மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - புதியதொடர் - 6

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

கோவை சிறைச்சாலை... உள்ளே கள்ளநோட்டு தொழிற்சாலை!

`மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை... எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை’ புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகள் இவை. மற்ற சிறைச்சாலைகளுக்கு எப்படியோ... கோவை சிறைச்சாலை வளாகத்துக்கு இந்த வரிகள் அப்படியே பொருந்தும்.

நான் முதலில் பணியில் சேர்ந்தது அங்குதான். அந்தச் சிறைச்சாலையை நான் மறக்கவே முடியாது. அதை `சிறைச்சாலை’ என்று சொல்வதைவிட, `சிறைச்சோலை’ என்பதே சரி. 1874-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சுமார் 169 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது கோவை சிறைச்சாலை. அப்போதே அது ஓர் அடர்வனம். இப்போதும் பெரிதாக ஒன்றும் மாறிவிட வில்லை. குறுங்காடு எனலாம்.

இன்றைய அதிநவீன மாநகரமான கோவையின் நுரையீரலும் அதுவே. பல லட்சம் வாகனங்கள் வெளியேற்றும் கார்பனை உள்வாங்கிக்கொண்டு, ஆக்ஸிஜனை உற்பத்திசெய்யும் பசுமைத் தொழிற்சாலையாகத் திகழ்கிறது அது. ஏராளமான பறவைகள், வெளவால்கள், சிறு ஊர்வன உயிரினங்கள் அங்கு உயிர்த்திருக்கின்றன. அதனால்தான், `இந்தச் சிறைச்சாலையை ஊருக்கு வெளியே மாற்றிவிட்டு, சர்வதேச தரத்திலான தாவரவியல் பூங்காவாக மாற்றப்படும்’ என்று 2010-ம் ஆண்டில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் அன்றைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆட்சி மாற்றத்தால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இப்போது நகரின் மையப்பகுதியில் உள்ள இந்தச் சிறைச்சாலையைச் சுற்றியே முக்கியமான நான்கு பேருந்து நிலையங்கள் உள்ளன. காந்திபுரம், கிராஸ் கட் ரோடு, நூறடி ரோடு என பிரதான வர்த்தகப் பகுதிகளும் சிறையையொட்டியே உள்ளன. நான் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் சிறையின் அருகில் ஆள் நடமாட்டமே இருக்காது. வ.உ.சி பூங்காவில் ஆரம்பித்து காந்திபுரம், பாப்பநாயக்கன்பாளையம் வழியாக பி.ஆர்.எஸ் காவலர் பயிற்சிப் பள்ளி வரை கைதிகளாலேயே கட்டப்பட்ட பிரமாண்டமான மண்சுவர் நீண்டு இருந்தது. அதன் உயரம் 15 அடி இருக்கும்.

ஜெயில்... மதில்... திகில்
ஜெயில்... மதில்... திகில்

தற்போதைய போலீஸ் குடியிருப்பிலிருந்து சித்தாபுதூர் வரை சிறைக்குச் சொந்தமான மயானம் உள்ளது. மண்ணால் கட்டப்பட்ட ஒவ்வொரு சமாதிக்கும் ஓர் எண் வழங்கப்பட்டி ருக்கும். அந்த மயானத்தில் எப்போதுமே இரண்டு, மூன்று குழிகள் ‘அடுத்தது யார்?’ என்பதுபோல் வாய் பிளந்து காத்திருக்கும். அவையும் கைதிகளால் வெட்டப்பட்டவையே! தப்பித்தவறி சிறைவளாகம் வழியாகச் செல்ல நேரிடுபவர்கள்கூட மறந்தும் இந்த மயானம் பக்கம் வர மாட்டார்கள். பகலிலேயே அப்படி ஓர் அமைதி நிலவும். மயான அமைதி!

கணபதி முதல் கடைவீதி வரை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை பஸ் ஒன்று இந்த வழித்தடத்தில் செல்லும். இன்றைக்கு பரபரப்பான பாப்பநாயக்கன்பாளையம் அன்றைக்கு கரும்புக்காடு மட்டுமே. காற்றில் கரும்புத்தோகை சரசரக்கும் சத்தம் எப்போதும் கேட்கும்.

இரவில் கூடுதலாக நரிகள் ஊளையிட்டு சரசர சத்தத்துக்கு ஓர் அமானுஷ்யத்தைக் கூட்டும்.

