மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 50 - மடத்தின் அதிபதி... சிறையில் கைதி!

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

நீங்கள் முற்றும் துறந்த துறவிதானே... உங்கள் பார்வையில், உள்ளே இருந்தால் என்ன... வெளியுலகில் இருந்தாலென்ன?

ஜனாதிபதியின் இருக்கையில் வேறு ஓர் இந்தியக் குடிமகன் அமர முடியுமா... ஒரு ஜனாதிபதி, தன் மாளிகையின் வாசலுக்கு வந்து ஒரு மனிதரை வரவேற்கலாமா, வழியனுப்பலாமா... இதற்கெல்லாம் அரசு நிர்வாக மரபு அனுமதிக்கிறதா?

ஜனாதிபதி இருக்கையில் ஒருவர் அமர்ந்தார். இல்லையில்லை, ஜனாதிபதியே அவரை அமரவைத்து அழகு பார்த்தார். வாசல் வரை வந்து ஜனாதிபதி அவரை வரவேற்றார், வழியனுப்பியும் வைத்தார். இது எதையுமே மரபு அனுமதிக்கவில்லை. ஏனெனில், அங்கே மரபுக்கு இடமில்லை... அது மரியாதை!

ஜி.ராமச்சந்திரன் ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை
ஜி.ராமச்சந்திரன் ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை

இப்படி மரியாதை செலுத்தியவர், ஓர் இஸ்லாமியர்; மரியாதையை ஏற்றுக்கொண்டவர், இந்து மதத் துறவி. இன்றைய சூழலில் இதை நினைத்தால், அசாத்தியமான கற்பனையாகத் தெரியும். ஆனால், இதே பா.ஜ.க ஆட்சியில்தான் அது நிகழ்ந்தது. அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் அப்துல் கலாம்; அவரின் இருக்கையை அலங்கரித்தவர் காஞ்சி சங்கர மடத்தின் 69-வது பீடாதிபதி ஜெயேந்திரர்.

மாளிகையின் பொறுப்பதிகாரி லெப்டினன்ட் கர்னல் அசோக் கினி, ஜனாதிபதி கலாமைப் பார்த்து, ‘‘உங்கள் காரியத்துக்கு எனக்கு விடை தெரியவில்லை!’’ என்றார். கலாம் சொன்னார்... ‘‘அவர் தவசீலர். அவர் அமர்ந்ததால் அந்த ஆசனம் புனிதம் அடைந்தது. இனிவரும் ஜனாதிபதிகளும் ஆசீர்வதிக்கப்பட்ட அந்த ஆசனத்தில் அமர்ந்து நிர்வாகம் செய்வார்கள்!’’

ஜெயேந்திரர் இந்து மதத்தின் அடையாளம்; சமய மடாதிபதி களில் முதன்மையானவர். இந்தியாவிலுள்ள பல ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு விளக்கை ஏற்றியவர். மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் பட்டென்று சொல்பவர். பிராமணர்களுக்கு மட்டும் சொந்தமான சங்கர மடத்தை, சேரிகளுக்கும் அழைத்துச் சென்றவர். `வழிபாட்டுத்தலங்கள் மக்களுக்கும் மாக்களுக்கும்கூட பொதுவானவை’ என்று கூறியவர்.

அவர் மடாதிபதியாக இருந்த காலத்தில்தான், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர் களும் சங்கர மடத்தைத் தேடி வந்தார்கள். அரசு நிர்வாகத்தின் பல சீர்திருத்தங்கள் சங்கரமடத்தில் பேசி முடிவுசெய்யப்பட்டன. சங்கரமடத்தின் சமிக்ஞைக்காக அரசுகள் காத்துக்கிடந்த காலம் அது.

ரயில்வேதுறையில் பணியாற்றிய சாதாரண அலுவலரின் மகனாகப் பிறந்த சுப்பிரமணியன்தான், சங்கர மடத்தின் வேதபாடசாலையில் பயின்று, 1954-ம் ஆண்டு `ஜெயேந்திர சரஸ்வதி’ என நாமம் சூட்டப்பட்டு, சங்கரமடத்தின் 69-வது பீடாதிபதி ஆனார்.

