மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - புதிய தொடர் - 9

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

சென்னையின் மொத்த தாதாக்களும் சிறையில்!

1999-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி சுமார் 12 மணி... சென்னை மத்திய சிறையில் இரண்டு மணி நேரம் கோரத்தாண்டவம் ஆடிய ஊழித்தீ அணைக்கப்பட்டுவிட்டது. உடலும் மனமும் சோர்ந்துபோன நிலையில், நடந்த சம்பவங்களின் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் கிட்டத்தட்ட திகைத்துபோய்க் கிடந்தேன். ‘கலவரத்தை அடக்க சிறைக் கண்காணிப்பாளராக நான் கையாண்ட வழிமுறை சரிதானா... அடுத்து என்ன செய்வது..?’ என எனக்குள் எண்ண அலைகள் சுழன்றடித்தன. கலவரம் பற்றி பிறகு விவரிக்கிறேன்.

திடீரென, முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து `உடனே வரும்படி’ அவசர அழைப்பு. உடலில் காயங்கள்... மனதில் நீங்காத ரணங்களுடன் முதலமைச்சர் அறை முன்பாகக் காத்திருந்தேன். நெஞ்சம் படபடவென அடித்துக்கொண்டது. காத்திருந்த ஒருசில நிமிடங்கள், ஒரு யுகம்போல் தோன்றியது. சிறிது நேரத்திலேயே முதல்வர் அறைக்கு அழைக்கப்பட்டேன்.

முதல்வரின் முகம் இறுகிக் காணப்பட்டது. என்னைக் கண்டதும் எப்போதும் உதிர்க்கும் புன்முறுவல் அன்று மிஸ்ஸிங்! சட்டென நிமிர்ந்து, என்னை ஊடுருவிப் பார்த்தார். ‘‘துப்பாக்கிச்சூடு நடத்தாமல் கலவரத்தை அடக்கியிருக்க முடியாதா?’’ - அவரின் அந்த உஷ்ணப்பார்வையும் கரகரத்த அந்தக் கண்டிப்பான குரலும் என்னை மேலும் நிலைகுலையச் செய்தன.

*******

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைகளில் கலவரங்கள் பல‌ ஏற்பட் டிருந்தபோதிலும், இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகான காலகட்டத்தில் இப்படியொரு சிறைக் கலவரம் அதுவரை நடந்தது கிடையாது. சென்னை சிறைக் கலவரத்துக்குப் பிறகு நான் விசாரித்துத் தெரிந்துகொண்ட உண்மை இது. ஆனால், பல மேலைநாடுகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாலும், அவை போதைப்பொருள் வர்த்தகக் கும்பல்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாலும், அங்கு கலவரங்கள் சகஜம். மெக்ஸிகன் சிறையில் ஒருமுறை நடந்த கலவரத்தில் 50 பேர் பலியாயினர். கிட்டத்தட்ட அது `கேங் வார்’போல் இருக்கும்.

போதைப்பொருள் மாஃபியாக்கள், காவலர் களைக் கொலைசெய்து சிறையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுவர். அந்த நாள்களில் சிறை அதிகாரிகள் போலீஸாருக்குத் தகவல் அனுப்பிவிட்டு, தனி செல்லில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருப்பார்கள். போலீஸார் உள்ளே சென்று சில நாள்கள் அங்கேயே இருந்து போராடி கலவரத்தை அடக்கிச் செல்வார்கள்.

ஜெயில்... மதில்... திகில்! - புதிய தொடர் - 9

சென்னை சிறையில் நடந்த கலவரத்தை, காவலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராக நடத்தப்பட்ட போர் என்றே சொல்ல வேண்டும். சிறை அதிகாரி ஒருவரை உயிருடன் எரித்துக் கொன்றார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட காவலர்களின் கதி என்ன என்றே தெரியவில்லை. இரண்டாயிரத்துக்கும் அதிகமான கைதிகள் சிறைச்சாலைக் கதவுகளை உடைத்து வெளியேறத் துடித்துக்கொண்டிருந்தனர். சிறையின் கதவுகள் உடைக்கப்பட்டால், நாட்டின் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துவிடும்.

