மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 54 - கம்பிகளுக்குள் அடைக்க முடியாத காற்று!

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

கடுங்காவல் தண்டனை என்றால் என்ன... எப்போதும் பூட்டியே வைப்பீர்களா?” என்று கேட்டார்.

1987 ஏப்ரல் 4, சூரியன் ஓய்ந்துவிட்ட மாலையிலும் அனல் தணியவில்லை. சென்னை மத்தியச் சிறைக்குள்ளும் வெப்பம் தகித்தது. குழப்பத்துடன் என்னை நோக்கி வந்த உதவிச் சிறை அலுவலர், “ஒரு அட்மிஷன். ஆனால் நீதிமன்ற ஆணை ஏதுமில்லை!” என்றார். அவருடைய கையில் ஒரு கவர் இருந்தது. அதைப் பிரித்துப் பார்த்தேன்.

‘ஆனந்த விகடன்’ ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனை மூன்று மாதம் சிறைவைப்பதற்கு, தமிழ்நாடு சட்ட மன்றத்தில் சபாநாயகரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை அதில் இருந்தது.

எனது பணிக்காலத்தில் இப்படி ஒரு நேர்வை நான் சந்தித்ததே இல்லை. என் மேலதிகாரிகளிடம் பேசினேன். அவர்கள், “சட்டசபை சபாநாயகருக்கு யாரையும் தண்டிக்க அரசியலமைப்புச் சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது. எனவே, அந்தக் கடிதத்தை வாரன்ட்டாக பாவித்து அவரைச் சிறையில் அடையுங்கள்’ என்று சொன்னார்கள்.

அவரை அழைத்து வந்தார்கள். அவரிடம் விசாரித்தேன்... ‘‘என் பெயர் பாலசுப்ரமணியன். ‘ஆனந்த விகடன்’ வார இதழின் ஆசிரியர்!’’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். “என்ன குற்றம் செய்தீர்கள்?” என்று கேட்டேன்.

‘‘எம்.எல்.ஏ-க்கள், மந்திரிகளை விமர்சிக்கும் ஒரு கார்ட்டூனைப் பிரசுரம் செய்தேன்” என்றார்.

“கடுங்காவல் தண்டனை என்றால் என்ன... எப்போதும் பூட்டியே வைப்பீர்களா?” என்று கேட்டார். நான் அவருக்குச் சிறையைப் பற்றி விளக்கினேன்... ‘‘எப்போதும் பூட்டிவைக்க மாட்டோம். நீங்கள் சிறைச்சாலைத் தொழிற்கூடத்தில் வேலை செய்ய வேண்டும்.” என்றேன். “கைதி உடை?” என்று கேட்டார். “காலையில் ஏற்பாடு செய்து தருகிறோம்” என்றேன். “உங்களுக்குச் சிறையில் சாதாரண வகுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் சமூகத்தில் மிகுந்த அந்தஸ்தில் உள்ளவர். ‘ஏ’ கிளாஸ் சலுகை வாங்கி வந்திருக்கலாமே... சாதாரண கைதிகளுக்கான உணவை நீங்கள் சாப்பிடுவீர்களா?’’ என்று கேட்டேன்.

ஜெயில்... மதில்... திகில்! - 54 -  கம்பிகளுக்குள் அடைக்க முடியாத காற்று!

அதற்கு ‘‘நான் மிகவும் எளிமையானவன். பெரிதாக வசதிகள் எதுவும் எனக்குத் தேவையில்லை. சாதாரண கைதிகளுக்கு என்ன வசதி இருக்கிறதோ அதைச் செய்து கொடுங்கள். சிறை உணவை உண்பவர்களும் மனிதர்கள்தானே... பரவாயில்லை. நான் சமாளித்துக் கொள்கிறேன்!’’ என்றார் புன்னகையோடு.

அவர் சற்றுப் பருமனாக இருந்ததால், இருப்பிலிருந்த கைதிகளுக்கான உடை எதுவும் அவருக்குச் சரியாக இல்லை. எனவே, இரவோடு இரவாக அவரது அளவுக்கு ஏற்றவாறு காடாத்துணியில் முரட்டுச் சட்டையும் அரை டிராயரும் தைக்கப்பட்டு, மறுநாள் காலையில் அவர் எழுந்ததும் தரப்பட்டன. அவையும் அவருக்கு இறுக்கமாகவே இருந்தன. “இன்னும் கொஞ்சம் லூஸாகத் தைத்துக்கொடுங்கள்!” என்று கேட்டுக்கொண்டார்.