ஜெயில்... மதில்... திகில்! - 50 - மடத்தின் அதிபதி...  சிறையில் கைதி!

ஏராளமான கிராமங்களில், கோயில் பள்ளிக்கூடம், மருத்துவமனைகள் கட்டிக்கொடுத்தார். சங்கரமடத்தின் கிளைகள் பட்டிதொட்டியெல்லாம் துவக்கப்பட்டன. இந்தியாவே சங்கர மடத்தின் பெருமைகளைப் பேசத் தொடங்கியது. தன் சேவைகளால் இந்துக்கள் மதம் மாறுவதைத் தடுத்ததோடு, மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவரவும் அவர் காரணமானார்.

ஜெயேந்திரரின் செல்வாக்கு உயர்ந்து கொண்டேபோனது. அவருடைய வளர்ச்சி, மடத்தில் இருந்தவர்கள் பலருக்குமே பிடிக்கவில்லை. சதிவலை பின்னப்பட்டது. அவரைப் பற்றி மோசமான கருத்துகளை மக்களிடம் பரப்பினர். அதில் தற்காலிக வெற்றியும் அடைந்தனர்.

ஒரு ஈ, எறும்புக்கும்கூட தீங்கு நினைக்காத சங்கராச்சாரியார், ஒரு மனிதனைக் கொன்றார் என்று பரவிய தகவலைக் கேட்டு பக்தர்கள் துடித்துப்போனார்கள். அவருக்கு அருகிலிருந்த சில முட்டாள்கள் செய்த காரியம் அவர்மீது தீராப்பழியைச் சுமத்தியது. சங்கரராமன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, வேலூர் மத்தியச் சிறைக்குக் கைதியாகக் கொண்டு வரப்பட்டு என் முன் நிற்க வைக்கப்பட்டார் ஜெயேந்திரர்.

கண்கள் இரண்டும் உக்கிரத்தில் சிவந்திருந்தன. கோபம், வருத்தம், இயலாமை, அவமானம் என உணர்ச்சிகளின் பிழம்பாக தண்டத்தைக் கையிலேந்தி நின்றார். கண்களில் கண்ணீர் முட்டியது. அழுதால் அசிங்கமாகி விடும் என்று அதைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார்.

ஜெயில்... மதில்... திகில்! - 50 - மடத்தின் அதிபதி...  சிறையில் கைதி!

இந்து மதத்தின் ஒப்பற்ற தலைவர் ஜெகத்குரு, இப்போது ஒரு சிறைக்கைதி. நான் நின்றுகொண்டு அவரை அமரச் சொன்னேன். அவர் அமரவேயில்லை. ஜனாதிபதியின் இருக்கையில் அமர்ந்தவர், என் முன்னே நின்றுகொண்டே பேசினார்.

இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் அவரைக் கொட்டடியில் அடைக்க வேண்டும். திடீரென அவர் சிறைக்குக் கொண்டுவரப்பட்டதால், அவருக்கு எந்தச் சிறப்பு முன்னேற்பாடும் செய்யவில்லை. அரசியல் கைதிகள் அதிக எண்ணிக்கையில் வரும்போது, அவர்களை அடைப்பதற்காக 20 ஏக்கர் பரப்பளவுள்ள ‘குளோஸ்டு ப்ரிஸன்’ (Closed Prison) தொகுதி இருந்தது. அது, நீண்ட நாள்களாக யாரும் அடைக்கப்படாமல் புதர் மண்டிக்கிடந்தது.

