அலசல்
அரசியல்
Published:Updated:

‘அடுத்த பேட்ச்’ ரௌடிகள்... அடக்குமா காவல்துறை?

விவேக்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
விவேக்ராஜ்

தற்போதைய நிலவரப்படி பிரபல ரௌடிகளில் பலர், தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு ரியல் எஸ்டேட், அரசியல், பிசினஸ்மேன் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள்

`ரெளடிகள் சாம்ராஜ்யம்’ என்றால் வடசென்னையையும், குப்பங்களையும் கைகாட்டிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது தலைநகர் சென்னையில் தெருவுக்குத் தெரு, ஏரியாவுக்கு ஏரியா, ‘நானும் ரௌடிதான்’ என்கிற ரேஞ்சில் புதிய புதிய ரௌடிகள் புற்றீசல்போல முளைத்துக்கொண்டிருக்கிறார்கள்!

அடுத்த பேட்ச் ரெளடிகள்!

ஒருகாலத்தில் தலைநகர் போலீஸாருக்குத் தலைவலியாக இருந்தவர்கள் பட்டியலில், வெள்ளை ரவி, சேரா, ஆசைத்தம்பி, கபிலன், காட்டான் சுப்பிரமணியன், ‘கேட்’ ராஜேந்திரன், அயோத்திக்குப்பம் வீரமணி, பங்க் குமார் போன்றோர் முன்வரிசையில் இருந்தனர். அவர்களில் போலீஸாருக்கும், அரசியல்வாதி களுக்கும் சவால்விட்ட சிலரை ‘என்கவுன்ட்டர்’ என்ற பெயரில் போட்டுத்தள்ளியது போலீஸ்.

தற்போது தட்சணாமூர்த்தி, அரும்பாக்கம் ராதா, சி.டி.மணி, ‘காக்காதோப்பு’ பாலாஜி, ‘சம்பவ’ செந்தில், ‘கல்வெட்டு’ ரவி, எண்ணூர் தனசேகர் என்று அடுத்த பேட்ச் ரெளடிகள் தலையெடுத்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கீழ் கிளை கிளையாக சில்லறை ரெளடிகள் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். பெரிய தலைகள் சிறைக்குப் போனால், அவர்களிடம் கூலிப்படையாகவும், அடியாளாகவும் வேலை பார்த்தவர்கள் தங்களுக்கென்று ஒரு குழுவை உருவாக்கி குற்றங்களிலும் வன்முறையிலும் இறங்குகிறார்கள். இத்தகைய புதிய ரௌடிகளால், கடைக்காரர்களும் பொதுமக்களும் தொல்லை களைச் சந்தித்துவருகிறார்கள்.

விவேக்ராஜ்
விவேக்ராஜ்

`‘நான் யார்னு தெரியுமா?!’’

இது குறித்து ரௌடிகளைக் கண்காணிக்கும் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் பேசினோம். ``சில்லறை ரெளடிகள் தலைதூக்கியிருப்பதை நாங்கள் மறுக்கவில்லை. அதேநேரத்தில் அவர்களை ஒடுக்க, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுவதையும் சொல்லியாக வேண்டும். சமீபத்தில், சென்னை தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியில் பால் பூத் வைத்திருக்கும் ரஜினி என்பவரிடம் அதே ஏரியாவைச் சேர்ந்த புவனேஷ், பால் பாக்கெட்டுகளைக் கேட்டிருக்கிறான். பணம் கேட்ட ரஜினியிடம், ‘ஏய்... நான் யார்னு தெரிஞ்சுதான் கேக்குறியா?’ என்று வீர வசனம் பேசி மிரட்ட, வாக்குவாதம் முற்றியிருக்கிறது. ஒரு கட்டத்தில் புவனேஷ், தன்னுடைய அண்ணன் கார்த்திக்குடன் சேர்ந்து ரஜினியைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறான். இப்படி புதிய ரௌடிகளாகத் தலைதூக்கும் புவனேஷ், கார்த்திக் இருவரையும் கைதுசெய்திருக்கிறோம். புவனேஷ், வேறு ஒரு வழக்கில் கைதாகி சில தினங்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறான். இவர்கள் இருவரும் ரௌடி நெடுங்குன்றம் சூர்யாவின் கூட்டாளிகளாக இருந்தவர்கள்.