சிறையில், காலை 8 மணிக்கு அவருக்குக் கஞ்சி தரப்பட்டது. வராண்டாவில் ரொம்பவே சிரமப்பட்டுத்தான் தரையில் அமர்ந்தார். ஒரு குவளையில் சூடான கோதுமைக்கஞ்சியும், புளிச்சட்னியும் வழங்கப்பட்டன. மெதுவாக கஞ்சியை ஊதி ஊதிச் சாப்பிட ஆரம்பித்தார். சூடான கஞ்சி, வெயிலின் உக்கிரம், காரச்சட்னி... உடல் முழுவதும் வியர்வைக் குளியல். புளிச்சட்னியின் காரம் கண்களில் ஏற, நீர் அருவியாகக் கொட்டியது.

முகம் துடைக்க அவருக்குத் துண்டு ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. உடலையும் முகத்தையும் துடைத்துக்கொண்டே யிருந்தார். காரம் தலைக்கேற, ‘உஷ்...’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். அவருடைய கஷ்டத்தைப் பார்த்து, ‘வேறு ஏதாவது உணவுக்கு ஏற்பாடு செய்யட்டுமா?’ என்று கேட்டேன்.

‘‘வேண்டாம்... இந்தக் கஞ்சியும் புளிச்சட்டினியும் மிகவும் திவ்யமாக இருக்கிறது!’’ என்று கூறிவிட்டு ஒரு சொட்டுக்கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடித்துவிட்டு, ‘‘இன்னும் கொஞ்சம் கிடைக்குமா?’’ என்று கேட்டு என்னை அசரடித்தார். நான் ‘‘இல்லை அளவுதான்!’’ என்றேன்.

‘Born with silver spoon’ என்று சொல்வார்கள். இவரோ ‘Born with golden spoon’ என்று சொல்லக்கூடிய அளவுக்குச் செல்வந்தராக இருந்தபோதிலும், சிறைக்கஞ்சி அவருக்கு திவ்யமாக இருந்ததில் எனக்கு ஆச்சர்யம். அவரிடமே அதைப் பற்றிக் கேட்டேன்.

‘‘நான் பத்திரிகைக்காரன்... நாடெங்கும் சுற்றி செய்தி சேகரிப்பவன். அதனால், எங்கே என்ன கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டுப் பழகிக்கொண்டேன். மரத்தடி நிழல் கிடைத்தாலே நிம்மதியாகத் துாங்கிவிடுவேன். எத்தனையோ இரவுகளில் காரின் மேற்பகுதியில் தூங்கியிருக்கிறேன். களத்தில் இடைவிடாமல் உழைத்த உழைப்பால்தான், எனது பத்திரிகை தமிழ் உலகில் இன்னும் முதலிடத்தில் இருக்கிறது!’’ என்றார்.

எனக்கு அவருடைய நேர்மையான பேச்சு மிகவும் பிடித்துப்போனது. சிறையைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று கேட்டார், சுற்றிக் காட்டினேன். ``எப்படி உங்களால் இத்தனை குற்றவாளிகளையும் ஒரே இடத்தில்வைத்துப் பாதுகாக்க முடிகிறது?’’ என்று கேட்டார். ‘‘அன்புதான்... நான் அவர்களிடம் அன்பாக இருக்கிறேன். அதை அவர்கள் திருப்பித் தருகிறார்கள். எது கொடுக்கப்படுகிறதோ அதுதானே திருப்பிக் கிடைக்கும்!’’ என்றேன்.

