மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - புதிய தொடர் - 8

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

- ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி, சிறைத்துறை

சிறைத்துறையின் நிர்வாகக் கட்டமைப்பைத் தெரிந்துகொள்வோம். மாநில உள்துறையின் கட்டுப்பாட்டில் சிறைத்துறை இயங்கினாலும் மாநில சட்டத்துறை அமைச்சரே இந்தத் துறைக்குப் பொறுப்பாவார். தமிழக சிறைத் துறைக்கு என தனி போலீஸ் ஐ.ஜி உண்டு. அவர்தான் சிறைத்துறையின் தலைவர். அவருக் குக்கீழ் சிறைத்துறை டி.ஐ.ஜி. அவருக்குக்கீழ் மத்திய சிறைக் கண்காணிப்பாளர்கள். அவர்களுக்குக்கீழ் ஒவ்வொரு மத்திய சிறையிலும் கூடுதல் கண்காணிப்பாளர்கள். அவர்களுக்குக்கீழ் சிறை அலுவலர் (ஜெயிலர்). அடுத்தடுத்து துணை சிறை அலுவலர், உதவி சிறை அலுவலர், முதல் தலைமைக் காவலர், காவலர்கள் பணிபுரிவார்கள்.

நான் பணியில் சேரும்போது தமிழ்நாட்டில் கோவை, சேலம், வேலூர், சென்னை, திருச்சி, மதுரை, பாளையங் கோட்டை, கடலூர் என எட்டு மத்திய சிறைகள் இருந்தன. புதுக்கோட்டையில் சிறுவர்களுக்கான சிறை (Borstal) இருந்தது. திருச்சி, சேலம், செங்கல்பட்டு, கொக்கரக் குளம் ஆகிய இடங்களில் நான்கு சிறப்பு கிளை சிறைச்சாலைகள் இருந்தன.

சிங்காநல்லூர், தஞ்சை ஆகிய இரு இடங்களிலும் திறந்தவெளி சிறைகள் இருந்தன. இடையே தஞ்சை திறந்தவெளி சிறை மூடப்பட்டது. திறந்தவெளி சிறை களில் மதில்கள் கிடையாது. சிறையைச் சுற்றிலும் கம்பிவேலி அமைக்கப் பட்டிருக்கும். கைதிகள் தங்குவதற்கு டார்மெட்ரி கட்டடம் இருக்கும். குறைந்தகால தண்டனை பெற்ற கைதிகள், விவசாயிகள், சிறைக்குள் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள், நல்ல நடத்தையுள்ள வர்கள் திறந்தவெளி சிறைக்கு அனுப்பப் படுவார்கள்.

இவர்களுக்கு வழக்கமான உணவைவிட நூறு கிராம் கூடுதலாக வழங்கப்படும். ஒரு நாள் பணி செய்தால், ஒரு நாள் தண்டனைக் குறைப்பு வழங்கப்படும். சிங்காநல்லூர் திறந்தவெளி சிறைச்சாலை 20 ஏக்கர் பரப்பளவுகொண்டது. இங்கே காய்கறிகள், கீரை, மாட்டுத்தீவனங்கள் விளைவிக்கப் படுகின்றன. கோவை பால்பண்ணையி லிருந்து கறவை மாடுகள், கறவைக்காலம் முடிந்ததும் இங்கே அனுப்பிப் பராமரிக்கப் படும். கன்று ஈன்றதும் மீண்டும் கோவை பால்பண்ணைக்கே திருப்பி அனுப்பப்படும்.

