அரசியல்
அலசல்
Published:Updated:

கொலை... கொள்ளை... பதற்றம் - தூக்கம் கலைக்குமா காவல்துறை?

கொலை... கொள்ளை... பதற்றம் - தூக்கம் கலைக்குமா காவல்துறை?
பிரீமியம் ஸ்டோரி
News
கொலை... கொள்ளை... பதற்றம் - தூக்கம் கலைக்குமா காவல்துறை?

கொலைசெய்யப்பட்ட சத்தியபாண்டி மீது ஏழு கொலை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவருக்கும், மற்றொரு ரௌடியான சஞ்சய் என்பவருக்கும் இடையே தகராறு இருந்துவந்தது.

உணர்ச்சிவசத்தால் நிகழும் கொலைகள், குடும்பப் பிரச்னை, சொந்தப் பிரச்னைகளால் நிகழும் கொலைகள், பணத்துக்கு ஆசைப்பட்டு சொந்த பந்தங்களால் நிகழ்த்தப்படும் கொலை, கொள்ளைகள் எப்போதும்போலத் தொடரத்தான் செய்கின்றன. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இது போன்ற செயல்களை முற்றிலுமாகத் தடுக்க முடியாது என்பது யதார்த்தமும்கூட. ஆனால், ரௌடிகளுக்குள் ‘கேங் வார்’, பட்டப்பகலில் சாலையில் ஒருவரையொருவர் வெட்டிச் சாய்ப்பது, காவல்துறை அதிகாரிகள் மீதே தாக்குதல் தொடுப்பது, திட்டமிட்டு அச்சமின்றி கொள்ளையடிப்பது எனத் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கையே கேள்விக்குள்ளாக்கும் சம்பவங்கள் சமீபத்தில் அதிகரித்திருக்கின்றன!

“காவல்துறைமீது ரௌடிகளுக்கு பயம் போய்விட்டது. ரோந்து செல்வதையே வெறும் சம்பிரதாயமாகக் கருதும் நடைமுறை காவல்துறைக்குள் தற்போது அதிகரித்துவருகிறது. உயரதிகாரிகளின் கண்காணிப்பு சரிவர இல்லாததே, இது போன்ற குற்றச்செயல்கள் பெருகுவதற்கான முக்கியக் காரணம்” என வருத்தம் தெரிவிக்கிறார்கள் விவரமறிந்தவர்களும், சில நேர்மையான காக்கிகளும். அவர்களின் வருத்தத்தில் உண்மையும் இருக்கிறது.

கொலை... கொள்ளை... பதற்றம்
கொலை... கொள்ளை... பதற்றம்

சமீபத்தில், சென்னை அயனாவரத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் சங்கரை, மூன்று பேர்கொண்ட கும்பல் இரும்புக்கம்பியால் தாக்கிவிட்டுத் தப்பியிருக்கிறது. இத்தனைக்கும் அயனாவரம் காவல் நிலையம் அருகிலேயேதான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இது போன்று காவலர்கள்மீதே தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் பொதுமக்களின் பாதுகாப்போடு, காவல்துறையின் செயல்பாட்டையும் சேர்த்தே கேள்விக்குள்ளாக்குகின்றன. கடந்த சில வாரங்களில் நிகழ்ந்திருக்கும் கொலைகளும் கொள்ளைகளும் உடனடியாகக் காவல்துறை விழித்துக்கொள்ளவேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன.

அதிரடித்த இரட்டைக்கொலை... கேள்விக்குறியான சட்டம்-ஒழுங்கு!

கோவை விளாங்குறிச்சியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் சிலரிடம் பணியாற்றிவந்த சத்தியபாண்டி என்பவரை, பாப்பநாயக்கன்பாளையத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்திலேயே ஓட ஓட விரட்டி வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலைசெய்திருக்கிறது ஒரு கும்பல். கடந்த பிப்ரவரி 12-ம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தின் பின்னணியே ரௌடிகளுக்கு இடையிலான ‘கேங் வார்’தான் என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