அவருடைய கைதுக்கு தமிழகம் மட்டுமன்றி, நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழக சட்டசபை நிகழ்வுகளை வரலாற்றில் முதன்முறையாக அனைத்துப் பத்திரிகைகளும் புறக்கணித்தன. ஆசிரியரை மன்னிப்பு கேட்கச் சொன்னது சட்டமன்றம். ‘தன்னை விசாரிக்காமலேயே மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை கொடுத்தது தவறு’ என்று மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். ‘அரசு தன்னை தண்டித்தது தவறு’ என்றும், `தனி மனிதச் சுதந்திரம் காக்கப்பட வேண்டும்’ என்றும் வழக்கு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தொடுத்தார். அவரது உறுதியைக் கண்ட அரசு சற்று பின்வாங்கியது. ‘மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும்’ என்று சட்டமன்றத்தை அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டார். சட்டமன்றமும் முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க ஆசிரியரை விடுதலை செய்தது.

‘பத்திரிகையாளர்கள் சிறை வாயிலின் முன் கூடுவதற்கு முன்பாக, அவரை உடனடியாக விடுதலை செய்து அனுப்பிவிட வேண்டும்’ என்று அரசு கட்டளையிட்டது. நான் ஆசிரியரிடம் சென்று, “உங்களுக்கு விடுதலை வந்துவிட்டது. உடனடியாகப் புறப்படுங்கள்” என்றேன். “ஏன் அவ்வளவு அவசரம், நான் சிறையை முழுவதுமாகக்கூடச் சுற்றிப் பார்க்கவில்லை. கொஞ்சம் இருந்துவிட்டு மெதுவாகப் போகிறேனே...” என்றார். நான் பேசியதைவைத்து, அரசின் அவசரத்தை அவர் புரிந்துகொண்டார்.

ஜெயில்... மதில்... திகில்! - 54 -  கம்பிகளுக்குள் அடைக்க முடியாத காற்று!

“நீங்கள் வெளியே வருவதுபோல படமெடுக்க அனுமதிக்க வேண்டாமென்று உத்தரவு. ஒத்துழையுங்கள்” என்றேன். “நான் வெளியே வருவதைப் படமெடுக்க பத்திரிகையாளர்களுக்கு உரிமை உண்டே...” என்றார். சிறை வாயில் வழியே அவர் வெளியில் செல்வதை யாரும் பார்க்க முடியாதபடி, போலீஸ் லாரி ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்தியிருந்தேன். மற்ற கைதிகளை அதில் ஏற்றுவதற்கு இடையில், ஆசிரியரை அழைத்துக்கொண்டு நான் சிறைக்கு வெளியே வந்துவிட்டேன். அவருக்குக் குடை பிடிப்பதுபோல் அவரது முகத்தை மறைத்து, சிறைவளாகத்துக்கு வெளியே கொண்டுவந்து பத்திரிகையாளர்களின் கண்களில் படாமல் விட்டுவிட்டேன்.

அப்போது அவர், ``நான் சிறைச்சாலைக்கு உள்ளிருந்து வெளியே வருவதுபோல ஒரு புகைப்படம் பத்திரிகைகளில் வந்துவிடக் கூடாது என்பதில் உங்கள் முதல்வர் குறியாக இருக்கிறார். நான் பத்திரிகைக்காரன் மட்டுமல்ல, சினிமாக்காரனும்தான். நான் நினைத்தால், இந்தச் சிறை வாயிலைப்போல் ஒரு செட் போட்டு அதிலிருந்து நான் வெளியே வருவதுபோல படம் எடுத்துவிடுவேன்!’’ என்றார்.

“அப்படியெல்லாம் ஒன்றும் செய்து விடாதீர்கள்... என்மீது நடவடிக்கை எடுத்து விடுவார்கள்” என்றேன். அவர் சிரித்துக்கொண்டே, “இந்த ராமச்சந்திரனுக்காக விட்டுவிடுகிறேன்!” என்றார். அவருடன் பழகியது மூன்றே நாள்கள்தான். ஆனால், ஆயுள் முழுவதுக்கும் மறக்க முடியாத நினைவுகள் அவை.

‘யாருக்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம், எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம்’ என்ற மகாகவி பாரதியின் வார்த்தைகளுக்கு ஏற்ப உறுதியோடு வாழ்ந்த ஆசிரியர் பாலசுப்ரமணியன், பத்திரிகை உலகின் பீஷ்மர்.