இவை தவிர, அனைத்து தாலுகாக்களிலும் கிளை சிறைச்சாலைகள் துணை தாசில்தார் மேற்பார்வையில் முன்பு இயங்கின. தற்போது, அவை உதவி சிறை அலுவலர்கள் தலைமையில் நிர்வகிக்கப்படுகின்றன. அந்தந்தத் தாலுகாக்களில் குற்றம் செய்யும் விசாரணைக் கைதிகள் விசாரணை முடியும் வரை கிளைச் சிறையில் வைக்கப்படுவார்கள். விசாரணை முடிந்ததும் மேல்தண்டனை பெற்ற கைதிகள் மத்திய சிறைக்கு அனுப்பப்படுவார்கள். விசாரணைக் கைதிகளுக்கு சீருடை கிடையாது. சொந்த உடைகளை அணிந்துகொள்ளலாம்.

சிறைக்குள் வரும் கைதிகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என வழிகாட்டுதல்கள் உள்ளன. அவற்றின்படி கைதியை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்; கௌரவமான முறையில் அவரை சோதனையிட வேண்டும்; அவர் சிறைக்குள் அனுமதிக்கப்பட்டதை அவரின் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞருக்குத் தெரியப்படுத்த வேண்டும். கைதி வெளிநாட்டவர் எனில் சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரக அதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும். கைதி யாரையெல்லாம் பார்க்க விரும்புகிறாரோ அவர்களின் விவரப் பட்டியல் பெறப்பட வேண்டும். கைதியின் உடைமைகள், நகைகள் உள்ளிட்டவற்றை சிறை நிர்வாகத்திடம் பத்திரப்படுத்தி அவர் விடுதலையாகும்போது ஒப்படைக்க வேண்டும்.

ஜெயில்... மதில்... திகில்
ஜெயில்... மதில்... திகில்

இவையெல்லாம் சுதந்திரத்துக்குப் பிறகு படிப்படியாக சிறைத்துறையில் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களின் வழிவந்த வழிகாட்டுதல்கள். பிரிட்டிஷார் காலத்திலெல்லாம் கைதிகளை இப்படி நடத்த மாட்டார்கள். அன்று சிறை அதிகாரிகளின் நோக்கம் கைதிகளைத் தண்டிப்பதாக மட்டுமே இருந்தது. குற்றத்தை உணரவைத்து கைதியைத் திருத்துவதெல்லாம் அவர்களுக்கு தேவையில்லாத வேலை. கைதிகளை மிகக் கேவலமாக நடத்துவார்கள். சுதந்திரத்துக்காகப் போராடி சிறைக்குச் சென்ற பலரும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் சித்ரவதைகளை அனுபவித்த தெல்லாம் காலத்தால் அழிக்க முடியாத வரலாறு.

அந்தக் காலகட்டத்தில் சிறு குற்றம் செய்துவிட்டு ஒரு கைதி சிறைக்குள்ளே காலடி வைத்ததும், முதலில் முதுகில் பளார் என அறைவார்கள். ஒரு கணம் கைதிக்கு மூச்சு நின்று பிறகு வரும். என்ன, ஏது என்று சுதாரிப்பதற்குள் கழுத்தை உந்தித்தள்ளுவார்கள்; எட்டி உதைப்பார்கள். நின்றால் அடி... உட்கார்ந்தால் அடி. சிறைக்காவலர்களுக்கு போரடித்தால் அடி. எதிர்த்துப் பேசிபவர்களுக்குக் கொடுக்கப்படும் ‘சைலன்ட்’ தண்டனைகளும் தாராளம். கொடுமையாக இருக்கும் அவர்களது சித்ரவதைகள்.

அதிலும் ஆபத்தான கைதிகள் எனக் கருதினால், அம்மணமாக அமரவைத்துவிடுவார்கள். அப்போதுதான் அவர்கள் எங்கும் நடமாட முடியாது; பொருள்களைப் பதுக்கிவைக்க முடியாது. கூனிக்குறுகி அவமானப்படுத்தலாம்; செயலிழக்க வைக்கலாம். சுதந்திரத் துக்குப் பிறகுதான் பல்வேறு ஆட்சியாளர்கள், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர்கள், சிறைத் துறை தலைவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் தொடர் முயற்சிகளால் இந்திய சிறைத்துறையில் சீர்த்திருத் தங்கள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டன. கைதிகள் மீதான சித்ரவதைகள், மனித உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப் பட்டன. இப்போதும் கட்டுப்படுத்தப் பட்டு வருகின்றன.

