Published:Updated:

`ஐஐடி கொடுமைகளை விவரித்த மாணவர்' -  தமிழக அரசைக் கண்டிக்கும் கல்வியாளர்கள்

ஐஐடி போராட்டம்
News
ஐஐடி போராட்டம்

"ஐஐடி-யில் சாதியப் பாகுபாடு காரணமாக விபின் என்ற ஒரு பேராசிரியரே வேலையை ராஜினாமா செய்துவிட்டுப்போனது இந்த உலகத்துக்கே தெரியும்." - ஐஐடி மாணவர்

Published:Updated:

`ஐஐடி கொடுமைகளை விவரித்த மாணவர்' -  தமிழக அரசைக் கண்டிக்கும் கல்வியாளர்கள்

"ஐஐடி-யில் சாதியப் பாகுபாடு காரணமாக விபின் என்ற ஒரு பேராசிரியரே வேலையை ராஜினாமா செய்துவிட்டுப்போனது இந்த உலகத்துக்கே தெரியும்." - ஐஐடி மாணவர்

ஐஐடி போராட்டம்
News
ஐஐடி போராட்டம்

சென்னை ஐஐடி-யில் மாணவர்கள் தற்கொலைசெய்வது தொடர்கதையாகி வருகிறது. 2016-ல் தொடங்கி தற்போதுவரை 12 தற்கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.

சென்னை ஐஐடி-யில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்துவந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பக் ஸ்ரீ சாய் என்ற மாணவர் விடுதி அறையில் கடந்த மார்ச் 14-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஒரு மாதத்துக்கு முன்பாக கடந்த பிப்ரவரி 13-ம் தேதி இதே சென்னை ஐஐடி-யில் எம்.எஸ். எலெக்ட்ரிக்கல் இன்ஜினீரிங் இரண்டாம் ஆண்டு படித்துவந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீபன் சன்னி ஆல்பர்ட் என்ற மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ஐஐடி சென்னை
ஐஐடி சென்னை

இதற்கிடையே, சென்னை ஐஐடி-யில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டுவந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சச்சின்குமார், வேளச்சேரியில், தான் தங்கியிருந்த வாடகை வீட்டில், கடந்த மார்ச் 31-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். “என்னை மன்னித்துவிடுங்கள், இத்துடன் என்னுடைய வாழ்வை முடித்துக்கொள்கிறேன்... நான் நலமாக இல்லை" என வாட்ஸ்அப்பில் அவர் ஸ்டேட்டஸ் பதிவிட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவர் சச்சின் குமாரின் ஆய்வு வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் அகிஷ் குமார் அளித்த அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக குற்றம்சாட்டியிருக்கும் மாணவர்கள், அதைக் கல்லூரி நிர்வாகம் மறைக்க முயல்வதாகவும் தெரிவித்தனர். 

இந்த நிலையில், மாணவரின் மரணத்துக்கு நீதி கோரி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஐஐடி வளாகத்தில் கடந்த 11-ம் தேதி இரவு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களிடம் ஐஐடி இயக்குநர் காமகோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவர்கள் நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.  

ஐஐடி போராட்டம்
ஐஐடி போராட்டம்

1.பேராசிரியர் அகிஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.   

2. சச்சின் குமாரின் அறை நண்பர்கள் உள்ளிட்ட சிலரை நிர்வாகம் கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பியிருக்கும் நிலையில், அவர்களை அழைத்துவந்து பொதுவெளியில் தங்கள் கண்முன் வைத்து விசாரிக்க வேண்டும்.

3. விசாரணைக் குழுவில் கல்லூரி ஆட்கள் மட்டுமின்றி வெளி ஆட்களும் பங்கேற்க வேண்டும். 

4. மாணவர்களின் தலைவரை (Dean of Students) பணிநீக்கம் செய்ய வேண்டும்.

இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பேராசிரியர் அகிஷ்குமார் மூன்று வாரத்துக்கு வளாகத்துக்குள் வரமாட்டார் என மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

