
கைதியை என் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கி ஓடினேன். விஷயத்தைச் சொன்னதும் டாக்டர்கள் துரிதமாகச் செயல்பட்டு, தீவிர சிகிச்சையளித்தனர்.
அன்று ஞாயிற்றுக்கிழமை... காலை 11 மணி இருக்கும். காய்கறி வாங்குவதற்காகக் கடையில் நின்றுகொண்டிருந்தேன். நான் அப்போது கோவை மத்தியச் சிறையின் ஜெயிலர். எங்கே சென்றாலும் வாக்கிடாக்கியுடன்தான் செல்வேன். காய்கறிக்கடையில் இருந்தபோது, வாக்கிடாக்கியில் கன்ட்ரோல் ரூமுக்கு ஜெயில் டாக்டர் சொன்ன தகவலைக் கேட்டேன்.
சிறையில் கடுமையான பாதுகாப்பிலிருந்த ஒரு கைதிக்கு திடீரென ஹார்ட் அட்டாக். ‘உடனே வெளி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாவிட்டால், உயிருக்கே ஆபத்து’ என்று வாக்கிடாக்கியில் டாக்டர் சொன்னார். பதறிப்போன நான், உடனே ஜெயிலுக்கு விரைந்தேன். அந்தக் கைதி, கடுமையான பாதுகாப்பில் வைக்கப் பட்டிருந்தவர்.
வயது 35-க்குள்தான் இருக்கும். அதனால், ‘ஹார்ட் அட்டாக் வந்திருக்குமா அல்லது வெளியில் சென்று தப்பிப்பதற்காக அப்படி நடிக்கிறாரா?’ என்று எனக்குச் சந்தேகம். அதை டாக்டரிடம் அழுத்திக் கேட்டேன். அவர், ‘‘சார்! நாம் யோசிக்கும் ஒவ்வொரு நிமிடமும் கைதியின் உயிருக்கு ஆபத்து. இது சிவியர் ஹார்ட் அட்டாக். உடனே ஹாஸ்பிடலுக்குக் கொண்டு செல்ல வேண்டும்’’ என்றார் அதைவிட அழுத்தமாக.
கடுமையான பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள இத்தகைய கைதிகளை வெளியே கொண்டுசெல்ல அரசிடம் அனுமதி பெற வேண்டும். காவல்துறை உட்பட பல்வேறு துறைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும். அப்படியே அனுமதி பெற்றாலும், பலத்த வழிக்காவல் தேவை. கைதி அனுமதிக்கப்படும் மருத்துவமனை முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

ஆனால், அதற்கெல்லாம் நேரமில்லை. நான் யோசிக்கவே இல்லை. ‘என்னுடைய பொறுப்பிலுள்ள கைதியின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும்.’ அதுதான் என் மனதில் நின்றது. கைதியை வாரியெடுத்து என் காரில் போட்டுக்கொண்டேன். டாக்டர் மற்றும் துப்பாக்கி ஏந்திய ஒரு காவலர் துணையுடன், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அரசு மருத்துவமனையில் இருந்தோம்.
கைதியை என் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கி ஓடினேன். விஷயத்தைச் சொன்னதும் டாக்டர்கள் துரிதமாகச் செயல்பட்டு, தீவிர சிகிச்சையளித்தனர். கைதியின் உயிர் காப்பாற்றப்பட்டது. ‘சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்காவிட்டால் காப்பாற்றியிருக்க முடியாது’ என்றார்கள் டாக்டர்கள்.
மனநிறைவுடன் ஜெயிலுக்குத் திரும்பினேன். ஆனால், அதில்தான் சிக்கலே ஆரம்பித்தது. ஏனெனில், நான் காப்பாற்றியது சாதாரணமான ஆளில்லை. காஷ்மீர் பயங்கரவாதி! இது நடந்தது 1991-ம் ஆண்டில்... அப்போது, அந்தச் சிறையிலிருந்தது அந்த ஒரு பயங்கரவாதி மட்டுமல்ல.

அதற்கு சில நாள்களுக்கு முன்பு...
கோவை விமான நிலையத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு. ஜனாதிபதியே வந்தால்கூட இவ்வளவு பந்தோபஸ்து இருக்காது. விமான நிலையப் பயணிகள் அனைவரும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப் பட்டனர். துணை ராணுவமும் வெளியே நிறுத்தப் பட்டிருந்தது.
விமான நிலையத்தில் தொடங்கி அவிநாசி ரோடு வழியாக கோவை மத்தியச் சிறை வரையிலும் இருபுறமும் போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். உள்ளூர் போலீஸாருக்குக்கூட பெரிதாக எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. எல்லாமே படு ரகசியமாக வைக்கப் பட்டிருந்தன. பரபரப்பானது கோவை மாநகரம்.
இந்திய ராணுவப்படையின் விமானம் ஒன்று ஓடுதளத்தில் வந்து நின்றது. விமானப் பயணிகள் அனைவரும் ஆவலுடன் பார்த்தனர். ராணுவப்படையின் விமானம் நின்றதும், அதை நோக்கி ஓடுபாதையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் சென்று சுற்றி நின்றன. விமானத்தின் கதவு திறக்கப்பட்டது.
அதிநவீன ஆயுதங்களுடன் ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸார் இறங்கினர். பலத்த பாதுகாப்புடன் சிலர் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர். அவர்களின் கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டிருந்தன. கைகள் விலங்கிடப்பட்டிருந்தன. எல்லோரும் போலீஸ் வாகனங்களில் ஏற்றப்பட்டனர். சைரன் ஒலி தெறிக்க, வாகனங்கள் புயல் வேகத்தில் புறப்பட்டன.
சீறிப்பாய்ந்த அந்த வாகனங்கள் வந்துசேர்ந்த இடம், கோவை மத்தியச் சிறை. சில போலீஸ் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் ஆவணங்களை எடுத்துக்கொண்டு சிறைக்குள் வந்தார்கள். கோவை மத்தியச் சிறையின் ஜெயிலரான என்னைப் பார்த்து, ‘‘எல்லாம் ரெடியாக இருக்கின்றனவா?’’ என்று கேட்டனர். ‘‘எல்லாம் ரெடி’’ என்றேன்.