அடுத்து பி.ஆர்.எஸ் காவலர் பயிற்சிப்பள்ளி, தொடர்ச்சியாக ஜி.டி.நாயுடுவின் யு.எம்.எஸ் நிறுவனம், அதன் அருகில் பிரபலமான ஸ்டேன்ஸ் பள்ளி என, சிறையை அடுத்து தனித்தனி கட்டடங்கள் இருக்கும். ஸ்டேன்ஸ் பள்ளிக்கு எதிரில் ஆர்.கே. ஸ்ரீரங்கம்மாள் கல்வி நிலையம். இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே.சண்முகம் செட்டியாரால் நிறுவப்பட்டது அது. நான் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்ததும் அங்குதான். நான்கு ரூபாய் நுழைவுக்கட்டணம் செலுத்தி அங்கு சேர்ந்தேன். அதன் பிறகு முழுக்க இலவசக் கல்வி. அதுவும் தரமான கல்வி.

தற்போது சிறைக்காவலர்கள் குடியிருப்பு இருக்கும் பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட சிறிய மண்குன்று ஒன்று இருந்தது. அங்குதான் சிறைக்காவலர்களுக்கு துப்பாக்கியால் சுடும் பயிற்சி அளிக்கப் பட்டது. சிறையின் சுற்றுச்சுவரின் பின்புறம் ‘Ejector’ என்கிற சிறியவழி ஒன்றும் இருந்தது. அது டிராலி வடிவிலான இரும்புத்தளம். சிறையின் கழிவுகள் அனைத்தையும் அங்குவைத்து வெளியே தள்ளி விடுவார்கள். வெளி வேலைக்காக அழைத்து வரப்பட்ட சிறைவாசிகள், அந்தக் கழிவுகளை வாரி அதற்குரிய இடத்தில் கொட்டுவார்கள்.

சிறையின் கழிவுநீர், ஒரு கால்வாய் வழியாக வெளிப்புறம் ஆறாம் தோட்டம் என்ற இடத்தில் வளர்க்கப்படும் சீமைப் புல்வெளிக்குச் செல்லும். அந்தச் சீமைப் புல் சிறையில் உள்ள கால்நடைப் பண்ணையின் பசுக்களுக்குத் தீவனமாக உபயோகப் படுத்தப்படும். சுமார் 100 கால்நடைகளுக்குமேல் அங்கே பராமரிக்கப்பட்டன. கறவை மாடுகளின் பால், சிறைக்கைதிகள் உபயோகத்துக்குப் பயன்படுத்தப்படும்.

சிறையின் தெற்கு வாசலுக்கு அடுத்து சிதம்பரம் பூங்கா இருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, கோவை சிறையில் 1908-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி முதல் 1910, டிசம்பர் 1-ம் தேதி வரை ஆங்கிலேயர்களால் அடைக்கப்பட்டு பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்தார். அப்போது, எண்ணெய் தயாரிக்க மனிதர்களால் இழுக்கப்படும் பிரமாண்டமான செக்கு பயன்படுத்தப்பட்டது. வ.உ.சிதம்பரத்துக்கு செக்கு இழுக்கும் வேலை வழங்கப்பட்டது. எனவேதான் அவரை ‘செக்கிழுத்தச் செம்மல்’ என்கிறார்கள்.

ஜெயில்... மதில்... திகில்
ஜெயில்... மதில்... திகில்

சிதம்பரம் பூங்காவிலிருந்து மேற்கு சிறைவாசல் வரை உள்ள இடத்தில் சிறைக் கண்காணிப்பாளரின் பங்களா அமைந்துள்ளது. 20 ஏக்கர் தோட்டத்துக்கு மத்தியில் பிரமாண்டமாக இருக்கிறது அந்த பங்களா. மேற்கு வாயிலின் முன்புறம் முனியப்பன் கோயில் ஒன்று உள்ளது. சொல்லப்போனால்,

எல்லா சிறைச்சாலைகளின் முகப்பிலும் முனீஸ்வரர் கோயில் ஒன்று இருக்கும்.

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் எதிரே முன்பு அமைந்திருந்த சிறைச்சாலைக்கு அருகில் அமைந்திருக்கும் பாடிகாட் முனீஸ்வரர் கோயிலே அதற்கு சாட்சி.

கோவை மத்திய சிறையில், சுமார் 2,300 கைதிகளை அடைக்கலாம். சிறையின் நடுவில் ஒரு டவர். அதைச் சுற்றி பத்து பிளாக்குகள். ஒவ்வொரு பிளாக்கிலும் 60 அறைகள். ஓர் அறைக்கு மூன்று பேர் வீதம் 180 பேர் வரை அடைத்து வைக்கப் படுவார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி வாயில் கதவுகள். சிறை வளாகத்துக்குள் உள்ள பொதுவான சமையல்கூடத்தில்தான் அத்தனை கைதிகளுக்கும் சமையல் செய்யப்படும். அந்தக் காலத்தில் சிறைவாசிகளுக்குக் கொடுக்கப்படும் உணவு அவ்வளவு தரமாக இருக்காது.

