அரசியல்
அலசல்
Published:Updated:

‘க்ளிக்’ அபாயம்! - நடுங்கவைக்கும் சைபர் குற்றங்கள்!

‘க்ளிக்’ அபாயம்!
பிரீமியம் ஸ்டோரி
News
‘க்ளிக்’ அபாயம்!

“தனியார் செல்போன் டவருக்கு இடம் கொடுத்தால் 80 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கப்படும். மாதம் 45 ஆயிரம் வாடகை தரப்படும்” என்று சொல்லப்பட்டிருந்தது.

சமீபத்தில் நாடு முழுவதும் 18 மாநிலங்களில், சைபர் க்ரைம் குற்றவாளிகளைக் குறிவைத்து, சி.பி.ஐ திடீர் ரெய்டு நடத்தியிருக்கிறது. 115 இடங்களில் நடத்தப்பட்ட இந்த ரெய்டில், 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1.5 கோடி ரூபாய் பணத்தையும், 1.5 கிலோ தங்கத்தையும் கைப்பற்றியிருக்கிறது சி.பி.ஐ. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பும் அந்தரங்கமும் கேள்விக்குறியாகியிருக்கின்றன. “செல்போன், ஒரு தகவல் தொடர்பு சாதனம் என்பதைத் தாண்டி, நமது அனைத்துத் தகவல்களையும் சேர்த்துவைக்கும் ஒரு பெட்டகமாகவே மாறியிருக்கிறது. அந்தப் பெட்டகத்தை உடைத்துத் திருடும் கும்பல்கள் இன்று பெருகிவிட்டன. மக்களின் அறியாமையை, இயலாமையைப் பயன்படுத்தி, அவர்களின் தன்மானத்தின்மீது அச்சுறுத்தலை ஏற்படுத்தி, அதைவைத்துக் கொள்ளையடிக்கும் கும்பல்களால் உயிர்ப்பலி அதிகரித்துவருகிறது” என்கிறார்கள் சீனியர் காவல்துறை அதிகாரிகள். என்னென்ன வகைகளில் சைபர் குற்றங்கள் நடக்கின்றன, அவற்றில் மக்கள் எப்படியெல்லாம் பலியாகிறார்கள் என்பது குறித்து விசாரித்தோம். கிடைத்த தகவல்கள் நம்மை நடுங்கவைத்தன!

‘க்ளிக்’ அபாயம்! - நடுங்கவைக்கும் சைபர் குற்றங்கள்!

பலி கேட்கும் ‘லோன் ஆப்’-கள்!

சைபர் க்ரைம்களில் பெருமளவில் குற்றம் நிகழ்வது கடன் வழங்கும் ‘லோன் ஆப்’-கள் மூலமாகத்தான். சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த ஐடி ஊழியரான நரேந்திரன், மூன்று மாதங்களுக்கு முன்பாக ‘லோன் ஆப்’ மூலமாக 33,000 ரூபாய் கடன் பெற்றிருக்கிறார். கடனைத் திருப்பிச் செலுத்திய நிலையிலும், ‘அசலைக் கொடுத்துட்டே. வட்டியை யார் கட்டுவா... இன்னும் நீ 33,000 ரூபாய் கொடுக்கணும்’ என்று மிரட்டியிருக்கிறது அந்த ‘லோன் ஆப்’ கும்பல். தொடர்ந்து ஆபாசமாகவும் திட்டியிருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுக்க, பல்வேறு ஆன்லைன் ‘லோன் ஆப்’ மூலமாக 80,000 ரூபாய் வரை கடனாகப் பெற்று பணம் செலுத்தியிருக்கிறார் நரேந்திரன். ஒரு கட்டத்தில் வாங்கிய கடன்களைச் செலுத்த முடியாமல் திணறியிருக்கிறார். விடாமல் துரத்திய அந்த மோசடிக் கும்பல், நரேந்திரனின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்திரித்து, அவர் தொடர்பிலுள்ள பெண்களுக்கு அனுப்பியிருக்கிறது. இதில், மனம் நொந்துபோன நரேந்திரன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

