பிரிட்டிஷ் - அமெரிக்கரான ஆண்ட்ரீவ் டட்டே நன்கு அறியப்பட்ட டிக்-டாக் பிரபலமாக இருந்துவந்திருக்கிறார். 36 வயதான இவர் 2022 -ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் எட்டாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக இவர்மீது பல சர்ச்சைகள் எழுந்துவந்த நிலையில், இவரும் இவரின் 34 வயது தம்பியும் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துவந்தனர்.
இவர், அதிக ரசிகர்களை ஈர்க்கவும், அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கிலும் கார்களை வேகமாக ஓட்டுவது, இளம்பெண்களுடன் பழகுவது, பெண்களை எப்படி காதலிக்கவைப்பது என்பது போன்று பதிவுகளை உருவாக்கியிருக்கிறார். அதோடு தன்னுடைய ரசிகர்கள் பலரின் கணக்குகளையும் இவரே கையாண்டிருக்கிறார் என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பெண்களைப் பற்றி வெறுக்கத்தக்கதானப் பதிவுகளைப் பகிர்ந்திருக்கிறார். பாலியல் சார்ந்த இவரின் பதிவுகளால் இவரின் கணக்கை டிக்- டாக் முடக்கியிருக்கிறது.
அதுபோல மெட்டா நிறுவனமும் இவரின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளை முடக்கியிருக்கிறது. மேலும் 2021-ல் ஒரு பாட்காஸ்டில், பிரிட்டனில் வெப்கேம் வணிகத்தைத் தொடங்கியதாகவும், அதில் 75 பெண்கள் மாதம் 6 லட்சம் டாலர் சம்பாதிப்பதன் மூலம் உச்சத்தை எட்டியிருப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால், என்ன வேலை என்பதை அவர் குறிப்பிடவில்லை.

கடந்த மாதம் வரை, அவரின் இணையதளம் 400 டாலருக்கும் அதிகமான செலவில் ஒரு கோர்ஸை (Course) வழங்கியது, அது உங்களுக்கு அடிபணிந்த, விசுவாசமான மற்றும் அன்பான ஒரு பெண்ணை உருவாக்குவதற்கான ஒவ்வோர் அடியையும் கற்பிப்பதாக உறுதியளித்தது. அதுமட்டுமல்லாமல், மிகவும் திறமையாக `பெண்களை என்னைக் காதலிக்க வைப்பது என் திறமை," என்று அவர் இணையதளத்தில் கூறினார்.
இந்த நிலையில், இவர்மீது பெண்களைக் கடத்துவது, பாலியல் உறவு வைத்துக்கொள்வது, அவர்களை அடிமையாக்கிக்கொள்வது எனப் புகார்கள் எழுந்திருக்கின்றன. இந்த விவகாரங்கள் குறித்து பெண் ஒருவர் வாய்திறந்த நிலையில் டட்டே சகோதரர்கள் தற்போது சிக்கலில் சிக்கியிருக்கின்றனர்.
டட்டேவுக்கு அந்தப் பெண் 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியிருக்கிறார். பழக்கம் ஏற்பட்டுவிட லண்டனில் ஒருமுறையும், ரோமானியாவில் ஒருமுறையும் நேரில் சந்தித்திருக்கின்றனர். டட்டே அந்தப் பெண்ணிடம் கூறுகையில், "ஒருமுறை நீ என்னுடையவளாக இருந்தால், என்றென்றும் என்னுடையவளாக இருப்பாய் என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும்" என்று ஆசைவார்த்தை கூறியிருக்கிறார்.

ஒருகட்டத்தில் அந்தப் பெண், அவர் தன்னை விரும்புவதாக நம்பியிருக்கிறார். அதோடு அவர்கள் திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டிருந்ததாக அந்தப் பெண் கூறுகிறார். பின்னர் டட்டே அந்தப் பெண்ணைக் கடத்தி, அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், இவரோடு சேர்த்து ஆறு பெண்கள் டட்டேயின் வலையில் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. எனினும் அதில் இரண்டு பெண்கள் டட்டே மீதான குற்றச்சாட்டை மறுத்திருக்கின்றனர். "நான் அந்தப் பட்டியலில் ஒருவராக இல்லாதபோது நீங்கள் என்னை பாதிக்கப்பட்டவர் என்று பட்டியலிட முடியாது" என்றிருந்தார். ஆனால், மற்ற நான்கு பெண்களும் மெளனமாக இருந்திருக்கின்றனர். எனினும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களின் நகல்கள், ஆதாரங்களின்படி இந்தக் குற்றங்களுக்கு துணைபோன இரண்டு பெண்களின் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதோடு வருகிற ஜூன் மாதம் வரை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்கவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.