கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகரன். இவரின் மனைவி சசிகலா. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மூத்த மகள் ஶ்ரீநிதி (12) 7-ம் வகுப்பு படித்துவருகிறார். நேற்று மதியம் வீட்டிலிருந்து சென்ற ஶ்ரீநிதி மாயமாகியிருக்கிறார்.

இது குறித்து அவரின் பெற்றோர் கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். ஶ்ரீநிதியைக் காணவில்லை என்ற தகவல் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இது குறித்து வழக்கு பதிவுசெய்த காவல்துறை, ஆறு தனிப்படைகள் அமைத்து சிறுமியைத் தேடிவருகின்றனர். சிறுமியுடைய உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும், அங்கு சுற்றியிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளை ஆய்வுசெய்தும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

`சிறுமி குறித்து தகவல் கிடைத்தால், காவல் ஆய்வாளர்கள் தவுலத் நிஷா 97885-99940, வினோத் 94981-76265 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம்' எனக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆய்வுசெய்ததில், சிறுமி ஒண்டிப்புத்தூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து, உக்கடம் செல்லும் பேருந்தில் ஏறிச் சென்றது தெரியவந்திருக்கிறது. இதற்கிடையே சிறுமி கிடைத்துவிட்டார் என்று சமூகவலைதளங்களில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பிவருகின்றனர்.

சிறுமியைக் காவல்துறையினர், அவரின் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் தேடிவருகின்றனர். யாரும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனக் காவல்துறை கூறியிருக்கிறது.