நம்மிடம் பேசிய காவல்துறை ஆய்வாளர்கள் சிலர், “கொலைசெய்யப்பட்ட சத்தியபாண்டி மீது ஏழு கொலை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவருக்கும், மற்றொரு ரௌடியான சஞ்சய் என்பவருக்கும் இடையே தகராறு இருந்துவந்தது. ஒரு தியேட்டர் பஞ்சாயத்தில், இருவரும் நேருக்கு நேராக முட்டிக்கொண்டனர். ‘யார் பெரியவர்’ என்கிற மோதலில்தான் சத்தியபாண்டியைத் தீர்த்துக்கட்டியிருக்கிறது சஞ்சய் தரப்பு. இவ்வளவுக்கும் சத்தியபாண்டி கொலை செய்யப்பட்ட அதேநாளில், சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தைக் கோவையில் நடத்தினார் ஏ.டி.ஜி.பி சங்கர். அந்தச் சூழலில், இப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததை யாருமே எதிர்பார்க்கவில்லை. ரௌடிகளைக் கண்காணித்து, உரிய ‘அலர்ட்’ கொடுக்கவேண்டிய உள்ளூர் உளவுத்துறையினரும், ஏரியா காவல்துறை அதிகாரிகளும் மெத்தனமாக இருந்ததாலேயே இந்தக் கொலையைத் தடுக்க முடியாமல் போனது” என்றனர்.

கொலை... கொள்ளை... பதற்றம்
கொலை... கொள்ளை... பதற்றம்

சத்தியபாண்டி கொலைக்குப் பிறகும்கூட போலீஸ் உஷாராகவில்லை. அவர் கொல்லப்பட்ட அடுத்த 15 மணி நேரத்தில், பட்டப்பகலில் மற்றொரு கொலைச் சம்பவம் கோவையை அதிரவைத்தது. கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பவர், தன் நண்பர் மனோஜுடன் வழக்கு விசாரணைக்காக மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டுத் திரும்பியபோது, கோகுலை வெட்டிச் சாய்த்தது நான்கு பேர்கொண்ட கும்பல். சம்பவ இடத்திலேயே கோகுல் உயிரிழந்தார். நீதிமன்றத்துக்கு மிக அருகிலேயே, அந்தக் கொலைவெறித் தாக்குதலை நடத்திவிட்டு, கொலையாளிகள் சர்வசாதாரணமாக அங்கிருந்து நடந்து சென்றதுதான் அதிர்ச்சிக்குரியது. இந்தக் காட்சிகளைச் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடவும், கோவை மட்டுமல்ல... மொத்தத் தமிழகமும் பதைபதைத்துப்போனது. கோகுல் கொலை வழக்கில் தொடர்புடைய இருவரைத் துப்பாக்கியால் சுட்டு போலீஸ் பிடித்திருந்தாலும், பொதுமக்களிடம் இன்னும் பதற்றம் குறையவில்லை.

கோஷ்டி மோதல், அரசியல் ஆசை... துண்டிக்கப்பட்ட ரௌடியின் தலை!

சேலம் மாவட்டம், காட்டூரைச் சேர்ந்த பிரபல ரௌடி ஆனந்தன் மீது கொலை, வழிப்பறி, ஆள்கடத்தல் உட்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கடந்த பிப்ரவரி 5-ம் தேதி இரவு, நண்பர் ஒருவருடன் பைக்கில் வந்துகொண்டிருந்தவரை வழிமறித்த ஆறு பேர்கொண்ட கும்பல், ஆனந்தனை வெட்டிக் கொன்றது. கொடூரத்தின் உச்சமாக, அவரைச் சில அடி தூரம் இழுத்துச் சென்று, அவர் தலையைக் கொடூரமாக அறுத்திருக்கிறார்கள். கொலையாளிகளை மூன்று தனிப்படைகள் தேடிவந்த நிலையில், சேலம் வலசையூரைச் சேர்ந்த ரௌடி அன்பழகனும், அவருடைய கூட்டாளிகளும் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்கள்.

