மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 49 - “இனி தமிழகத்தில் ஒரு குண்டுகூட வெடிக்காது!”

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

‘‘எங்கள்மீது கைவைத்தால் தமிழகம் எங்கும் குண்டு வெடிக்கும்’’ என்று எச்சரித்தார்கள். அப்போதைக்கு முயற்சியைக் கைவிட்டேன்.

தாஸ்... என் அருமை நண்பர். 1998-99-ம் ஆண்டில், சென்னை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளராக நான் இருந்தபோது, கோவை மத்தியச் சிறையின் கண்காணிப்பாளராக அவர் இருந்தார். அப்போது இந்த இரண்டு மத்தியச் சிறைகளிலும் அல் உம்மா, ஜிஹாத் இயக்கங்களின் பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். சிறைக்குள் அவர்கள் செய்த பிரச்னைகள் சொல்லி மாளாது.

கோவைச் சிறையில் பாஷாவின் சகோதரர் அன்சாரியின் ஆட்டம் மிக அதிகம். அதனால், கோவைச் சிறை என்றாலே அதிகாரிகள் அலறினார்கள். அங்கு பொறுப்பேற்கப் பலரும் தயங்கினார்கள். ஆனால், துணிச்சலாகப் பொறுப்பேற்றார் தாஸ். சிறையில் எந்தத் தவறும் நேர்ந்துவிடக் கூடாது என்று கடுமையாக உழைத்தார். ஆனால், பயங்கரவாதிகள் தினமும் அவரைச் சீண்டினார்கள். சொல்லொணா நெருக்கடிகள் கொடுத்தார்கள். அது, வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத உளவியல் பயங்கரவாதம். அதுவே அவரின் உயிரைப் பறித்தது. ஒருநாள் பணியிலிருந்த போதே ரத்தநாளங்கள் வெடித்து, காதிலும் மூக்கிலும் ரத்தம் வழிய... தனது இருக்கையில் அப்படியே சரிந்து உயிரைவிட்டார் தாஸ். இதை எழுதும்போதே என் கண்கள் குளமாகின்றன. அந்த தாஸின் மகன்தான் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன்! தாஸ் மட்டுமல்ல. அந்தக் காலகட்டத்தில் சென்னை, கோவைச் சிறை பணியாளர்களும்... சொல்லப்போனால் மக்களும்கூட அல் உம்மா அமைப்பைக் கண்டு நடுங்கினார்கள்.

 ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை
ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை

சென்னை மத்தியச் சிறைக்குள் அவர்கள் அதிகாரிகளை மிரட்டியே காரியங்களைச் சாதித்துக் கொண்டனர். தனித் தொகுதிகளில் அடைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு, சிறைத்துறை சார்பில் தனி சமையற்கூடமே அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்களே சமைத்துச் சாப்பிட்டார்கள். வாலிபால், கேரம், செஸ், கபடி உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாட அந்த வளாகத்துக்குள் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அந்த வளாகத்துக்குள் யாரையும் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். `தினமும் ஒவ்வோர் அறையையும் சோதனை செய்த பிறகே பூட்ட வேண்டும்’ என்பது சிறை விதி. ஆனால், அதற்கு அவர்கள் அனுமதிக்கவே மாட்டார்கள்.

சென்னை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளராக நான் பொறுப்பேற்றதும், அங்கே சோதனையிடச் சென்றேன். முன்வாயிலைப் பூட்டிவிட்டார்கள். பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்றபோது, ‘‘எங்கள்மீது கைவைத்தால் தமிழகம் எங்கும் குண்டு வெடிக்கும்’’ என்று எச்சரித்தார்கள். அப்போதைக்கு முயற்சியைக் கைவிட்டேன். அதன் பிறகு, சிறைக்குள் அவர்கள் செய்யும் அனைத்துக் காரியங்களையும் ஆதாரபூர்வமாக அரசிடம் கொண்டுசென்றேன்.