அதேபோல, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சீதா என்பவர், ‘லோன் ஆப்’ மூலமாக 2,275 ரூபாய் கடன் பெற்றிருக்கிறார். அடுத்த வாரமே அவரைத் தொடர்புகொண்ட மர்ம ஆசாமிகள், ‘கடனைத் திருப்பிச் செலுத்த முடியலைன்னா ஏன் வாங்குற?’ எனத் தொடங்கி ஆபாசமாகத் திட்டியிருக்கின்றனர். ஒரு கட்டத்தில், ‘நீ வாங்குன கடனுக்கு வட்டிக்கு மேல வட்டி ஏறிடுச்சு. மொத்தப் பணத்தையும் கொடுக்கலைன்னா, உன் படத்தை ஆபாசமாகச் சித்திரிச்சு நெட்ல போட்டுடுவோம்’ என்று மிரட்டியுள்ளனர். பயந்துபோன அந்தப் பெண், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கிக் கட்டியிருக்கிறார். ஆனாலும் மீண்டும் மீண்டும் மிரட்டி 2.47 லட்சம் ரூபாய் வரை அந்தப் பெண்ணிடமிருந்து கொள்ளையடித்திருக்கிறது அந்த ஆப் கும்பல். மேலும் பணம் கேட்டு மிரட்டியதோடு, அவரின் படத்தை ஆபாசமாகச் சித்திரித்து, அந்தப் பெண்ணின் கணவர் உட்பட அவரின் உறவினர்களுக்கும் அனுப்பிவிட்டது அந்த மோசடிக் கும்பல். இது குறித்து சீதா அளித்த புகாரில், ராமநாதபுரம் சைபா் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

“சாட்டிலைட்ல உங்க வீட்டு லொகேஷன்தான் காட்டுது!”

‘லோன் ஆப்’களால் நடைபெறும் கொள்ளை ஒருபுறமிருக்க, போனிலேயே மிரட்டிப் பணம் பறிப்பது, செல்போன் டவர் வாடகை மோசடி எனப் புதுப்புது சைபர் க்ரைம் கும்பல்களும் முளைத்திருக்கின்றன.

ஓசூரைச் சேர்ந்த நகைக்கடை ஊழியர் சந்திரகுமாரைத் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், “நான் சென்னை சைபர் க்ரைம் போலீஸ் பேசுறேன். நீங்க சிறார் ஆபாசப் படங்களைப் பார்ப்பதாக எங்களுக்குப் புகார் வந்திருக்கு. உங்களை வழக்கிலிருந்து தப்பவைக்கணும்னா, 10,000 ரூபாய் உடனே அனுப்புங்க” என்றிருக்கிறார். பின்னணியில், போலீஸ் வாக்கி டாக்கி சத்தம் கேட்டதால், உண்மையாகவே போலீஸிலிருந்துதான் அழைப்பு வந்திருக்கிறது என்று நம்பி, மர்மநபர் சொன்னபடி பணத்தை அனுப்பியிருக்கிறார் சந்திரகுமார். தனக்கு அழைப்பு வந்த எண்ணை, சந்திரகுமார் தொடர்புகொள்ள முயன்றபோது ‘ஸ்விட்ச் ஆஃப்’ என்று வந்திருக்கிறது. உடனே கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் போலீஸில் சந்திரகுமார் புகாரளிக்கவும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிமுத்து, அவரின் நண்பர்கள் இருவரை அள்ளித் தூக்கியது போலீஸ். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “இப்படி நிறைய பேர்கிட்ட போலீஸ்போலப் பேசி ஏமாற்றியிருக்கோம். எதிர்முனையில பேசுறவங்க நம்பணுங்கறதுக்காக, செல்போன் மூலம் வாக்கி டாக்கி சத்தத்தை ஒலிக்கவிட்டு ஏமாத்துவோம்” என்றதும், போலீஸாரே அதிர்ந்துபோயிருக்கிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் நாகபூசனம். அவரது செல்போன் எண்ணுக்குக் கடந்த ஜூன் மாதம் ஒரு மெசேஜ் வந்து. அதில், “தனியார் செல்போன் டவருக்கு இடம் கொடுத்தால் 80 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கப்படும். மாதம் 45 ஆயிரம் வாடகை தரப்படும்” என்று சொல்லப்பட்டிருந்தது. அந்த எண்ணைத் தொடர்புகொண்டு நாகபூசனம் பேசியபோது, “சாட்டிலைட்ல உங்க வீட்டு லொகேஷன்தான் செல்போன் டவர் வைக்க ஏற்ற இடமாகக் காட்டுது. அதனால்தான் உங்களுக்கு மெசேஜ் செஞ்சோம். பத்திரப் பதிவுக்கு 12,000 ரூபாய் செலவாகும். நீங்க 6,000 ரூபாய் அனுப்ப வேண்டும்” என்றிருக்கிறார் எதிர்முனையில் பேசியவர். அதை நம்பி நாகபூசனமும் பணத்தை அனுப்பியிருக்கிறார். அடுத்துடுத்து, “டவர் வைக்க மெட்டீரியல் தயாரா இருக்குது. இதை மூன்று லாரிகளில் அனுப்பணும். 2,80,000 ரூபாய் செலவாகும். இதையும் நீங்கதான் கொடுக்கணும்” என்றிருக்கிறார்கள். நாகபூசனமும், அந்த மோசடிக் கும்பல் சொன்ன வங்கிக் கணக்குக்குப் பணத்தை அனுப்பியிருக்கிறார். இப்படி, கொஞ்சம் கொஞ்சமாக 14,26,000 ரூபாய் வரை பணம் அனுப்பியிருக்கிறார் நாகபூசனம். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்து, கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்திருக்கிறார். ஆனால், போன பணமும் வரவில்லை, செல்போன் டவரும் வரவில்லை.

