
சுடச்சுட எட்டணா... பளப்பள நோட்டு!
கோவைக்கு இயற்கை தந்த கொடை, அதன் சீதோஷ்ண நிலை. அங்கு உள்ள மனிதர்களுக்கு வாய்த்துள்ள வரம், அற்புதமான தொழில் நுட்ப அறிவு. சின்னஞ்சிறிய உபகரணமாக இருந்தாலும் எவ்வளவு பெரிய இயந்திரமாக இருந்தாலும் ஒருமுறை பார்த்துவிட்டால் அதை அப்படியே செய்துவிடும் திறன் அங்கு உள்ள மக்கள் பலருக்கும் இயற்கையாகவே வாய்த்திருக்கிறது.
வெளிநாட்டுப் பொருளைப் பார்த்தால் டெல்லியிலும் அதே போல் பொருள் தயாரிப்பார்கள். ஆனால், அதில் தரத்தை எதிர் பார்க்க முடியாது. கோயம்புத்தூர்க் காரர்கள், தாங்கள் பார்க்கும் பொருளைவிட தரமாகவும், மக்களுக்கு மிகக் குறைவான விலையில் கிடைக்கு மாறும் செய்துவிடுவார்கள். இந்தத் தொழில்நுட்ப அறிவு, அந்தக் காலத்தில் தவறாகவும் பயன் படுத்தப்பட்டிருக்கிறது.
கோவை என்றாலே கள்ளநோட்டு அச்சடிக்கும் இடம் என அச்சப்படும் அளவுக்கு ஒரு காலத்தில் நிலைமை இருந்தது. அப்போதுதான் கோவை மத்திய சிறையிலும் கள்ளநோட்டு அடிக்கப்பட்டது.ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி, சிறைத்துறை
தமிழ்நாட்டுச் சிறைகளிலேயே அனைத்து தொழிற்கூடங்களும் உள்ள சிறை, கோவை மத்திய சிறைதான். அந்தக் காலத்தில் கோவை மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான நூற்பாலைகள் இருந்தன. சிறைக்குள்ளும் ஸ்பின்னிங், வீவிங், டையிங், கைத்தறி, கூடாரம் செய்தல், கயிறு தயாரித்தல், காகிதம் செய்தல், கருமான் பட்டறை உள்ளிட்ட பல தொழிற்கூடங்களும் இருந்தன. அவற்றில் 1,500-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் வேலை செய்துகொண்டிருப்பர்.
அந்தக் காலத்தில், நேரு தலை பதிக்கப்பட்ட எட்டணா காசு அதிகமாகப் புழங்கிக்கொண்டிருந்தது. சிறையின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு கடை இருக்கும். அந்தக் கடையில் புதுப்புது எட்டணா காசுகளின் புழக்கம் திடீரென அதிகமானது. சிறைக் காவலர்கள் சிலர், எட்டணா காசுகளாகக் கொடுத்து சாமான் வாங்கிச் சென்றனர். அந்தக் கடைக்காரர், தான் மொத்தமாகக் கொள்முதல் செய்யும் கடையிலும் எட்டணா காசுகளைக் கொடுத்து பொருள்களை வாங்கிவந்தார்.
ஏதோ ஒரு சந்தேகத்தில் அந்தக் காசுகளை யாரோ ஒருவர் ஆராய்ந்துபார்த்தபோதுதான், அவை கள்ள நாணயங்கள் என்பது தெரியவந்தது. இதைப் பற்றி தீவிரமாக விசாரித்ததில், சிறையிலிருந்து சுடச்சுட காசுகள் விநியோகிக்கப்படும் தகவல் கிடைத்தது. ரூட் பிடித்துப் பார்த்தபோது சிறைக்குள் உள்ள கருமான் பட்டறையில்தான் அங்கு உள்ள உலோகங்களை வைத்து எட்டணா தயாரித்தது தெரியவந்தது. ஒரு கட்டு பீடியும் இரண்டு எட்டணா நாணயங்களையும் கொடுத்தால், அந்தக் காசுகளைவைத்து ‘மோல்டு’ செய்து சுடச்சுட 20 ரூபாய் மதிப்பு எட்டணா காசுகளாகக் கொடுத்துவந்திருக்கிறார். அவரைப் பிடித்துவிட்டோம்.
கள்ளநாணயம் மட்டுமல்ல, கள்ள நோட்டும் அங்கே தயாரிக்கப்பட்டது என்பதுதான் எல்லோரையுமே அதிரவைத்த விஷயம். வேலியே பயிரை மேய்ந்தது என்பார்கள். ஆனால், இங்கே வேலியும் ஆடும் சேர்ந்து பயிரை மேய்ந்த விநோதம் நிகழ்ந்தது. ஆம், கள்ளநோட்டுத் தயாரிப்பில் சிறைக்காவலர்களும் சம்பந்தப்பட்டிருந்தனர்.
