சினிமா
பேட்டிகள்
Published:Updated:

எந்த அணி கோப்பை வெல்லும்?

டி-20 உலகக்கோப்பை
பிரீமியம் ஸ்டோரி
News
டி-20 உலகக்கோப்பை

டி-20 அணியின் கேப்டனாக விராட் கோலியின் கடைசித் தொடர், ஆலோசகராக எம்.எஸ்.தோனியின் முதல் தொடர்

எந்த அணி கோப்பை வெல்லும்?
எந்த அணி கோப்பை வெல்லும்?

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு டி-20 உலகக்கோப்பை மீண்டும் திரும்பியிருக்கிறது. இந்தியாவில் நடந்திருக்கவேண்டிய தொடர், கொரோனாவின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் நாடுகளில் நடந்துகொண்டிருக்கிறது. 8 அணிகள் இந்தத் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெற, மற்ற 4 இடங்களுக்காக இலங்கை, வங்கதேசம், அயர்லாந்து உள்ளிட்ட 8 அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடிக்கொண்டிருக்கின்றன. இந்த உலகக் கோப்பையில் முக்கிய அணிகளுக்கு எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது?

எந்த அணி கோப்பை வெல்லும்?

தென்னாப்பிரிக்கா

இதற்கு மேலும் தென்னாப்பிரிக்காவை யாரும் சோக்கர்ஸ் என்று சொல்ல முடியாது. நாக் அவுட் சுற்றுக்குப் போனால்தானே சோக் செய்ய முடியும்! ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போல இருந்த அணி இப்போது பஞ்சாப் கிங்ஸாக மாறிவிட்டது. சொதப்பல், சொதப்பல், சொதப்பலோ சொதப்பல். டேவிட் மில்லர், எய்டன் மார்க்ரம், டெம்பா பவுமா, குவின்டன் டி காக், ககிஸோ ரபாடா என ‘ஆன் பேப்பர்' தரமான, அனுபவம் கொண்ட வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், செயல்பாடுதான் படுசுமாராக இருக்கிறது. இந்த ஐ.பி.எல் தொடரில் டி காக், ரபாடா ஆடிய ஆட்டத்தைப் பார்த்தால் இருக்கும் நம்பிக்கையும் போய்விடும். ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் இருக்கும் பிரிவில் இடம்பெற்றிருக்கும் தென்னாப்பிரிக்கா, அந்த மூன்று போட்டிகளில் ஒன்றில் வென்றாலும் பெரிய விஷயம்தான்.

கீ பிளேயர்: ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆன்ரிச் நார்கியாவின் கொடிதான் உயரப் பறக்கிறது. 2020, 2021 என இரண்டு ஐ.பி.எல் தொடர்களில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ரபாடா தடுமாறிக் கொண்டிருப்பதால், இவரது ஃபார்ம் அணிக்கு மிகமுக்கியம்.

எந்த அணி கோப்பை வெல்லும்?

ஆஸ்திரேலியா

இதுவரை தங்களால் வெல்ல முடியாத டி-20 உலகக் கோப்பையை இந்த முறை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற வேட்கையோடு இருக்கிறது ஆஸ்திரேலியா. அதனால், தங்களின் வழக்கமான டி-20 செலக்‌ஷன் முறையை விட்டுவிட்டு சீனியர்கள் அனைவரையும் அணியில் சேர்த்திருக்கிறார்கள். 15 வீரர்கள் கொண்ட அணியில் 9 பேர் 30 வயதைத் தாண்டியவர்கள். மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், கேன் ரிச்சர்ட்சன் என ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சு அசுரபலத்தோடு இருக்கிறது. ஐ.பி.எல் தொடரில் மேக்ஸ்வெல் காட்டியிருக்கும் ஃபார்ம் எந்த அணிக்குமே சிக்கல்தான். இதில் பல வீரர்கள் கடந்த சில மாதங்களாக டி-20 போட்டிகளில் அதிகமாக விளையாடவில்லை. அது ஆஸ்திரேலியாவுக்குப் பாதகமாக அமையலாம்.

கீ பிளேயர்: ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களில் நடந்த ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது பாதியில் பெரிய ஸ்கோர் அடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. அப்படிப்பட்ட ஆடுகளங்களில் ஸ்டீவ் ஸ்மித் முக்கியமான வீரராக இருப்பார்.

எந்த அணி கோப்பை வெல்லும்?

