
சென்னையின் சில பகுதிகளைச் சேர்ந்த ஒன்பது பெண்கள், அடுத்தடுத்து காணாமல் போனார்கள்
ஆட்டோ சங்கரின் முழுக்கதையும் தெரிந்தால், இன்னும் பல க்ரைம் த்ரில்லர் படங்கள் எடுக்கலாம். என் பணிக்காலத்தில் பார்த்த மகா அசுரன். இந்தத் தொடரின் மூன்றாவது அத்தியாயத்தில் ஆட்டோ சங்கர் தூக்குமேடைக்குச் சென்ற தினத்தன்று நடந்த நிகழ்வுகளை விவரித்திருந்தேன். இந்த அத்தியாயத்தில் சிறைச்சாலையிலிருந்து சங்கர் தப்பித்த நிகழ்வைச் சொல்கிறேன்.
இன்றைக்கு 50 வயதைக் கடந்தவர்களிடம் `ஆட்டோ சங்கர்’ என்று சொன்னால், ஒரு கணம் திடுக்கிடாமல் இருக்க மாட்டார்கள். 90-களில் தமிழில் வெளியான பல்வேறு திகில் படங்களுக்கு ஆட்டோ சங்கரின் வாழ்க்கைதான் மூலக்கரு. 1989, 90-ம் ஆண்டுகளில் தமிழகத்தையே தகிக்கவைத்த பெயர் அது. ஆரம்பத்தில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த சங்கர், விபசாரத்தையும் சாராயத்தையும் தன் தொழிலாக மாற்றிக்கொண்ட பிறகு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என பலரிடமும் நெருக்கமாகிவிட்டான். அவர்களுக்கு சகலமும் ‘சப்ளை’ செய்ததன் மூலமாக சென்னை ரௌடிகள் மத்தியில் சங்கர் ஏக பிரபலம்.

விபசாரத்துக்காகத் தன்னிடம் வந்த லலிதா என்ற பெண்ணை சங்கர் மிகவும் நேசித்த சூழழில், தன்னிடம் வேலை செய்யும் சுடலையுடன் லலிதா ஓடிப்போய்விட, வலைவீசித் தேடி இருவரையும் பிடித்துவிட்டான் சங்கர். குடிபோதையில் இருந்தவன் வெறி தீரும் வரை லலிதாவை அடிக்க, செத்தே போனாள். உடலைத் தன் வீட்டிலேயே குழிதோண்டிப் புதைத்துவிட்டான்.
கொலைக்கு சாட்சியான சுடலையையும் கொன்று எரித்து, சாம்பலைக் கடலில் கரைத்துவிட்டான். அந்தப் பெண்ணைத் தேடிவந்த சம்பத், மோகன், கோவிந்தராஜ், ரவி எனப் பலரையும் கொன்று புதைத்தான். அடுத்தடுத்து திருவான்மியூரில் ஆறு கொலைகள் நடக்கவே அதிர்ந்தது சென்னை. ஆட்டோ சங்கர், இத்தனை பேரைக் கொன்று புதைப்பதற்கு உதவியவர்கள் அவனுடைய தம்பி மோகனும், எல்டின் சிவாஜி என்பவனும்.
சென்னையின் சில பகுதிகளைச் சேர்ந்த ஒன்பது பெண்கள், அடுத்தடுத்து காணாமல் போனார்கள். அவர்களில் தப்பிவந்த ஒரு மாணவி, தன்னை ஒரு ஆட்டோ டிரைவர் கடத்தியதாக போலீஸில் கூற, சிக்கினான் ஆட்டோ சங்கர்.
1988, ஜூன் 27 அன்று ஆட்டோ சங்கர் சென்னை மத்தியச் சிறைக்குக் கொண்டுவரப் பட்டான். அப்போது சென்னை, மத்தியச் சிறையில் ஜெயிலராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன். செய்தித்தாள்களில் அவனைப் பற்றிய செய்திகளைப் பார்த்து பயங்கரமானவனாக இருப்பான் என்று கற்பனை செய்துகொண்டிருந்தேன். ஆனால், என் முன்பாக வத்தலும் தொத்தலுமான உருவத்தில் ஒருவன் வந்து நின்றான். மெலிந்த உடல், சுமாரான உயரம், மாநிறம், அப்பாவிபோல் தோற்றம்... சந்தேகத்தில் அவன் பெயரைக் கேட்க, அவனுடைய கால்கள் நடுங்கின. கொலையைப் பற்றிக் கேட்டதும் பேன்ட்டில் சிறுநீர் கழித்துவிட்டான். என் அறை அசுத்தமானது. `இவனா இத்தனை கொலைகளைச் செய்தான்?’ என்று எனக்குக் குழம்பியது. அவனைப் பற்றிய செய்திகள்தான், பல மாதங்களுக்குப் பத்திரிகைகளில் தவறாமல் இடம்பிடித்தன.

