
சிறை முழுவதும் என் கட்டுப்பாட்டில் இருக்கும். சிறை விதிகளுக்கு மாறாக எந்தவொரு கைதியும் நடந்துகொள்ள மாட்டார்கள். சிறையிலுள்ள அனைத்துக் காவலர்களுக்கும் என்னை நன்கு தெரியும்.
‘குற்றவாளிகள் சிறைக்குள் கொடுமைப்படுத்தப் படுகின்றனர்’ என்பது பொது எண்ணமாக இருக்கிறது. குற்றவாளிகள் ஆட்டம்போடும் சிறைகளும் உண்டு. 1984, ஜூலை... உதவிச் சிறை அலுவலராக இருந்த நான் பதவி உயர்வு பெற்று, துணைச் சிறை அலுவலராக வேலூர் மத்தியச் சிறையில் பொறுப்பேற்றுக்கொண்டேன்.
சிறைக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் இருந்தனர். சென்னையின் புழல் மத்தியச் சிறை அப்போது கட்டிமுடித்துத் திறக்கப்படவில்லை. சென்னை மத்தியச் சிறையில் போதுமான இடம் இல்லாத காரணத்தால், சென்னையில் தண்டனை பெறும் ரௌடிகள் பெரும்பாலும் வேலூர் சிறைக்குத்தான் அனுப்பப்படுவார்கள். அதனால், வேலூர் சிறையில் சென்னை தாதாக்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.
1982-ல் வருவாய்த்துறைக் கட்டுப்பாட்டி லிருந்த 109 கிளைச் சிறைகளை திடீரென சிறை நிர்வாகம் எடுத்துக்கொண்டது. எந்த முன்னேற்பாடும் இல்லாமல், காவலர்கள் புதிதாகச் சேர்க்கப்படாமல் இந்த மாற்றம் நடந்தது. அதனால், ஒவ்வொரு மத்தியச் சிறையிலிருந்தும் பாதிக்கும் மேற்பட்ட காவலர்கள், கிளைச் சிறைகளின் பாதுகாப்புப் பணிகளுக்காக அனுப்பப் பட்டனர். எனவே, மத்தியச் சிறைகளில் ஒழுங்கீனங்கள் தலைதூக்கின. ரௌடிகள் ராஜ்ஜியம் தொடங்கியது.
நூறு காவலர்கள் இருக்க வேண்டிய வேலூர் சிறையில் 40 காவலர்களே இருந்தனர். விடுமுறை, ஷிஃப்ட் மற்றும் வேறு பணிகளுக்கு நியமிக்கப்பட்டது போக சிறையில் 10 காவலர்கள் பணியில் இருந்தாலே அதிகம். 75 ஏக்கருக்கும் அதிகமாகப் பரந்துவிரிந்தது வேலூர் சிறை. கைதிகளை இரவு மட்டுமே பூட்டுவார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடந்தனர். யார் எங்கு வேண்டுமானாலும் போகலாம்... வரலாம்; யாரும் கேட்க முடியாது. மீறிக் கேட்டால், கைதிகளிடம் அடி வாங்க வேண்டியதுதான்.

காவலர்கள் எந்த ஆயுதத்தையும் சிறைக்குள் எடுத்துச் செல்ல முடியாது. ஒரு காவலர் தன் பணி நிமித்தமாக ஒரு லத்தி கையில் வைத்திருக்க வேண்டும். கைதிகள் அதற்கும் தடைபோட்டு விட்டார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், வேலூர் சிறையில் கைதிகளே காவலர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்க வில்லையென்றால் வேலை நிறுத்தம் செய்வார்கள். யாரும் சாப்பிட மாட்டார்கள்; இரவு லாக்கப் செல்ல மாட்டார்கள். அதிகாரிகள் அவர்களிடம் மன்னிப்பு கேட்ட பிறகே அமைதியாவார்கள்.
இப்படிப்பட்ட நிலையில்தான் அந்தச் சிறைக்கு துணைச் சிறை அலுவலராகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். சிறை அலுவலர் இல்லாத நேரங்களில் சிறை நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்வது; சிறைவாசிகளுக்கு உணவு சமைத்துக் கொடுப்பது; அதற்கான அரிசி, பருப்பு முதலிய பொருள்களைக் கொள்முதல் செய்வது; கைதிகளுக்குக் கொடுக்கப்படும் உணவு தரமானதாக இருக்கிறதா என்று ஆய்வு செய்வது உள்ளிட்டவை துணைச் சிறை அலுவலரின் பணி.