நியூசிலாந்து

அச்சுறுத்தும் வேகப்பந்துவீச்சாளர்களோடும், அளவு கடந்த ஆல்ரவுண்டர்களோடும் களமிறங்குகிறது பிளாக் கேப்ஸ். கடைசி 2 ஐ.சி.சி தொடரிலும் இறுதிப் போட்டிக்குப் போயிருப்பவர்கள், ஹாட்ரிக் பைனலுக்குக் குறிவைப்பார்கள். டெவான் கான்வே, மார்க் சேப்மேன், கிளென் ஃபிளிப்ஸ் என அதிரடி வீரர்கள் நியூசிலாந்துக்குப் பெரிய பலம். ஆனால், இவர்களுக்கு இதுவரை பெரிய தொடரில் ஆடிய அனுபவம் இல்லை என்பது மைனஸ். ஆல்ரவுண்டர்கள் நிறைய இருப்பதால், அணியின் காம்பினேஷனை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும் ஆப்ஷன் கேன் வில்லியம்சனுக்கு இருக்கிறது. லாகி ஃபெர்குசன் இருக்கும் ஃபார்முக்கு எந்த பேட்டரும் தாக்குப்பிடிப்பது கடினம்தான். இந்தியா இருக்கும் இரண்டாவது பிரிவிலேயே இவர்களும் இருப்பதுதான் கவலை. இந்த முறையாவது நியூசிலாந்தைத் தோற்கடிக்க முயலவேண்டும்!

கீ பிளேயர்: வேறு யார், கேப்டன் வில்லியம்சன்தான். ஸ்டீவ் ஸ்மித்துக்குச் சொன்ன அதே காரணம். கூட, ஃபிளிப்ஸ், சேப்மேன் போன்ற மிடில் ஆர்டர் பேட்டர்கள் அனுபவம் இல்லாதவர்கள் என்பதால், கேன் நீடித்து ஆடுவது அவசியம்.

எந்த அணி கோப்பை வெல்லும்?

இங்கிலாந்து

உளவியல் காரணங்களுக்காக பென் ஸ்டோக்ஸையும், காயத்தால் ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரண் ஆகியோரையும் இழந்திருப்பது மிகப்பெரிய இழப்பு. அவர்கள் இருந்திருந்தால் நிச்சயம் இங்கிலாந்து பைனலுக்குச் சென்றுவிடும் என்றே சொல்லியிருக்கலாம். இருந்தாலும், 2019 உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்வதற்கான வாய்ப்பு மோர்கனின் அணிக்கு அதிகமாகவே இருக்கிறது. கட்டுக்கங்கடங்காத, கண்மூடித்தனமான அதிரடியை டாப் டு பாட்டம் தொடரும் ஒரு பேட்டிங் லைன் அப் இருக்கும்போது அது சாத்தியம்தான். டி-20 ஃபார்மட்டுக்கு என்றே அளவு எடுத்துச் செய்யப்பட்ட டேவிட் மலான், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் அவர்களின் மிகப்பெரிய பலம். வேகப்பந்துவீச்சாளர்களின் கன்சிஸ்டன்சியும், கேப்டன் மார்கனின் சமீபத்திய ஃபார்மும் அந்த அணிக்கு இருக்கும் பிரச்னைகள்.

கீ பிளேயர்: ஏற்கெனவே சொன்னதுபோல், இந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் கன்சிஸ்டன்சி இல்லாதவர்கள். அதனால், மோர்கனின் மிக முக்கிய ஆயுதமாக அடில் ரஷீத் இருப்பார். மொயீன் அலி தவிர்த்துக் கூடுதல் ஸ்பின்னர் இல்லாததால், இவர் தோள்களில் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.

எந்த அணி கோப்பை வெல்லும்?

இந்தியா

டி-20 அணியின் கேப்டனாக விராட் கோலியின் கடைசித் தொடர், ஆலோசகராக எம்.எஸ்.தோனியின் முதல் தொடர் எனப் பல்வேறு காரணங்களால் இந்த உலகக் கோப்பையின் மீதான இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்திருக்கிறது. இளமையும் அனுபவமும் நிறைந்த ஓர் அணி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், கோப்பை வெல்வார்களா என்பது வழக்கம்போல் கோலி எடுக்கும் முடிவுகளைப் பொறுத்துத்தான் அமையும். அணித் தேர்வு மிகப்பெரிய சிக்கல்.

ஹர்திக் பாண்டியாவை எப்படிப் பயன்படுத்தப்போகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் தேடவேண்டும். அவர் பௌலிங் செய்ய முடியாது எனில், அதற்கான தீர்வைக் கண்டுபிடிக்கவேண்டும். அதேபோல், ரோஹித்துடன் ஓப்பனிங் இறங்கப்போவது கோலியாக இருந்தால், ராகுலுக்கான சரியான இடத்தை உறுதி செய்வதிலும் சிக்கல் ஏற்படலாம். சூர்யகுமார் யாதவ், இஷன் கிஷன் இருவரும் ஐ.பி.எல் தொடரின் கடைசிக் கட்டத்தில் சிறப்பாக ஆடியிருக்கிறது அணியின் தலைவலியைக் குறைக்கும். ஷர்துலின் வருகை பந்துவீச்சை பலமாக்கியிருக்கிறது. புவனேஷ்வர் குமாரின் ஃபார்ம் கொஞ்சம் வருத்தம்தான். அதேசமயம், சுழற்பந்துவீச்சில் வெரைட்டி இருப்பது பலம். வருண் சக்ரவர்த்தியைச் சரியாகப் பயன்படுத்தினால், எதிரணிகளை மிரட்டலாம்.