கண்கள் கட்டப்பட்ட அந்த நபர்கள் அனைவரும் தனித்தனி செல்களுக்குள் அடைக்கப்பட்டனர். அறைக்குச் சென்ற பின்பே அவர்களின் கண் கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. அவர்கள் முகங்களில் பீதி. ‘‘நாங்கள் எங்கே இருக்கிறோம், இது எந்த ஊர், இங்கே எங்களை எதற்காகக் கூட்டி வந்தீர்கள்?’’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். அவர்கள் பேசியது உருது மொழி. அந்த 48 பேரும் காஷ்மீர் பயங்கரவாதிகள்.
‘‘இவர்களை ஏன் இங்கே கொண்டுவந்தீர்கள்?’’ என்று அவர்களை அழைத்து வந்திருந்த காஷ்மீர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் விசாரித்தேன்.
‘‘இவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள். பாகிஸ்தான் அரசிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, காஷ்மீரில் வாழும் நம் மக்களைக் கொடுமைப்படுத்தினார்கள். ஏராளமான கொலைகளைச் செய்திருக்கிறார்கள். இந்துமதப் பெண்களை பாலியல் வன்முறை செய்திருக்கிறார்கள். மத வழிபாட்டுத்தலங்களை இடித்திருக்கின்றனர். 1989-லிருந்து இரண்டு ஆண்டுகளில் இரண்டு லட்சம் இந்துக்கள், காஷ்மீரைவிட்டு வெளியேறக் காரணமானவர்கள் இவர்கள்.
இவர்களின் நோக்கம், அனைத்து இந்து ஆண்களும் காஷ்மீரைவிட்டு வெளியேறிவிட வேண்டும். இந்துப் பெண்கள் காஷ்மீரில் இருக்கலாம். ஆனால், முஸ்லிம் ஆண்களைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இதையெல்லாம் பகிரங்கமாக ஒலிபெருக்கிகளில் பேசியவர்கள்.
இவர்கள் செய்த கொடூரமான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அங்கே வைத்திருப்பது அவ்வளவு பாதுகாப்பு இல்லை என்பதால், தேசத்தின் தெற்கு முனையிலுள்ள தமிழகத்தின் கோவை சிறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்’’ என்றார். இறுதியாக அவர், ‘‘இந்த பயங்கரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள். இவர்களை மிகவும் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்’’ என்று எச்சரித்துவிட்டுக் கிளம்பினார். அவர் சொன்னது உண்மை என்பதை உணர்த்தினார்கள் அந்த காஷ்மீர் பயங்கரவாதிகள்.
அப்படிப்பட்டவர்களில் ஒரு பயங்கரவாதியின் உயிரைத்தான் நான் காப்பாற்றியிருக்கிறேன். ஒரு பயங்கரவாதியை மருத்துவமனைக்கு அனுப்பும் போது கடைப்பிடிக்க வேண்டிய எந்த நடைமுறை யையும் நான் பின்பற்றவில்லை. மேலதிகாரியிடம் அனுமதி பெறவில்லை. வழிக்காவலுக்கு போதிய ஆயுதங்களைக் கொண்டு செல்லவில்லை. போதிய காவலர்களையும் அழைத்துச் செல்லவில்லை.
இத்தனை குற்றச்சாட்டுகளும் என்மீது சுமத்தப்பட்டன. அத்தனைக்கும் என் பதில்... ‘‘என் கஸ்டடியிலுள்ள கைதி பயங்கரவாதியாக இருந்தாலும், அவர் உயிரைக் காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அந்தக் கடமையைத்தான் நான் செய்தேன்.’’
என் செய்கை மேலதிகாரிகளுக்கு மட்டுமன்றி, சிறைக்காவலர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியதை நான் அறிவேன். ஆனால், என்மீது கோபமாக இருந்த காஷ்மீர் கைதிகளின் மனநிலையில் இந்த நிகழ்வு மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவரை அவர்களுடைய ஹிட் லிஸ்ட்டில் இருந்த நான், அந்த பயங்கரவாதியின் உயிரைக் காப்பாற்றியதிலிருந்து நீக்கப்பட்டேன்.
ஒருவேளை அந்தக் கைதி இறந்திருந்தால், அது சர்வதேசப் பிரச்னையாக மாறியிருக்கவும் வாய்ப்பு உண்டு. ஒருவரின் உயிருக்கு ஈடாகப் பல உயிர்கள் பலி கேட்கப்பட்டிருக்கலாம். ஆனால், ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய மனிதாபிமானம் அவர்களின் எண்ணங்களை மாற்றியது.
ஆனால், அந்த பயங்கரவாதியைக் காப்பாற்றியதற்காக சிறைக்காவலர்கள் பலரும் என்மீது கடுமையான கோபம்கொண்டனர். அதற்குக் காரணம்... அந்தத் தீவிரவாதிகள் சில நாள்களுக்கு முன்னர் சிறைக்குள் நடத்திய திடீர் தாக்குதல். அதனால், அந்தச் சிறைக்காவலர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்.
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற அவர்களின் தாக்குதல்களை நாங்கள் எப்படி முறியடித்தோம் தெரியுமா?
(கதவுகள் திறக்கும்)