மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் ஜெகதீஷ். இவருக்கு மணிமேகலை என்பவருடன் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தபோது பலரிடம் கடன் வாங்கி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்திருக்கிறார்.
அதில் நஷ்டம் ஏற்பட்டதால், பழநியில் அவருக்குச் சொந்தமான வீடு, சொத்துகளை விற்று கடனை அடைத்திருக்கிறார். ஆனாலும் முழு கடனை அடைக்க முடியவில்லை.

அதோடு அங்கு கடன் தொல்லை தாங்க முடியாமல் மதுரைக்கு வந்தவர், அவனியாபுரம் பிரசன்னா காலனியிலுள்ள தந்தை ஜெகநாதன் வீட்டில் குடும்பத்துடன் வசித்துவந்தார்.
இங்கு வந்த பிறகும் கடன் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்துவந்திருக்கிறார் ஜெகதீஷ்.

இந்த நிலையில், நேற்று அதிகமான அளவில் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார்.
இதை அவருடைய உறவினர்கள் பார்த்து, அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் உயிரிழந்தார். இது குறித்து அவனியாபுரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.