நம்மிடம் பேசிய சேலம் மாவட்டக் காவல் அதிகாரிகள் சிலர், “ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவரின் வலதுகரமாகச் செயல்பட்ட காட்டூர் ஆனந்தனுக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது. அதனால், சமீபகாலமாகக் கட்டப்பஞ்சாயத்து செய்வதைக் குறைத்துக்கொண்டார். அவரிடம் வேலை பார்த்துவந்த அன்பழகன், காட்டூர் ஆனந்தனின் இடத்துக்கு வர ஆசைப்பட்டார். வலசையூரிலுள்ள ஒரு பேக்கரியில் அன்பழகன் மாமூல் கேட்டது பிரச்னையானதால், அன்பழகனை அழைத்து ஆனந்தன் கண்டித்திருக்கிறார். இதனால், ‘ஆனந்தன் இருக்குற வரை நாம தலையெடுக்க முடியாது. சேலத்தை நாம கட்டி ஆளணும். அதுக்கு ஆனந்தன் தலை உருளணும்’ எனச் சபதமிட்டே, ஆனந்தனின் தலையை வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். இவர்களுக்குள்ளான ‘கேங் வார்’ பிரச்னையைச் சில உளவுத்துறை அதிகாரிகள் முன்பே எச்சரித்தும், காவல்துறை உயரதிகாரிகள் கோட்டைவிட்டுவிட்டனர்” என்றனர்.

கொலை... கொள்ளை... பதற்றம்
கொலை... கொள்ளை... பதற்றம்

கடந்த சில வாரங்களில் மட்டுமே, கன்னியாகுமரி ராஜ்குமார், புளியந்தோப்பு மனோ, சீர்காழி தினேஷ், தூத்துக்குடி கருப்பசாமி, கடலூர் தமிழ், மானாமதுரை அழகுபாண்டி, ராமநாதபுரம் பிரபுதேவா என ரௌடிகளுக்குள் நடந்த ‘கேங் வார்’களால் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் நீளமானது. ஒருவேளை காவல்துறை அதிகாரிகள் உரிய நேரத்தில் தலையிட்டு, கண்காணிப்பை பலப்படுத்தியிருந்தால் இது போன்ற கொடூரக் கொலைகளைத் தடுத்திருக்க முடியும்.

“போலீஸ்னா பெரிய ஆளா... அடிடா அவனை” - காவலரைக் கல்லால் அடித்துக் கொன்ற கும்பல்!

சென்னை பழவந்தாங்கல் கண்ணன் காலனியைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் விஜயன், கடந்த பிப்ரவரி 6-ம் தேதி இரவு தன் மைத்துனர் வாசுதேவனுடன் கடைக்குச் சென்றிருக்கிறார். அப்போது, வாசுதேவனின் நண்பர் அஜ்மீர் காஜா என்பவர், சில ரௌடிகளால் தாக்கப்படுவதையறிந்து, பழவந்தாங்கல் ரயில் நிலையத்துக்கு விஜயன் சென்றிருக்கிறார். அஜ்மீர் காஜாவை அடித்துக்கொண்டிருந்தவர்களிடம், “அவரை அடிக்காதீங்க நான் போலீஸ்...” என விஜயன் எச்சரித்திருக்கிறார். எதிர்த்தரப்பில் இருந்தவர்கள், `போலீஸ்னா பெரிய ஆளா... அவனை அடிடா முதல்ல...’ என்றதோடு,, விஜயனையும் சரமாரியாகக் கற்களால் தாக்கியிருக்கிறார்கள். இதில் தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்தார் விஜயன். இந்தச் சம்பவத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்குக் காவலர்கள்மீது துளியளவும் பயமில்லை என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.

போலீஸின் மெத்தனத்தால், ரௌடிகள் துப்பாக்கி எடுத்துச் சுடவும் ஆரம்பித்துவிட்டனர். சென்னையில், ஒருபடி மேலாகச் சென்று, நாட்டு வெடிகுண்டு தயாரிக்கவும் தொடங்கிவிட்டனர். கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, பிரபல ரௌடி ஓட்டேரி கார்த்திக் படுகாயங்களுடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில், சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் அவரைக் கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் முயற்சியில் கார்த்திக் ஈடுபட்டபோது, தவறுதலாக குண்டு வெடித்து அவர் காயமடைந்தது தெரியவந்தது. அவருக்கு வெடிமருந்து எங்கேயிருந்து வந்தது... சென்னையிலுள்ள பிற ரௌடிகளிடமும் இது போன்ற நாட்டு வெடிகுண்டுகள் இருக்கின்றனவா... என்பதையெல்லாம் போலீஸ் விசாரித்தால் மட்டுமே மாநகரம் அமைதியாக இருக்க முடியும்.