முன்பாக, அன்றைய சென்னை மத்திய சிறைச்சாலையைப் பற்றித் தெரிந்துகொள்வோம். சென்னை மத்திய சிறை, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் இருந்தது. சுமார் பத்தரை ஏக்கர் பரப்பளவுகொண்டது. தமிழ்நாட்டிலேயே மிகவும் சிறிய மத்திய சிறை, சென்னை மத்திய சிறைதான். பிரிட்டிஷாரால் 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறை அது. அங்கு 1,490 சிறைவாசிகளை அடைத்துவைக்கலாம். ஆனால், அன்றைய நாள்களில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கைதிகளை அடைத்துவைத்திருந்தனர்.

அவர்களைக் கண்காணித்துப் பராமரிக்க ஒரு சிறைக் கண்காணிப்பாளர், ஒரு கூடுதல் கண்காணிப் பாளர், ஒரு சிறை அலுவலர், ஒரு துணை சிறை அலுவலர், நான்கு உதவி சிறை அலுவலர்கள், மூன்று முதல்நிலை தலைமைக் காவலர்கள், 26 முதல்நிலை காவலர்கள், 133 சிறைக் காவலர்கள் இருந்தனர்.

காவலர்களுக்கு எட்டு மணி நேரம் பணி என்பதால், அலுவலகப் பணிகளுக்கு நியமித்தது போக சுமார் 40 காவலர்களே சிறையில் இருப்பர். இவர்கள் தவிர, 6 கண்காணிப்புக் கோபுரங்களில் இருந்தும் தமிழ்நாடு சிறப்புப் படைக் காவலர்கள் சிறையைக் கண்காணிப்பர்.

அந்தக் காலகட்டத்தில் சிறைக்குள் வரும் கைதிகளில் பலரும் போதைக்கு அடிமையாகி இருந்தார்கள். சிறைக்குள் மது வகைகளைக் கடத்திவந்து உபயோகப்படுத்துவது சிரமம். தவிர, மது அருந்தினாலும் துர்நாற்றம் காட்டிக் கொடுத்துவிடும். ஆனால், அதீத போதை தரும் பொருள்களான கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருள்களை, கொஞ்சம் முனைப்பு காட்டினால் சிறைக்குள் கடத்திவந்துவிட முடியும். அவற்றை உபயோகப்படுத்தினால் எளிதாகக் கண்டுபிடிக்கவும் முடியாது.

ஜெயில்... மதில்... திகில்!
ஜெயில்... மதில்... திகில்!

சென்னை மத்திய சிறைக் கண்காணிப்பாளராக நான் பொறுப்பேற்ற பிறகு, போதைப் பழக்கத்தை சிறையிலிருந்து எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்ற நோக்கில், போதை மறுவாழ்வு மையம் ஒன்றை சிறைக்குள் ஏற்படுத்தினேன். போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையான கைதிகளைக் கண்டுபிடித்து, அந்த மையத்தில் சிகிச்சை அளித்தோம். அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டார்கள். போதைப்பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி அவர்களுக்கு போதிக்கப் பட்டது. அவர்கள் ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவு வழங்கப்பட்டது. யோகா உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

நானும் அடிக்கடி அவர்களுடன் பேசிப் பழகி, ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்பதைக் கவனித்தேன். அப்போது சில கைதிகள், `‘போதைப் பொருள் சிறைக்குள் கிடைப்பதால்தான் நாங்கள் உபயோகப்படுத்துகிறோம். எனவே, சிறைக்குள் போதைப்பொருள் விற்பவர்களைக் கண்டறிந்து அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள்’’ என்றனர். சிறைக்குள் யாரெல்லாம் போதைப் பொருள் விற்கிறார்கள் என்ற தகவலையும் அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் சுட்டிக் காட்டிய முதல் நபர் `பாக்ஸ‌ர்’ வடிவேலு.

