அலசல்
அரசியல்
Published:Updated:

செல்லம்... உனக்காக என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு!

காதல் வலை... கவரிங் நகை
பிரீமியம் ஸ்டோரி
News
காதல் வலை... கவரிங் நகை

காதல் வலை... கவரிங் நகை... கம்பிநீட்டிய சூர்யா...

மேட்ரிமோனி தளங்களில் பதிவுசெய்திருக்கும் பெண்களைக் குறிவைத்து மத்திய அரசின் உளவுப்பிரிவு உயரதிகாரி ஒருவரின் மகன் பாலியல் மற்றும் பண மோசடியில் ஈடுபட்டுவந்துள்ளான். சென்னை, புதுச்சேரி, ஸ்ரீரங்கம், கோவை, பழநி என தமிழகம் முழுவதும் அவனால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 50-ஐ தாண்டுகிறது. சென்னையில் பெண்ணொருவர் கொடுத்த புகாரையடுத்து போலீஸார் அவனைக் கைது செய்திருக்கிறார்கள்.

“ஹலோ சார், ஐ யாம் சூர்யா, மேட்ரிமோனி சைட்ல உங்க பொண்ணோட புரொஃபைலைப் பார்த்தேன். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... என் அப்பா, அம்மா வெளிநாட்டுல வேலை பார்க்கிறாங்க. நான் மனித உரிமை ஆணையத்தில வேலை பார்க்கிறேன்” என்று வலையை வீசுவான். இப்படி பத்துப் பேரிடம் பேசினால், ஓரிருவர் சிக்கியிருக்கிறார்கள். தொடர்ந்து சூர்யாவைப் பெண் பார்க்க வரச் சொல்வார்கள். பந்தாவாக டஸ்டர் காரில் சென்று இறங்குவான். காரின் முன்பகுதியில் `Active Member. International Human Rights and Crime Control Council’ என்ற போர்டு இருக்கும். சூர்யாவின் டிப்டாப் உடை, கலகலப்பான பேச்சு ஆகியவற்றால் கவரப்படும் பெண் வீட்டாரும், மகளைக் கட்டிக்கொடுக்கச் சம்மதிப்பார்கள். அடுத்தடுத்த நாள்களில் அந்தப் பெண்ணிடம் காதல் வலை வீசியே ஹோட்டல் அறைக்கு வரவழைத்து, சந்தோஷமாக இருந்திருக்கிறான். அதை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டி பணமும் பறித்திருக்கிறான்.

செல்லம்... உனக்காக என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு!

நிறைய நகைகளை அணிந்திருக்கும் சில பெண்களிடம் நூதன மோசடியை அரங்கேற்றியிருக்கிறான்... “செல்லம்... உனக்காக என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு...” என்று உருகும் சூர்யா, பெண்ணின் கழுத்திலும் காதிலும் அணிந்திருக்கும் தங்க நகைகளைக் கழற்றி வாங்கிக் கொண்டு, அதைவிட ஆடம்பர தோற்றத்துடன் கூடிய நகைகளை அணிவித்து, அந்தப் பெண்ணை ஆச்சர்யத்தில் மூழ்கடிப்பான். ஆனால், அவை கவரிங் என்பது அப்போதைக்குத் தெரியாது. “இதோ... ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடறேன்” என்பவன், அந்தப் பெண் ஆச்சர்யத்திலிருந்து மீளும் முன்பே எஸ்கேப் ஆகி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறான்.

இந்தச் சமயத்தில்தான் சென்னை கானாத்தூர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர், ‘மேட்ரிமோனி மூலம் பழகிய சூர்யா, பிளாட் வாங்கித் தருவதாக ஆசையைக் காட்டி 7 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டார்’ என்று புகார் அளித்தார்.