சில வருடங்களுக்கு முன்பு, ரௌடிகளுக்குள் நடந்த கோஷ்டித் தகராறில் சென்னை ஜெமினி பாலம் அருகிலேயே வெடிகுண்டு வீச்சு நடந்தது. அது போன்ற ரத்தக்களறிக் காட்சிகள் மீண்டும் தலைநகரில் ஒருபோதும் நிகழ்ந்துவிடக் கூடாது.

கொலை... கொள்ளை... பதற்றம்
கொலை... கொள்ளை... பதற்றம்

அடுத்தடுத்து கொள்ளை... தேவையற்ற பதற்றம்... தூங்குகிறதா போலீஸ்?

திருவண்ணாமலையில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி நள்ளிரவில் தொடர்ச்சியாக நான்கு ஏ.டி.எம்-கள் கொள்ளையடிக்கப்பட்டன. ‘காஸ் வெல்டிங்’ மூலம் இயந்திரங்களை உடைத்து, 72.5 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்தது ஒரு கும்பல். தமிழ்நாட்டையே பரபரப்பாகிய இந்தக் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, திருவண்ணாமலையைச் சுற்றியிருந்த மாவட்டங்களில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. ஹரியானா மாநிலம் வரை விசாரணை வளையத்தை விரிவுபடுத்திய போலீஸார், அந்த மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஆரிஃப், ஆஜாத் என இருவரைக் கைதுசெய்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீஸார் தேடிவருகிறார்கள். இதற்கிடையே, கொள்ளை நடைபெற்ற தினத்தில் ரோந்துப் பணியைச் சரிவர செய்யாத ஆறு காவலர்களை ஆயுதப்படைக்கு இடம் மாற்றியிருக்கிறது காவல்துறை மேலிடம்.

நம்மிடம் பேசிய காவல்துறை உயரதிகாரிகள் சிலர், “திருவண்ணாமலை போன்ற ஒரு பெருநகரத்தில், சாவகாசமாக நான்கு ஏ.டி.எம்-களில் கொள்ளையடித்துவிட்டு ஹரியானா வரை தப்பிச் சென்றிருக்கிறது ஒரு கொள்ளைக் கும்பல். 48 மணி நேரத்தில் குற்றவாளிகளைப் பிடித்துவிட்டதைப் பாராட்டலாம். ஆனால், சம்பவம் நடக்காமல் தடுத்திருக்கவேண்டியவர்கள் அலட்சியமாக இருந்ததைக் கண்டித்தே ஆக வேண்டும். நான்கு ஏ.டி.எம்-களிலும் கொள்ளையடிப்பதற்கு, கண்டிப்பாக அதிக நேரம் பிடித்திருக்கும். அந்தச் சமயத்தில் ஒரு காவலராவது ஏ.டி.எம் பகுதியில் ரோந்துக்குச் சென்றிருந்தால், அந்தக் கொள்ளையையே தடுத்திருக்கலாம். ஆனால், அதைச் செய்யாமல் கோட்டைவிட்டிருக்கிறார்கள். இது போன்ற சம்பவங்களில் சரிவரப் பணியாற்றாத காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றுவது ஒரு சடங்குபோலச் செய்யப்படுகிறது. இந்தச் சம்பவத்தில், ரோந்துப் பணியை ஒழுங்காகச் செய்யாத காவலர்களை இடம் மாற்றிவிட்டார்கள்... ஆனால், அவர்கள் பணியாற்றினார்களா, இல்லையா என்பதைக் கண்காணிக்காமல் கோட்டைவிட்ட உயரதிகாரிகளை யார் தண்டிப்பது?