‘க்ளிக்’ அபாயம்... ஆரம்பமாகும் பிரச்னை!

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீனிவாசனுக்கு, ஒரு வங்கியிலிருந்து பேசுவதாக, கடந்த வாரம் ஓர் அழைப்பு வந்திருக்கிறது. அவரிடம் பேசியவர், “கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரித்துத் தருகிறோம். உங்க வாட்ஸ்அப்புக்கு ஒரு லிங்க் வரும். அதை ‘க்ளிக்’ செய்யுங்கள். சில நிமிடங்களிலேயே உங்க கிரெடிட் லிமிட் அதிகமாகிடும்” என்றிருக்கிறார். அந்த மர்ம நபர் சொன்னபடியே, ஸ்ரீனிவாசனின் வாட்ஸ்அப்புக்கு ஒரு லிங்க் வந்திருக்கிறது. லிங்க்கை ‘க்ளிக்’ செய்த சில நிமிடங்களிலேயே, ஸ்ரீனிவாசனின் கிரெடிட் கார்டில் இருந்த 90,000 ரூபாயும் எடுக்கப்பட்டுவிட்டது. அதிர்ச்சியடைந்த ஸ்ரீனிவாசன், சென்னை சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் புகாரளிக்கவும், வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு, பணத்தை மீட்டுக் கொடுத்திருக்கிறார்கள் போலீஸார்.

சமீபத்தில், பிரபல சின்னத்திரை நடிகை லட்சுமி வாசுதேவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், “எனது போனுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு விழுந்திருப்பதாக ஒரு மெசேஜ் வந்தது. அதில் கொடுக்கப்பட்ட லிங்க்கை டச் பண்ணினதும், ஒரு ஆப் தானாக டௌன்லோடு ஆனது. மூன்று நாள்கள் கழித்து நான் ஐந்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருப்பதாக மெசேஜ் வந்தது. தொடர்ந்து, கடனைத் திரும்பச் செலுத்தச் சொல்லிப் பல மிரட்டல் கால், மெசேஜ்கள் வந்தன. இது குறித்து ஹைதராபாத் க்ரைம் பிரிவுக்கு நான் புகார் கொடுத்திருக்கிறேன். அந்தக் கும்பல் என் போனை ‘ஹேக்’ செய்து, என் புகைப்படத்தை மார்பிங் செய்து என்னுடைய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பிவிட்டனர்” என்று கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்டிருந்தார்.

இப்படி, `பரிசு விழுந்திருக்கிறது’, `கடன் தருகிறோம்’, `டவர் அமைத்துத் தருகிறோம்’, `வேலை வாங்கித் தருகிறோம்’, `ஷேர் மார்க்கெட் ஆலோசனை தருகிறோம்’, `நீங்கள் ஆபாச வீடியோ பார்த்திருக்கிறீர்கள்’ என சாமானியர் தொடங்கி பிரபலங்கள் வரை பலருக்கும் சைபர் க்ரைம் மோசடிக் கும்பல் வலை

விரிக்கிறது. அவசரத் தேவையில், ஆசையில், பயத்தில் பலரும் இதில் சிக்கிப் பரிதவிக்கிறார்கள். சமீபத்தில்கூட, “நீங்கள் மின்கட்டணத்தை உடனடியாகச் செலுத்தவில்லையென்றால், உங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். இந்த ‘லிங்க்’-ஐ க்ளிக் செய்யுங்கள்” எனப் புது மோசடி பரவிவருகிறது. அந்த லிங்க்கை ‘க்ளிக்’ செய்தவுடன், நமது மொத்த டேட்டாவையும் எடுத்துவிடுகிறது அந்த மோசடிக் கும்பல்.