சச்சினுடன் பயின்ற பெயர் வெளியிட விரும்பாத ஒரு மாணவரிடம் பேசினோம், "சச்சினின் மரணத்துக்குக் காரணம் கல்விரீதியான மனஅழுத்தம் கிடையாது. தனிப்பட்ட முறையில் பேராசிரியர் அகிஷ் குமாரால் கொடுக்கப்பட்ட மனஅழுத்தம்தான் காரணம். சச்சின் ஐஐடி மாணவர்களிலேயே மிகவும் திறமையானவர். அவர் ஏற்கெனவே பல ஆய்வுகளைச் சமர்ப்பித்து Phd-க்கு தேர்ச்சி பெற்றவர். ஒரு Conference-க்கு  பேராசிரியர் அகிஷ் குமாரிடம் தகவல் தெரிவிக்காமல் சச்சின் சென்றுவிட்டார். இதனால் சச்சினைப் பழிவாங்குவதற்காக, கலந்தாய்விலிருந்து பாதியில் அவரைத் திரும்ப வரவழைத்தார்  பேராசிரியர் அகிஷ் குமார். அந்தச் சம்பவத்திலிருந்து lab incharge ஆன பேராசிரியர் அகிஷ் குமார் சச்சினைத் தனிமைப்படுத்தத் தொடங்கினார். சச்சினைவிட வயதிலும், அனுபவத்திலும் குறைந்த மாணவர்களை சச்சினுக்கு மேற்பார்வையாளராக நியமித்தார். ஆய்வகத்தில்  போதுமான நேரம் கொடுக்காமல் சச்சினை மனரீதியாக துன்புறுத்தினார்.

ஆய்வகத்தில் உடன் படிக்கும் மாணவர்களை, சச்சினுடன் பேசக் கூடாது என உத்தரவிட்டார். ஆய்வகத்தில் சச்சினுக்கு உதவியாக இருந்த மாணவர் ஒருவர், சச்சினுடன் வேளச்சேரியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

தற்கொலை
தற்கொலை
சித்திரிப்புப் படம்

அந்த மாணவரை, `நீ ஐஐடி வளாகத்துக்குள் உள்ள விடுதியில் வந்து தங்கிக்கொள்’ எனக் கட்டாயப்படுத்தினார். சம்பவம் நடந்த அன்று காலை ஆய்வகத்தில் தேர்வுத்தாளை சச்சின் சமர்ப்பித்தார். அப்போது இருவரும் தனியாக இருந்தனர்.

என்ன பேசினார்கள் எனத் தெரியாது. அதற்குப் பிறகுதான் சச்சின் 'i am not good enough' என வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தார். இதற்கு முன்பாகவே தன் பெற்றோரிடம் பேராசிரியர் அகிஷ் குமார் குறித்து புகார் தெரிவித்திருக்கிறார். ஐஐடி இயக்குநர் காமகோடியிடமும் புகாரளித்திருக்கிறார். தற்கொலைக்குப் பிறகு சச்சினுடன் ஆய்வகத்தில் இருந்த மாணவி ஒருவரை ஐஐடி நிர்வாகம் வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பிவைத்திருக்கிறது. போராட்டத்தின்போது இது குறித்து கேள்வியெழுப்பினோம். `அந்தப் பெண்ணுக்கு உளவியல் ஆலோசனை தேவை. அதனாலே வீட்டுக்கு அனுப்பினோம்’ என்றார் இயக்குநர் காமகோடி.  அந்தப் பெண்ணும் சச்சினும் ஒன்றாக கலந்தாய்வுக்குச் சென்றார்கள்.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

சச்சினைப் பழிவாங்குவதற்காக, இருவரும் வேறு வேறு நேரத்தில் ஆய்வகத்துக்கு வருமாறு பேராசிரியர் அகிஷ் குமார் கட்டளையிட்டார்" என்றார்.

ஐஐடி-யில் சாதியப் பாகுபாடு உள்ளதா என்ற கேள்விக்கு, "அது நேரடியாகக் கண்களுக்குப் புலப்படும்படி இருக்காது. ஆனால், அப்படி இருக்கக்கூடும். தனிப்பட்ட முறையில் நான் அதை அனுபவித்தது இல்லை என்றாலும், சாதியப் பாகுபாடு காரணமாக விபின் என்ற ஒரு பேராசிரியரே வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போனது இந்த உலகத்துக்கே தெரியும்" என்றார். 

முன்னதாக, சச்சின்குமார் தற்கொலையை ஒட்டி,  மாணவர்களின் தற்கொலைகள் குறித்து சென்னை ஐஐடி நிர்வாகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில், ``கொரோனா தொற்று பரவலுக்குப் பிந்தைய காலகட்டம் ஐஐடிக்கு ஒரு சவாலான சூழலாக இருந்துவருகிறது.