சூர்யா
சூர்யா

சூர்யாவைப் பற்றி விசாரணையைத் தொடங்கியபோது அவனின் தந்தை பக்கத்து மாநிலம் ஒன்றில் மத்திய அரசு உளவுத்துறையில் உயரதிகாரியாக இருப்பதைக் கண்டுபிடித்திருக் கிறார்கள். இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும், “யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்” என்று அவர் உத்தரவிடவே, சூர்யாவின் செல்போன் நம்பரை வைத்து அவனை ட்ரேஸ் செய்தார்கள். கோவையிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சூர்யாவின் அறைக்கு போலீஸார் சென்று கதவைத் தட்டினர். ஓர் இளம்பெண்தான் கதவைத் திறந்திருக்கிறார். அவரும் மேட்ரிமோனி மூலம் அறிமுகமாகி, ஹோட்டல் அறைக்கு வந்திருப்பது தெரிந்தது. அவரை அனுப்பிவிட்டு சூர்யாவை சென்னைக்கு அழைத்துவந்தனர்.

கானாத்தூர் காவல் நிலையத்தில் அவனிடம் விசாரித்தபோது எதற்கும் பதிலளிக்காமல் அழுத்தமாக இருந்திருக்கிறான். இதையடுத்து, சூர்யாவின் தந்தைக்குத் தகவல் சொல்லியிருக் கிறார்கள். பதறியபடி சென்னைக்கு வந்த அவர், போலீஸார் சொன்னதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியடைந்து, “என் மகனின் மோசடி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்” என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர் மேலும் சில விவரங்களை நம்மிடம் சொன்னார்... ``சூர்யா சென்னையிலுள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்திருக்கிறான். இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போதிருந்தே, மேட்ரிமோனியில் தனது புரொஃபைலைப் பதிவுசெய்து அழகான பெண்களுக்கு வலை விரித்திருக்கிறான். படிப்பை முடித்த பிறகு இதையே முழுநேரத் தொழிலாகச் செய்திருக்கிறான். சென்னை புறநகர்ப் பகுதியில் சித்தா மருத்துவராகப் பணியாற்றும் பெண்ணொருவர், மறுமணம் செய்ய விரும்புவதாகப் பதிவு செய்திருக்கிறார். அவரிடம் போனில் பேசிய சூர்யா, அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறான். அப்போது அந்தப் பெண்ணின் மறைந்த அப்பாவின் போட்டோவைப் பார்த்து வணங்கி, சென்டிமென்ட்டாக டாக்டரின் மனதில் இடம்பிடித்திருக்கிறான். சில வார பழக்கத்திலேயே அந்த போட்டோ முன்பாக பெண் டாக்டருக்குத் தாலி கட்டியவன், அவருடன் சில மாதங்கள் வாழ்ந்திருக்கிறான். ஒருநாள் டாக்டர் வீட்டில் இல்லாதபோது 30 சவரன் தங்க நகைகளோடு எஸ்கேப் ஆகிவிட்டான்.

செல்லம்... உனக்காக என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு!

ஸ்ரீரங்கத்தில் ஒரு பெண்ணிடம் பழகி தபால் துறையில் வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி, 50,000 ரூபாய் ஏமாற்றியிருக்கிறான். கோவையில் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் மகளிடம் வீடு வாங்கித் தருவதாகச் சொல்லி 42 லட்சம் ரூபாய் ஏமாற்றியிருக்கிறான். சென்னையில் ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவரை மணப்பெண் அலங்காரத்துக்காக பியூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். அப்போது நகைகளைக் கழற்றி வாங்கிக்கொண்டவன், எஸ்கேப் ஆகிவிட்டான். தமிழகம் முழுவதும் இப்படி 50-க்கும் மேற்பட்ட பெண்களை சூர்யா ஏமாற்றியதாகத் தெரியவருகிறது.

நாங்கள் அவனிடம் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே, அவனது செல்போனுக்கு பழநியிலிருந்து ஒருவர் பேசினார்... ‘மாப்ள, பொண்ணு பார்க்க எப்ப வர்றீங்க?’ என்று கேட்டார். அவரிடம் விவரத்தைச் சொன்னதுமே, ‘சார்... அந்த பழநி முருகன்தான் எங்களைக் காப்பாத்தியிருக்கான்’னு சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். சூர்யாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் கேட்டுவருகிறோம். அனைவரும் புகார் அளித்தால்தான் அவன்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்!