அம்ரேஷ் புஜாரி
அம்ரேஷ் புஜாரி

ஐடி நிறுவனம்போல மோசடி... உத்தரப்பிரதேச டிஜிட்டல் திருடர்கள்!

நம்மிடம் பேசிய தமிழ்நாடு சைபர் க்ரைம் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சிலர், “முன்பெல்லாம், ‘பேங்க்கிலிருந்து கால் பண்றோம்... கார்டு மேலே இருக்குற 16 நம்பரைச் சொல்லு சார்’ என்று மோசடியில் ஈடுபட்டனர். இப்போதெல்லாம், ஒரு லிங்க்கை அனுப்பிவிட்டு, நாம் அதை ‘க்ளிக்’ செய்தவுடன் மொத்த டேட்டாவையும் உருவிவிடுகிறார்கள். அவர்கள் அனுப்பிய லிங்க்கைத் தொட்டவுடனேயே, நமது போனிலுள்ள போட்டோக்கள், பேங்க் அக்கவுன்ட் விவரங்கள், தொடர்பு எண்கள் வரை அனைத்தும் அவர்கள் கைக்குப் போய்விடுகின்றன. உங்கள் செல்போனுக்கு வரும் ஒரு லிங்க் என்பது, உங்களை நோக்கி வீசப்படும் ஓர் அபாயகரமான தூண்டில். பாதுகாப்பாற்ற செல்போன் என்பது, நம் கையிலேயே இருக்கும் ஒரு ‘டைம் பாம்’-ஆக மாறியிருக்கிறது.

கடன் ஆப் மோசடி தொடர்பான புகார்களில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தீபக்குமார் பாண்டே என்பவரைச் சமீபத்தில் கைதுசெய்தோம். தீபக் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஹரியானாவைச் சேர்ந்த ஜித்தேந்தர், நிஷா, பிரகாஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஒரு குழுவாக இயங்கி, 50-க்கும் மேற்பட்ட கடன் வழங்கும் ஆப்களை நடத்தியிருக்கிறார்கள். அந்த ஆப்கள் மூலமாக, கொடுத்த பணத்தைவிடக் கூடுதல் தொகையை மிரட்டிப் பெற்றிருக்கிறார்கள். ஐடி நிறுவனம் என்கிற பெயரில், ஊழியர்களைச் சம்பளத்துக்குவைத்து, நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணத்தை மிரட்டி வசூலித்திருக்கிறார்கள். ‘பிக்பாக்கெட்’ திருடர்கள் காலமெல்லாம் மலையேறி, இப்போது டிஜிட்டல் திருடர்களின் காலமாகிவிட்டது. பொதுமக்கள்தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். எளிதாகக் கடன் கிடைக்கிறது என அங்கீகரிக்கப்படாத லோன் ஆப்கள் மூலம் யாரும் கடன் வாங்காதீர்கள்” என்றனர்.

விழிப்புணர்வு இல்லாதது ஏன்?

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்காகக் காவல்துறை என்ன ஆக்கபூர்வ நடவடிக்கை எடுத்திருக்கிறது... எது அங்கீகரிக்கப்படாத, அங்கீகரிக்கப்பட்ட ‘லோன் ஆப்’கள் என்பது சாமானிய மக்களுக்கு எப்படித் தெரியும்... சைபர் க்ரைம் மோசடிக் கும்பல்கள், தங்களின் இலக்கை நகரத்திலிருந்து கிராமங்களை நோக்கி இப்போது திருப்பியிருக்கின்றன. அவர்களின் மோசடி வலையில் சிக்கி, தங்கள் ஒரு மாத வருமானத்தையெல்லாம் இழந்துவிட்டுக் கண்ணீர்விடும் குடும்பங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் அதிகரித்துவருகின்றன. தன் உடல், தன் குடும்பத்தாரின் உடல் போலியாக நிர்வாணமாகச் சித்திரிக்கப்பட்டு பரப்பப்பட்டுவிடும் என பயந்து பெருமளவு புகார்கள் பதிவாகாமலேயே போய்விடுவதால், குற்றத்தின் வீரியம் இன்னும் யாருக்கும் புரிபடவில்லை.

