டெல்லி அருகிலுள்ள கிரேட்டர் நொய்டாவில் சிவ்நாடார் பல்கலைக்கழகம் இருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் மூன்றாவது ஆண்டு படிக்கும் அனுஜ் என்ற மாணவர், இன்று பிற்பகல் தன்னுடன் படிக்கும் நேகா என்ற மாணவியுடன் சாப்பிடும் அறைக்கு வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, ஒருவருக்கொருவர் கட்டியணைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் திடீரென அனுஜ் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து, நேகாவைச் சுட்டுக் கொலைசெய்துவிட்டு, சம்பவ இடத்திலிருந்து சென்றுவிட்டார்.
பின்னர் அவர் நேராகத் தனது விடுதி அறைக்குச் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு, தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். இந்தச் சம்பவம் பலக்லைக்கழக வளாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதையடுத்து, அங்கிருந்தவர்கள் இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கெனெவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
பட்டப்பகலில் நடந்த இந்தப் படுகொலைச் சம்பவம், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர் அனுஜ் கான்பூரைச் சேர்ந்தவர்.

சுட்டுக் கொலைசெய்யப்பட்ட மாணவிக்கும், அனுஜுக்குமிடையே காதல் உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உறவில் விரிசல் ஏற்பட்டதால், ஆத்திரத்தில் அனுஜ் சுட்டுக் கொலைசெய்தார் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து, சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். அதோடு அனுஜுக்கு எப்படித் துப்பாக்கி கிடைத்தது என்பது குறித்தும் விசாரித்துவருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி மியா கான் ஊடகங்களிடம் பேசுகையில், ``இரண்டு மாணவர்களும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஆனால், அவர்களுக்குள் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இருவரின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.