இன்னொரு ரௌடியை சமீபத்தில் தாம்பரத்தில் துப்பாக்கிமுனையில் கைதுசெய்திருக்கிறோம்.அவன் பெயர் விவேக்ராஜ் என்கிற விவேக். இவன், கடந்த 2012-ம் ஆண்டு தாம்பரத்தில் ரகு என்பவரை ஓட ஓட விரட்டிக் கொலைசெய்து சிறைக்குச் சென்றவன். சிறையில் அவனுக்குப் பிரபல ரௌடிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு விவேக்ராஜ், தனக்கென்று ஒரு டீமை உருவாக்கியிருக்கிறான். ஏரியாவில் கெத்து காட்டி வந்த அவன், கடந்த 2015-ல் பாலாஜி என்பவரைக் கொலை செய்துவிட்டு மீண்டும் சிறைக்குச் சென்றான். சிறையிலிருந்து வெளிவந்தவன், சேலையூரைச் சேர்ந்த பிரகாஷை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்து காவல் நிலையத்தில் சரணடைந்தான். அதன் பிறகு 2019-ல் நெடுங்குன்றம் சதானந்தபுரம் பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்க்கில் விவேக் தலைமையில் 10 பேர்கொண்ட கும்பல் பட்டா கத்தியைக் காட்டி, ரகளையில் ஈடுபட்டது. இதற்கு மேலும் அவனை விட்டால் ஆபத்து என்று கைது நடவடிக்கையில் இறங்கினோம். தப்பியோடுகையில் பாலத்திலிருந்து குதித்ததால், அவனது கையும் காலும் முறிந்தன. அவனுடைய கூட்டாளி விஷாலும் சிக்கியிருக்கிறான்.

‘அடுத்த பேட்ச்’ ரௌடிகள்... அடக்குமா காவல்துறை?

இதேபோல தென் சென்னையில், அண்ணன் - தம்பிகளான பாலாஜி, வினோத் ஆகியோர் புதிய ரௌடிகளாகத் தலைதூக்கிக் கொண்டிருக் கிறார்கள். இவர்கள் தவிர 15 வயதிலிருந்து 20 வயதுக்குள் இருக்கும் பலர் போதைக்காகக் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களில் சிலர் தன்னைப் பெரிய ரௌடியாகக் காட்டிக் கொள்வதற்காக ஏரியாவில் ஆயுதங்களுடன் கெத்தாக வலம் வருவதோடு, சமூக வலைதளங் களிலும் அரிவாள், கத்தியோடு போட்டோ, வீடியோக்களைப் பதிவிட்டுவருகிறார்கள். அவர்களையும் கண்காணித்து எச்சரிக்கை செய்கிறோம்” என்றனர்.

ரெளடிகள் பட்டியல்!

இது குறித்து ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``குற்றச் செயல்களுக்கு ஏற்ப ரௌடிகள் ‘ஏ ப்ளஸ்’ மற்றும் ‘ஏ, பி, சி’ என வகைப்படுத்தப் பட்டிருப்பார்கள். அந்தப் பட்டியிலிருப் பவர்களின் நடவடிக்கைகளை ரகசியமாகக் கண்காணித்துக் கொண்டிருப்போம். சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, கடந்த செப். 13-ம் தேதி ரெளடிகள் ஆபரேஷனில் 433 ரெளடிகளின் இன்றைய செயல்பாடுகள் தணிக்கை செய்யப்பட்டன. அப்போது 12 பேரைக் கைதுசெய்ததுடன், 381 பேர் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் திருந்தி வாழ்வதாகச் சொல்லி, நன்னடத்தை பிணைப் பத்திரம் தந்திருக்கிறார்கள்.

விஷால்
விஷால்

தற்போதைய நிலவரப்படி பிரபல ரௌடிகளில் பலர், தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு ரியல் எஸ்டேட், அரசியல், பிசினஸ்மேன் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். இன்னும் சிலர் திருந்தி வாழ்வதாகச் சொல்லி, அதைக் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள். ஆனால், பிரபல ரௌடிகளிடம் தொழில் கற்றுக்கொண்டவர்கள்தான், இப்போது தங்களுக்கென ஒரு கேங்கை உருவாக்கிக்கொண்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக் கிறார்கள். தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை ரௌடிகளின் ‘ஹிஸ்டரி ஷீட்’டில் சேர்த்து அவர்களைக் கண்காணித்துவருகிறோம். விரைவில் அப்டேட் ரௌடிகள் பட்டியல் தயாரித்து புதிய ரௌடிகளும் கண்காணிப்படுவார்கள்” என்றார்.

கண்காணித்தால் மட்டும் போதாது... களையெடுக்கவும் வேண்டும்!