திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகிலிருக்கும் ஜங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரின் 17 வயது மகன் பரமேஸ்வரன், இந்தாண்டு ப்ளஸ் டூ தேர்வில் தேர்ச்சிபெற்ற நிலையில், மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக கடந்த 7-ம் தேதி நடந்த ‘நீட்’ தேர்வை எழுதியிருந்தார். தேர்வு எழுதிவிட்டுவந்த நாளிலிருந்தே மாணவர் சோகத்துடன் காணப்பட்டிருக்கிறார்.

‘சில கேள்விகள் கடுமையாக இருந்ததாகவும், அதனால் மதிப்பெண் குறைவாகக் கிடைத்துவிடுமோ’ என்ற அச்சத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு பெற்றோர் உறங்கச் சென்றபோது, மாடியிலுள்ள அறைக்குச் சென்ற பரமேஸ்வரன் தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக தூக்குப் போட்டு தொங்கியிருக்கிறார்.
மகன் வீட்டுக்குள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சந்தேகப்பட்டு மாடிக்குச் சென்று பார்த்தபோது, பேரதிர்ச்சிக்குள்ளாகினர். தூக்குக் கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்த மகனை மீட்டு, உடனடியாக அருகிலுள்ள நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாணவர் பரமேஸ்வரன் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். இந்தச் சம்பவம் பற்றி தகவலறிந்ததும், நாட்டறம்பள்ளி போலீஸார் விரைந்துசென்று மாணவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