மேலதிகாரிகள், நீதிபதிகள், முக்கியத் தலைவர்கள் எனப் பலரிடமும் அவர்கள் செய்யும் அக்கிரமங்களை விளக்கினேன். அவர்கள் விடுத்த ‘குண்டுவெடிப்பு’ மிரட்டலையும் சொன்னேன். ஆனால், யாருமே எங்களின் வேதனைகளைப் புரிந்துகொள்ள வில்லை. ‘அவர்களைத் தொட வேண்டாம்; அது ஆட்சிக்கு ஆபத்தாக முடியும்’ என்றார்கள்.

ஜெயில்... மதில்... திகில்! - 49 - “இனி தமிழகத்தில் ஒரு குண்டுகூட வெடிக்காது!”

ஆனால், சிறைக்குள் நிலைமை சிக்கலாகிக் கொண்டிருந்தது. பயங்கரவாதிகளின் அறைகளில் ஆயுதங்கள், துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டி ருப்பதாக உளவுத்துறைத் தகவல்கள் வந்தன. அது உண்மையாக இருந்தால், அதற்கு நானே பதில் சொல்ல வேண்டியிருக்கும். அப்போதுதான் ஒருநாள் கோவை மத்தியச் சிறை வளாகத்திலுள்ள டி.ஐ.ஜி அலுவலகத்தில் குண்டு வெடித்தது. காரணம்... பாஷா!

அப்போது அல் உம்மா தொடர்பான வழக்குகள் தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் நடந்துவந்தன. வழக்குக்காக, சென்னைச் சிறையிலிருந்து கோவை நீதிமன்றத்துக்கு பாஷா அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். நீதிமன்றத்தில் விசாரணை முடிய தாமதமாகிவிட்டது. இரவுப் பயணம் ரிஸ்க் என்பதால், பாஷாவைக் கோவை மத்தியச் சிறையில் தங்கவைத்தார்கள்.

மறுநாள் காலை சென்னைக்குக் கிளம்ப மறுத்திருக்கிறார் பாஷா. ‘கோவைச் சிறையில் சில நாள்கள் தங்கியிருந்து, என் இயக்கத்தினரிடமும் உறவினர்களிடம் பேச வேண்டும்’ என்றிருக்கிறார். அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பாஷா, காவலர்கள் துணையுடன் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றப்பட்டார். அப்போது பாஷா, சிறைத்துறை டி.ஐ.ஜி-யைப் பார்த்து, ‘இதற்காக நீங்கள் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்!’’ என்று மிரட்டியிருக்கிறார்.

சில நாள்களிலேயே டி.ஐ.ஜி அலுவலகத்தில் குண்டு வெடித்தது. பணியிலிருந்த காவலர் பூபாலன் பரிதாபமாகப் பலியானார். முகாம் உதவியாளர் ப.தனபாலன் நூலிழையில் உயிர் தப்பினார். அன்றைய தினம் சற்றுத் தாமதமாக வந்ததால், டி.ஐ.ஜி சந்திரசேகர் உயிர் தப்பினார்.

இதைவிட ஒரு கொடூரம் மதுரையில் நடந்தது. அல்-உம்மா இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டு, மதுரை மத்தியச் சிறைக்குக் கொண்டுவரப்படுகிறார். சிறை விதிகளின்படி அவரைச் சோதனையிட முனைந்திருக்கிறார் உதவிச் சிறை அலுவலர் ஜெயப்பிரகாஷ். “என்னைத் தொடாதே!” என்று மிரட்டியிருக்கிறார் அந்தக் கைதி. ஜெயப்பிரகாஷ் அதைப் பொருட்படுத்தவில்லை. வலுக்கட்டாயமாகச் சட்டையையும் தொப்பி யையும் காவலர்கள் அப்புறப்படுத்தினார்கள். கைதியின் தொப்பியில் கைவைத்தபோது, ‘என் தொப்பியில் கைவைத்தால் உன் தொப்பி தரையில் விழும்’ என்று மிகக் கடுமையாக எச்சரித்திருக்கிறார் அந்தக் கைதி.