அந்தத் தொகுதியையே அவருக்கு ஒதுக்க முடிவு செய்தேன். ஆயிரம் கைதிகளை உடனே அந்த வளாகத்துக்கு அனுப்பி, இரண்டே மணி நேரத்தில் சுத்தமாக்கினேன். தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் செய்யப்பட்டன. போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலுள்ள இரண்டு அதிகாரிகள் தலைமையில் 40 காவலர்கள்கொண்ட ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டு, இரவு பகலாகப் பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இத்தனை ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அந்தத் தொகுதிக்குப் போகச் சொன்னபோது, அவர் என்னிடம் சொன்ன வார்த்தை, என்னை அதிரவைத்தது... ‘‘நான் இனி உயிரோடு இருக்கப் போவதில்லை. இவ்வளவு பெரிய அவமானத்தைச் சகித்துக்கொண்டு உயிர் வாழ எனக்கு விருப்பமில்லை. உண்ணா நோன்பு இருந்து உயிரை மாய்த்துக்கொள்ளப் போகிறேன்!’’ என்றார்.

என் மனதில் தோன்றியதை நான் பேசினேன்...

‘‘நீங்கள் முற்றும் துறந்த துறவிதானே... உங்கள் பார்வையில், உள்ளே இருந்தால் என்ன, வெளியுலகில் இருந்தாலென்ன? இரண்டும் ஒன்றுதானே. கடவுள் ஒரு சில நாள்கள் உங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கச் சொல்கிறார். சிறையைவிடப் பாதுகாப்பான இடம் வேறு ஏதும் இல்லையே!’’ என்றேன்.

அவர் சற்றே நிதானித்துவிட்டுப் பேசினார்...

‘‘என்னதான் எல்லாவற்றையும் துறந்தாலும் எனக்கென்று சில கடமைகள் இருக்கின்றன. லோக க்ஷேமத்துக்காக பூஜை செய்யாமல் சாப்பிடக் கூடாது. நான் நினைத்தவாறு சிறைக்குள் பூஜை செய்ய முடியுமா?’’ என்று கேட்டார். ‘‘உங்கள் பூஜைக்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன்’’ என்றேன். ‘‘பூஜை செய்ய தனி இடம் வேண்டும்’’ என்றார். ‘‘கொடுக்கிறேன்’’ என்றேன்.

‘‘சிறையில் கொடுக்கப்படும் உணவை என்னால் சாப்பிட முடியாது; என் ஆசாரப்படி என்னுடைய உணவு ஒரு பிராமணரால்தான் சமைக்கப்பட வேண்டும், கிணற்று நீர்தான் அருந்துவேன்’’ என்றார். ‘‘அனைத்துக்கும் ஏற்பாடு செய்கிறேன்’’ என்றேன். அவர் எதைக் கேட்டாலும், செய்து கொடுக்கும் மனநிலையில்தான் நானிருந்தேன்.

தண்டனைக் கைதியாக இருந்த ஒரு பிராமணக் கைதியால் அவருக்கு உணவு சமைக்கப்பட்டு, எனது பரிசோதனைக்குப் பிறகு அவருக்கு வழங்கப்பட்டது. காலையில் அரை லிட்டர் ராகிக்கஞ்சி, மதியம் 500 கிராம் தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம். இரவு மூன்று பூரி, 200 மி.லி பால்... அவருடைய ஒரு நாள் மொத்த உணவும் இவ்வளவுதான்! இதைச் செய்து கொடுக்க முடியாதா ஒரு சிறைக் கண்காணிப்பாளரால்?

எல்லாவற்றையும்விட அவருடைய பாதுகாப்புக்கு நான் பெரிதும் கவனம் செலுத்தினேன். அதற்குக் காரணம் உண்டு. அவரைச் சிறைக்கு அனுப்பிய பிறகு, அவரைப் பாதுகாப்பது குறித்து எந்த ஓர் அறிவுறுத்தலும் அரசுத் தரப்பிலிருந்து எனக்கு வரவில்லை. ஆனால், வெளியிலிருந்து பலரும் அவரைப் பத்திரமாகப் பாதுகாக்கச் சொல்லி என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள்.

அதில் நான் எதிர்பாராத ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. ஜெயேந்திரரின் பாதுகாப்புக்கு நான் அவ்வளவு மெனக்கெட்டதற்கு அவர் பேசியதும் மிக முக்கியக் காரணம்.

(கதவுகள் திறக்கும்)