கனடாவை மையமாகக் கொண்டு ஒரு செக்ஸ் டாய்ஸ் நிறுவனம் இயங்கிவருகிறது. இதன் தயாரிப்புகளை உலகம் முழுவதும் சுமார் 3,00,000 பேர் பயன்படுத்துகின்றனர். இந்த நிறுவனத்தைப் பற்றி அவ்வப்போது பல சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இந்த நிலையில், `We-Vibe 4’ எனும் ஒரு புதிய செக்ஸ் டாய்ஸை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த செக்ஸ் டாய்ஸை சுமார் ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர். இதன் சிறப்பு அம்சமாக உலகில் எங்கிருந்தும், இதற்கான ஒரு செயலி மூலம் இந்த செக்ஸ் டாய்ஸின் அதிர்வுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஒரு பெண் வாடிக்கையாளர் ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு We-Vibe நிறுவனத்துக்கு எதிராக கனடா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், `` We-Vibe, எனும் செக்ஸ் டாய்ஸ் நிறுவனம் அதன் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காக 'ஸ்மார்ட் வைப்ரேட்டர்களை' பயன்படுத்தி, வாடிக்கையாளர்களின் பாலியல் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறது. அந்தச் செயலி வாடிக்கையாளரின் தரவைச் சேகரித்து, We-Vibe நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஸ்டாண்டர்ட் இன்னோவேஷனுக்கு அனுப்புகிறது எனத் தெரியவந்திருக்கிறது.
மேலும், அந்தச் செயலி மூலம் செக்ஸ் டாய் எவ்வளவு நேரம், எப்போதெல்லாம் பயன்படுத்தப்படுகிறது, எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறது என்ற வாடிக்கையாளரின் பயன்பாட்டு முறை குறித்து, அவருக்கு உரிய தகவல் வழங்காமலேயே தகவல்களைச் சேகரித்திருக்கிறது" என்று புகார் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.
இதற்கு பதிலளித்த நிறுவனம், "ஸ்டாண்டர்ட் இன்னோவேஷனில் நாங்கள் வாடிக்கையாளர் தனியுரிமை, தரவுகளின் பாதுகாப்பை முக்கியமானதாக எடுத்துக்கொள்கிறோம். நாங்கள் எங்களின் தனியுரிமை அறிவிப்பையும் மேம்படுத்தியிருக்கிறோம்.

கருவி பயன்பாட்டின் பாதுகாப்பை அதிகரித்திருக்கிறோம். மேலும், பயன்பாட்டை மேம்படுத்த முன்னணி தனியுரிமை, பாதுகாப்பு நிபுணர்களுடன் தொடர்ந்து பணியாற்றுகிறோம். மேலும், சேகரிக்கப்பட்ட தரவுகள் 'நோயறிதல் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறோம்' என விளக்கமளித்திருக்கிறது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அந்த நிறுவனத்தின் பதிலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என மறுத்த நீதிமன்றம், ஸ்டாண்டர்ட் இன்னோவேஷன் நிறுவனத்துக்கு 2.4 மில்லியன் பவுண்டுகள் (ரூ. 24 கோடி) அபராதம் விதித்து உத்தரவிட்டிருக்கிறது.