மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 48 - “எங்களைத் தொட்டால் குண்டு வெடிக்கும்!”

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

கோவைச் சிறையில் கைதிகள் படம் பார்ப்பதற்காக ஒரு சினிமா தியேட்டர் இருந்தது.

‘பாட்ஷா... பாட்ஷா..!’ இந்த வார்த்தைகளைப் படித்ததும், ‘பாட்ஷா’ திரைப்படத்தின் பி.ஜி.எம் செவிகளில் ஒலிக்கும்; தாடியும் கறுப்புக் கண்ணாடியுமாக ரஜினி, தன் பரிவாரங்களுடன் பாய்ந்துவரும் காட்சி கண்களில் விரியும். இந்த ‘பாட்ஷா’ வருவதற்கு முன்னரே, ஒரு தரப்புக்கு அச்சத்தையும், மறுதரப்புக்கு அன்பையும் விதைத்த ‘பாஷா’ ஒருவர் இருந்தார். அவர் சையது அகமது பாஷா. அல் உம்மா அமைப்பின் நிறுவனர். கோவை குண்டு வெடிப்பின் மூளையாகக் கருதப்பட்டவர்.

கோவையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதி கோட்டைமேடு. அவர்களில் கணிசமானோருக்கு வழிகாட்டியாக இருந்தவர் பாஷா. 1992-ம் ஆண்டு, டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதற்குப் பழிவாங்குவதற்காக அடுத்த ஆண்டே அல் உம்மா இயக்கத்தைத் தோற்றுவித்தார் பாஷா.

 ஜி.ராமச்சந்திரன் . ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை
ஜி.ராமச்சந்திரன் . ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை

ஏழை இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து, அவர்களைவைத்து பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றுவதே அல் உம்மாவின் திட்டம். அந்த இயக்கத்தின் முதல் ஆபரேஷன் 1993-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி அரங்கேறியது. அன்றைய தினம் சென்னை சேத்துப்பட்டிலுள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தைக் குண்டுவைத்துத் தகர்த்தது அல் உம்மா. 11 பேர் பலியானார்கள். பாஷாவும் அவரின் கூட்டாளிகள் சிலரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். 1997-ல் இந்த வழக்கில் பாஷா விடுதலையானார். அடுத்த ஆண்டே அரங்கேறியது கோவை குண்டுவெடிப்புக் கொடூரம்.

1998-ம் ஆண்டு, பிப்ரவரி 14-ம் தேதி. கோவைக்குத் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பா.ஜ.க தலைவர் அத்வானியைத் தீர்த்துக்கட்டவும், அரசை அச்சுறுத்தவும் 18 இடங்களில் குண்டுவைத்தார்கள். அத்வானியின் பிரசார மேடைக்கு அருகிலும் ஒரு கார் நிறைய சக்தி வாய்ந்த குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. நல்லவேளையாக அது வெடிக்க வில்லை. வெடித்திருந்தால் ஆர்.எஸ்.புரத்தின் ஒரு பகுதியே சர்வ நாசமாகியிருக்கும். அத்வானியின் விமானம் தாமதமாக வந்ததால் அவர் தப்பித்தார்.

ஜெயில்... மதில்... திகில்! - 48 - “எங்களைத் தொட்டால் குண்டு வெடிக்கும்!”

ஆனால், அவர் வருவதற்குள் 18 இடங்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகளில், 13 குண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன. குருதியில் நனைந்தது கோவை. நகரமெங்கும் மரண ஓலம். அப்பாவி மக்கள் 58 பேர் பலியானார்கள். 252 பேர் படுகாயமடைந்தார்கள். பாஷாவும் அவரின் கூட்டத்தினரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு அச்சாரமாக அமைந்த சம்பவத்தையும் சொல்லிவிடுகிறேன்...

கோட்டைமேடு பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த செல்வராஜ் என்ற காவலர், முஸ்லிம் இளைஞர்கள் சிலரால் கொல்லப்பட்டார். மதக்கலவரம் வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாகவே கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்தை அல் உம்மா நடத்தியது.

இந்த வழக்கில் 2007-ம் ஆண்டு, அக்டோபர் 24-ம் தேதி பாஷா உட்பட அவரின் கூட்டாளிகள் 13 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இப்போது அல்ல, விசாரணைக் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்ட 1998-ம் ஆண்டிலிருந்தே அவர்கள் செய்த அடாவடிகள் கொஞ்சநஞ்சமல்ல...

அதே 1998-ம் ஆண்டுதான் நான் சென்னை மத்தியச் சிறையின் கண்காணிப்பாளராகப் பொறுப் பேற்றிருந்தேன். அப்போது அந்தச் சிறையிலிருந்த 2,000 கைதிகளில் சுமார் 900 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அபாயகரமான கைதிகள்! இவர்களுக்கு மத்தியில்தான் கோவைக் குண்டுவெடிப்புக் கைதிகளையும் வைத்திருக்க நேர்ந்தது. இவர்களைச் சிறைக் காவலர்கள் கேள்வி கேட்க முடியாது; சோதனையிட முடியாது. எதற்கெடுத்தாலும், ‘என்னைத் தொட்டால் ஊருக்குள் குண்டு வெடிக்கும்’ என்று மிரட்டினார்கள். பாஷா மிகப்பெரிய ஆளாக மாறிப்போயிருந்தார். எப்போதுமே இறுக்கமாகக் காணப்பட்டார்.