ஜி.ராமச்சந்திரன்
ஜி.ராமச்சந்திரன்

அதேசமயம், கைதிகளையும் மிகவும் நல்லவர்கள் எனக் குறைத்து மதிப்பிடக் கூடாது. காவல் துறையினரின் அடிப்படை மனவோட்டமான ‘எப்போதும் சந்தேகப்படு’ என்பது சிறைத் துறையினருக்கும் பொருந்தும். சிங்க முகமும் அன்பு முகமும் எங்களுக்கு ஒருங்கே வேண்டும்.

அப்போதும் சரி, இப்போதும் சரி... சிறைக்குள் ஒரு கைதி நுழையும்போதே வாயில் காப்பாளர் கைதியின் காது, மூக்கு, வாய், பிறப்புறுப்பு, ஆசனவாய் உள்ளிட்ட ஓட்டைகளைப் பரிசோதித்துவிடுவார்கள். அப்படி சோதித்தாலும் கள்வன் புத்திசாலியா, காவலன் புத்திசாலியா என்றால், கள்வன்தான் புத்திசாலி! எத்தனை எத்தனை சோதனைகள் செய்தாலும் எப்படியேனும் சட்டவிரோதமான பொருளை உள்ளே கடத்திவிடுவர்.

தங்கம் போன்ற பொருள்களை வாயில் போட்டு தொண்டைக்கு அருகில் பதுக்கிவைக்கும் பலே கைதிகளைப் பார்த்து வியந்திருக் கிறேன். சில கைதிகள், நெருப்பை உமிழும் டிராகன் என்பார்களே... அதுபோன்று அபாயகரமானவர்கள். நெருங்கி நின்று அதட்ட முடியாது. ‘உஃப்ப்ப்’ என்று அவர்கள் வாயை ஊதினால் எதிராளியின் முகத்தைச் சிதறடித்துவிடும் பிளேடு துண்டுகள். வாய்க்குள் எப்போதும் ஓர் ஆயுதக் கிடங்கை அதக்கி வைத்துக்கொண்டு அலைவார்கள்.

இன்னும் சிலரோ போதைப் பொருள்களை, தங்கத்தை உருளை களாக்கி பிளாஸ்டிக் பேப்பரில் சுருட்டி ஆசனவாய்க்குள் பதுக்கி விடுவர். கை, கால்களில் பெரிய மாவுக்கட்டுடன் வருவார்கள். கேட்டால் ‘தடுக்கி விழுந்துட்டேங் கய்யா’ என்பார்கள். அதைக் கேட்டு அப்பிராணியாக உச்சு கொட்டக் கூடாது. மாவுக்கட்டுக்குள் ஒரு சூப்பர் மார்க்கெட்டே இருக்கும்.

சிறைக்குள் கைதிகள் செருப்பு அணிய அனுமதியில்லை. கால் பாதத்தில் காயமோ கால் ஆணியோ இருந்தால், சிறை மருத்துவர் அனுமதி யுடன் சிறையில் தயாரிக்கப்பட்ட செருப்பு வழங்கப்படும்.

அப்படியும் பல சமயங்களில் சலுகைகள் பெற்று கைதிகள் பலரும் செருப்புடன் சுற்றுவார்கள். சிலரது செருப்புக்குள் கத்தி, சுத்தி, சிறு ரம்பம், ஸ்க்ரூடிரைவர் என ஒரு வொர்க்‌ஷாப்பே ஒளிந்திருக்கும்.

