாரிகள் நிர்பந்தித்தனர். “விடுதலை ஆணையைப் பெற்ற பிறகு, ஒரு நிமிடம்கூட உங்களைச் சிறைக்குள் வைத்திருக்க முடியாது” என்று கிட்டு தரப்பினரிடம் திட்டவட்டமாக எடுத்துக் கூறினேன். ‘இலங்கைக்குச் சென்றால் அமைதிப்படை எங்களைக் கொன்றுவிடும்’ என்று வாதாடினார் கிட்டு.

கிட்டு என்மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தார். அரசு ஆணையை நான் செயல்படுத்தாவிட்டால் என்மீது நடவடிக்கை பாயும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இறுதியில், ‘‘உங்களுக் காகவே சிறையைவிட்டுச் செல்கிறேன். போலீஸாரிடம் நாங்கள் பேசிக் கொள்கிறோம்’’ என்றார். அவருடைய தோழர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

அவர்களிடம் பேசிய கிட்டு, ‘‘நாம் போக மறுத்தால் காவலர்களை வைத்து நம்மை வெளியேற்றுவார்கள். தேவையில்லாத கைகலப்பு ஏற்படும். அதெல்லாம் வேண்டாம். வெளியே போய் பார்த்துக் கொள்ளலாம். டாய்லெட் போக வேண்டிய வர்கள் போய்விட்டு வந்துவிடுங்கள்’’ என்றார். அனைவரும் சம்மதித்தனர். அவர் டாய்லெட் போகச் சொன்னதன் காரணம் அப்போது எனக்குப் புரியவில்லை.

கிட்டுவும் அவருடன் வந்த 154 போராளிகளும் வழிக்காவலுக்கு வந்த போலீஸாரால் மீண்டும் சோதனை செய்யப்பட்டனர். வெளியே சென்ற போராளிகள் போலீஸ் வேனில் ஏற மறுத்து சிறை வாயிலின் முன்பு அமர்ந்து விட்டனர். மத்தியச் சிறைச்சாலை யிலிருந்து விமானநிலையம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் வழிநெடுக காவல் இருந்தனர். அவர்களை ஏற்றிச் செல்ல துணை ராணுவப்படை இருந்தது. விமானநிலையத்தில் தனி விமானமும் தயாராக இருந்தது.

போலீஸ் வாகனத்தில் அவர்கள் ஏற மறுக்கவே, ஒவ்வொருவரையும் கட்டாயப்படுத்தி குண்டுக்கட்டாகத் தூக்கி வண்டியில் ஏற்ற முடிவு செய்யப்பட்டது. 154 போராளிகளையும் ஆயுதம் தாங்கிய போலீஸ் படை சுற்றி வளைத்தது. நான் வெளியில் நின்று என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொருவரையும் தூக்குவதற்காக போலீஸார் நெருங்கி னார்கள். பரபரப்பு பற்றிக்கொண்டது.

அப்போதுதான் ஒரு கர்ஜனைக் குரல் ஒலித்தது. அது ரஹீமின் குரல். ரஹீம், கிட்டுவின் தளகர்த்தர். ‘டோன்ட் டச்’ என்ற அவரின் குரல் கேட்டதும், போராளிகள் கூட்டத்தில் இருந்த ஐந்தாறு பேர் ‘‘சயனைட் குப்பிகளைக் கடித்துவிடுவோம்’’ என்றபடி எழுந்து நின்றனர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத போலீஸ் படை சட்டெனப் பின்வாங்கியது.

போலீஸ் அதிகாரிகளைப் பார்த்து கிட்டு பேசினார்... ‘‘போலீஸார் அனைவரும் தள்ளிப்போங்கள். இப்போது நாங்கள் உங்களுடன் வர மாட்டோம். பொழுது விடியட்டும். பழ.நெடுமாறன், வைகோ, எங்களுடைய வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வரட்டும். அவர்கள் முன்னிலையில் எங்களை ஒப்படையுங்கள். ‘யாரிடம் ஒப்படைக்கப் போகிறீர்கள். எந்த இடத்துக்குக் கொண்டு செல்லப் போகிறீர்கள் என்று தெளிவாகப் பத்திரிகை நிருபர்களிடம் கூறுங்கள்’’ என்றார்.

இதற்கு அதிகாரிகளிடம் உடனடி பதில் ஏதுமில்லை. அரசுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு பதிலுக்காக விடிய விடிய காத்துக் கிடந்தனர். விடுதலைப்புலிகளின் விருப்பம்போல அவர்கள் குறிப்பிட்ட தலைவர்களும் பத்திரிகையாளர்களும் காலையில் வந்தார்கள். இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. ஒரு போலீஸ் அதிகாரி விடுதலைப்புலிகளுடன் இலங்கை வரை செல்ல முடிவானது.

விமான நிலையத்தில் இன்னொரு பிரச்னை. போராளிகள் அனைவரையும் கைகளைக் கட்டாமல் விமானத்தில் ஏற்ற விமானி மறுத்துவிட்டார். அதனால், அனைவரின் கைகளும் கட்டப்பட்டு, விமானத்தில் ஏற்றப்பட்டனர். இலங்கை பலாலியில் சர்வதேசப் பத்திரிகையாளர்கள் முன்பாக அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

இப்போது இங்கே இன்னொரு பிரச்னை. “சோதனை செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட விடுதலைப்புலிகளிடம் சயனைடு குப்பிகள் எப்படி வந்தன?” என்று சிறை அதிகாரிகள்மீது போலீஸார் குற்றம் சுமத்தினர். போராளிகளை ‘டாய்லெட் சென்று வாருங்கள்’ என்று கிட்டு கூறியதன் அர்த்தம் அப்போது புரிந்தது. இருப்பினும், ‘‘சயனைட் குப்பிகளைக் கடித்துவிடுவோம்’’ என்று சிறைக்கு வெளியே மிரட்டிய போராளிகளிடம் இருந்தது உண்மையான சயனைடு குப்பிகள்தானா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

சிறைக்குள் எல்.டி.டி.இ போராளிகளை அனுமதிக்கும் போது அவர்கள் அனைவரையும் சோதனை செய்துதான் அனுமதித்தேன். கிட்டு மாற்றுத்திறனாளி என்பதால் அவர் ஸ்டீலால் செய்யப்பட்ட ஊன்றுகோலை வைத்திருந்தார். அதைப் பரிசோதித்தபோது அதற்குள் ஆறு குப்பிகளில் சயனைடு இருந்தது. அவற்றைக் கைப்பற்றி என் பாதுகாப்பில் வைத்திருந்தேன். இதைப் பற்றிய தகவலையும் எனது புகார் புத்தகத்தில் பதிவுசெய்து அதன் நகலை அரசுக்கும் சிறைத்துறைத் தலைவருக்கும் அனுப்பியிருந்தேன். மற்ற போராளிகளிடம் சயனைடு குப்பிகள் கண்டறியப்பட வில்லை.

வெடிகுண்டுகளுக்கும் துப்பாக்கிக்கும் தப்பிய கிட்டுவை இறுதியில் வீழ்த்தியது சயனைடுதான்.

1993-ம் ஆண்டில் கிட்டுவுடன் சேர்ந்து பத்துப் பேர் தற்கொலை செய்துகொண்டதாக எல்.டி.டி.இ ரேடியோ கூறியது.

(கதவுகள் திறக்கும்)