ஒரு பத்திரிகை நிருபர், சிறிய குற்றம் ஒன்றைச் செய்துவிட்டு விசாரணைக் கைதியாக சிறைக்குள் வந்து, அவனைப் பேட்டி எடுக்க முயன்றார். முடியவில்லை. சென்சேஷனல் குற்றவாளி என்பதால், கடுமையான பாதுகாப்பில் வைத்திருந்தோம். ஆனாலும், சிறைக்குள் அவனைப் பற்றி விசாரித்த செய்திகளைவைத்து, பேட்டியாகப் பத்திரிகைகளில் எழுதினார்.
இந்த நிலையில், நான் கோவை மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டேன். சில நாள்களிலேயே ஆட்டோ சங்கரும், அவனது கூட்டாளிகளும் சென்னை மத்தியச் சிறையிலிருந்து தப்பிய சம்பவம் நிகழ்ந்தது. `கொடூரமான கொலைகள், கொள்ளைகளை நிகழ்த்திய குற்றவாளி தப்பிவிட்டான்’ என்பது தமிழக மக்களிடம் கடும் விமர்சனத்தை உண்டாக்கியது. ஆடிப்போனது சிறைத்துறை.
அந்தக் கும்பலைப் பிடிக்க காவல்துறை அமைத்துள்ள குழுவைத் தவிர, சிறைத்துறை சார்பிலும் குழு அமைக்கப்பட்டது. அதற்கு நான் தலைவன். சென்னை மத்தியச் சிறையில் விசாரணையைத் தொடங்கினோம். பல கைதிகளை விசாரித்தோம். ஒரு விஷயம் பிடிபட்டது.
`ஈ.பி.ஆர்.எல்.எஃப்’ என்ற இலங்கைப் போராளிகள் அமைப்பின் தலைவர் பத்மநாபா, 1990, ஜூன் 16 அன்று சென்னையில் எல்.டி.டி.இ உறுப்பினர்கள் சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அது தொடர்பாக கைது செய்யப்பட்ட 154 ஈழப்போராளிகள் சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள், தங்களுக்கும் பத்மநாபா கொலைக்கும் தொடர்பில்லை என்று உண்ணாவிரதம் இருந்தனர்.
அவர்களில் 22 போராளிகளின் நிலை கவலைக்கிடமானது. மொத்த சிறைக்கும் பாதுகாவலராக இருந்த ஜெயிலர், அந்தப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு போராளிகளை மட்டும் கவனிக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தப்பிக்கத் திட்டம் தீட்டினான் ஆட்டோ சங்கர்.
அதேநேரத்தில் காங்கிரஸ் நடத்திய ஒரு போராட்டத்தில் ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களுடன் பல ஆயிரம் காங்கிரஸாரும் கைது செய்யப்பட்டு, அங்கு கொண்டுவரப்பட்டனர். வெறும் 10 ஏக்கர் பரப்பிலிருந்த அந்தச் சிறையில் பல ஆயிரம் பேரை அடைக்க வசதியில்லை. அதனால், ஆட்டோ சங்கர் அடைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வளாகம் காலி செய்யப்பட்டு மறியலில் கைதான பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டது.
சிறைக்கு மத்தியிலுள்ள ஒன்றாம் தொகுதியில் ஆட்டோ சங்கரும் அவனது கூட்டாளிகளும் அடைக்கப்பட்டனர். தனக்கு தூக்கு தண்டனை உறுதி என்று தெரிந்துவிட்டதால் எப்படியாவது தப்பிக்க வேண்டுமென்று முடிவு செய்த சங்கர், தன் நண்பர்களிடம் பேசி ஒரு திட்டத்தை வடிவமைத்தான்.
அவன் அடைக்கப்பட்ட தொகுதிக்கும், பூங்கா நகர் ரயில் நிலைய தண்டவாளத்துக்கு இடையே 15 அடி தூரம்தான். நடுவில் 20 அடி உயரச் சுவர். இரவு 10:30 மணிக்கு மேல் பூங்கா நகர் ரயில் பாதையில் ரயில் சேவை நிறுத்தப்படும். நடமாட்டம் அதிகம் இருக்காது. சுவரை ஒட்டி வெளியே தண்டவாளத்துக்கும் சுவருக்கும் இடையில் ஒரு பெரிய மரம். அந்த மரத்தின் ஒரு கிளை சிறைச்சாலையின் சுவரை நோக்கி நீண்டிருந்தது. மரத்தில் ஏறி, அந்தக் கிளையில் அமர்ந்து பார்த்தால் ஆட்டோ சங்கர் அடைக்கப்பட்ட செல் தெரியும்.