ஜெயில்... மதில்... திகில்
ஜெயில்... மதில்... திகில்

ஒருமுறை, விமானநிலையத்தில் பிடிப்பட்ட கடத்தல்காரனை சிறைக்குக் கொண்டுவந்தார்கள். அவனை எப்படி எப்படியோ சோதனையிட்டும் ஒன்றும் பிடிபடவில்லை. கடைசியாக அவனது ஆசனவாயிலிருந்து 70,000 அமெரிக்க டாலரை ‘நோண்டி’ எடுத்தோம்!

மற்றொரு முறை வேலூர் மத்திய சிறைக்கு, பிச்சைக்காரர்கள் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு 20-க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் கொண்டுவரப்பட்டனர். பொதுவாக பிச்சைக்காரர்களின் உடை, உடைமைகளில் துர்நாற்றம் வீசுவதால், உன்னிப்பாக சோதனை செய்ய மாட்டார்கள். ஆனால், அவர்கள் வழியாக ஆபத்தான பொருள்கள் உள்ளே சென்றுவிடக் கூடாது அல்லவா... அதனால், நானே களத்தில் இறங்கி சோதனை செய்தேன். அப்போது ஒருவர் போர்த்தியிருந்த போர்வையை இழுத்தபோது அவர் விடவில்லை. இறுக்கிப் பிடித்தார்.

வலுக்கட்டாயமாகப் பிடுங்கி உதறிப் பார்த்தோம். ஒன்றும் இல்லை. கிழிந்துபோன பழைய போர்வை அது. அவரிடமே கொடுத்துவிட்டோம். அவரிடமிருந்து பெருமூச்சு வெளிப் பட்டது. அவர் எதையோ பதுக்கிவைத்துள்ளார் என உள்ளுணர்வு கூறியது. மீண்டும் போர்வையைப் பறித்து கவனமாகச் சோதனையிட்டேன். ஆங்காங்கே கிழிசலை யொட்டி தைக்கப்பட்டிருந்த இடங்களில் உள்ளே ஏதோ நெருடியது. தையலைப் பிரித்தால் நூறு ரூபாய் நோட்டுகள். அந்தக்காலத்தில் புழக்கத்திலிருந்த கொஞ்சம் பெரிய சைஸ் நோட்டுகள் அவை. ஆங்காங்கே பேட்ச்வொர்க் செய்யப்பட்டு 230 நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவரிடம் விசாரித்ததில், அவர் ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் என்பது தெரிந்தது. குடும்பத்தினர் கைவிட்டுவிட்டதால் பணத்தை இப்படிப் பதுக்கிவைத்திருப்பதாகக் கூறினார்.

இவையெல்லாம் சாதாரண விவகாரங்கள். சிறையில் எங்களுக்கெல்லாம் பெரும்சவால் போதைப்பொருள்கள்தான். கஞ்சா, அபின் உள்ளிட்டவை உள்ளே வந்துவிடும். அவற்றை பறிமுதல் செய்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு அனுப்பிவிடுவோம். அவர்கள் வழக்கு பதிவுசெய்து விசாரிப்பார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால், எத்தனை முறை தண்டித்தாலும் சிறைக்குள் போதைப்பொருள் கடத்தல் நிற்கவே நிற்காது.

சொல்லப்போனால், போதைப்பொருள்கள் புழங்காத ஒரு சிறையும் உலகத்தில் இல்லை. கையைக் கிழித்துக்கொண்டு சதையைப் பிளந்து அதற்குள் போதை பவுடரைப் பதுக்கி, ரத்தம் சொட்ட பேண்டேஜ் போட்டுக்கொண்டு வருவார்கள். சிறைக்குள் நடக்கும் அத்தனை குற்றங்களுக்கும் அடிப்படை போதைப்பொருள்களே!

1999-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி. சென்னை மத்திய சிறையில் பெரும்கலவரம் வெடித்தது. ஜெயிலர் ஒருவர் தீ வைத்து கொளுத்தப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கைதிகளும் காவலர்களும் ரத்தவெள்ளத்தில் பலியானார்கள். காரணம், போதைப்பொருள் மாஃபியா!

(கதவுகள் திறக்கும்)