காலையில் சோளக்கஞ்சி ஒரு லிட்டர் தருவார்கள். தொட்டுக்கொள்ள விரல்கட்டை அளவுக்கு புளிச்சட்டினி. மதியம் 11.30 மணிக்கு 750 கிராம் சோளக்களி. கொஞ்சம் மோர், சாம்பார் தருவார்கள். சிறைத் தோட்டங்களில் விளைவிக்கப்படும் முள்ளங்கி, தண்டுக்கீரை உள்ளிட்டவை சாம்பாரில் பயன்படுத்தப்படும். மாலை 60 கிராம் சுண்டல். இரவுச் சாப்பாடு திரும்பவும் அதே சோளக்களிதான். 600 கிராம் தருவார்கள். சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இந்த உணவுதான். நம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்த உணவைச் சாப்பிட்டுதான் நமக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்கள். அந்தச் சோளக்களியை நிம்மதியாகச் சாப்பிட முடியுமா என்றால் முடியாது. கவளத்துக்குக் கவளம் கல்லுக்கும் பல்லுக்கும் பெரும் போராட்டமே நடைபெறும். இந்தப் பிரச்னையைச் சமாளிக்க கைதிகள் பலரும் களியை மோரிலோ தண்ணீரிலோ கரைத்துக் குடித்துவிடுவார்கள்.

சமையல்கூடத்தைக் கடந்து சென்றால் குற்றக்காவலர்கள் தொகுதி (Convict Warder block) இருக்கும். குற்றக்காவலர்கள் பெரும்பாலும் ஜென்ம தண்டனை பெற்றவர்கள். ஒரு ஜென்மம் என்றால் சிறைக்கணக்குப்படி 20 ஆண்டுகள். இவர்கள் சிறையில் எந்தக் குற்றமும் செய்யாமல் ஒழுக்கமாக இருந்தால் சில பதவிகள் வழங்கப்படும். முதலில் நைட் வாட்ச்மேன் பதவி. சாதாரண தண்டனைக் கைதிகளுக்கு மாதத்தில் நான்கு நாள்கள் தண்டனைக் குறைப்பு வழங்கப்படும்.

நைட் வாட்ச்மேன் பணி செய்பவர்களுக்கு ஐந்து நாள்கள் தண்டனைக் குறைப்பு வழங்கப்படும்.

இந்தப் பணியை சிறப்பாகச் செய்தால் அடுத்து ‘ஓவர்சீர்’ என்ற பதவி உயர்வு வழங்கப்படும். அவர்களுக்கு மாதத்தில் ஆறு நாள்கள் தண்டனைக் குறைப்பு வழங்கப்படும். அடுத்து Convict Warder Promotion. இவர்களுக்கு மாதம் எட்டு நாள்கள் தண்டனைக் குறைப்பு வழங்கப்படும். இவர்கள் ஜெயில் வார்டர்களுக்கு உதவியாகப் பணிபுரிவார்கள். இவர்களுக்கு மாத ஊதியமும் வழங்கப்படும்.

நான் சொன்னதை வைத்து கோவை மத்திய சிறைச்சாலையைப் பற்றி உங்களுக்குள் ஒரு சித்திரம் வந்திருக்கும். அதேசமயம், வரைமுறைக்கு உட்பட்டுதான் மேற்கண்ட விஷயங்களை நான் சொல்லியிருக்கிறேன். பாதுகாப்பு காரணம் கருதி பல விஷயங்களை நாங்கள் வெளியே சொல்ல முடியாது. இங்கு நான் சொல்லவுமில்லை. இவ்வளவு பிரமாண்டமும், இயற்கை எழிலும், பாதுகாப்பு அரணும் கொண்டிருந்த இந்தச் சிறைச்சாலைக்குள்தான் அந்தக் காலத்தில் அச்சு அசலாக கள்ளநோட்டும் கள்ளநாணயமும் அச்சடிக்கப்பட்டு கோவை மாநகரில் புழக்கத்தில் விடப்பட்டன என்றால், உங்களால் நம்ப முடிகிறதா! ஆம், கள்ளநோட்டு அச்சடித்த குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்ட ஒரு கைதியும், பட்டறையில் வேலைபார்த்து குற்றவாளியாகி உள்ளே வந்த மற்றொரு கைதியும்தான் இந்த ஜெகஜ்ஜால வேலையைச் செய்தவர்கள்.

அவர்களைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.

(கதவுகள் திறக்கும்)