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் `பாக்ஸர்’ வடிவேலு. அடிக்கடி பாக்ஸிங் போட்டிகளில் கலந்து கொள்வார் என்பதால், அவருக்கு அப்படி ஓர் அடைமொழி. மீன்பிடித் தொழிலில் அதிகளவு சம்பாதிக்க முடியவில்லை என நினைத்த வடிவேலு, விரைவில் பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடன் போதைப்பொருள் கடத்தலில் இறங்கினார்.

அடிக்கடி சிறுசிறு வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு சிறைக்கு வந்து செல்வார். போதைப்பொருள் விற்பனையில் வருமானம் அதிகரிக்க, அடியாட்களைச் சேர்த்துக்கொண்டு காசிமேட்டில் பெரிய தாதா ஆகிவிட்டார். அப்போது 36 வயது நிரம்பிய அவருக்கு இரண்டு மனைவிகள், ஆறு குழந்தைகள்.

பல திருட்டு வழக்குகளும் ஒரு கொலை வழக்கும் வடிவேலு மீது இருந்தன. திருட்டு வழக்குகளில் புகார் பதியப்பட்டு, ராயபுரம் காவல் நிலைய போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின்கீழ் 6.1.1999 அன்று சென்னை மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தார் `பாக்ஸர்’ வடிவேலு.

ஜெயில்... மதில்... திகில்! - புதிய தொடர் - 9

கலவரம் நடந்த 17.11.1999 அன்று 125 தண்டனைக் கைதிகள் 1,243 விசாரணைக் கைதிகள், குண்டர் சட்டத் தில் கைதான‌ 776 பேர், தடா சட்டத்தில் கைதான 9 பேர், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதான 5 பேர், காஃபிபோஸா சட்டத்தில் கைதான 19 பேர் என மொத்தம் 2,177 கைதிகள் சிறையில் இருந்தனர்.

குறிப்பாக, அன்றைய தினம் `வெள்ளை’ ரவி, சேரா, `பாக்ஸ‌ர்’ வடிவேலு மற்றும் அவர்களின் அடியாட்கள் என சென்னை யின் மொத்த ரெளடிக் கும்பலும் உள்ளே தான் இருந்தது. இவர்கள் மட்டுமல்ல, அல் -உம்மா தலைவர் பாஷா, இமாம் அலி உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளைச் சார்ந்தவர்களும், அரசால் தடைசெய்யப் பட்ட விடுதலைப்புலி உள்ளிட்ட இயக்கங்களைச் சார்ந்தவர்களும் சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர்.

சம்பவம் நடந்த தினத்துக்கு ஒரு வாரம் முன்பு ரோட்டரி கிளப் மூலமாக ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில், கைதிகளின் முன்னேற்றத்துக்காக பல உபகரணங்கள் வழங்கப்பட்டன‌. அந்த நிகழ்ச்சியில் சட்ட அமைச்சர், முதன்மைச் செயலாளர், நீதிபதிகள், முக்கியப் பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். வந்திருந்தவர்கள் அனைவரும், ‘‘இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப் பட்டிருக்கின்றனர் என்பதை நம்பவே முடியவில்லை’’ என்று சிறையின் சட்ட ஒழுங்கை பாராட்டினர். ‘கைதிகள் அனை வரும் மிகவும் அமைதியாகவும் ஒழுக்கத் துடனும் இருக்கின்றனர்’ என்றும் நிகழ்ச் சிக்கு வந்த அனைவரும் சிலாகித்தனர்.

ஆம்! அவர்கள் சொன்னது உண்மை தான். சிறையில் மயான அமைதி நிலவியது. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் மத்திய சிறையில், இப்படி ஒரு மயான அமைதி என்றும் இருந்த தில்லை. ஏதோ ஒன்று பெரிதாக நடக்கப்போகிறது என்று என் உள்மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.

(கதவுகள் திறக்கும்)