கீ பிளேயர்: இந்தியாவின் மிடில் ஆர்டரில் கிளாசிக் பிளேயர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால், ஐ.பி.எல் தொடரின் மிடில் ஓவர்களில் அவர்களால் சரியாக ரன் சேர்க்க முடிவதில்லை. அது அணிக்கு மிகப்பெரிய சிக்கல். அந்த ஏரியாவில் ரன்ரேட்டை சீராக்க இந்தியாவுக்கு இருக்கும் மிகப்பெரிய ஆயுதம் ரிசப் பன்ட். அவர் அடிக்கும் அதிவேக முப்பதுகளும்கூட தோல்வியை வெற்றியாக மாற்றும்!

எந்த அணி கோப்பை வெல்லும்?

வெஸ்ட் இண்டீஸ்

34 வயது கேப்டன், ஒரு 42 வயது ஓப்பனர், ஒரு 36 வயது ஓப்பனர், ஒரு 37 வயது வேகப்பந்துவீச்சாளர், ஒரு 38 வயது ஆல்ரவுண்டர்... இவர்களெல்லாம் அடங்கியதுதான் இந்த உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆனால், கோப்பை வெல்வதற்கான வாய்ப்பில் இன்னும் நீடிக்கவே செய்கிறார்கள். ஏனெனில், இது அவர்களின் களம். டி-20 ஃபார்மட்டில் எப்பேர்ப்பட்ட அணியையும் அவர்களால் புரட்டிப்போட முடியும். அப்படியொரு பேட்டிங் லைன் அப் இருக்கிறது. கிறிஸ் கெய்ல் இல்லாவிடில் லெண்டில் சிம்மன்ஸ், அவர் இல்லாவிடில் எவின் லூயிஸ் என யாரை வேண்டுமானாலும் அவர்களால் இறக்க முடியும். லெவனில் 10 பேட்டிங் ஆப்ஷனோடு இறங்குமளவுக்கு ஆல்ரவுண்டர்கள் நிறைந்திருக்கிறார்கள். பந்துவீச்சு ஓரளவு எடுபட்டாலும் வெஸ்ட் இண்டீஸைத் தடுப்பது கடினம்.

கீ பிளேயர்: பேட்டிங்கில் ஆண்ட்ரே ரஸல் சொதப்பினாலும்கூட வெஸ்ட் இண்டீஸ் சமாளித்துவிடும். ஆனால், பௌலிங்கில் அவரது தேவை அதிகமாக இருக்கிறது.ஐ.பி.எல் முதல் பாதியில் மிகச் சிறப்பாகப் பந்துவீசியிருக்கிறார். அதை வெஸ்ட் இண்டீஸ் அணி எதிர்பார்க்கும்.

எந்த அணி கோப்பை வெல்லும்?
எந்த அணி கோப்பை வெல்லும்?

பாகிஸ்தான்

முதலில் அறிவிக்கப்பட்ட அணியிலிருந்து நான்கு வீரர்களைக் காயத்தால் மாற்றவேண்டிய இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்பட்டது பாகிஸ்தான். அதனால், அனுபவம் கொண்ட முன்னாள் கேப்டன்கள் ஷோயப் மாலிக், சர்ஃபராஸ் அஹமது ஆகியோரை மீண்டும் அணிக்கு அழைத்திருக்கிறார்கள். இடது கை வேகப்பந்துவீச்சாளர், வலது கை வேகப்பந்துவீச்சாளர், இடது கை ஸ்பின்னர், லெக் ஸ்பின்னர், ஆஃப் ஸ்பின்னர் என அவர்கள் பௌலிங்கில் அத்தனை ஆப்ஷன்களும் இருக்கின்றன. முகமது ரிஸ்வான், பாபர் ஆசம், ஃபகர் ஜமான் அடங்கிய அணியின் டாப் ஆர்டர் நல்ல ஃபார்மில் இருக்கிறது. ஆனால், மிடில் ஆர்டர் பலவீனமாக இருக்கிறது. இந்தியாவை வீழ்த்தினால், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய முதலீடு காத்திருப்பதாகத் தேர்வுக்குழுத் தலைவர் ரமீஸ் ராஜா அறிவித்திருக்கிறார். கடினம்தான்!

கீ பிளேயர்: கேப்டன் பாபர் ஆசம் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார். இருந்தாலும், பெரிய அணிகளுக்கு எதிராக நிரூபிக்கவில்லை என்ற விமர்சனம் இருக்கிறது. அதைப் பொய்யாக்க மிகப்பெரிய மேடையில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.