இறுதியாக, சைபர் க்ரைம் பிரிவு டி.ஜி.பி அம்ரேஷ் புஜாரியிடம் பேசினோம். “பொதுமக்களுக்காக வங்கிகளிலும், பொது இடங்களிலும் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். பண மோசடி நடந்ததும் உடனடியாக 1930 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு உங்கள் புகாரைப் பதிவுசெய்யுங்கள். உங்களிடமிருந்து எடுக்கப்பட்ட பணத்தை வங்கியிடம் பேசி மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாலும் பொதுமக்கள் இரண்டு மூன்று நாள்கள் கழித்துத்தான் புகாரளிக்கிறார்கள். அதற்குள் குற்றவாளிகள் அந்தப் பணத்தை வங்கியிலிருந்து எடுத்துவிடுகிறார்கள். தமிழ்நாட்டில், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் உடனடியாகப் புகார் வந்ததால், சுமார் 64 கோடி ரூபாய் பணத்தை மீட்டிருக்கிறோம். கடன் வாங்குவதற்காக எந்த இணையதளத்திலிருந்தும் எந்த ஆப்பையும் டௌன்லோடு செய்யாதீர்கள். உங்கள் வங்கி விவரங்களை யாரோடும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்” என்றார்.

எயிட்ஸ் தடுப்பு விழிப்புணர்வை ஒரு காலத்தில் பட்டிதொட்டி எங்கும் கொண்டுசேர்த்தது அரசு. அது போன்ற, தீவிர விழிப்புணர்வு பிரசாரங்கள் சைபர் குற்றத் தடுப்பு தொடர்பாக இதுவரை செய்யப்படவில்லை. வெறும் பதாகைகளை வைப்பதோடு, காவல்துறை தன் கடமை முடிந்துவிட்டதென ஒதுங்கக் கூடாது. காவல்துறையும் பொதுமக்களும் இணைந்தால் மட்டுமே, சைபர் குற்றங்களைத் தடுக்க முடியும்!

‘க்ளிக்’ அபாயம்! - நடுங்கவைக்கும் சைபர் குற்றங்கள்!

தேவையில்லாததை ஓப்பன் செய்யாதீங்க!

“நமது செல்போனில் ‘Unknown source’ பகுதிக்கு அனுமதி அளித்திருந்தால் மட்டுமே, லிங்க் மூலம் ஒரு ஆப் டௌன்லோடு ஆகும். அந்த அனுமதியை அளிப்பதும் நாம்தான். முன்பு நாம் சேமித்துவைத்திருக்கும் வங்கி விவரங்களின் மூலம், நமது கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்கிறார்கள். பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது முக்கியக் காரணம். நமக்குத் தெரியாத, தேவையில்லாத எந்த மெசேஜ், மெயில் வந்தாலும் ஓப்பன் செய்யக் கூடாது. தேவையில்லாத ஆப்களை டௌன்லோடு செய்யவே கூடாது. பணம், பாலியல், பரிசுகள் என ஆசைகாட்டும் எந்த லிங்க்கையும் க்ளிக் செய்யாதீர்கள்!” - ஸ்ரீராம், வல்லுநர், சைபர் பாதுகாப்பு.

‘க்ளிக்’ அபாயம்! - நடுங்கவைக்கும் சைபர் குற்றங்கள்!

பாதிக்கப்பட்டவர்கள் செய்யவேண்டியது என்ன?

“இப்போதுள்ள டெக்னலாஜியைக் கேடயமாகப் பயன்படுத்தி, மறைந்திருந்து குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். குற்றத்தைச் செய்தவர்கள் யார் என்பதை முதலில் கண்டுபிடிப்பது அவசியம். அதற்குண்டான கட்டமைப்புகள் அனைத்துமே சைபர் பிரிவில் இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர் செய்யவேண்டிய முதல் விஷயம், தங்களை அடையாளம் தெரியாத ஒருவர் மிரட்டுகிறார், புகைப்படத்தை ஆபாசமாகச் சித்திரித்து அச்சுறுத்துகிறார் என்றால், முடிந்த அளவு விரைவாகப் புகாரளிக்க வேண்டும். அப்போதுதான் குற்றவாளியைக் கூடிய மட்டும் விரைவாக அடையாளம் கண்டறிந்து அவர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். தாமதமாகப் புகார் அளிக்கும்போது, தீங்கிழைத்த நபர் தடயங்களை அழித்துத் தப்பிவிட வாய்ப்பிருக்கிறது!” - ரமேஷ், மூத்த வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்.