கள்ளநோட்டு தயாரித்த அந்தக் கைதியின் பெயரும் இன்னும் என் நினைவில் இருக்கிறது. பாஸ்கரன்! கள்ளநோட்டு தயாரித்த வழக்கில்தான் அவன் கைதாகி சிறைக்குள் வந்திருந்தான். இப்போது இருப்பதைப்போல் கள்ளநோட்டைக் கண்டுபிடிக்க அப்போதெல்லாம் மெஷின் எதுவும் கிடையாது. தோராயமாகத் தடவிப் பார்த்தும் அச்சின் நிறத்தில் உள்ள வேறுபாட்டை வைத்தும்தான் சந்தேகமே கிளம்பும். இல்லாவிட்டால், எவ்வளவு பெரிய வியாபாரியாக இருந்தாலும் வாங்கிப் போட்டுக்கொண்டு, அடுத்த வியாபாரத்தைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
அந்தக் காலத்தில் பிரின்டிங் மெஷின் வைத்து கள்ளநோட்டு தயாரித்தவர்களைப் பற்றியெல்லாம் பல கதைகள் சொல்லப்படும். ஆனால், சிறைக்குள்ளே அச்சு இயந்திரத்தை எப்படி கொண்டு வர முடியும்? பாஸ்கரனின் தொழில்நுட்பம் தனித்துவமானது, எளிமையானது. அவன் கள்ளநோட்டைத் தயாரிக்கப் பயன்படுத்தியது, சோப் டப்பா அளவுள்ள ஓர் அச்சு மட்டுமே. அதை வைத்து அவன் தயாரிக்கும் கள்ளநோட்டை வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் அவனுடைய சிறப்பு.
பாஸ்கரனின் தில்லாலங்கடி வேலை களைப் பற்றிக் கேள்விப்பட்ட இரண்டு சிறைக்காவலர்கள், அவனிடம் ஒருநாள் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் பாஸ்கரன்,
‘‘சார், நான் கேக்குற நாலஞ்சு பொருள்களை மட்டும் கொண்டுவாங்க. இங்கேயே உங்களுக்கு பளப்பளன்னு நோட்டு அச்சடிச்சுத் தர்றேன்’’என்று சொல்லியிருக்கிறான்.
அதை எப்படியெல்லாம் விநியோகிக்கலாம் என்றும் அவனே ஐடியா கொடுத்திருக்கிறான்.
அவன் பேசுவதைக் கேட்டதும், சிறைக்காவலர்கள் இருவருக்கும் பேராசை துளிர்விட்டிருக்கிறது. பாஸ்கரன் விரித்த வலையில் விழுந்த அந்தச் சிறைக்காவலர்கள், தங்களுடைய திட்டத்துக்குத் துணையாக அதே பிரிவில் வேலைபார்க்கும் மற்றொரு சிறைக்காவலரையும் சேர்த்துக் கொண்டனர். தன் வீட்டில் இருந்த அச்சை வாங்கிவருமாறு பாஸ்கரன் உத்தரவுபோட, அதை எடுத்து வந்து கொடுத்திருக்கிறார் ஒரு சிறைக்காவலர். அவன் கேட்ட காகிதங்கள், பெயின்ட்டுகள், கத்தரி எல்லா வற்றையும் கமுக்கமாக உள்ளே கொண்டு வந்து சேர்த்திருக்கின்றனர்.

இந்திய அரசு அப்போதுதான் 20 ரூபாய் நோட்டுகளைப் புதிதாக வெளியிட்டிருந்தது. சிறைக்காவலர்கள் கொடுத்த பொருள்களை வைத்து, பாஸ்கரன் தன் வேலையை சிறைக்குள்ளேயே செவ்வனே செய்ய ஆரம்பித்திருந்தான். அவன் அச்சடித்துக் காயவைத்து மொடமொடப்பாகக் கொண்டுவந்து கொடுத்த 20 ரூபாய் நோட்டுகளைப் பார்த்து சிறைக்காவலர்களே அசந்து போனார்கள். வெளியே எடுத்துக் கொண்டுபோய்க் கொடுத்து பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். யாருக்கும் துளியும் சந்தேகம் வராமல் போகவும், அவர்களுக்கு ஏக சந்தோஷம். அடுத்தடுத்து கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில்விட்டு, குதூகலமாக இருந்துள்ளனர். அதற்கு பிரதி உபகாரமாக சிறைக்குள் பாஸ்கரனுக்கு சிறப்புக் கவனிப்பு செய்திருக்கிறார்கள்.
இவர்களில் ஒரு சிறைக்காவலர், குறிப்பிட்ட ஒரு கடையில் தொடர்ச்சியாக புது 20 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து பொருள்களை வாங்கியிருக்கிறார். சந்தேகப்பட்ட அந்தக் கடைக்காரர் அதை வங்கியில் கொடுத்து விசாரிக்க, அது கள்ளநோட்டு எனத் தெரிந்துவிட்டது. அவரே போலீஸில் புகார் கொடுக்க, அந்தச் சிறைக்காவலரை போலீஸார் பிடித்துத் துருவித்துருவி விசாரித்தனர். அதையடுத்து, எல்லா விஷயங்களும் அம்பலத்துக்கு வந்தன. இறுதியில் பாஸ்கரனுக்கு துணையாக அந்த மூன்று சிறைக்காவலர்களும் அதே சிறையில் கைதிகளாக அடைக்கப்பட்டார்கள்.