இதே பாஷாவை 1982-ம் ஆண்டிலேயே கோவை சிறையில் நான் சந்தித்திருக்கிறேன். அப்போது முற்றிலும் மாறுபட்ட மனிதராக இருந்தார். அன்றைய நாள்களில் நான் கோவை மத்தியச் சிறையில் உதவிச் சிறை அலுவலராக இருந்தேன். அடிதடி வழக்கு ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தார் பாஷா. அவரைப் பார்வையாளர்கள் சந்திப்பதற்கான நேர்காணல் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஒரு கைதிக்கு, ஒரு நாளைக்கு மூன்று பேரை மட்டுமே நேர்காணல் செய்ய அனுமதிக்க முடியும். அதுதான் சிறை விதி.

ஆனால், பாஷாவைப் பார்க்க, பெரும் கும்பலே திரண்டு வரும். நேர்காணலுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மொத்தம் 60 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும். இடத்தின் பரப்பளவு அவ்வளவுதான். இவர் ஒருவருக்கே பெரும் கூட்டம் வந்ததால், மற்றவர்களுக்கு நேர்காணலை அனுமதிக்கவே முடியவில்லை.

அதைச் சொன்னால் அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். தடியடி நடத்தி, கலைக்க வேண்டிய சூழல்கூட ஏற்படும். ஆனால், அவரைப் பார்க்க வருவோரில் 70 சதவிகிதம் பேர் பெண்கள். தடியடி நடத்தினால் பெரும் சிக்கலாகிவிடும். அரசுக்கு அவப்பெயர் ஏற்படும். அதனால் ஒரு திட்டம் தீட்டினோம்.

கோவைச் சிறையில் கைதிகள் படம் பார்ப்பதற்காக ஒரு சினிமா தியேட்டர் இருந்தது. ஆயிரம் பேருக்கு மேல் அங்கு அமரலாம். தியேட்டருக்கு நடுவில் மூங்கில்களால் தடுப்பு கட்டி, ஒரு பக்கம் பார்வையாளர்கள் 200 பேரையும், மறுபக்கம் பாஷாவையும் நிற்க வைத்து நேர்காணல் நடத்தினோம். பாஷாவைப் பார்த்ததுமே வந்தவர்கள் கதறத் தொடங்கிவிடுவார்கள்.

ஜெயில்... மதில்... திகில்! - 48 - “எங்களைத் தொட்டால் குண்டு வெடிக்கும்!”

அனைவரிடமும் அன்பாகப் பேசி நலம் விசாரிப்பார் பாஷா. ‘இவ்வளவு அன்பானவராக இருக்கிறாரே... இவருக்காக இவ்வளவு பேர் அழுகிறார்களே!’ என்று எனக்கு பிரமிப்பாக இருக்கும். அப்போதெல்லாம் என்னிடமும் பாஷா அன்புடனும் மரியாதையுடனும்தான் பேசுவார். ஆனால், 16 ஆண்டுகளுக்குப் பிறகு நான் பார்த்த பாஷா வேறு மாதிரி இருந்தார்.

`ஏற்கெனவே நன்கு பழக்கமானவர்தானே...’ என்ற உரிமையில், பாஷாவை ஒருமுறை ஒருமையில் அழைத்துவிட்டேன். ‘‘நீங்க கோயம்புத்தூர் ஜெயில்ல பார்த்த பாஷா இல்லை நான்!” - மிரட்டியது அவரது குரல். ஒரு பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் என்கிற கர்வம் அந்தக் குரலில் தொனித்தது. நானும் விடாமல், ‘‘நீங்கள் மிகவும் அன்பானவராயிற்றே, எப்படி இப்படியொரு பயங்கரவாதி ஆனீர்கள்?’’ என்று கேட்டேன். மெள்ளப் பேசத் தொடங்கினார் பாஷா.

‘‘நானும் அனைவரிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். ஆனால், சூழல் என்னை மாற்றியது. எனது இஸ்லாமியத் தோழர்கள் 18 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பல நூறு இஸ்லாமியர்கள் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு முடமாக்கப்பட்டார்கள். எங்களின் குடும்பங்களைக் கொத்துக் கொத்தாகக் குறிவைத்துத் தாக்கியது போலீஸ். பெண்கள், குழந்தைகளைக்கூட விட்டுவைக்காமல் அடித்து நொறுக்கினார்கள். வீடுகளைச் சூறையாடி தீ வைத்தார்கள்.

இத்தனையையும் நேரில் பார்த்த பிறகு என் மனம் இறுகிப்போனது. இஸ்லாமியர்கள் இனி பாதுகாப்பாக இருப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் அல் உம்மா அமைப்பாக உருவெடுத்தது. ஒன்றிரண்டு பேரென்றால் அடிக்கலாம்; பத்து பேரென்றால் சமாளிக்கலாம். ஓர் அரசும் பெரிய சமூகமுமே சேர்ந்து எங்களை நசுக்கினால் என்ன செய்வது... எங்களுக்கான பாதுகாப்புக் கவசம்தான் அல் உம்மா’’ என்றார் ஆவேசமாக!

அல் உம்மா அமைப்பினர் சென்னை மத்தியச் சிறையிலும், கோவைச் சிறையிலும் செய்த அத்துமீறல்களும் அடாவடிகளும் ஏராளம். அவர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல், பணியில் இருந்தபோதே ரத்தநாளம் வெடித்து காதிலும் மூக்கிலும் ரத்தம் வழிய இருக்கையிலேயே சரிந்து இறந்துபோனார் ஒரு சிறை அதிகாரி. இன்றைக்குத் தமிழ்த் திரையுலகத்தில் பிரபலமாக இருக்கும் நட்சத்திர நடிகரின் தந்தை அவர்!

(கதவுகள் திறக்கும்)