அந்தக் காலத்தில் சுற்றுச்சுவரை சுற்றி லைவ் ஒயர் ஃபென்ஸிங் (Live Wire Fencing) கிடையாது. தற்போது சிறப்புக் காவல் படையால் நிர்வகிக்கப்படும் வாட்ச் டவரும் கிடையாது. நண்பன் வெங்கடேஷின் தங்கையை, சிறை நேர்க்காணலில் சந்தித்துப் பேசியபோது தன் திட்டத்தை விளக்கியிருக்கிறான் சங்கர். மரத்திலிருந்து கயிறு கட்டி சிறைக்குள் எறிந்து, அதன் வழியாக ஏறி, சுவரைத் தாண்டித் தப்பிப்பதுதான் திட்டம்.

கைதிகளின் அறைகளை மாலையில் காவலர் ஒருவர் பூட்டுவது வழக்கம். கூடவே செல்லும் ஒரு கைதிதான் உண்மையில் பூட்டுவார். அந்தக் கைதிக்குக் காசு கொடுத்து, சாவிகளின் அச்சை சோப்பில் எடுத்து, நண்பன் வெங்கடேஷிடம் கொடுத்து விட்டான் சங்கர். கள்ளச்சாவி கைமாறியது. வெங்கடேஷுக்கும் அவனுடைய தங்கைக்கும் தப்பிக்கும் நாள் குறித்துத் தகவல் தரப்பட்டிருக்கிறது.
பல ஆயிரம் காங்கிரஸாரை விடுதலை செய்யும் நாள் அது. நள்ளிரவு வரை சிறைக் காவலர்கள் அனைவரும் படு பிஸியாக இருந்திருக்கிறார்கள். பருத்தி, புடவையாகவே காய்த்ததுபோல் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. 10:30 மணிக்கு ‘எஸ்கேப் ஆபரேஷன்’ தொடங்கியது. ஆட்டோ சங்கரின் தம்பி மோகனின் கை நீளம். அவன் கம்பிக்கு வெளியே கையைவிட்டு, பூட்டைத் திறந்திருக்கிறான்.
தொகுதியிலிருந்து சுவரைத் தொடாத வண்ணம் இருக்க தகரத்தால் ஆன ஒரு வேலி இருக்கும். ஏற்கெனவே அந்த வேலியின் ஒரு போல்ட்டை கழற்றிவிட்டு, சுவருடன் தொடர்புகொள்ள வழி அமைத்திருந்தனர். ஆட்டோ சங்கருடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் சுற்றுச்சுவரை அடைந்திருக்கின்றனர். ஒருவர் பின் ஒருவராகக் கயிற்றைப் பிடித்து சுவரின் மேல் ஏறினார்கள். கடைசி ஆள் ஏறும்வரை மற்றவர்கள் சுவரின் மேல் படுத்துக்கொண்டார்கள். அங்கிருந்த மின்சார விளக்கைத் திட்டமிட்டு முன்னரே அணைத்து வைத்திருந்தார்கள். எல்லோரும் ஏறிய பின் கயிற்றை மறுபக்கம் போட்டு இறங்கி, திசைக்கு ஒருவராகப் பிரிந்துவிட்டனர்.
இவர்களிருக்கும் தொகுதியில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறைக் காவலர்கள் வலம்வருவர். அன்றைக்கு இவர்களிருந்த ஒன்றாம் தொகுதியின் முன்பக்க வாயிலைப் பூட்டிவிட்டு, சாவியை வேறு ஒரு தொகுதி சாவிக்கொத்தில் சேர்த்து விட்டார்கள். அதனால், மறுநாள் காலையில்தான் சாவியைத் தேடிக் கண்டுபிடித்து காவலர்கள் திறந்து பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் ஐந்து பேர் எஸ்கேப் ஆனது தெரிந்தது.
ஆட்டோ சங்கர் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஒன்றாம் தொகுதியைப் பூட்டிய காவலர், `சரியாகப் பூட்டப்பட்டுள்ளதா...’ என்று சோதனை செய்த தலைமைக் காவலர், வெளி கேட்டைப் பூட்டி, சாவியை வேறொரு தொகுதியின் சாவிக்கொத்தில் மாற்றிய முதல் தலைமைக் காவலர் ஆகிய மூவரும் ஆட்டோ சங்கர் தப்பியோடத் துணைபுரிந்த காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டார்கள். கண்காணிப்பாளர் மற்றும் ஜெயிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தப்பியவர்களைப் பிடிக்க சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சம்பவம் பற்றி விசாரிக்க நீதியரசர் இஸ்மாயில் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது.
சங்கரின் தந்தை, ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்ததைக் கண்டுபிடித்து, அங்கே போனது தனிப்படை. அங்கே ஆட்டோ சங்கரையும், வெங்கடேஷின் தங்கையையும் பிடித்தது. ஆட்டோ சங்கருக்கு தப்பியோடிய வழக்கில் நீதிமன்றத்தால் ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
கயிற்றைக்கொண்டு சிறையிலிருந்து தப்பிய ஆட்டோ சங்கரால், தூக்குக் கயிற்றிலிருந்து தப்ப முடியவில்லை.
(கதவுகள் திறக்கும்)