அன்றைய தினமே, ஜெயப்பிரகாஷ் பணி முடிந்து சிறைக்கு வெளியே வந்தபோது, சிறைக்கு எதிரே சாலையில்வைத்து அவரின் தலையைக் கொடூரமாகச் சீவினார்கள் பயங்கரவாதிகள். அவரது தொப்பி தெறித்து சாலையில் விழுந்தது. இந்தச் சம்பவங்களெல்லாம் என் மனதில் தீயாய் கனன்றுகொண்டிருந்தன. பயங்கரவாதிகளை அடக்கியே ஆக வேண்டும் என்று தீர்மானித்தேன்.

சென்னை மாநகர காவல் அதிகாரிகளிடம் இது பற்றி விவாதித்தேன். அப்போதிருந்த முக்கிய அதிகாரி ஒருவர், ‘‘எத்தனை நாளைக்குத்தான் இவர்களுக்குப் பயந்துகொண்டு வேலை பார்ப்பீர்கள், எத்தனை குண்டுகள்தான் அவர்கள் வைப்பார்கள்? அவர்கள் வைத்திருக்கும் குண்டுகள் தீரட்டும்... நீங்கள் உங்கள் பணியைச் செய்யுங்கள்” என்றார். சென்னை மத்தியச் சிறைக்கு சீற்றத்துடன் திரும்பினேன். காவலர்களைத் திரட்டிக்கொண்டு பயங்கரவாதிகளின் தொகுதிக்குள் நுழைந்தேன். அவர்களை அங்கிருந்த எந்தவொரு பொருளையும் எடுக்கவிடாமல் கட்டிய லுங்கியுடன் வேறு தொகுதிகளின் செல்களில் அடைத்தோம். பயங்கரமாகக் கூச்சலிட்டார்கள்; மிரட்டினார்கள்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மிரட்டல்கள் வந்தன. ‘சிறைத்துறையையே இல்லாமல் ஆக்கிவிடு வோம்’ என்றெல்லாம் மிரட்டினார்கள். சில நாள்களிலேயே அண்ணாசாலையில் இருந்த சிறைத்துறையின் தலைமை அலுவலகத்துக்குக் குண்டு வைத்தார்கள். அதைக் கண்டுபிடித்து அகற்றியது ‘பாம் ஸ்குவாட்.’ சில நாள்களில் மற்றொரு குண்டு, சிறை ஹாஸ்டல் வார்டன் குடியிருப்பில் வெடித்தது; நல்லவேளையாக உயிர்ச் சேதமில்லை.

ஜெயில்... மதில்... திகில்! - 49 - “இனி தமிழகத்தில் ஒரு குண்டுகூட வெடிக்காது!”

ஆனால், அரசுத் தரப்பில் இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ‘இனி ஒரு குண்டு வெடித்தாலும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஒருகட்டத்தில் பயங்கரவாதிகள் அமைதியானார்கள். தனி அறையின் தனிமை பாஷா உள்ளிட்ட பயங்கரவாதிகளைச் சிந்திக்க வைத்திருக்கக்கூடும்.

ஒருகட்டத்தில் பாஷா என்னிடம் வந்தார். திருந்திவிட்டதாக மனம் வருந்திப் பேசினார். ‘இனி தமிழகத்தில் ஒரு குண்டுகூட வெடிக்காது’ என்று எழுத்து மூலமாக உறுதியளித்தார். அந்த உறுதிமொழி தமிழக முதல்வருக்கும் பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது.

பாஷா கேட்டுக்கொண்டதற்கிணங்க, முன்பிருந்த தொகுதிக்கே அவர்களை மாற்றினோம். பிறகு சென்னையிலிருந்து கோவை மத்தியச் சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். கிளம்பும் முன்பாக என்னைச் சந்தித்த பாஷா, ‘‘என் மன மாற்றத்துக்கு நீங்கள்தான் வழிகாட்டினீர்கள். தனி அறை நாள்கள் சுயபரிசோதனைக்கு வித்திட்டது” என்று நன்றி கூறினார். கடைசியாக அவர் ஒன்றைச் சொன்னார்...

‘‘இஸ்லாத்தை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!’’

(கதவுகள் திறக்கும்)