சேலம் இரும்பாலைக்குச் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் பணியாற்றும் பெண் உதவிப் பேராசிரியைகள் சிலர், சமீபத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வருக்குப் புகார் ஒன்று அளித்திருக்கின்றனர். அதில், ``எங்களது துறைத் தலைவராக இருக்கக்கூடிய பேராசிரியர் ராஜேஷ், எங்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும்விதத்தில் ஆபாசமாகப் பேசுகிறார். நடந்து செல்லும்போது எங்களை தவறாகச் சித்திரித்து அழைப்பது போன்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டுவருகிறார்.

எனவே, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில், அந்த மனுவை ஏற்று மருத்துவக் கல்லூரி முதல்வர் மணி, விசாகா கமிட்டி மூலம் விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், இந்தக் குழுவின் மூலம் சரியாக விசாரணை நடைபெறவில்லை என்று பாதிக்கப்பட்ட உதவி பேராசிரியைகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உதவிப் பேராசிரியைகள் சிலரிடம் பேசினோம். “எங்கள் துறையில் அனைத்து உதவி பேராசிரியைகளும் திருமணமானவர்கள்தான். இந்த நிலையில் நாங்கள் கடந்த ஜனவரி மாதம் எங்களுடைய கல்லூரி முதல்வரிடம் புகார் ஒன்று அளித்திருந்தோம். அதில், எங்களது துறைத் தலைவர் ராஜேஷ் எங்களிடம் தவறான எண்ணத்தில் பேசுவதும், எங்களைப் பற்றி பிறரிடம் சித்திரித்து பேசுவதுமாக இருந்து வருகிறார். வயது வித்தியாசம்கூட இல்லாமல், அநாகரிகமாகப் பேசுகிறார் என்று புகாரளித்திருந்தோம்.

ஆனால், தமிழக முதல்வர் சேலத்துக்கு வருகை புரிந்ததால் எங்களது மனுவைக் கிடப்பில் போட்டுவிட்டனர். பின்னர் இந்த விஷயம் கேள்விப்பட்டு சம்பந்தப்பட்ட எங்களது துறை தலைவர் ராஜேஷ், `என்மீதே புகார் கொடுக்குறீங்களா... உங்களால என்ன பண்ணிட முடியும்' என்று மிரட்டிவருகிறார். ஏற்கெனவே 2016-ல் ஒரு பெண் இது போன்ற மனஉளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார். அதனால் இது தொடர்பாக நாங்கள் காவல்துறைத் தலைவருக்கும் ஆன்லைன் மூலம் புகாரளித்திருக்கிறோம். ஆனால் அவர்கள் தனித்தனியாக எல்லோரையும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சொல்கிறார்கள். ஆனால், கொடுத்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றனர்.
இது தொடர்பாக சேலம் மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யாவிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட புகார் குறித்து ஒரு பெண் டி.எஸ்.பி தலைமையிலான பெண் அதிகாரி விசாரித்துவருகிறார். விசாரணை முடிவில் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

மேலும் இது குறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மணியிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட பெண் உதவி பேராசிரியைகள் மனு அளித்திருந்ததன் அடிப்படையில், சமூக நலத்துறை அதிகாரிகள் உட்பட எட்டு பேர் கொண்ட கமிட்டி அமைத்து விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறேன். விசாரணை நடைபெற்றுவருகிறது” என்றார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறைத் தலைவர் ராஜேஷிடம் பேசியபோது, “கல்லூரிக்கு பேராசிரியைகள் தாமதமாக வருவது, கல்லூரிக்கு வராமலேயே அட்டெண்டென்ஸ் போட்டுவிட்டு சம்பளம் வாங்குவதை நான் புகாராக கல்லூரி நிர்வாகத்திடம் அளித்திருந்தேன். அதற்காக, தற்போது சம்பந்தப்பட்ட சிலர் என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர்” என்றார்.