சிறையில் சேர்ந்த அன்று காலை 10 மணியளவில் கண்காணிப்பாளரைச் சந்தித்து, பணியில் சேரும் ஆணையைக் கொடுத்தேன். அவரும் அந்தச் சிறைக்குப் பொறுப்பேற்று 15 நாள்களே ஆகியிருந்தன. ‘‘இப்படியொரு ஒழுங்கீனமான சிறையை நான் பார்த்ததே இல்லை’’ என்றவர், சிறையை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவது என்று விவாதித்தார்.
அடுத்தபடியாக ஜெயிலரைச் சந்தித்தேன். அவர் நல்லபடியாக ஓய்வு பெறும் நாளை எதிர்நோக்கிக் காத்திருந்தார். ‘‘தம்பி, இங்கு நடக்கும் எதையும் கண்டுகொள்ளாதீர்கள். தட்டிக் கேட்டால் வம்புதான் வரும். நம் இருவருக்கும்தான் பிரச்னை’’ என்று கேட்டுக்கொண்டார்.
எனது அலுவலகம் என்பது பெரிய குடோன்போல் இருக்கும். அரிசி, கோதுமை உள்ளிட்டவை மூட்டைகளில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். ஒரு பகுதியில் உணவுப் பொருள்களைக் கைதிகள் சிலர் சுத்தம் செய்துகொண்டிருப்பார்கள். மற்றொரு பகுதியில் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருப்பார்கள். இவற்றுக்கு நடுவே எனக்கு டேபிள், நாற்காலி.
எனது அலுவலகம் சென்றவுடன் நான் கண்ட காட்சி இன்னும் என் கண்முன் நிற்கிறது. நான்கைந்து கைதிகள் என் டேபிள் மேல் உட்கார்ந்துகொண்டிருந்தனர். ஒருவன் நான் அமரும் நாற்காலியில் அமர்ந்திருந்தான். நான் வருவதை அங்கு பணியிலிருந்த காவலர் அவர்களுக்கு உணர்த்தியும், அவர்கள் எழவில்லை. எனக்கான நாற்காலியில் அமர்ந்திருந்தவன், அந்தக் கைதிகளின் தலைவன். பல கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவன். என்னைப் பார்த்ததும் நாற்காலியிலிருந்து எழாமலேயே, ‘‘வாங்க சார்... உட்காருங்கள்’’ என்றான். ‘‘ஐயாவுக்கு நாற்காலி கொண்டுவாருங்கள்’’ என்று மற்றவர்களிடம் சொன்னான்.
‘‘உங்களுக்கு இங்கு என்ன வேலை? எல்லோரும் வெளியே போங்கள்’’ என்று கட்டளையிட்டேன். அவர்கள், ‘‘சார்... மரியாதையாகப் பேசுங்கள். உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். உங்களைப் பார்த்தால் கைதிகள் நடுங்குவார்களாமே... அந்தக் காலமெல்லாம் இப்போது மாறிவிட்டது. நாங்கள் வைத்ததே சட்டம். வாயை மூடிக்கொண்டு பணியாற்ற முடிந்தால் இங்கு இருங்கள். இல்லையென்றால் ஏதாவது கலாட்டா செய்து உங்களை டிரான்ஸ்ஃபர் செய்துவிடுவோம்’’ என்று மிரட்டினார்கள்.

எனக்கு ஆத்திரமும் கோபமும் அதிகமானது. எங்கே அவர்களை அடித்துவிடுவேனோ என்ற நிலை வந்துவிட்டது. கோபத்தை அடக்கிக்கொண்டேன். மீண்டும் அவர்களை வெளியே செல்லக் கட்டளையிட்டேன். ‘‘உங்களை எச்சரிக்கத்தான் இங்கு காத்திருந்தோம். எச்சரித்துவிட்டோம். புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளுங்கள்’’ என்று கூறிவிட்டு முறைத்துக்கொண்டே சென்றுவிட்டனர்.