ஆனால், நோட்டு அடிக்கப் பயன் படுத்திய அச்சு, காகிதம், மை உள்ளிட்ட பொருள்களை பாஸ்கரன் எங்கே வைத்திருக் கிறான் என்று அவன் அடைக்கப்பட்டிருந்த செல் தொடங்கி அவன் புழங்கும் அத்தனை பகுதியிலும் தேடித் தேடிப் பார்த்தும் எதுவும் கிடைக்கவில்லை. கடைசியில் அவனே அவற்றை எடுத்துக் காட்டியபோது எல்லோரும் மிரண்டுபோய்விட்டோம். அவன் உட்பட 10 சிறைவாசி கள் மட்டுமே பயன்படுத்தும் கழிவறையில்தான் அவன் இந்தக் கள்ளநோட்டைத் தயாரித்திருக் கிறான். கழிவறையில் பாதங்களை வைக்கும் பகுதியை சாதுர்யமாக உடைத்து, அதற்குக் கீழே குழிதோண்டி இந்தப் பொருள்களை மறைத்து வைத்திருந்தான்.

மொத்தம் 169 ஏக்கர் பரப்பளவுடையது கோவை சிறைச்சாலை. சிறையின் மருத்துவமனை மட்டுமே ஐந்து ஏக்கர் பரப்பளவில் இருக்கும். இங்கு 150 கைதிகள் வரை மருத்துவமனை வளாகத்தில் இருப்பார்கள். அங்கு மட்டும்தான் உள்நோயாளித் தொகுதியில் மின்விசிறி மற்றும் மின்விளக்குகள் இருந்தன. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்காகச் சமைக்கவே மிகப்பெரிய சமையலறை இருந்தது.
அதைக் கடந்து வந்தால் வாள்மேடு என்ற பகுதியில் 300 செல்கள் வரை இருக்கும். மறியல் கைதிகள் ஆயிரக் கணக்கில் கைதாகி வரும்போது, இங்கே சிறைவைக்கப் படுவர். அதுமட்டுமே 20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும். அதையடுத்து 15 ஏக்கர் பரப்பளவில் எட்டுத் தொகுதிகள்கொண்ட தனி செல்களால் ஆன பிரிவும், அதைத் தொடர்ந்து சிறைச் சாலையின் தொழிற்கூடமும் இருக்கும்.

இத்தனை இடங்களிலும் சேர்த்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் 30, 40 சிறைக் காவலர்களால் முழுமையாக மேற்பார்வையிட முடியாது. 169 ஏக்கர் பரப்பளவுள்ள அந்தச் சிறைச்சாலை வளாகத்தில் காலை முதல் மாலை வரை திறந்துவிடப்பட்ட கைதிகள் கழிவறைக்குச் செல்கிறேன் என்று சொல்லி இந்த மாதிரி காரியங்களில் ஈடுபட்டால், அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்துவிட முடியாது.
அதேபோன்று கைதிகளை நாள் முழுவதும் பூட்டி வைக்கவும் முடியாது.
அதை வாய்ப்பாகப் பயன்படுத்திதான் இந்த வேலைகளை யெல்லாம் செய்திருந்தார்கள் அந்த ஜெகஜ்ஜாலக் கில்லாடிகள்.
குற்றம் செய்துவிட்டு வரும் மனிதர்களைத் திருத்த வேண்டிய பொறுப்பில் உள்ள சிறைக்காவலர்கள், அந்தக் குற்றவாளியுடன் சேர்ந்து குற்றம் செய்து மாட்டிக்கொண்டது, சிறைத்துறை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகப் பதிவானது. அந்தச் சிறைக்காவலர்கள் மூவருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைத்தது.

சிறைக்காவலர்களுக்கு சோதனைகள் நிறையவே இருக்கின்றன. அவர்களின் பணி நாள் ஒவ்வொரு நாளும் சவாலுக்குரிய நாள்தான். அதில் தவறு செய்யவும், தவறு செய்தவர்களைத் திருத்தவும் வாய்ப்பு அதிகம். இதில் யார் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களின் பணி வாழ்வும் சுயவாழ்வும் அமையும்.
சிறைக்காவலர்களுக்கான சவால்கள் குறித்து அறியும் முன், தமிழகத்தில் உள்ள சிறைத்துறையின் கட்டமைப்பு பற்றி அறிந்துகொள்வது அவசியம். அதைப் பற்றி அடுத்த இதழில் விவரிக்கிறேன்.
(கதவுகள் திறக்கும்)