கொலை... கொள்ளை... பதற்றம்
கொலை... கொள்ளை... பதற்றம்
கொலை... கொள்ளை... பதற்றம்
கொலை... கொள்ளை... பதற்றம்
கொலை... கொள்ளை... பதற்றம்

திருவண்ணாமலை கொள்ளை நடந்த அதே சமயத்தில், சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் ஒரு கொள்ளை நடந்தது. ஜெயச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான நகைக்கடையின் ஷட்டரில் ஓட்டையைப் போட்டு, 5 கோடி ரூபாய் மதிப்புடைய தங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்திருக்கிறது ஒரு கும்பல். ஆறு தனிப்படை அமைத்தும், இதுவரை கொள்ளையர்கள் சிக்கவில்லை. எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும் பேப்பர் மில்ஸ் சாலையில், அவ்வளவு துணிச்சலாக ஷட்டரைத் துளையிட்டுக் கொள்ளையடிக்கிறார்கள் என்றால், பொதுமக்களிடம் பதற்றம் வராதா... வியாபாரிகளால் எப்படி தைரியத்துடன் தொழில் செய்ய முடியும்... இவ்வளவு துணிச்சலாகக் கொள்ளையர்கள் உலாவினால், போலீஸ் தூங்குகிறது என்றுதானே மக்கள் நினைப்பார்கள்?” என்றனர் வருத்தமாக.

தமிழகத்தில், நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கின் நிலை கேள்விக்குறியாகிக்கொண்டே போகிறது. ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் சுற்றுப்பயணம் செய்யும் முதல்வர், அந்தந்த மண்டலக் காவல் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் போடுகிறார். அவர்கள் சில தரவுகளை எடுத்துவைத்து, டிசைன் டிசைனாக பவர் பாயின்ட் காட்சிகளை முதல்வருக்கு விளக்குகிறார்கள். குற்றங்கள் குறைந்ததாகப் பெருமையோடு கூறுகிறார்கள். கூட்டம் முடிந்தவுடன் பழையபடி ஸ்டேஷனில் போய் வழக்கமான அதே மந்தகதியில்தான் இயங்குகிறார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சமீபத்தில் நடக்கும் கொலைகள், கொள்ளைகளின் பின்னணியில் போதை, அரசியல், வசூல் என இன்னொரு குற்ற உலகமும் திறக்கிறது. காவல்துறை உடனடியாக விழித்துக்கொள்ளவேண்டிய தருணம் இது. காவல் கண்காணிப்பை உறுதிப்படுத்தாத காவல்துறை உயரதிகாரிகள்மீது முதல்வர் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, தமிழகத்தில் நடைபெறும் கேங் வார் கொலைகளுக்கும், கலங்கடிக்கும் கொள்ளைகளுக்கும் முடிவுரை பிறக்கும். மக்கள் பதற்றமின்றி நிம்மதியாக வாழ, காவல்துறையை நோக்கிச் சாட்டையை எடுப்பாரா முதல்வர்?

சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு

“நமது மாநிலம் அமைதியாக இருக்கிறது!” - டி.ஜி.பி சைலேந்திர பாபு சர்டிஃபிகேட்

அதிகரிக்கும் இந்தச் சட்டம்-ஒழுங்கு பிரச்னை தொடர்பாக, தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி சைலேந்திர பாபுவிடம் பேசினோம். “தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, காவல்துறை தனது பணியைச் செய்யவில்லை எனச் சொல்வதெல்லாம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு. திருவண்ணாமலையில் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்டவர்களை 48 மணி நேரத்தில் பிடித்திருக்கிறோம். கோவையில் நடந்த கொலைகூட, 2020-ம் ஆண்டு நடந்த ஒரு கொலைக்காகப் பழிவாங்க நடந்த கொலைதான். அங்கும் இங்கும் நடக்கும் ஒருசில சம்பவங்களைவைத்து ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை இருக்கிறது என்று பேசக் கூடாது. அனைத்து ரௌடிகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு முழுவதுமுள்ள மாநகரங்களில் இரவு ரோந்துக்குச் செல்லாத பகுதியே இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பெயர் சொல்லி பிரச்னை செய்த ஏதாவது ஒரு ரௌடியை இப்போது பார்க்க முடிகிறதா... அனைத்து ரௌடிகளையும் கைதுசெய்திருக்கிறோம். குற்றப் பின்னணியில் இருப்பவர்களையும் கண்காணித்துவருகிறோம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த பத்து ஆண்டுகளில் இப்போதுபோல நமது மாநிலம் அமைதியாக இருந்ததே இல்லை” என்றார்!