வேலூர் சிறையில் ஏற்கெனவே முதல் தலைமைக் காவலராகவும், உதவிச் சிறை அலுவலராகவும் பணிபுரிந்திருக்கிறேன். சிறை முழுவதும் என் கட்டுப்பாட்டில் இருக்கும். சிறை விதிகளுக்கு மாறாக எந்தவொரு கைதியும் நடந்துகொள்ள மாட்டார்கள். சிறையிலுள்ள அனைத்துக் காவலர்களுக்கும் என்னை நன்கு தெரியும். எனவே, நான் அங்கு மறுபடியும் மாற்றலாகி வந்தவுடன், ஏதாவது மாற்றம் நிகழலாம் என்ற ஏக்கத்தில் என்னைச் சந்திக்க வந்தனர். ஜெயிலில் நடக்கும் அத்தனை சட்டவிரோத காரியங்களையும் கூறினர். ‘‘நீங்கள்தான் இதற்கெல்லாம் முடிவுகட்ட வேண்டும்’’ என்றனர்.
அன்றைய தினம் மாலையில் கண்காணிப்பாளரிடம் நடந்தவற்றையெல்லாம் கூறினேன். ‘‘எது வேண்டுமானாலும் செய்துகொள். எனக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது’’ என்றார். அடுத்த நாள் வழக்கம்போல் அலுவலகம் சென்று பணியாற்றிக் கொண்டிருந்தேன். மதிய உணவு தயாரானதும், விநியோகிக்கத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. சமையற்கூடம் சென்ற ஒரு கைதிகள் கும்பல், ‘‘சாப்பாடு நாற்றம் அடிக்கிறது. சரியாக வேகவில்லை. எனவே, யாரும் சாப்பாடு வாங்கக் கூடாது’’ என்று மற்ற கைதிகளுக்குத் தடைபோட்டுவிட்டனர். சமையற்கூடத்துக்குச் சென்ற நான், ‘‘நேற்று சமையலுக்குக் கொடுத்த அதே அரிசிதான் இன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அரிசி மூட்டைகள் வாங்கப்பட்டு 20 நாள்களுக்கு மேலாகிறது. அனைத்து மூட்டைகளும் ஒரே தரத்திலானவைதான்’’ என்றேன்.
‘‘சாப்பாட்டை யாரும் தொட மாட்டார்கள் அத்தனையையும் கொட்டிவிட்டு, வேறு அரிசி வாங்கி வந்து சமைத்துக் கொடுங்கள்’’ என்றார்கள். “அவ்வாறெல்லாம் செய்ய முடியாது” என்றேன். மேலதிகாரிகள் சமையற்கூடத்துக்கு வந்து, சமைத்துவைத்த உணவைப் பரிசோதித்தனர். ‘‘சாப்பாடு நன்றாகத்தான் இருக்கிறது. சாப்பிடுங்கள்’’ என்று அவர்கள் சொல்லியும் கைதிகள் கேட்கவில்லை.
கைதிகளின் நோக்கம் என்னைப் பழிவாங்குவதுதான். அவர்களிடம் நான் மண்டியிட வேண்டும். என் தன்மானம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று அப்போதே தீர்மானித்தேன். கண்காணிப்பாளரும், ‘‘நிலைமையைத் தற்போது சமாளியுங்கள். பிறகு பேசிக்கொள்ளலாம்’’ என்று சொல்லிச் சென்றுவிட்டார். நான் மாற்றலாகி வந்தபோது எனக்கு டிரான்ஸ்ஃபர் பயணப்படியாக 1,500 ரூபாய் கொடுத்தனர். அதில் 1,000 ரூபாய்க்கு மூன்று மூட்டை அரிசி வாங்கி வந்து மீண்டும் சமைத்து, 3:00 மணிக்கெல்லாம் புதிய சாப்பாடு வழங்கப்பட்டது. எனக்குச் செலவு வைத்ததில் அவர்களுக்கு மகிழ்ச்சி. நான் பயந்துவிட்டதாகவே அவர்கள் கருதினர்.
மாலையில் சிறைச்சாலை மூடப்பட்டது. அனைத்துக் காவலர்களின் கூட்டம் கூட்டப்பட்டது. காவலர்கள் அனைவரும் கொந்தளித்துப் போயிருந்தனர். ‘‘கைதிகள் எங்களை `வாடா, போடா...’ என்று அழைப்பதையும், கெட்ட வார்த்தைகளால் திட்டுவதையும் இனியும் சகித்துக்கொள்ள முடியாது’’ என்றனர். கைதிகளின் கொட்டம் ஒடுக்கப்பட வேண்டும் என்பதில் காவலர்கள் உறுதியாக இருந்தனர். 40 காவலர்களை வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான பேரை எப்படி எதிர்கொள்வது?
அதற்கான வாய்ப்பும் விரைவிலேயே கிடைத்தது.
(கதவுகள் திறக்கும்)