ஐஐடி வளாகத்திலுள்ள மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், பணியாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு நிர்வாகம் தொடர்ந்து முயன்றுவருகிறது. இத்தகைய சம்பவங்கள் குறித்து விசாரிக்க மாணவர் பிரதிநிதிகள் உட்பட நிலையான விசாரணைக் குழுவும் சமீபத்தில் அமைக்கப்பட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஐஐடி-க்குள் என்னதான் நடக்கிறது. தொடர் தற்கொலைகளுக்கு தீர்வுதான் என்ன... என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம், "இந்தியா முழுவதும் பல உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாடு இருக்கிறது. சமூக ஊடகங்கள் காரணமாக தற்போது நடக்கும் தற்கொலைகள் உடனுக்குடன் வெளியே தெரிகிறது. மற்றபடி உள்ளே நடக்கும் பிரச்னைகள் நமக்குத் தெரியாது. ஆனால், ஐஐடி-யில் சாதியப் பாகுபாடு இருப்பது உண்மை. பாலினப் பாகுபாடு இருப்பது உண்மை.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

பல்வேறு வகையிலான ஏற்றத்தாழ்வுகள்  கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் பல்வேறு சமூக கட்டமைப்புகளிலிருந்து வருபவர்களுக்கு ஒரு SUPPORT SYSTEM தேவைப்படுகிறது. இப்போது விசாரிக்கிறோம் என்கிறார்கள். என்ன விசாரிக்கப் போகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மாணவர் ஏன் இறந்தார் என விசாரிக்கப்போகிறீர்களா... இல்லை இது போன்ற தொடர் தற்கொலைகளின் காரணம் என்ன என விசாரிக்கப் போகிறீர்களா... இந்தக் காரணத்தை அறிய மனநல ஆலோசகர் அடங்கிய ஒரு குழுவை உருவாக்கி மாணவர்களின் கருத்துகளை கேட்டு அறிய வேண்டும்.

அந்தப் பொறுப்பை ஐஐடி உணரவில்லை என்பதே என் குற்றச்சாட்டு. ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு தயாராவதே பெரும் மனஉளைச்சல். இதற்காக சில குழந்தைகளுக்கு 6-ம் வகுப்பு முதலே கோச்சிங் கொடுக்கிறார்கள். சில குழந்தைகளுக்கு 8-ம் வகுப்புகளிலிருந்தும், 11-ம் வகுப்பிலிருந்தும் இந்த கோச்சிங் தொடங்குகிறது. இதனால் அந்தக் குழந்தைகள் எதைப் பற்றியும் சிந்திக்காமல், தனிமைப்பட்டுப் போகிறார்கள்.

அதையெல்லாம் கடந்து ஐஐடி-க்குள்ளே நுழையும் ஒரு மாணவர் இனி விடுதலை என்றுகூட நினைக்க முடியாத வகையில் அங்கும் ஒரு பிரச்னை மேலோங்கியிருக்கிறது என்றால், அது மேலும் சிக்கல்தான். எனவேதான், நான் மேலே சொன்னபடி ஒரு விசாரணைக் குழுவை அமைத்து அதன் அறிக்கையை ஐஐடி பரிசீலிக்க வேண்டும். இல்லையெனில், குறைந்தபட்சம் ஐஐடி-யால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாணவர் பேரவை இருக்கிறது. அதை வைத்தாவது மாணவர்களின் கருத்தைக் கேட்டறிந்து, மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். இதற்கு முன் நடந்த தற்கொலைகளில் எத்தனை வழக்குகளில் காவல்துறை இறுதி அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது.

`ஐஐடி கொடுமைகளை விவரித்த மாணவர்' -  தமிழக அரசைக் கண்டிக்கும் கல்வியாளர்கள்

ஏன் விசாரணை தாமதப்படுகிறது. ஐஐடி-யை நாம் புனிதமாக பார்க்கிறோமா.., தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, சமூகநீதி கண்கானிப்புக்குழு, மாநில பெண்கள் ஆணையம், மனித உரிமைகள் ஆணையம் இவையெல்லாம் ஏன் ஐஐடி-க்குள்ளே செல்ல மறுக்கிறது.

ஓர் உயிர்போனபோதே இவையெல்லாம் ஐஐடி வளாகத்துக்குள்ளே சென்றிருந்தால் அடுத்தடுத்த தற்கொலைகள் நிகழ்ந்திருக்குமா... ஐஐடி வளாகத்துக்குள் ஒரு மான் இறந்தால், விலங்குகள் நல ஆர்வலர்கள் உள்ளே செல்கிறார்கள். மான் மீதான அக்கறை ஏன் மனிதர்கள் மீதும், மாணவர்கள் மீதும் இல்லை. ஐஐடி தற்கொலை வழக்குகள் துரிதமாக விசாரிக்கப்பட்டு தவறு செய்பவர்களுக்கு தண்டனை கிடைத்தால் மட்டுமே எதிர்காலத்திலேனும்  இத்தகைய தற்கொலைகள் தொடராமல் இருக்கும்’’ என்றார்.

இது தொடர்பாக ஐஐடி-யில் அதிகாரிகளிடம் பேசியபோது, ``விசாரணை நடைபெற்றுக்கொண்டிருப்பதால் இப்போதைக்கு கருத்து சொல்ல முடியாது” என்று முடித்துக்கொண்டனர்.