நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் செயல்பட்டுவருகிறது. அங்கு நூற்றுக்கும் அதிகமான வீடுகளில் இலங்கைத் தமிழர்கள் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார்கள். அங்குள்ள ஒரு வீட்டின் மாடியில் பெயின்ட்டர் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொலைசெய்யப்பட்டவர், இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பது தெரியவந்திருக்கிறது.

அவரின் மனைவி, மகன் இலங்கையில் வசித்துவருகின்றனர். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் பிரச்னை காரணமாக 1990-ல் அங்கிருந்து அகதியாகத் தப்பி வந்த அவர், நெல்லை கங்கைகொண்டான் பகுதியிலுள்ள முகாமில் அவரின் சகோதர, சகோதரிகள்கொண்ட ஆறு பேர் குடும்பத்தினருடன் வசித்துவந்தார். இலங்கைத் தமிழர்களுக்கான முகாமில் குடும்பத்துடன் வசிப்பவர்களுக்கு இலவசமாக வீடு கொடுக்கப்படுகிறது. ஆனால், ராமச்சந்திரனின் மனைவி, மகன் இலங்கையில் இருப்பதால், அவருக்கு வீடு கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
அத்துடன் இலங்கை அகதி என்பதற்கான பதிவு எண்ணும் அவருக்கு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அவர் பெயின்ட்டர் வேலை செய்து வாழ்க்கையை நடத்திவந்திருக்கிறார். அவருக்கு அரசு சார்பாக வீடு கொடுக்கப்படாத நிலையில், அவரின் சகோதரர் ரவிச்சந்திரனின் வீட்டுக்கு அருகே யாரும் பயன்படுத்தாமல் கிடந்த வீட்டின் மொட்டை மாடியில் இரவு நேரத்தில் தங்கியிருப்பதுடன், பகலில் உறவினர்கள் வீடுகளில் சாப்பிட்டு, பெயின்ட்டிங் தொழிலுக்குச் சென்று வந்திருக்கிறார். அவர் தனக்கு வீடு ஒதுக்கிக் கொடுக்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் வீடு கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதியிலுள்ள இளைஞர்களுக்கிடையே, இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றது தொடர்பாக மோதல் ஏற்பட்டிருக்கிறது. இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது அந்த வழியாகச் சென்ற ராமச்சந்திரன் அங்கு சண்டையிட்டுக் கொண்டிருந்த இளைஞர்களை சமரசப்படுத்தியிருக்கிறார். ஆனால், ஒரு தரப்பு இளைஞர்கள் மற்றொரு தரப்பினரைத் தாக்கியிருக்கின்றனர். இது தொடர்பான வழக்கு கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் விசாரணையில் இருக்கிறது.
தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள், ராமச்சந்திரன் தங்களுக்கு எதிராகச் செயல்பட்டதாக நினைத்திருக்கின்றனர். இது பற்றி எதுவும் அறியாத ராமச்சந்திரன், வழக்கம்போல தன்னுடைய பெயின்ட்டிங் வேலையை முடித்துவிட்டு நேற்று (13-ம் தேதி) ஆளில்லாத வீட்டின் மொட்டைமாடியில் தூங்கியிருக்கிறார். விடுமுறை நாள்களில் தாமதமாக அவர் கீழிறங்கி வருவாராம். அதனால் அவர் காலையில் வராததை உறவினர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், மதியம் வரை அவர் வராததால் அங்கு சென்று பார்த்தபோது கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

ராமச்சந்திரன் கொலைசெய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் கங்கைகொண்டான் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். டி.எஸ்.பி-யான பொன்ரகு நேரில் சென்று கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார். ராமச்சந்திரன் உடலை உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், கொலையாளிகளைக் கைதுசெய்யாமல் உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என ராமச்சந்திரனின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் அவர்களைச் சமாதானப்படுத்திய பின்னர், கொலைசெய்யப்பட்ட ராமச்சந்திரன் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.