அவருடைய சிறைவாசம்... தமிழ்ப் பத்திரிகை உலகுக்குத் தந்தது நிரந்தர விடுதலை!

(கதவுகள் மூடப்படுகின்றன)

சிறைவாசிகளும் மனிதர்கள்தான்!

என்னுடைய சிறைத்துறைப் பணி வாழ்வின் அனுபவங்களை, ஒரு வரலாற்று ஆவணமாகப் பதிவு செய்ய வேண்டும் என்பது எனது நீண்டகால விருப்பமாக இருந்தது. அதற்குக் களம் அமைத்துத் தந்தது ‘ஜூனியர் விகடன்.’ என்னுடைய 39 ஆண்டுக்காலப் பணி அனுபவத்தில், நான் சந்தித்த வி.ஐ.பி-களை, வித்தியாசமான மனிதர்களை, விபரீதமான நிகழ்வுகளை, கடந்த 27 வாரங்களாக 54 இதழ்களில் எவ்விதமான மிகைப்படுத்தலுமின்றி, உள்ளது உள்ளபடியே நான் பதிவுசெய்திருக்கிறேன்.

`ஜெயில்... மதில்... திகில்!’ என்ற இந்தத் தொடர் வெளிவரத் தொடங்கியதிலிருந்து இன்றுவரையிலும் நினைத்தே பார்த்திராத அளவுக்கு அழைப்புகள், விசாரிப்புகள், பகிர்வுகள், பாராட்டுகள். என் தொடரில் நான் சொல்ல நினைத்த விஷயங்கள் இவைதான்...

சிறைவாசிகளும் மனிதர்கள்தான்! வெளியில் இருப்போர் எல்லோரும் உத்தமர்கள் இல்லை; உள்ளே இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகளும் இல்லை. சமூகத்தால், சந்தர்ப்பத்தால் குற்றவாளிகளாக ஆனவர்களே அதிகம். அவர்களின் இதயங்களிலும் அன்பு, ஈரம், கனிவு, காதல், பாசம் எல்லாம் இருக்கின்றன.

சிறை என்பது முன்பு தண்டிக்கும் இடமாக இருந்தது. இப்போது, மனித மனங்களைச் செப்பனிடும் பட்டறையாக மாறியிருக்கிறது. சிறைவாசிகளைப் புறக்கணிப்பதும் வெறுப்பதும் அவர்களை மீண்டும் குற்றத்தின் திசையிலேயே பயணிக்கவைக்கும். இந்தத் தொடர், சிறைவாசிகளைப் பற்றி மக்களின் மனங்களிலிருந்த சித்திரத்தை மாற்றியிருக்க வேண்டுமென்று விழைகிறேன். சிறைத்துறையில், இன்னும் பல மாற்றங்களை அரசு கொண்டுவர வேண்டியிருக்கிறது. அது விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். என்னுடைய அனுபவத் தொடர், அரசுக்கு அதைப் பற்றிய யோசனையை விதைத்திருக்கும் என் நம்புகிறேன்.

`சிறையில் அவரைக் கொடுமைப்படுத்தி யிருக்கலாம்’ என்று விகடன் ஊழியர்கள் உள்ளிட்ட எல்லோரும் நினைத்தார்கள். `இல்லை’ என்று அவர் சொன்னதை யாரும் நம்பவில்லை. அதனால் என்னிடம், அலுவலகத்துக்கு வந்து தம் ஊழியர்களிடம் 10 நிமிடங்கள் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆசிரியர்கள் குழுவையும் பத்திரிகையின் முக்கியஸ்தர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தினார்.

ஜெயில்... மதில்... திகில்! - 54 -  கம்பிகளுக்குள் அடைக்க முடியாத காற்று!
படம்: க.பாலாஜி

‘‘சிறையிலிருந்து வந்ததிலிருந்து உங்களின் அன்பைப் பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறார். எங்கள் எம்.டி-யை நல்லமுறையில் கவனித்துக் கொண்டதற்கு நன்றி சொல்ல அழைத்தோம்!’’ என்றார்கள் ஊழியர்கள். அவருடைய மூன்று நாள் சிறை அனுபவத்தை அங்கிருந்த எல்லோரிடமும் நான் பகிர்ந்தேன்.